மற்ற எபிசோடுகள்
Published:Updated:

87 ஆண்டு பாரம்பர்யம்... தனி முத்திரை பதித்த தஞ்சை மஹாராஜா!

ஆசிப் அலி, முகமது ரபி
பிரீமியம் ஸ்டோரி
News
ஆசிப் அலி, முகமது ரபி

நேட்டிவ் பிராண்ட் - 12

தஞ்சாவூர் காந்திஜி ரோட்டில் செயல்பட்டு வரும் மஹாராஜா துணிக் கடை மக்கள் மனதுக்கு நெருக்கமாகி, இன்று தஞ்சையின் முக்கியமான அடையாளங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது. ஜவுளித் தொழிலில் 87 ஆண்டு பாரம்பர்யத்துடன் தஞ்சாவூரைத் தலைமையிடமாகக் கொண்டு தமிழகத்தின் பல மாவட்டங்களில் மஹாராஜா கிளைகள் பரவியிருக்கிறது. மஹாராஜா பட்டு, ஜவுளி, ரெடிமேட்ஸ் கடையின் நிர்வாக இயக்குநர் முகமது ரபியிடம் பேசினோம்.

‘‘கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி எங்களோட சொந்த ஊர். எங்க தாத்தா முகமது உசைன் நேர்மையான வழியில் வியாபாரம் செய்து வாழ்க்கையில் வளர்ச்சியடைய வேண்டும் என்ற எண்ணத்துடன் ஜவுளித் தொழிலில் இறங்கினார். வடஆற்காட்டுக்குச் சென்று தங்கியவர் புடவை, பேன்ட், சட்டை உள்ளிட்ட ஆடைகளை மூட்டையாகக் கட்டி தலையில் சுமந்தபடி பல கிலோ மீட்டர் நடந்து சென்றே வியாபாரம் செய்தார்.

ஆசிப் அலி, முகமது ரபி
ஆசிப் அலி, முகமது ரபி

தரத்துடன் நியாயமான விலையில் வியாபாரம் செய்ததால், தாத்தாவுக்கு கைமேல் பலன் கிடைத்து, தனியாகத் துணிக்கடை திறக்கும் நிலைக்கு வளர்ந்தார். அதன்பிறகு தாத்தா தன் தம்பி அசன் முகமதுவுடன் சேர்ந்து 1936-ம் ஆண்டு வடஆற்காடு, கலவை பகுதியில் ஓட்டுக்கட்டடத்தில் பாம்பே ஸ்டோர்ஸ் என்ற பெயரில் ஜவுளிக்கடையைத் திறந்தார். தலையில் சுமந்து வியாபாரம் செய்தபோது கடைப்பிடித்த நேர்மை புதிய கடையின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியது.

என்னோட அப்பா சாகுல் ஹமீது பத்தாம் வகுப்பு படித்து முடித்த பிறகு, தாத்தாவுக்கு உதவியாக ஜவுளிக்கடையைக் கவனித்துக்கொண்டார். இந்த நிலையில் போலீஸ் தேர்வில் கலந்துகொண்டு தேர்ச்சி பெற்ற என் அப்பாவுக்கு, சப்-இன்ஸ்பெக்டர் போஸ்டிங் கிடைச்சது. தன் மகன் போலீஸ் ஆகப்போறான்னு தாத்தாவுக்கு ஒரே சந்தோஷம்.

ஆனா என் அப்பா, ‘‘நான் போலீஸ் வேலைக்குப் போகல, சொந்தமாகத் துணிக்கடை வைக்குறேன்’’னு சொன்னதுடன் அதில் உறுதியாகவும் இருந்திருக்கிறார். இதையடுத்து அப்பா, தன் சகோதரர்களுடன் சேர்ந்து 1960-ல் சென்னை வில்லிவாக்கத்தில் ஒயிட் ஹவுஸ் என்ற பெயரில் தனியாகத் துணிக்கடையைத் தொடங்கினார். அப்ப கடையைப் பிரபலப்படுத்த விளம்பரம் எதுவும் செய்யவில்லை.

தரமாகக் கொடுத்தால் மக்கள் தேடி வருவார்கள்; போட்டியாளர்களையும் சமாளிக்க முடியும். அதுதான் நமக்கான விளம்பரம் என்ற யுக்தியைக் கையாண்டார். அப்பாவோட பக்குவமான வியாபாரம் பெரும் வரவேற்பைக் கொடுத்து வியாபாரம் பெருக, 1972-ல் ஆற்காட்டில் தமிழ்நாடு துணிக்கடை என்ற பெயரில் புதிய கிளையைத் திறந்தார். இன்று அது 50 ஆண்டைக் கடந்து, பொன்விழா ஆண்டை நிறைவு செய்துள்ளது. எங்க சித்தப்பா செளகத் அலிதான் அதை நிர்வாகம் செய்து வருகிறார்.

87 ஆண்டு பாரம்பர்யம்... தனி முத்திரை பதித்த தஞ்சை மஹாராஜா!

வரலாற்றுப் பெருமைமிக்க ஊரான தஞ்சாவூர்ல துணிக்கடை திறக்க வேண்டும் என அப்பாவுக்கு ஆசை. உலகமே வியக்கக்கூடிய வகையில் வணிகம், கலை போன்றவற்றில் தனி சிறப்புடன் திகழ்ந்து ஆட்சி செய்தவர்கள் சோழ பேரரசர்கள். அந்த மன்னர்களைக் குறிப்பிடும் வகையில் மஹாராஜா சில்க் ஹவுஸ் எனப் பெயர் வைத்து 1977-ல் தஞ்சாவூரில் புதிய துணிக் கடையைத் திறந்தார். சென்னை போன்ற நகரங்களில் கடை நடத்திய அப்பா, விவசாயத்தை மட்டுமே நம்பி இருக்கும் தஞ்சாவூர்ல கடை திறந்ததைப் பலரும் தேவை இல்லாத வேலைனு சொன்னாங்க.

ஆனால், அப்பாவுக்கோ தஞ்சாவூர் கடைமீது பெரும் நம்பிக்கை இருந்தது. வெறும் 450 சதுர அடி இடத்தில் 30 பேருடன் செயல்படத் தொடங்கியது மஹாராஜா. தரம், நியாயமான விலை, வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ற டிசைன் என எப்போதும் புதுமையுடன் நடை போட்டதால் தொழில் மெள்ள வளர்ச்சி அடைந்தது. அடுத்த 10 வருடங்களில் மக்கள் மனதில் மஹாராஜா ஆழமான தடத்தைப் பதித்தது.

நான், கல்லூரி படிக்கும் போதே அப்பாவுக்கு உதவியாக தொழிலைக் கவனிக்கத் தொடங் கினேன். குறைந்த இடத்தில் கடை செயல்பட்டதால், எப்போதும் நெரிசலாக இருக்கும். வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்த முடியவில்லை.இதையடுத்து 1989-ல் பத்தாயிரம் சதுர அடியில் விசாலமாக ஏசி வசதியுடன் கடையை மாற்றி அமைத்தோம். 15,000 சதுர அடி இடத்தில் ரெடிமேட் ஆடை களுக்கு மட்டும் தனியாக புதிய கடையைத் திறந்தோம்.

அடுத்தபடியாக 1984-ல் கும்பகோணத்தில் கடை திறக்கத் தயாரானோம். மஹாராஜா என்ற பெயரைப் பதிவு செய்யாத தாலும் அந்தப் பெயரில் ஏற்கெனவே அங்கு ஒரு கடை இருந்ததாலும் புதிய கடைக்கு அந்தப் பெயரை வைக்க முடிய வில்லை. ‘பெயர்ல என்ன இருக்கு, தரத்துலயும், நியாமான விலையிலையும்தானே வியா பாரம் இருக்கு’ என நம்பிக்கை யூட்டினார் அப்பா.

87 ஆண்டு பாரம்பர்யம்... தனி முத்திரை பதித்த தஞ்சை மஹாராஜா!

சீமாட்டி என்ற பெயரில் கடையைத் திறந்தோம். தொழில் நேர்த்தியும் உண்மையும் இருந்த தால் அங்கேயும் ஆழமாகக் கால் ஊன்றினோம். 2013-ல் ராமநாத புரத்திலும் மஹாராஜா என்ற பெயரில் புதிய கிளையைத் தொடங்கினோம். நான் என்னுடைய சகோதரர்களான பஷீர் அகமது, ஆசிப் அலி ஆகிய மூன்று பேரும் சேர்ந்து கடை களை நிர்வாகம் செய்து வருகிறோம்.

எங்களுக்கென சில விதிமுறை களைக் கடைப்பிடிச்சோம். வியாபாரத்தில் கவனம் சிதறும் என்பதால நாங்களே சொந்த மாக ஆடை தயாரிப்பில் இறங்க வில்லை. எங்களுக்கென பிரத்யேகமாக நாங்களே புதிய டிசைன்களை உருவாக்கி அந்த டிசைன்களில் ஆடை தயாரித்து தருவதற்கு ஆர்டர் கொடுத்து கொள்முதல் செய்வோம்.

ஆரம்பத்திலிருந்தே சூரத்தில் நாங்களே நேரடியாகக் கொள் முதல் செய்து விற்பனை செய்து வருகிறோம். எங்ககிட்ட இருக்குற டிசைன் குறிப்பிட்ட காலத்துக்கு தமிழகத்தின் வேறு எந்தக் கடைகளிலும் கிடைக்காது என்பதே எங்களுக்கான தனித் தன்மை.

அதேபோல, டிசைன் தயாரிச்சு கொடுத்து ஒப்பந்த அடிப்படையில் பட்டுப் புடவையை உற்பத்தி செய் கிறோம். 2018-ல் திருவாரூரில் சீமாட்டியின் புதிய கிளையைத் திறந்தோம். தற்போது தஞ்சாவூர் ஹவுஸிங் யூனிட்டில் புதிதாக ஐந்தாவது கிளையை மஹாராஜா என்ற பெயரிலேயே திறந்திருக் கிறோம்.

எங்க கடைக்குப் படியேறி உள்ளே வந்துட்டா அனைத்து ஆடைகளையும் வாங்கிட்டு வெளியே போற வசதிகளோட நடத்தி வர்றோம். காலத்துக்கேற்ப, வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ப எங்களையும் கடையின் வடிவமைப்பையும் மாற்றிக்கொண்டே வருகிறோம். போட்டியாளர்களை சமாளிக்க வேண்டும் என்பதற்காக ஆடை கொள்முதலில் கண்ணும் கருத்துமாக இருப்போம்.

ரூ.500 முதலீட்டுல 450 சதுர அடியில ஜவுளித் தொழிலில் தடம் பதிச்ச எங்க குடும்பம், இன்றைக்கு தஞ்சாவூர்ல ஒரே இடத்துல 50,000 சதுர அடியில அனைத்து வசதிகளோட விரிவுபடுத்தி நடத்தி வருகிறோம். 30 பணியாளர்களுடன் தொடங்கிய கடையில, இப்ப 1,000 பேருக்கு மேல் வேலை செய்கின்றனர்.

கடந்த சில வருடங்களாக மஹாராஜாவின் முதல் எழுத்தான எம்மை குறிக்கும் வகையில எம்.டீன்ஸ் என்ற பெயர்ல பட்ஜெட் ஷாப்பை நடத்தி வருகிறோம். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைத்துத் தரப்பினருக்கு மான ஆடைகள் ரூ.59 தொடங்கி 600 வரை கொடுக்குறோம். தஞ்சாவூர், காரைக்குடி, பட்டுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஊர்களில் ஐந்து

பட்ஜெட் ஷாப் செயல்பட்டு வருகிறது. உள்ளூர் மக்களின் ரசனையைப் புரிந்து அதற்கேற்ற வகையில் விலை, கொள்முதல், குவாலிட்டி போன்றவையில் எந்த சமரசமும் செய்துகொள்ளாமல் உலக தரத்திலான ஆடைகளைக் கொடுத்துவருகிறோம். பாரம்பர்யத்துடன் நான்காவது தலைமுறையாக எங்கள் குடும்பம் ஜவுளித் தொழிலில் ஈடுபட்டு வருகிறது’’ என்றார்.

தரமான பொருள், நியாயமான விலை, சிறந்த வாடிக்கையாளர் சேவை இருந்தால், நிச்சயம் வெற்றிதான்!