மற்ற எபிசோடுகள்
Published:Updated:

111 ஆண்டுகள், நான்காம் தலைமுறை... வரலாறு படைத்த தென்னமரக்குடி எண்ணெய்..!

பாண்டுரங்கன்
பிரீமியம் ஸ்டோரி
News
பாண்டுரங்கன்

நேட்டிவ் பிராண்ட் - 14

பாரம்பர்யமான மருந்துகளுக்கு நம் மக்களிடம் மிக முக்கியமான இடம் உண்டு. ஆங்கில மருத்துவம் வழக்கத்துக்கு வருவதற்கு முன்பே பலவிதமான உடல் உபாதைகளுக்கு மருந்துகளைக் கண்டுபிடித்து, அதற்கு சிறப்பான தீர்வு கண்டிருக்கின்றனர் நம் முன்னோர்கள். மூலிகைகளைக் கொண்டு அவர்கள் கண்டுபிடித்த மருந்துகள் இன்றும் மக்களிடம் பரவலாகப் பயன்பாட்டில் உள்ளன.

அப்படிப்பட்ட ஒரு மருந்துதான் மயிலாடு துறை ஆர்.எஸ்.கிருஷ்ணா & கோ - தென்ன மரக்குடி எண்ணெய். 111 ஆண்டுகளுக்கு முன்பே தயார் செய்யப்பட்ட இந்த எண்ணெய் தமிழக மக்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்கும் ஒரு நேட்டிவ் பிராண்டாக இருக்கிறது.

பாண்டுரங்கன்
பாண்டுரங்கன்

இலங்கையில் இருந்து...

மயிலாடுதுறையில் அமைந்துள்ள இந்த நிறுவனம் உருவான, வியப்பான வரலாற்றைச் சொல்கிறார் உரிமையாளர்களில் ஒருவரான பாண்டுரங்கன்.

“சித்த மருத்துவத்தில் அதீத ஈடுபாடு கொண்ட எங்கள் தாத்தா சந்தானகிருஷ்ணன், 1910-ல் இலங்கையிலுள்ள கதிர்காமம் முருகன் கோயிலுக்குத் தரிசனம் செய்யச் சென்றுள்ளார். அப்போது அங்குள்ள மலை, காடுகளில் நாட்டு மருந்துகள் மற்றும் மூலிகை இலைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் வலி நிவாரணி எண்ணெய் தயாரிக்கும் முறைகளைக் கற்றறிந்து வந்துள்ளார். அத்துடன் நம் நாட்டிலுள்ள சித்தா, ஆயுர்வேத மருத்துவ நூல்களிலுள்ள குறிப்புகளைக் கொண்டும் அவர் பெயரிலேயே `R.S.கிருஷ்ணா தென்னமரக்குடி எண்ணெய்’ தயாரித்து விற்பனை செய்துள்ளார்.

ஒரு சிறிய ஓட்டு வீட்டில் தயாரிப்புப் பணிகளை என் பாட்டி ருக்மணியும், விற்பனையை என் தாத்தாவும் செய்திருக் கிறார்கள். தாத்தாவின் ஒரே மகனான எங்கள் தந்தை வீரராகவன் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போதே தாத்தா இறந்துவிடவே, படிப்பை நிறுத்திவிட்டு, அப்பாவும் பாட்டியும், தொழிலைத் தொடர்ந்திருக்கிறார்கள். அப்போது அவருக்கு 16 வயதுதான். என்றாலும், தொழிலை ஆர்வத்துடன் கற்றுக்கொண்டு அதை வளர்த்தெடுத்தார்.

111 ஆண்டுகள், நான்காம் தலைமுறை... வரலாறு படைத்த தென்னமரக்குடி எண்ணெய்..!

காலத்துக்கேற்ற மாற்றம்...

என் தந்தையார் இந்த எண்ணெயை நவீன காலத்துக்கு ஏற்ற மாதிரி மாற்றியமைத்தார். முன்பு சாதாரண டப்பாவில் இருந்ததை அழகிய பிளாஸ்ட்டிக் டப்பாக்களில் அடைக்கச் செய்தார். மயிலாடுதுறை, சிதம்பரம், நாகப்பட்டினம், கும்பகோணம் என சில ஊர் மக்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த இந்த எண்ணெயை, அவர் தமிழக மக்கள் முழுக்க பயன்படுத்தும்படி தெரியப்படுத்தினார்.

ஒரு பொருளை பெருவாரியான மக்களுக்குச் சென்று சேர்க்க வேண்டும் எனில், அதைப் பத்திரிகைகளில் விளம்பரம் செய்வது அப்போது முக்கியமான யுக்தியாக இருந்தது. ஆனால், அவர் இன்னொரு எளிய முறையின் மூலம் தமிழகத்தின் அனைத்து நகரங்களுக்கும் தனது தயாரிப்பைக் கொண்டு சென்றார். அதுதான், வேன்மூலம் விளம்பரம் செய்தது. இதற்காக ஒரு வேனை வாங்கி, அதில் எங்கள் தயாரிப் பைத் தமிழகத்தின் அனைத்து நகரங்களுக்கும் நேரடியாகக் கொண்டு சென்று அறிமுகப் படுத்தினார். ஒருமுறை இந்த வேனில் தென்னமரக்குடி எண்ணெயை வாங்கியவர்கள், பிற்பாடு எப்போது அந்த வேன் வரும் என்று காத்திருக்கத் தொடங்கினார்கள். இப்படிப் பலரும் எதிர்பார்த்தபோது, அந்தப் பகுதியில் உள்ள வணிகர்கள் எங்களை அணுகி, மொத்தமாக வாங்கி விற்கத் தொடங்கினார்கள்.

தமிழகம் முழுக்க எங்கள் தயாரிப்பு தெரிந்த பிறகு, திருவனந்தபுரம், பெங்களூர், மும்பை எனப் பல்வேறு நகரங் களுக்கும் அவர் எங்கள் தயாரிப் பைக் கொண்டு சென்று பிரபலப் படுத்தினார்.

வெளிநாடுகளில் வந்த வாய்ப்பு...

அப்போதுதான் வெளிநாடு களில் இருந்தும் ஆர்.எஸ். கிருஷ்ணா தென்னமரக்குடி எண்ணெய் கேட்டு வரத் தொடங்கியது. காரைக்குடி, தஞ்சாவூரில் இருக்கும் சிலர் சிங்கப்பூருக்கு எங்கள் தென்னமரக்குடி எண்ணெயைக் கொண்டு சென்று பயன்படுத்தி இருக்கிறார்கள். பலரும் இப்படிக் கொண்டு சென்று பயன்படுத்த, அங்குள்ளவர்களுக்கு தேவைப் பட்டால், உடனே வாங்கி பயன் படுத்த வேண்டும் என்பதற்காக எங்களிடம் மொத்தமாக வாங்கித் தர ஆரம்பித்தார்கள்.

கிட்டத்தட்ட 16 வயதில் அவர் இந்தத் தொழிலுக்கு வந்தவர், 2011-ல் காலமாகிற வரை மிகச் சிறப்பாக செய்த துடன், இந்தத் தொழில் தொடர்பான நுணுக்கங்களை எங்களுக்குக் கற்றுத் தந்தார்.

எங்கள் தந்தையின் மறைவுக்குப் பின், அவரின் மூன்று மகன்களான கோபால கிருஷ்ணன், கலிராஜ் மற்றும் நானும் இந்தத் தொழிலை முன்னெடுத்தோம்.

புதிய கட்டடம் அமைத்து, நவீன தொழில்நுட்பத்துடன் தொழிலைத் தொடர்ந்தோம். தமிழகம் தாண்டி, பல்வேறு மாநிலங்களுக்கும் வெளிநாடு களுக்கும் கொண்டு சென்றோம். அது இன்றும் தொடர்கிறது.

பாலாஜி, பிரசன்னா, ஷாலினி
பாலாஜி, பிரசன்னா, ஷாலினி

எப்படித் தயாரிக்கிறோம்?

கடுக்காய், பாய்விலங்கம், மஞ்சள் போன்ற நாட்டு மருந்து களுடன், சோற்றுக்கற்றாழை, நாயுருவி, பிரண்டை, ஆடு தொடாய், குதிரைக் கொம்பு போன்ற மூலிகைப் பொருள்கள் என 27 விதமான பொருள்களை ஒன்றாகச் சேர்த்து அரைத்து, அதனுடன் விளக்கெண்ணெய், கேரளாவின் நாட்டு மர எண்ணெய் சேர்த்து, ஒரு வாரம் ஊற வைக்கிறோம். அதன்பின், நாட்டு விறகு அடுப்பில் ஒரு வாரத்துக்கு அதை எறியூட்டி, வடிகட்டி அதை பாட்டில்களில் அடைத்து விற்பனைச் செய்கிறோம்.

நாங்கள் தயாரிக்கும் எண்ணெயைக் கை, கால், சுளுக்கு, எலும்பு முறிவு, மூட்டு நழுவல், இடுப்பு வலி, முழங்கால் வலி, மூச்சுப் பிடிப்பு முதலான வற்றுக்கு எண்ணெயை சூடாக்கி தேய்த்த பிறகு, ஒரு மணி நேரம் கழித்து வெந்நீரில் ஒத்தடம் கொடுத்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

சித்த மருத்துவத்தில் நம்பிக்கை கொண்டவர்கள்தான் நாங்கள் தயாரிக்கும் எண்ணெயை அதிகம் பயன்படுத்தி வந்தனர். வயதானவர்கள் எங்கள் தயாரிப்பை விரும்பி வாங்குவார்கள். அவர்களுக்கு வரும் தசை வலி தொடர்பான பிரச்னைக்கு எங்கள் எண்ணெய் நல்ல பலனைத் தரக்கூடியதாக இருந்தது.

ஆனால், சமீப காலமாக நாங்கள் பார்க்கும் ஆச்சர்யமான விஷயம், இளைஞர்கள், நடுத்தர வயதினரும் தேடிவந்து வாங்குவதுதான். எந்த விதமான பக்கவிளைவுகளும் இல்லாமல், உடல்நலம் தொடர்பான பிரச்னைகளைக் குணமாக்குவதே இதற்குக் காரணம்.

தொழில் வளர்ச்சிக்கான மூலதனத்தை அதிகமாக்க மயிலாடுதுறையில் உள்ள பொதுத்துறை வங்கிகளில்தான் வாங்குவோம். ஆரம்பம் தொடங்கி, தொழிலுக்காக வாங்கிய கடனை வட்டியுடன் குறித்த காலத்தில் கட்டி முடித்து விடுவதில் நாங்கள் கவனமாக இருப்போம். இதனால், நாங்கள் தொழில் கடன் வேண்டும் என்று கேட்டுப் போனால், வங்கிகள் எங்களுக்கு மறுப்பு எதுவும் எப்போதும் சொல்வதில்லை.

புதிய தயாரிப்புகளும் அடுத்த தலைமுறையும்...

தற்போது, புதிய தயாரிப்புகளாக அஜீரணக் கோளாறு நீக்கும் இஞ்சி லேகியம், விஷக்கடி போக்கும் சூரணம், பூஜைகளுக்கு பயன்படும் பன்னீர், ஜவ்வாது, சந்தன பவுடர் போன்றவற்றையும் சிறப்பாகத் தயாரித்து தருகிறோம். இதற்கு நாடெங்கிலும் நல்ல வரவேற்பு உள்ளது.

தற்போது எங்கள் மூன்று பேரின் வாரிசுகளான பிரசன்னா, ஷாலினி, பாலாஜி ஆகிய மூன்று எம்.பி.ஏ பட்டதாரிகள் தொழிலை நடத்தி வருகிறார்கள்’’ என்று உற்சாகமாகப் பேசி முடித்தார் பாண்டுரங்கன்.