Published:Updated:

RCom நிறுவனத்திலிருந்து அனில் அம்பானி ராஜினாமா… டெலிகாம் துறையில் என்னதான் நடக்கிறது?

ஜூலை - செப்டம்பர் வரையிலான காலத்தில் மட்டும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் ரூ.30,142 கோடி நஷ்ட கணக்கு காட்டியிருக்கிறது.

அனில் அம்பானி
அனில் அம்பானி

அண்ணன் முகேஷ் அம்பானியைப் பிரிந்து தனியாக Anil Dhirubhai Ambani Group (ADAG) என்ற பெயரில் நிறுவனம் தொடங்கிய அனில் அம்பானிக்கு, ஆரம்பம் முதலே நேரம் சரியில்லை. திரும்பிய பக்கம் எல்லாம் நஷ்டம்தான். சமீபத்தில் கூட தன் நிறுவனத்தில் உள்ள கடன் சுமையைத் தீர்க்க மிகவும் சிரமப்பட்டு, இனி இந்த கொடுக்கல் வாங்கல் இருக்கும் நிதிசார் வியாபாரமே வேண்டாம் என்று முடிவெடுத்து, தன் ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனம், வெறும் பங்குகளை வைத்திருக்கும் Holding கம்பெனியாக இனி செயல்படும் என்று அந்நிறுவனத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் அறிவித்திருந்தார். இந்தக் குழப்பங்கள் எல்லாம் ஓய்வதற்குள் அனில் அம்பானி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் என்கிற RCom நிறுவனத்தின் இயக்குநர் பதவியை ராஜினாமா செய்து அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இதற்குக் காரணமாக அந்நிறுவனத்தின் செப்டம்பர் 2019 காலாண்டு முடிவுகளைச் சுட்டிக் காட்டுகிறார்கள் நிபுணர்கள்.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்

2019-20 நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டான ஜூலை - செப்டம்பர் வரையிலான காலத்தில் மட்டும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் ரூ.30,142 கோடி நஷ்ட கணக்கு காட்டியிருக்கிறது. இந்த முடிவுகள் வெளியான பின்தான் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் குழுவிலிருந்து ஒருவர் பின் ஒருவராக ராஜினாமா செய்து வருகின்றனர். இதன் விளைவாக தற்போது அந்நிறுவனத்தின் இயக்குநர் அனில் அம்பானி, சாயா விரானி, ரெய்னா கரானி, மஞ்சரி கக்கர், சுரேஷ் ரங்காசார் ஆகிய ஐவரும் தங்கள் ராஜினாமாவை அறிவித்துள்ளனர். இவர்களோடு RCom நிறுவனத்தின் முதன்மை நிதி அதிகாரியாகவும், இயக்குநர் குழுவிலும் இருந்த மணிகண்டனும் ராஜினாமா செய்து இருக்கிறார்.

சரி, 30,000 கோடி ரூபாய் நஷ்டம் வரும் அளவுக்கு அப்படி என்னதான் பிரச்னை என்று பார்த்தால் லைசென்ஸ் கட்டணம் தொடர்பாக உச்சநீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்புதான் காரணம் என்று தெரிகிறது. மத்திய டெலிகாம் துறை ஒவ்வொரு டெலிகாம் நிறுவனத்தின் வருவாய்க்குத் தகுந்தாற்போல், லைசென்ஸ் கட்டணம் மற்றும் ஸ்பெக்ட்ரத்துக்கான கட்டணங்களை நிர்ணயிப்பார்கள். அப்படிக் கணக்கிடும் போது, நிறுவனங்கள் ஒரு மாதிரியும், அரசு டெலிகாம் துறை வேறு ஒரு மாதிரியும் கணக்கு செய்துவிட்டார்கள். அதுதான் இந்தப் பிரச்னைக்கான மூலகாரணம்.

 அனில் அம்பானி
அனில் அம்பானி

மத்திய தொலைத்தொடர்பு துறை, டெலிகாம் நிறுவனங்கள் தங்களின் சரி செய்த தோராய வருவாய் (AGR - Adjusted Gross Revenue) அடிப்படையில்தான், ஒவ்வொரு நிறுவனத்திற்கும் லைசென்ஸ் கட்டணங்கள் மற்றும் ஸ்பெக்ட்ரம் கட்டணங்களை நிர்ணயிக்கிறார்கள். இப்போது இந்த சரிசெய்த தோராய வருவாயில், எதையெல்லாம் சேர்த்துக்கொள்ள வேண்டும், எந்த வருமானத்தையெல்லாம் சேர்த்துக்கொள்ளக் கூடாது என்பதில்தான் சிக்கல்.

மத்திய டெலிகாம் துறையோ, சரிசெய்த தோராய வருவாய் கணக்கீட்டில் Dividend-கள், மொபைல் போன்களை விற்று வரும் வருமானம், ஸ்கிராப் பொருள்கள் விற்பனை மற்றும் வாடகை மூலம் வரும் வருமானம் என அனைத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டுதான் லைசன்ஸ் கட்டணம் மற்றும் ஸ்பெக்ட்ரம் கட்டணத்தைக் கணக்கிட வேண்டும். டெலிகாம் சேவையிலிருந்து வரும் வருமானத்தை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு கட்டணங்களை நிர்ணயிக்கக் கூடாது என வாதிட்டது.

telecom
telecom

ஆனால் ஏர்டெல், வோடபோன்-ஐடியா, போன்ற இந்திய டெலிகாம் நிறுவனங்களோ, தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் டெலிகாம் சேவை வழியாகக் கிடைக்கும் வருவாயை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டு லைசென்ஸ் கட்டணம் மற்றும் ஸ்பெக்ட்ரம் கட்டணங்களைக் கணக்கிட வேண்டும். மற்ற எந்த வருமானத்தையும் கூடுதலாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது என வாதாடின.

இந்த வழக்கு கடந்த 14 ஆண்டுகளாக நடந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம், ஒரு பழைய டெலிகாம் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை மேற்கோள் காட்டி, கடந்த 2015-ம் ஆண்டில் மத்திய தொலைத்தொடர்பு தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பில், சரிசெய்த தோராய வருவாயின்படி பார்த்தால், டெலிகாம் நிறுவனங்கள் வழங்கும் சேவை வழியாக வரும் வருமானம் போக, மற்ற சில வருமானங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். எனவே, மத்திய தொலைத்தொடர்புத்துறை கணக்கிட்டு கோரியது போல, டெலிகாம் சேவை வருவாய் மற்றும் இதர வருமானங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு கேட்கும் லைசென்ஸ் தொகை சரியே எனத் தீர்ப்பு வழங்கியிருந்தார்கள்.

`அரசு தீர்வைக் கொடுக்காவிட்டால், இதுவே இறுதி முடிவு!'- இந்தியாவைவிட்டு வெளியேறுகிறதா வோடோஃபோன்?

உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு அரசுக்கு சாதகமாகவும் டெலிகாம் நிறுவனங்களுக்கு எதிராகவும் வந்து இருப்பதால், அனில் அம்பானியின் RCom என்று அழைக்கப்படும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸின் லைசென்ஸ் கட்டணம் மட்டும் 3,632 கோடி ரூபாய், லைசென்ஸ் கட்டணத்தைச் செலுத்தாமல் இருந்ததற்கான வட்டி 7,681 கோடி ரூபாய் லைசென்ஸ் கட்டணத்தைச் செலுத்தாதற்கான அபராதம் 1,789 கோடி ரூபாய் அபராதத்தை செலுத்தா தற்கான வட்டி 3,355 கோடி ரூபாய் என ஒட்டுமொத்தமாகச் சேர்த்துப் பார்த்தால் 16,456 கோடி ரூபாய் செலுத்த வேண்டி இருக்கிறதாம். லாபமே வராத கம்பெனி 16,500 கோடி ரூபாய் செலுத்தவேண்டும் என்னும் பரிதாப நிலையில் இருக்கிறது அந்த நிறுவனம். இதன் காரணமாகத்தான் அனில் அம்பானி ராஜினாமா செய்துள்ளார் என்கின்றனர்.

கடந்த சில நிதி காலாண்டுகளில், இந்தியாவின் பல்வேறு டெலிகாம் நிறுவனங்கள் தொடர்ந்து மிக மோசமான நஷ்டத்தைக் கணக்குக் காட்டிக்கொண்டிருக்கிறார்கள். இவற்றில் கடந்த காலாண்டில் ஏர்டெல் சுமாராக 23,000 கோடி ரூபாய் நஷ்டம் காட்டியது. வோடபோன்-ஐடியா சுமாராக 50,020 கோடி ரூபாய் நஷ்டம் காட்டியது. இப்போது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் 30,000 கோடி ரூபாய் நஷ்டம் காட்டியிருக்கிறது. இவ்வளவு நஷ்டத்தில் இருக்கும் தொலைத்தொடர்பு துறையை அரசு எப்படி மீட்கப்போகிறது என்பதுதான் கேள்விக்குறி.