Published:Updated:

`விருப்ப ஓய்வுத்திட்டம்... ஊழியர்கள் பற்றாக்குறை!'- பி.எஸ்.என்.எல் சேவை பெருமளவு பாதிப்பு

பி.எஸ்.என்.எல் விருப்ப ஓய்வுத்திட்டம்
பி.எஸ்.என்.எல் விருப்ப ஓய்வுத்திட்டம் ( vikatan )

பணியாளர்கள் பற்றாக்குறையால் மும்பை, டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களிலேயே வாடிக்கையாளர் சேவை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 31-ம் தேதி பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் நிறுவனங்களில் விருப்ப ஓய்வுத்திட்டத்தால் ஒட்டுமொத்தமாக 92,869 பேர் பணி ஓய்வு பெற்றனர். எனவே, தற்போது அந்த நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகின்றன.

பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல்
பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல்
vikatan

இதன்காரணமாக இந்த நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் பலரும் தனியார் நிறுவனங்களை நோக்கிச் செல்லத் தொடங்கியுள்ளனர். தனியார் தொலைபேசி நிறுவனங்களும் அலைக்கற்றை உரிமக் கட்டண நிலுவைத்தொகையைச் செலுத்தவேண்டிய கட்டாயத்தால் கடும் நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. குறிப்பாக, வோடபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்களைப் புதிதாக இணைத்துக்கொள்வது அவர்களுக்கும் சவாலான ஒன்றாக உள்ளது.

வி.ஆர்.எஸ் திட்டத்தால் பி.எஸ்.என்.எல் நிறுவனத்திலிருந்து 78,569 பேரும், எம்.டி.என்.எல் நிறுவனத்திலிருந்து 14,300 பேரும் ஓய்வுபெற்றனர். எம்.டி.என்.எல் நிறுவனத்தைப்பொறுத்தவரை 75% பணியாளர்களும், பி.எஸ்.என்.எல்லில் 50 சதவிகிதத்துக்கும் அதிகமானோரும் விருப்ப ஓய்வு பெற்றுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் கீழ்மட்டத்திலுள்ள பணியாளர்களாவர். இதனால் இந்த நிறுவனங்களின் அன்றாடச் செயல்பாட்டில் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பி.எஸ்.என்.எல்
பி.எஸ்.என்.எல்
vikatan

இந்த நிறுவனங்களுக்கு சுமார் 12.3 கோடி வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். பணியாளர்கள் பற்றாக்குறையால் லேண்ட்லைன் தொலைபேசியில் ஏற்படும் கோளாறுகளுக்கு அளிக்கப்படும் புகார்கள்மீது நடவடிக்கை எடுப்பது தாமதப்படுகிறது. மும்பை, டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களிலேயே வாடிக்கையாளர் சேவை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

குஜராத், உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லேண்ட்லைன் தொலைபேசிச் சேவைக்கான புகார்களை நிவர்த்தி செய்ய அவுட்சோர்ஸிங் முறைக்கு மாறிவருகிறார்கள். ஆனால், புதிதாகப் பணியாளர்களைத் தேர்வு செய்வது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. சென்னையிலுள்ள 52 வாடிக்கையாளர் சேவை மையங்களில் சில மூடப்பட்டுள்ளன. சில மையங்கள் தனியார்வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

பி.எஸ்.என்.எல்
பி.எஸ்.என்.எல்
vikatan

ஆக, இந்தியா முழுவதுமே பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் நிறுவனங்களில் வாடிக்கையாளர்களின் குறைகளைக் கேட்பதற்குக்கூட போதிய பணியாளர்கள் இல்லாத சூழல் நிலவுகிறது. எனவே, இந்த நிறுவனப் பணியாளர்கள் மேற்கொண்டு விருப்ப ஓய்வில் செல்வது தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு