பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

ரூ.4,500 கோடிக்கு நிறுவனத்தை விற்றது ஏன்? ‘தைரோகேர்’ ஏ.வேலுமணி Exclusive

ஏ.வேலுமணி
பிரீமியம் ஸ்டோரி
News
ஏ.வேலுமணி

I N T E R V I E W

ஏறக்குறைய 27 ஆண்டுகள் கஷ்டப்பட்டு உழைத்து உருவாக்கிய தைரோகேர் நிறுவனத்தை பார்ம்ஈஸி நிறுவனத்திடம் ரூ.4,500 கோடிக்கு விற்றிருக்கிறார் தைரோகேர் ஏ.வேலுமணி. இந்தத் தகவல் கிடைத்தவுடன், அவருடன் தொடர்பு கொண்டோம். பல்வேறு அலுவல் களுக்கு நடுவே அவர் நமக்கு நேரம் ஒதுக்கி பேட்டி அளித்தார். அந்தப் பேட்டி இனி...

தைரோகேர் நிறுவனத்தை பார்ம்ஈஸி நிறுவனத்துக்கு திடீரென விற்க என்ன காரணம்?

‘‘இது ஒரு எமோஷலான பதில். ஒரு தாய் தன் மகனை ராணுவத்தில் சேர்க்கும்போது, என்னதான் நல்ல சம்பளம் கிடைத்தாலும், நாட்டுக்காகத் தான் தன் மகனை அர்ப்பணிக்கிறோம் என நினைப்பாள். எனக்கும் அந்த மாதிரியான எண்ணம்தான் இருந்தது. இந்த நிறுவனத்தை நான் நடத்தி, அதை நாட்டுக்கு முழுதாக உரித்தாக்க முடியாது. யாராவது ஒரு பெரிய நிறுவனம் அதைச் செய்வார்கள் என்கிற பேராசையில் என் நிறுவனத்தை விற்றிருக்கிறேன்.

தவிர, எனக்கும் வயதாகிறது. நிறுவனம் பெரிதாக வளர்ந்துவிட்டது. அது குழந்தையாக இருந்தபோது குதூகலமாக இருந்தது. இப்போது அது வாலிப வயதை எட்டிவிட்டது. எனவே, இந்தச் சமயத்தில் இந்த நிறுவனத்தை இன்னொருவரிடம் தந்தால் அது சரியான முடிவாக இருக்கும் என நினைத்துதான் இந்த முடிவை எடுத்திருக்கிறேன்.’’

இதற்கு முன் பலரும் இந்த நிறுவனத் தைக் கேட்டபோது தராமல், பார்ம்ஈஸி நிறுவனத்திடம் தந்தது ஏன்?

‘‘இதற்கு முன்பு கேட்டவர்கள் எல்லாம் ஃபைனான்ஷியல் இன்வெஸ்டர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அவர்களின் நோக்கம், கொஞ்சம் லாபம். அவர்களின் கையில் என் நிறுவனம் சென்றால், உன்னத நிலையை எட்டாது என எனக்குத் தோன்றியது. ஆனால், பார்ம்ஈஸி நிறுவனத்தை நடத்துபவர்களுக்குத் தெளிவான நோக்கம் இருப்பது தெரிந்தது. பல ஆயிரம் கோடி ரூபாயை இதில் முதலீடு செய்திருக்கிறார்கள். பல நிறுவனங்கள் இருந்தாலும் அவர்களுக்கு இந்த நிறுவனம்தான் பிடித்திருந்தது. இவர்களைப்போல, வேறு யாரும் கிடைப்பார்களா என்கிற கேள்வியும் எனக்கிருந்தது. எனவேதான், பார்ம்ஈஸி நிறுவனத் துக்கு தைரோகேர் நிறுவனத்தை விற்றேன்.’’

ஏ.வேலுமணி
ஏ.வேலுமணி

நீங்கள் வளர்த்த நிறுவனத்தை உங்கள் வாரிசுகள் ஏற்று நடத்த விரும்பவில்லையா?

‘‘என் குழந்தைகளைப் போல அழகோ, அறிவோ உலகில் வேறு எந்தக் குழந்தைகளுக்கும் இல்லை என்று ஒவ்வொரு தந்தையும் நினைப்பான். இது நூற்றுக்கு 99% தவறு. நம் நாட்டில் பல குடும்பங்களில் ஒரு நிறுவனத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் விதத்தை ஆராய்ந்து பார்த்திருக்கிறேன். இப்படிச் செல்வதில் ஒரே ஒரு சதவிகிதத்தினர்தான் அப்பா வளர்த்த நிறுவனத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்கின்றனர். மற்றவர்கள் அதே நிலையில்தான் நிறுவனத்தை வைத் திருக்கின்றனர். அல்லது நிறுவனத்தைத் தொலைத்துவிடுகிறார்கள். யாரோ ஒருவர் என் நிறுவனத்தில் முதலீடு செய்து, லாபம் பார்ப்பதற்காக கஷ்டப்பட்டு உழைப்பார். ஆனால், சாப்பாட்டுக்கு எந்த கஷ்டமும் இல்லாத குழந்தைகள் ஒரு நிறுவனத்தை முன்பின் தெரியாத யாரோ ஒருவர் கொண்டுசெல்ல நினைக்கும் அளவுக்குக் கொண்டு செல்வார் களா என்கிற கேள்வி எனக்குள் இருந்தது. இதைப் பற்றி என் குழந்தைகளிடமே பேசினேன். ‘‘அப்பா, நீங்கள் நினைப்பதுதான் சரி. நாங்கள் எப்படியாவது பிழைத்துக்கொள்வோம். நாங்களே ஒரு நிறுவனத்தைத் தொடங்கி, அதில் ஜெயிப்பதுதான் எங்களுக்குப் பெருமையே தவிர, உங்கள் வெற்றியால் நாங்கள் வெற்றி பெற விரும்பவில்லை’’ என்றார்கள். இதைச் சொல்ல என் மகனுக்கும் மகளுக்கும் ஒரு பக்குவம் வேண்டும். அது அவர்களிடம் இருப்பதில் எனக்கு சந்தோஷம்.’’

தைரோகேரை விற்ற பணத்தில் ரூ.1,500 கோடியை பார்ம்ஈஸி நிறுவனத்தில் முதலீடு செய்ய முடிவெடுத்தது ஏன்?

‘‘வங்கி டெபாசிட்டுக்கான வருமானம் மிகக் குறைவு. வங்கி ஆரம்பித்து நடத்தும் அளவுக்கு கையில் பணம் இருக்கும்போது, அதைப் போட்டுவிட்டு, உட்கார்ந்திருப்பது முட்டாள்தனம். ஆனால், மீண்டும் புதிதாக ஒரு நிறுவனத்தைத் தொடங்கி நடத்த எனக்கு ஆர்வம் இல்லை. அவர்கள் 6,000 கோடி முதலீடு செய்து என் நிறுவனத்தை வாங்குகிறார்கள். அந்த நிறுவனத்தை அவர்கள் ஐ.பி.ஓ-வும் கொண்டுவரப் போகிறார்கள். அப்படியிருக்க, அந்த நிறுவனத்தின் பங்குகளை நல்ல விலைக்கு இன்றே ஏன் நாம் வாங்கக் கூடாது என்று நினைத்துதான் முதலீடு செய்தேன். நான் செய்யும் முதல் முதலீடு இது. அவர்கள் நல்ல விதமாக நிறுவனத்தை நடத்திக்கொண்டு செல்வார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது.’’

இனி என்ன செய்யத் திட்டம்?

‘‘அடுத்த மூன்று மாதங்களுக்கு நன்கு ஓய்வெடுப்பேன். அதற்குப் பின் என் கவனத்துக்கு வரும் நாட்டுக்கும் குடும்பத்துக்கும் நன்மை தரும் நிறுவனங்களில் முதலீடு செய்வேன். குறிப்பாக, வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நிறுவனங்களில் முதலீடு செய்ய எனக்கு விருப்பம்.’’

சில ஆண்டுகளுக்கு முன் உங்கள் மனைவி இறந்ததுதான் நீங்கள் இந்த முடிவை எடுக்கக் காரணமா?

‘‘நான் என் மனைவியைக் காதலித்துத் திருமணம் செய்யவில்லை. ஆனால், திருமணம் செய்துகொண்ட பின் காதலித்தேன். திருமணமான பின் நாங்கள் ஒருவர்மீது ஒருவர் வைத்திருந்த நம்பிக்கை உன்னதமான வாழ்க்கைக்கு அடிப்படை. அவர்தான் தைரோகேர் நிறுவனம் அமைக்க ஆதாரமாக இருந்தார். நான் என்ன செய்தாலும், அவர் என்னை ஊக்கப்படுத்தினார். அதுதான் என்னை பலசாலி ஆக்கி, இவ்வளவு பெரிய நிறுவனத்தை வளர்த்தெடுக்கக் காரணமாக அமைந்தது. அவரை இழந்தபோது அதன் வலி எனக்குள் இருந்தது. ஆனால், நான் அழவில்லை. இப்போது நிறுவனத்தை இன்னொரு வருக்குத் தரும்போதும் அதே வலி. இப்போதும் நான் அழமாட்டேன். அடிமட்டத்தில் கஷ்டப்படும் மனிதனின் நிலையும் எனக்குத் தெரியும்; பணக்காரனின் அகந்தையும் எனக்குத் தெரியும். எல்லா உணர்வு களையும் பார்த்து, ஒரு சரியான வாழ்க்கையை என் மனைவியுடன் வாழ்ந்த திருப்தி எனக்கு இருக்கிறது.’’

இனி உங்கள் நேரத்தை எப்படி செலவிடப் போகிறீர்கள்?

‘‘முதல் 20 ஆண்டுகள் நான் ஒரு விவசாயி மகன். அடுத்த 20 ஆண்டுகள் நான் ஒரு விஞ்ஞானி. அடுத்த 20 ஆண்டுகள் நான் ஒரு தொழிலதிபர். இனி அடுத்துவரும் 20 ஆண்டுகளுக்கு நான் ஒரு கதை சொல்லி. கதை சொல்வதன் மூலம் எல்லோரையும் ஊக்கப்படுத்தி, பெரும் சாதனை களைச் செய்ய வைக்க முடியும். அந்த வேலையைத்தான் நான் செய்யப் போகிறேன்’’ என்று கலகலப்பாகப் பேசி முடித்தார் வேலுமணி.

இந்த பேட்டியை வீடியோவாக பார்க்க விரும்புகிறவர்கள் இந்த லிங்கை சொடுக்கவும். https://www.youtube.com/watch?v=5898OJXhf6o

‘‘டாடா, அம்பானிக்கு அடுத்து நான்..!’’

“தற்போது ஆன்லைன் மருந்து விற்பனையில் பார்ம் ஈஸி, 1 எம்.ஜி மற்றும் நெட்மெட்ஸ் ஆகிய நிறுவனங்கள் உள்ளன. இதில் 1 எம்.ஜி நிறுவனத்தின் பெரும்பான்மை யான பங்குகளை டாடா குழுமம் வாங்கியிருக்கிறது. நெட்மெட்ஸ் நிறுவனத்தின் 60% பங்குகளை ரிலையன்ஸ் குழுமம் வாங்கியிருக்கிறது. பார்ம் ஈஸி நிறுவனத்தில் அதிகமான பங்குகளை வைத்திருப்ப வன் நான் என்கிற முறையில் டாடா, அம்பானிக்கு அடுத்தபடியாக நான் இருக்கும் பெருமை எனக்குக் கிடைத்திருக்கிறது’’ என்று நகைச்சுவையுடன் பேசினார் வேலுமணி.

சித்தார்த் ஷா, ஏ.வேலுமணி
சித்தார்த் ஷா, ஏ.வேலுமணி

தைரோகேர் நிறுவனத்தை பார்ம்ஈஸி வாங்கியது எப்படி?

தொடங்கி ஆறு ஆண்டுகளான பார்ம்ஈஸி நிறுவனம், 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டுவரும் தைரோகேர் நிறுவனத்தை ரூ.4,500 கோடி தந்து வாங்கியிருக்கிறது. தவிர, தைரோகேர் நிறுவனம் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனம். இதைப் பட்டியலிடப்படாத பார்ம்ஈஸி வாங்கியது இன்னொரு ஆச்சர்யம். தைரோகேர் நிறுவனத்தின் நிறுவனர் வேலுமணியிடம் இருந்து 66.1% பங்குகளை ஒரு பங்குக்கு ரூ.1,300 என்னும் அளவில் பார்ம்ஈஸி வாங்கியிருக்கிறது. தைரோகேர் வேலுமணியும் பார்ம் ஈஸி நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஏ.பி.ஐ ஹோல்டிங்ஸ் நிறுவனத்தில் ரூ.1,500 கோடி முதலீடு செய்து 4.9% பங்குகளை வாங்கியிருக்கிறார். இந்த பார்ம்ஈஸி நிறுவனம் யாருடையது, இதன் பின்னணி என்ன?

ஐந்து நண்பர்கள் உருவாக்கிய நிறுவனம்...

மும்பை புறநகரான காட்கோபர் (Ghatkopar) நகரைச் சேர்ந்த ஐந்து நண்பர்கள் 2015-ம் ஆண்டு உருவாக்கிய நிறுவனம்தான் பார்ம்ஈஸி. சித்தார்த் ஷா ஐ.ஐ.எம் அகமதாபாத்தில் படித்தவர். தவால் ஷா, மருத்துவர். தர்மிர் ஷா மற்றும் ஹர்திக் ஆகியோர் இன்ஜினீயர்கள், ஐந்தாவதாக ஹரிஷ் பரேக் எம்.பி.ஏ படித்தவர்.

சித்தார்த் ஐ.ஐ.எம்மில் படிக்கும்போதே டயல் ஹெல்த் என்னும் நிறுவனத்தைத் தொடங்கி நடத்தினார். ஆனால், இந்த நிறுவனம் தோல்வி அடைந்தது. ஆனால், இந்த பிசினஸ் தோல்வி அடைந்தாலும் பார்மா துறையைக் குறித்து முழுவதும் புரிந்துகொள்ள முடிந்தது. பார்மா துறை என்பது தனித்தனியாகச் செயல்படும் சந்தை. ரீடெய்ல் துறையினர் ஒரு கட்டத்துக்குமேல் வளர்ச்சி அடைய முடியாது. அதனால் பார்மா துறையை ஒருங்கிணைத்தால் பெரிய சந்தையைப் பிடிக்க முடியும் என்னும் ஐடியா தோன்றவே, நண்பர்களுடன் சேர்ந்து பார்ம்ஈஸி நிறுவனத்தைத் தொடங்கினார்.

தற்போது பார்ம்ஈஸி வசம் 1.2 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். இது தவிர, நாடு முழுவதும் 90,000 ரீடெய்ல் நிறுவனங்களுக்கும் மருந்துகளை சப்ளை செய்கிறது. இது தவிர, 6,000 டிஜிட்டல் கன்சல்டன்ட் கிளினிக்குகளும் இந்த நிறுவனத்தின் வசம் உள்ளன. இந்தியா முழுவதும் இரண்டு லட்சம் ரீடெய்ல் நிறுவனங்களுக்கு சென்றடைவதை இலக்காகக் கொண்டு இந்த நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிலையில், தைரோகேர் நிறுவனத்தையும் பார்ம்ஈஸி நிறுவனம் வாங்கியிருப்பதால், பரிசோதனை என்னும் மருத்துவப் பிரிவிலும் கால்பதித்திருக்கிறது. இந்தியா முழுவதும் 2,000-க்கும் மேற்பட்ட நகரங்களில் 3,300 மாதிரி சேகரிப்பு மையங்கள் தைரோகேருக்கு உள்ளன என்பதால், தனது இருப்பை இந்தியா முழுக்க உடனே நிலைநாட்டியிருக்கிறது பார்ம்ஈஸி.

பில்லியன் டாலர் கம்பெனி...

இந்த ஆண்டு பார்ம்ஈஸி நிறுவனத்துக்கு மட்டுமல்லாமல், அனைத்து ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்குமே கொண்டாட்டமான ஆண்டு. இந்த ஆண்டு மட்டும் 16 நிறுவனங்கள் யுனிகார்ன் (100 கோடி டாலர் சந்தை மதிப்பு) நிலையை எட்டியது. கடந்த ஏப்ரல் மாதம் திரட்டப்பட்ட ஃபண்டிங் மூலமாக யூனிகார்ன் நிலையை அடைந்தது. சமீபத்தில் திரட்டப்பட்ட ஃபண்டிங் மூலம் தைரோகேர் நிறுவனத்தை வாங்கியதால், பார்ம்ஈஸி நிறுவனத்தின் சந்தை மதிப்பு நான்கு பில்லியன் டாலர் (ரூபாய் மதிப்பில் சுமார் 30,000 கோடி) மதிப்புகொண்ட நிறுவனமாக மாறி இருக்கிறது. தைரோகேர் இணைப்பு வெற்றிகரமாக முடிந்த 18 மாதங்களுக்குள் பார்ம்ஈஸி நிறுவனத்தை ஐ.பி.ஓ கொண்டுவரத் திட்டமிடப் பட்டிருக்கிறது.

இதற்கிடையே கடந்த மாதம் மெட்லைஃப் நிறுவனத்தையும் பார்ம்ஈஸி வாங்கியது. ஆனால், எவ்வளவு தொகை தந்து அந்த நிறுவனத்தை வாங்கினார்கள் என்பது குறித்த விவரம் வெளியிடப்படவில்லை. ஆனால், மெட்லைஃப் வாடிக்கையாளர்கள் இனி பார்ம்ஈஸியின் வாடிக்கையாளர்களாக மாறுவார்கள் என அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் இ-பார்மஸி துறையில் முக்கிய நிறுவனமாக பார்ம்ஈஸி மாறியிருக்கிறது. தவிர, இந்த ஆண்டு பெரிய அளவிலான நிதித் திரட்டலை நிறுவனம் செய்திருக்கிறது. (டெமாசெக், திங்க் இன்வெஸ்மென்ட், பி கேபிடல், புரோசஸ் ஜே.எம். பைனான்ஷியல், கோட்டக் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளன) மேலும், ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி ஆதித்யா பூரி பார்ம்ஈஸி நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் இணைந்திருக்கிறார்.

- வாசு கார்த்தி