Published:Updated:

ஜியோ Vs ஏர்டெல்: டெலிகாம் யுத்தத்தில் முதலிடம் யாருக்கு?

ஜியோ Vs ஏர்டெல்
ஜியோ Vs ஏர்டெல்

ஜியோ வந்த தருணத்தில், தொலைத்தொடர்பு சந்தையில் ஏர்டெல் நிறுவனம் மீள பல மாதங்கள் ஆகும் எனத் துறை சார்ந்த வல்லுநர்களால் கூறப்பட்டது. ஆனால், மிகக் குறுகிய காலத்திலேயே ஏர்டெல் மீண்டெழுந்தது.

இந்தியாவில் கடந்த 2016-ம் ஆண்டுவரை தொலைத்தொடர்புத் துறையில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்தது ஏர்டெல் நிறுவனம்தான். முகேஷ் அம்பானியின் ஜியோ 4 ஜி வருகைக்குப் பின் இந்த நிலைமை அப்படியே தலைகீழானது.

ஜியோவின் இலவச அழைப்பு சேவைகளும், குறைந்த விலையிலான இணையச் சேவையும் பெரும்பாலான மக்களை ஜியோ பக்கம் ஈர்த்தன. இதற்கு ஈடு கொடுக்க முடியாத பல்வேறு தனியார் சேவை நிறுவனங்கள் இந்திய தொலைத் தொடர்பு சந்தையிலிருந்து வெளியேறின. ஜியோ கொடுத்த நெருக்கடியைச் சமாளித்து ஏர்டெல், வோடஃபோன், ஐடியா ஆகிய மூன்று நிறுவனங்கள் தாக்குப்பிடித்து நின்றன. ஆனால், சந்தை நெருக்கடியைத் தொடர்ந்து சமாளிக்க முடியாத காரணத்தால் ஐடியா நிறுவனம், வோடஃபோன் நிறுவனத்துடன் இணைந்து கொண்டது. இதனால் இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா என மூன்று தனியார் நிறுவனங்களே மிஞ்சின. 

ஏறிய விலைகள்: வோடஃபோன், ஏர்டெல், ஜியோ... இப்போது எது பெஸ்ட்?

இதன்பிறகு, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால் ஏர்டெல் மற்றும் வோடஃபோன் ஐடியா நிறுவனங்கள், இந்திய தொலைத்தொடர்பு துறைக்கு `அட்ஜெஸ்டடு க்ராஸ் ரெவின்யூவை' (அலைக்கற்றை பயன்படுத்துவதற்கான லைசன்ஸ் கட்டணம்) கட்ட வேண்டும் என்ற நிலை உருவானது. இந்த ஏ.ஜி.ஆர் தொகையானது ஏர்டெல் நிறுவனத்துக்கு 35,586 கோடி ரூபாயாகவும். வோடஃபோன் ஐடியா நிறுவனத்துக்கு 50,000 கோடி ரூபாயாகவும்  நிர்ணயிக்கப்பட்டது. இதிலும் சில பிரச்னைகளை ஏர்டெல் மற்றும் வோடஃபோன் ஐடியா நிறுவனங்கள் சந்தித்தன.

இந்த நிலையில், பல மாதங்களுக்குப் பிறகு ஏர்டெலின் பங்குகள் மே 19 அன்று வரலாறு காணாத ஏற்றத்தைச் சந்தித்தது. அதன் பிறகு, கடந்த ஜூன் 4-ம் தேதி மறுபடியும் அதன் பங்குகள் ஏற்றத்தை அடைந்தன. இதற்கு முக்கிய காரணம் அமேசான் நிறுவனம் 2 பில்லியன் டாலர் மதிப்புக்கு ஏர்டெல் நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்வதற்கான அறிவிப்பை அன்றுதான் வெளியிட்டது. இந்த முதலீட்டு அளவானது ஏர்டெலின் மொத்த பங்கில் 5 சதவிகிதமாகும்.  

கடந்த ஜனவரி மாதத்தில் ஏர்டெல் நிறுவனம் தனது பங்குகளையும், பத்திரங்களையும் விற்று 3 பில்லியன் டாலரைத் திரட்டியது. இதை வைத்தே தொலைத்தொடர்பு துறைக்கான கட்டணத்தையும் செலுத்தியது. கடந்தமாதம் கூட பங்குச் சந்தையில் ஏற்பட்ட ஏற்றம் காரணமாக 1 பில்லியன் டாலர் அளவுக்குப் பங்குகளை விற்கப் போவதாக அறிவித்தது.

இவ்வாறு பங்குகளையும், பத்திரங்களையும் விற்றதால் சில முதலீட்டாளர்கள் ஏர்டெல் நிறுவனத்தில் முதலீடு செய்யாமல் வெளியேறினர். தற்போது அமேசான், ஏர்டெல் நிறுவனத்தில் முதலீடு செய்யவுள்ளதால் முதலீட்டாளர்கள் மீண்டும் ஏர்டெல் நிறுவனத்தின் முதலீடு செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். ஏர்டெல் பங்குகளின் ஏற்றம் காரணமாக சுனில் மிட்டலின் மொத்த சொத்து மதிப்பில் 1.6 பில்லியன் டாலர் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்குமுன், கடந்த செப்டம்பர் மாத இறுதியில் குறைந்த சேவைக் கட்டணம் காரணமாக ஏர்டெலின் காலாண்டு முடிவுகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. பின்னர் ஜியோ நிறுவனமும் கடந்த ஆண்டு இறுதியில் சேவைக் கட்டணத்தில் மாற்றத்தைக் கொண்டு வந்தது. இதையடுத்து, ஏர்டெல் நிறுவனமும் தன் பங்கிற்குச் சேவை கட்டணத்தில் மாற்றத்தைக் கொண்டு வந்தது. இப்படிப்பட்ட பல்வேறு காரணங்களால் ஏர்டெல்லின் மார்ச் மாத காலாண்டு வருவாயில் 15 சதவிகிதம் அதிகரித்துக் காணப்பட்டன. இதுதான் 2016-ம் ஆண்டுக்குப் பின் ஏர்டெல் நிறுவனத்தின் அதிகபட்ச வருவாய் ஏற்றமாகும். 

சுனில் மிட்டல்
சுனில் மிட்டல்

ஏர்டெல்லின் தாய் நிறுவனமான பார்தி ஏர்டெல்லும், ஜியோ போலவே வீடியோ ஆன் டிமான்ட் மற்றும் இ-காமர்ஸ் சேவைகளில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது. இதனால் இந்திய தொலைத்தொடர்பு துறையில் ஜியோ, ஏர்டெல் இடையே மீண்டும் முதலிடத்துக்கான போட்டி கடுமையாகியுள்ளது. ஜியோ வந்த தருணத்தில், தொலைத்தொடர்பு சந்தையில் ஏர்டெல் நிறுவனம் மீள பல மாதங்கள் ஆகும் எனத் துறை சார்ந்த வல்லுநர்களால் கூறப்பட்டது. ஆனால், மிகக் குறுகிய காலத்திலேயே ஏர்டெல் மீண்டெழுந்தது.

ஜியோவில் ஃபேஸ்புக், ஜெனரல் அட்லாண்டிக், கே.கே.ஆர் & கோ, சில்வர் லேக் பார்ட்னர்ஸ், வெஸ்டா ஈக்யூட்டி பார்ட்னர்ஸ் ஆகிய நிறுவனங்கள் 10 பில்லியன் (87,655.35 கோடி ரூபாய்) டாலருக்கு மேற்பட்ட முதலீட்டைச் செய்துள்ளன.

இதற்கிடையில், ஜியோ நிறுவனத்திலும் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் தொடர்ந்து முதலீடு செய்த வண்ணம் உள்ளன. ஏற்கெனவே ஃபேஸ்புக், ஜெனரல் அட்லாண்டிக், கே.கே.ஆர் & கோ, சில்வர் லேக் பார்ட்னர்ஸ், வெஸ்டா ஈக்யூட்டி பார்ட்னர்ஸ் ஆகிய நிறுவனங்கள் 10 பில்லியன் (87,655.35 கோடி ரூபாய்) டாலருக்கு மேற்பட்ட முதலீட்டைச் செய்துள்ளன. இதைத் தொடர்ந்து தற்போது அபுதாபியைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனமான முபாடாலாவும் ஜியோவில் 1.2 பில்லியன் டாலர் பணத்தை முதலீடு செய்துள்ளது. கடந்த 2017-ல் தொடங்கப்பட்ட முபாடாலா நிறுவனம் ஏஎம்டி (Advanced Micro Devices) உட்பட பல தொழில்நுட்ப நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது.

ரூ.87,655.35 கோடி
ஜியோ நிறுவனம் இதுவரை ஈர்த்துள்ள அந்நிய முதலீடு!
`தொடரும் அந்நிய நேரடி முதலீடுகள்!' - ஊரடங்கிலும் கொடிகட்டிப் பறக்கும் ஜியோ

மேலும், சிப் உற்பத்தி நிறுவனமான குளோபல் ஃபவுண்டிரிஸும் இதற்குச் சொந்தமானதுதான். இதன் முதலீட்டு போர்ட்ஃபோலியோ பெட்ரோலியத் துறை, விவசாயம், செயற்கைக்கோள் தொடர்புத்துறை, சுகாதாரம், உலோகம் மற்றும் சுரங்கத்துறை என பரந்து விரிந்து காணப்படுகிறது.

"தற்போதிருக்கும் முதலிடத்தை தக்கவைத்துக் கொள்ள ஜியோ நிறுவனம் பல்வேறு திட்டங்களைக் கைவசம் வைத்திருக்கிறது. அதில் ஒரு பகுதியாக, தனது வாடிக்கையாளர்களுக்கு 5ஜி அலைக்கற்றையை அறிமுகம் செய்து வைப்பதில் மும்முரம் காட்டி வருகிறது. இந்தியா, உலகிலேயே மிக அதிக வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ள இரண்டாவது நாடு என்பதாலும், இங்கு தொலைத் தொடர்புத்துறை நல்ல வளர்ச்சி காணும் என்ற எதிர்பார்ப்பிலும் பல பன்னாட்டு நிறுவனங்கள் படை எடுத்து வருகின்றன. ஜியோ நிறுவனத்தைப் போல ஏர்டெல் நிறுவனமும் முதலீடுகளை அதிகம் ஈர்த்தால், இந்த போட்டியானது இன்னும் கடுமையாக இருக்கும்" என இத்துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானி

உலகம் முழுவதும் முதலீடுகளை இரண்டு நிறுவனங்களும் பெரிய அளவில் ஈர்த்து வருவதால், இந்தியத் தொலைத்தொடர்பு துறையில் மீண்டும் முதலிடத்திற்கான போட்டி உருவாகியுள்ளது. ஜியோ நிறுவனம் தங்களுடைய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையாலேயே சந்தையில் முன்னணியில் உள்ளது. ஏர்டெல் நிறுவனமும் தனது உயர் அலைவரிசை சேவை மற்றும் மதிப்பு மிக்க வாடிக்கையாளர்களால் முன்னிலை பெற்றுள்ளது.

``இந்தியா உலகத்திலேயே தலைசிறந்த டிஜிட்டல் சமூகமாக உருவாகப்போகிறது!" - முகேஷ் அம்பானி

அதனால் இனி வரும் காலங்களில், இவ்விரு நிறுவனங்கள் எடுக்கும் முடிவுகளிலிருந்துதான், முதலிடத்தைப் பிடிக்கப் போவது யார் என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். இவர்களின் இந்த இரு முனைப் போட்டியில் வோடஃபோன் ஐடியா நிறுவனத்தின் எதிர்காலம் எந்த வகையில் இருக்கும் என்பதைக் காலம்தான் முடிவு செய்யும்.

அடுத்த கட்டுரைக்கு