கடந்த அக்டோபர் மாதம் AGR தொகை கணக்கீடு தொடர்பான வழக்கில் அரசுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம். இதனால் டெலிகாம் நிறுவனங்கள் பல்லாயிரம் கோடி ரூபாயை அரசுக்குக் கட்டும் நெருக்கடியான சூழலில் சிக்கின. இதில் சமீபத்தில் இணைந்த வோடஃபோன் ஐடியா நிறுவனம் மட்டும் சுமார் 53,000 கோடி ரூபாய் பாக்கித்தொகையை அரசுக்குச் செலுத்த வேண்டும்.

AGR விவகாரம் குறித்து விரிவாகத் தெரிந்துகொள்ள கீழ்க்காணும் கட்டுரையைப் படியுங்கள்!
பல முறையீடுகளுக்குப் பிறகும் உச்ச நீதிமன்றம் எந்தக் கருணையும் காட்டாததால் கால அவகாசம் கேட்டு தொலைத்தொடர்பு அமைச்சகம், நிதி அமைச்சகம் மற்றும் நிதி ஆயோக்குக்கு கடிதம் எழுதியுள்ளது வோடஃபோன்-ஐடியா நிறுவனம். டெலிகாம் சந்தையில் நீடிக்க அரசின் உதவி அவசியமானது என அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது அந்த நிறுவனம். இந்தக் கடிதம் தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் முக்கிய ஆணையமான Digital Communications Commission (DCC) கூடி முடிவெடுக்கவுள்ள இந்த நேரத்தில் அனுப்பப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்தின் சாராம்சத்தைப் பார்ப்போம்.
-> கட்ட வேண்டிய பாக்கித்தொகைக்கு போடப்பட்டிருக்கும் 18% GST தொகையான 8,000 கோடி ரூபாயை அரசு நீக்க வேண்டும்.
-> மேலும் இந்தப் பெரும் தொகையை 15 வருட காலத்தில் தவணை முறையில் செலுத்த அனுமதிக்க வேண்டும். இதிலும் முதல் 3 ஆண்டுகள் விலக்களிக்க (initial moratorium) வேண்டும்.

இந்த இரு முக்கிய கோரிக்கைகளை அரசிடம் வைத்திருக்கிறது வோடஃபோன் ஐடியா நிறுவனம். மொத்தத் தொகையில் இதுவரை சுமார் 3,500 கோடி மட்டுமே வோடஃபோன்-ஐடியா செலுத்தியுள்ளது. உடனடியாகக் கட்டவேண்டிய தொகையான 23,000 கோடியில் 7,000 கோடி ரூபாய் மட்டுமே முதல் தொகை மற்றதெல்லாம் வட்டிதான். ஆனால், இந்த 7,000 கோடியைக் கட்டுவதே வோடஃபோன்-ஐடியாவுக்கு பெரும் திண்டாட்டமாகத்தான் இருக்கப்போகிறது.
இந்தக் கடிதத்தில் உரிமக் கட்டணத்தையும் ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டுக் கட்டணத்தையும்கூட குறைக்க வலியுறுத்தியிருக்கிறது வோடஃபோன்-ஐடியா. ஒவ்வொரு வருடமும் மொத்த AGR தொகையில் 8% உரிமக் கட்டணமாகவும் 3-5% ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டுக் கட்டணமாகவும் செலுத்துகின்றன நிறுவனங்கள். இதை 3% மற்றும் 1% அளவில் குறைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது வோடஃபோன்-ஐடியா.
30 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் இருக்கும் வோடஃபோன்-ஐடியாவுக்கும் விரைவில் ஏர்செல் நிலை வரும் என்ற அச்சம் டெலிகாம் வட்டத்தில் இருக்கிறது. இந்நிலையில் அந்த நிறுவனம் வைத்திருக்கும் இந்தக் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்குமா, வோடஃபோன்-ஐடியா சந்தையில் நீடிக்குமா என்பது விரைவில் தெரியவரும்.