வேலூர், காட்பாடியிலிருந்து 4 கி.மீ தூரத்தில் ஆந்திர எல்லையையொட்டி 750 ஏக்கரில் அமைந்திருக்கிறது, தமிழ்நாடு அரசின் `டெல்’ வெடிமருந்து (TEL) நிறுவனம். 1984-ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் தற்போதைய மதிப்பு சுமார் ரூ.500 கோடிக்குமேல் இருக்கும் என்கிறார்கள். தொடக்கத்தில் 1,400 பணியாளர்களைக் கொண்டு எமர்சன், கிளரி, டெட்டனேட்டர் உள்ளிட்ட 15 வகை அபாயகரமான வெடிமருந்துகளை உற்பத்தி செய்த இந்த நிறுவனம், நல்ல லாபத்திலும் இயங்கியது.

Also Read
2001-ம் ஆண்டு தொழிற்சாலைக்குள் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில், 24 தொழிலாளர்கள் உடல் சிதறி இறந்தனர்; சிலர் கைகால்களை இழந்தும் உயிர்ப் பிழைத்தனர். அதன்பிறகே `டெல்’ நிர்வாகத்தில் நிதிச்சிக்கல்கள் ஏற்பட்டன. நிதி நிலையைக் காரணம் காட்டி ஆட்குறைப்பு செய்ததால், உற்பத்தி மந்தமானது. கட்டாய விருப்ப ஓய்விலும் தொழிலாளர்கள் பலர் அனுப்பப் பட்டனர். பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் இரவு, பகலாக உள்ளிருப்புப் போராட்டம், கஞ்சித்தொட்டித் திறப்பு என எதிர்ப்புகளைக் காட்டிவந்தனர்.
கடைசியில், ஏதேதோ சொல்லி மழுப்பிய முந்தைய அ.தி.மு.க அரசு, 2017 செப்டம்பர் 30-ம் தேதி `டெல்’ நிறுவனத்தின் வெடிமருந்து உற்பத்தியை மொத்தமாக நிறுத்திவிட்டது. அதைத் தொடர்ந்து, நிர்வாகக் குழுவின் கட்டுப்பாட்டில் டெல் நிறுவனம் இருந்து வந்தது.
இந்த நிலையில், `டெல்' தொழிற்சாலையை, மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின்கீழ் நிறுவப்பட்ட பெங்களூரைத் தலைமையிட மாகக் கொண்டு செயல்படும் `பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்’ நிறுவனம் (BEL) கையகப்படுத்தியிருக்கிறது.
இதற்கான அதிகாரப்பூர்வ பெயர்ப் பலகை டெல் தொழிற்சாலையின் முகப்பில் வைக்கப்பட்டிருக்கிறது. பாரத் எலெக்ட்ரானிக் நிறுவனம் `ஏவுகணை’ தொடர்பான வெடிபொருள்களைத் தயாரிக்க உள்ளதாகவும், அதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. வரும் ஜனவரி முதல், பாதுகாப்பு ஆயுதங்கள் உற்பத்திச் செய்யப்படும் என்ற தகவலும் வெளியாகியிருப்பதால், டெல் நிறுவனம் மீண்டும் புத்துயிர் பெற்ற மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் வேலூர் மக்கள்.