பங்குச் சந்தை
தொடர்கள்
நடப்பு
Published:Updated:

நாடு முழுவதும் விற்பனையாகும் நாகலாபுரம் கிட்டுச் சேவு..!

ராமசாமி
பிரீமியம் ஸ்டோரி
News
ராமசாமி

நேட்டிவ் பிராண்ட் - 7

தேனி மாவட்டம் என்றதும் பச்சைப்பசேல் மலைகள்தான் பலருக்கு நினைவுக்கு வரும். நெல் சாகுபடி மட்டுமல்லாது எல்லாக் காலமும் விளையும் பன்னீர் திராட்சை முதல் தக்காளி, வெங்காயம், வெண்டை உள்ளிட்ட அனைத்து காய்கனிகளும் விளையும் பூமிதான் தேனி. ஆனால், இங்கே மொறுமொறு காராச்சேவு பல்லாயிரம் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்திருப்பது பலருக் கும் தெரியாத தகவல்.

தேனிக்கு அருகில் உள்ள நாகலாபுரம் கிராமத்தில் மூன்று தலைமுறையாக தயாரிக்கப்பட்டுவரும் சேவு உள்ளூர் முதல் உலக நாடுகள் வரை ஏற்றுமதி ஆகிவருகிறது. இந்தக் கிட்டுச்சேவுவில் அப்படி என்ன பிரமாதம் என்பதை அறிய கிட்டுச்சேவு உரிமையாளர் ராமசாமியை அவருடைய தயாரிப்பு யூனிட் டில் சந்தித்துப் பேசினோம். 72 வயதில் சுறுசுறுப்பாக இருந்தார் ராமசாமி.

ராமசாமி
ராமசாமி

‘‘என் தந்தை திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர். எங்களுக்கு விவசாயக் குடும்பம். அங்கு விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற் பட்டதால், 1965-ல் தேனி மாவட்டத்துக்கு இடம் பெயர்ந்தோம். இங்கு வந்த பிறகும் விவசாயம் செய்து கொண்டு, விறகு வெட்டி விற்கும் தொழிலிலும் எங்கள் அப்பா கிருஷ்ணதேவர் ஈடுபட்டிருந்தார். அப்போது குடிசைத் தொழிலாக சேவு தயாரிக்கும் ஒருவருக்கும் விறகு சப்ளை செய்துவந்தார். அதிலும் போதிய வருவாய் கிடைக்காததால், சேவு தயாரிப்பைப் பற்றி ஒரே இரவில் தெரிந்துகொண்டு மறுநாள் இரவு அவராகவே சேவு போட்டுள்ளார். இதை யடுத்து ஆறு மாதங்கள் வரை அங்கு வேலை பார்த்து தொழிலை நன்கு கற்றுக் கொண்டு தனியாக சேவு போட ஆரம்பித்துள்ளார்.

தொடக்கத்தில் தேனி ஒன்றியத்தில் உள்ள நாகலா புரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ரெங்க புரம், கொடுவிலார்பட்டி, பாலகிருஷ்ணாபுரம், பண்ணைபட்டி, தாடிச்சேரி, வெங்கடாசலபுரம் உள்ளிட்ட ஊர்களில் மட்டும்தான் காராச்சேவு கொடுத்து வந்தோம். அப்போதெல்லாம் சைக்கிளிலும், தலைச்சுமை யாகவும் நடந்தே சென்று வியாபாரம் செய்தோம். ஒரு கிலோ சேவு ஒரு ரூபாய் 60 காசு மட்டுமே.

உதவிக்கு மட்டும் இரண்டு பேரை வைத்துக்கொண்டு எங்கள் குடும்பமே தொழிலில் ஈடுபட்டிருப்போம். சேவு தரமாகவும் சுவையாகவும் கொடுத்ததால், தேனியில் அனைத்து ஊர்களில் இருந்தும் கடைக்காரர்கள் சேவு கேட்கத் தொடங்கி விட்டனர்.

இதை அடுத்து 1996-ல்தான் எங்களின் சேவு தயாரிப்புக்கு கிட்டு என என் தந்தையின் பெயரைச் சூட்டினோம். ஆனால், அதற்கு முன்பாகவே அனைவரும் கிட்டுச் சேவு என்றே பலரும் அழைக்கத் தொடங்கினர். அதன்பிறகு, இனிப்புச் சேவு, சீனிச் சேவு, சீவல் சேவு, ரிப்பன் பக்கோடா, ஓலைச்சேவு, ஓமப்பொடி, அரிசி சேவு, எள்ளுச்சேவு, மிளகு சேவு எனப் பல வகைகளில் தயாரிப்புகளை அதிகப்படுத்தினோம். அப்போது சைக்கிளில் இருந்து டி.வி.எஸ் 50-க்கு மாறியிருந்தோம். அதில்தான் தேனி முழுவதும் பயணித்து வியாபாரம் செய்தோம். கடைக்காரர்கள் எங்கள் தயாரிப்பையே விரும்பி வாங்கத் தொடங்கினார்கள்.

நாடு முழுவதும் விற்பனையாகும்
நாகலாபுரம் கிட்டுச் சேவு..!

இதற்கு முக்கியமான காரணம், சேவுக்கு பயன் படுத்தப்படும் மூலப்பொருள்களைப் பார்த்துப் பார்த்து கொள்முதல் செய்வதுதான். குறிப்பாக, கடலைப் பருப்பு, பச்சை அரிசி, மிளகாய் வத்தல், சீரகம், பெருங்காயம், உளுந்தம் பருப்பு, வெல்லம் இவற்றை வாங்கி காயவைத்து, பக்குவப்படுத்தி அரைத்து, மாவாகவும், பொடியாகவும் மாற்றி வைத்துக்கொள்வோம். எத்தனையோ மாவு, பொடி தயாரிக்கும் கம்பெனிகள், ‘‘ஏன் இவ்வளவு சிரமப்படுறீங்க? எங்களிடம் வாங்கினா வேலையும் மிச்சம், பணமும் மிச்சம்’’ என்று கேட்டார்கள். ஆனால், நாங்கள் மாறவே இல்லை.

அதே போல, நொறுக்கு திண்பண்டங்கள் தயாரிக்க பெரும்பாலும் மலிவாகக் கிடைக்கும் எண்ணெய் வகைகளையே பயன்படுத்துவார்கள். ஆனால், பருத்தி விதையில் இருந்து தயாரிக்கப்பட்ட எண்ணெயை மட்டுமே சேவு தயாரிக்கப் பயன்படுத்து கிறோம்.

அது மட்டுமல்ல, தேவையான அளவு மாவு எடுத்து தண்ணீர் சேர்த்து பிணைவது மிக முக்கியம். இதில் அளவு கூடினாலோ குறைந்தாலோ ருசியில் மாற்றம் ஏற்பட்டுவிட்டும். இதற்கென எத்தனையோ மெஷின்கள் வந்தபின்பும், அவற்றைப் பயன்படுத்தாமல் இன்றும் கைகளில்தான் மாவு பிணைகிறோம். மேலும், உப்பு, காரக்கரைசலை என்ன விகிதத்தில் மாவுடன் கலக்கிறோம் என்பது முக்கியமானது. கடைசியாக, எண்ணெய் பிழிந்துவிடப்படும் மாவு சரியான வெப்பத்தில் எடுக்கப்பட வேண்டும். அதில் மாற்றம் இருந்தாலும் சுவை கெட்டுவிடும்.

என் மகன்கள் மருது, காளிதாசன் ஆகியோரும் எம்.பி.ஏ படித்துவிட்டு, 2008 முதல் என்னுடன் பயணிக்கத் தொடங்கினார்கள். சிறுவயதில் இருந்தே சேவு தயாரிப்பில் அவர்களும் உடன் இருந்ததால், அவர்களால் எளிதில் தொழிலைக் கற்றுக்கொள்ள முடிந்தது. அவர்கள் வருகைக்குப் பிறகு மதுரை, திண்டுக்கல், சென்னை, ஓசூர் என பிற பகுதிகளுக்கும் எங்களின் சேவு செல்லத் தொடங்கிவிட்டது.

அதேபோல, தேனி மாவட்டத்தில் இருந்து அமெரிக்கா, லண்டன், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் வசிப்பவர்கள் தேனி வந்து விட்டு, மீண்டும் வெளிநாடு திரும்பும்போது, கிலோ கணக்கில் சேவு பாக்கெட்டுகளை வாங்கிச் செல்கின்றனர். வெளிநாட்டவர்கள் நம் தயாரிப்பு சேவைக் கண்டு வியக்கிறார்களாம். அதனால் தாங்கள் சாப்பிடுவதற்காக மட்டுமல்லாமல், அங்குள்ள நண்பர்களுக்கும் கொடுப்பதற்காக நாகலாபுரம் சேவுவை வாங்கிச் செல்கிறார்கள் மக்கள்.

நொறுக்குத் திண்பண்டங்கள் தயாரிப்பில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதனால் தான் எவ்வளவு செலவானாலும் எண்ணெயை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருப்போம். 16 லிட்டர் கொண்ட எண்ணெய் கேன் தற்போது ரூ.3,000 வரை விற்பனை ஆகிறது. அதில் 50 கிலோ மாவில் சேவு போட முடி கிறது. அப்போதுதான் சேவில் எண்ணெய் படியாமல், வாடை அடிக்காமல், விரைவில் கெட்டுப் போகாமல் இருக்கும்.

தற்போது வரை நாங்கள் கேஸ் அடுப்பு பயன்படுத்துவது இல்லை. மக்காச்சோள கதிர் தட்டையை மொத்தமாகக் கொள்முதல் செய்துகொண்டு அதைத்தான் எரிக்கப் பயன் படுத்துகிறோம்.

குழந்தைகள் விரும்பி சாப் பிடக்கூடிய பண்டம் என்ப தால், மிக அக்கறையுடன் அதைத் தயார் செய்து தருவதால், எங்கள் கிட்டுச் சேவை எல்லோ ருக்கும் பிடிக்கிறது. தற்போது அனைத்து பாக்கெட்டுகளும் கால் கிலோ அளவில்தான் தருகிறோம். லாரி, வேன்களில் பார்சல்கள் மூலம் ஒரு நாளைக்கு 250 கிலோ சப்ளை செய்து வருகிறோம்.

நிறைய இடங்களில் இருந்து ஆர்டர் வருகிறது சிறிய அள விலான யூனிட்டை வைத்துக் கொண்டு பெரிய அளவில் சப்ளை செய்ய முடியாது. தற்போது என் மகன்களும் முழுமையாக இந்தத் தொழிலுக்கு வந்துவிட்டதால், மற்றொரு யூனிட் தயாராகி வருகிறது. அதைத் தொடங்கிய பின் தமிழகம் முழுவதும் கிட்டுச் சேவுவை விநியோகம் செய் வோம்’’ என்றார் பெருமையுடன்.