நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

வெற்றியாளர்களின் பிசினஸ் ரகசியங்கள்... ‘டைகான்’ நடத்திய தொழில் திருவிழா..!

பிசினஸ் ரகசியங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
பிசினஸ் ரகசியங்கள்

கருத்தரங்கு

சென்னையைப் பொறுத்தவரை, தொழில் முனைவோர்களின் முக்கியமான நிகழ்வு டைகான் (TiECon) கருத்தரங்கம். கடந்த ஆண்டு அக்டோபர் / நவம்பர் மாதங்களில் நடந்த கருத்தரங்கு கோவிட் காரணமாக இணையம் மூலமாக விர்ச்சுவலாக நடந்தது. இந்த ஆண்டும் அப்படியே.

இந்தக் கருத்தரங்கின் தொடக்க உரையை ‘டை’ அமைப்பின் தலைவர் சி.கே.ரங்கநாதன் நிகழ்த்தினார். ஐந்து நாள் நடந்த இந்தக் கருத்தரங்கம் இணையம் மூலமாக நடந்ததால், உலக அளவில் புகழ்பெற்ற நிபுணர்கள் கலந்து கொள்ள முடிந்ததுடன், இந்தியா முழுக்க தொழில்முனைவோர்கள் கட்டணம் செலுத்திக் கலந்துகொண்டனர். இந்தக் கருத்தரங்கின் சிறப்பு விருந்தினர்களின் உரையைத் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் கேட்கிற மாதிரி ஏற்பாடு செய்திருந்தது சிறப்பான விஷயம்.

ஆலோசனை பெறுவதில் ஈகோ வேண்டாம்...

இந்தக் கருத்தரங்கின் முதல்நாள், நிறுவனங் களின் தலைவர்களுக்கு ஆலோசனை வழங்கும் கோச் மார்ஷெல் கோல்ட்ஸ்மித் முதலில் உரையாற்றினார். அவர் கூறியதாவது:

‘‘உயிர்சேதம் போர்களில் மட்டுமே நடப்பது கிடையாது. மருத்துவத் துறையிலும் நடக்கிறது. ஆபரேஷன் சமயத்தில் சரியான செக் லிஸ்ட் கடைப்பிடிக்காததால், பல தவறுகள் நடக் கின்றன. இதற்குக் காரணம், நர்ஸ்களால் டாக்டர்களைக் கேள்வி கேட்க முடியவில்லை. டாக்டர்களின் ஈகோ அதற்கு இடம்தருவதில்லை.

ஒருமுறை ஃபைட்டர் ஜெட் விமானத்தில் பயணம் செய்தேன். அப்போது மிக ஜூனியர் நிலையில் இருந்த உதவியாளர் ஒருவர், பைலட்டிடம் சில விஷயங்களைச் சொல்லி, அவை அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று செக்லிஸ்ட்டை சரிபார்த்தார். அந்த உதவி யாளர் போனபிறகு, நான் அந்த பைலட்டிடம் கேட்டேன். ‘‘ஜூனியர் ஒருவர் வந்து கேட்ட போது உங்களால் எப்படி இயல்பாகப் பதில் சொல்ல முடிந்தது. நீங்கள் ஈகோ பார்ப்ப தில்லையா..?’’ என்றேன். அதற்கு அவர் அளித்த பதில், என்னை ஆச்சர்யப்பட வைத்தது. ‘‘ஒரு ஆபரேஷன் தோல்வி அடைந்தால் நோயாளி மட்டுமே இறப்பார். ஆனால், ஒரு விமானம் செயல் இழந்தால் நான் (பைலட்) உட்பட அனைவருமே இறப்போம். அதனால் என் ஈகோவைவிட செக்லிஸ்ட் முக்கியம். நம் ஈகோ நமக்கு ஆபத்து விளைவிக்கும் என்பதைப் புரிந்துகொள்வது மிகவும் அவசியம்’’ என்றார்.

வெற்றியாளர்களின் பிசினஸ் ரகசியங்கள்... ‘டைகான்’ நடத்திய தொழில் திருவிழா..!

தள்ளுபடி மட்டும் போதாது..!

அடுத்து, ஃபேஷன் இ-காமர்ஸ் நிறுவனமான `லைம் ரோடு’ நிறுவனத்தின் சுச்சி முகர்ஜி பேசினார். ‘‘இ-காமர்ஸ் துறை என்பதே தள்ளுபடி கொடுத்து விற்பனை நடக்கிறது என்று நினைக்கிறார்கள். ஆனால், தள்ளுபடி போக, வாடிக்கையாளர்களுக்கு வசதியைத் தர வேண்டும் என நினைக்கிறோம். தள்ளுபடி கொடுத்து நிறுவனத்தை வளர்த்தால், நம்மைவிட அதிக வசதி கொண்ட (வென்ச்சர் கேப்பிடல் போன்ற) நிறுவனங்கள் நம்முடைய சந்தையை எடுத்துக்கொள்ளும். எனவே, வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வசதியைத் தந்தால், அவர்கள் மற்றொரு நிறுவனத்தை நாட மாட்டார்கள். பொதுவாக, நாங்கள் அதிகம் விற்பனையாகும் பொருள் களுக்கு முக்கியத்துவம் தருவோம். அதே சமயம், புதிய புதிய புராடக்ட்டுகளையும் தொடர்ந்து அறிமுகம் செய்துகொண்டே இருப்போம். அப்போதுதான் வாடிக்கையாளர்களைத் தக்க வைக்க முடியும். தள்ளுபடி மட்டும் தந்து வாடிக்கையாளர் களைக் கவரும் காலம் முடிந்துவிட்டது. மற்றவர்களைவிட சிறந்த சேவையை வழங்க முடிகிறதா, சிறப்பாக லாஜிஸ்டிக்ஸ் இருக்கிறதா என்பதை நோக்கி இ-காமர்ஸ் இருக்கிறது’’ என அவர் குறிப்பிட்டார்.

இணை நிறுவனத்தைத் தேர்வு செய்யும்போது...

அடுத்து, எருடிடஸ் (Eruditus) நிறுவனத்தின் அஸ்வின் தமிரா, இணை நிறுவனரைத் தேர்ந்தெடுப்பது குறித்து பேசினார். ‘‘இணை நிறுவனர் இல்லாமலே பலர் வெற்றிகர மாகப் பிசினஸ் செய்கிறார்கள். ஆனால், துணைக்கு ஆள் தேவை என்னும் ரீதியில் இணை நிறுவனரைத் தேடக் கூடாது. ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்திறன் இருக்கும். உங்களிடம் இல்லாத ஒரு திறன், உங்களுடைய இணை நிறுவனருக்கு இருக்க வேண்டும். எனக்கு சர்வதேச அனுபவம், டிஜிட்டல் தெரியும்; நிறுவனத்தை வளர்த்த அனுபவம் இருக்கிறது. என்னுடைய இணை நிறுவனர் சைத்தன்யாவுக்கு எக்ஸி கியூட்டிவ் எஜுகேஷன் பிரிவில் அனுபவம் மற்றும் துறை சார்ந்த அனுபவம் இருந்ததால், இணைந்து பணியாற்றுகிறோம்.

தவிர, விற்பனைப் பணியாளர் களுக்கு விற்பனை அடிப்படை யில் நாங்கள் ஊக்கத் தொகை தருவதில்லை. நாங்கள் கல்விப் பிரிவில் இருக்கிறோம். அதை ஒரு புராடக்டாக விற்பனை செய்வது நன்றாக இருக்காது. பணியாளர்களின் செயல் பாட்டை அடிப்படையாகக் கொண்டே ஊக்கத் தொகை வழங்குகிறோம்’’ என்றார்.

சி.கே.ரங்கநாதன், மார்ஷெல் கோல்ட்ஸ்மித், சுச்சி முகர்ஜி, அஸ்வின் தமிரா
சி.கே.ரங்கநாதன், மார்ஷெல் கோல்ட்ஸ்மித், சுச்சி முகர்ஜி, அஸ்வின் தமிரா

பிரைவேட் ஜெட்டுக்கு மவுசு...

ஜெட்செட் கோவின் (Jetsetgo) ஏர் டாக்ஸி பிரிவில் செயல் படுகிறது. இந்த நிறுவனம் வளர்ந்த கதைப் பற்றி இந்த நிறுவனத்தின் நிறுவனர் கனிகா தெக்ரிவால் பேசினார். மார்வாடி குடும்பத்தில் பிறந்த எனக்கு சிறுவயதில் பைலட் ஆக வேண்டும் என ஆசை. ஆனால், எங்கள் குடும்பத்தில் பெண்கள் வேலைக்குப் போவது கடினம். ஆனால், ஒவ்வொரு முறையும் குடும்பத்தை ஒப்புக்கொள்ள வைத்து, பள்ளிப்படிப்பு, வெளிநாட்டில் கல்லூரி படித்தேன். இதற்கு நடுவில் கேன்சரில் இருந்து மீண்டுவந்தேன்.

ஒரு காலத்தில் காரில் செல் பவர்கள் குறைவாக இருந்தனர். இரு சக்கர வாகனத்தில் செல் பவர்கள் அதிகமாக இருந்தனர். அதைவிட நடந்து செல்பவர்கள் மிக அதிகமாக இருந்தனர். பல ஆண்டுகளுக்கு முன்பு எப்படி கார் இருந்ததோ, தற்போது பிரைவேட் ஜெட் இருக்கிறது. வரும் காலத்தில் பிரைவேட் ஜெட்டில் பயணம் செய்வது அதிகமாக இருக்கும். தற்போது ஒரு நாளில் ஆறு மணி நேரம் வரை காரில் பயணம் செய்பவர் களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. பயணத்துக்கான நேரத்தைக் குறைக்க விரும்புவர்களின் எண்ணிக்கை உயரும். இவர்கள் விரைவில் பிரைவேட் ஜெட்டுக்கு மாறுவார்கள்.

கோவிட்டுக்குப் பிறகு, பிரைவேட் ஜெட்டில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. கோவிட்டுக்கு முன்பு பிரைவேட் ஜெட்டில் பயணம் செய்வது, பணத்தை விரயம் செய்வதாக நினைத்தார்கள். ஆனால், கோவிட்டுக்குப் பிறகு, அந்த எண்ணம் மாறியிருக்கிறது’’ என்றார் அவர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் டு சாய் கிங்ஸ்...

இதைத் தொடர்ந்து சாய் கிங்க்ஸ் நிறுவனர்கள் பாலாஜி சடகோபன் மற்றும் ஜாபர் சாதிக் ஆகியோர் பேசினார்கள். ‘‘ஆரம்பத்தில் சலூன் உட்பட பல தொழில்களைச் செய்த எங்களுக்கு, சொந்தமாக ஒரு பிராண்டை ஏன் உருவாக்கக் கூடாது என நினைத்தோம். முதலில், நான்-வெஜ் ரெஸ்டாரன்ட் தொடங்கத் திட்டமிட்டோம். அதில் பெரிய சவால்கள் இருந்தன; அதிக முதலீடு தேவைப்பட்டது.

2016-ல் சிறிய காபிக் கடைகள் தொடங்கத் திட்டமிட்டோம். ஆனால், பெரும்பாலான மக்கள் அதிகம் டீ மட்டுமே குடிக்கிறார்கள். ஆனால், தரமான டீக்கடைகள் இல்லை. அதனால் அனைத்து தரப்பு மக்களும் வருவதற்கு ஏதுவாக இருக்க வேண்டும் என முடிவெடுத்தோம். சாய் கிங்ஸ் எனப் பெயர் வைத்தற்குக் காரணம், சென்னை சூப்பர் கிங்ஸ்தான். கிங்ஸ் என இருப்பதால், மக்களிடம் எளிதாகச் சென்றடைய முடியும். தற்போது மூன்று நகரங்களில் 50-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த விரிவாக்கத்துக்காகச் சென்னை ஏஞ்சல்ஸ் (15 லட்சம் டாலர்) பெரிதும் உதவியது. பெரும்பாலான முதலீட்டை சென்னை ஏஞ்சல்ஸ் மட்டுமே செய்திருக்கிறது.

ஒரு நாளைக்கு 25,000 கப் டீ விற்பனை செய்கிறோம்.மொத்த விற்பனையில் 50% அளவுக்கு ஆன்லைன் ஆர்டர் மூலம் நடக்கிறது. அனைத்து விஷயங்களுக்கும் விதிமுறை களை உருவாக்கியிருக்கிறோம். எங்களிடம் காஸ் இல்லை. இண்டக்‌ஷன் ஸ்டவ் மட்டுமே. மூலப்பொருள்களை வாங்குவதில் இருந்து டீ தயாரிப்பது வரை அனைத்தையுமே சரியாகச் செய்வதால், சுவை மற்றும் தரம் அனைத்துக் கடைகளிலும் சீராக இருக்கிறது’’ எனத் தெரிவித்தனர்.

கனிகா தெக்ரிவால், பாலாஜி சடகோபன், அம்பி பரமேஸ்வரன், அர்ச்சனா கல்பாத்தி
கனிகா தெக்ரிவால், பாலாஜி சடகோபன், அம்பி பரமேஸ்வரன், அர்ச்சனா கல்பாத்தி

நிராகரிப்பை ஏற்றுக்கொள்ளப் பழகுங்கள்...

பிரபல எழுத்தாளரும், பிராண்ட் கோச்சுமான அம்பி பரமேஸ்வரன் நிராகரிப்பில் இருந்து எப்படி மீண்டுவருவது என்பது குறித்துப் பேசினார். ‘‘ஒரு வெற்றியாளர் உங்களுக்குத் தெரிகிறார் எனில், அவர் ஏற்கெனவே நிராகரிக்கப்பட்டிருக் கிறார் என்று அர்த்தம். நிராகரிப்பை ஏற்றுக்கொள்ள கற்றுக்கொள்ளுங்கள், நிராகரிப்பைக் கண்டு உடைந்து விடாதீர்கள். அடுத்து, நிராகரிப்பு ஏன் நடந்தது எனக் கண்டுபிடியுங்கள். உங்களால் முடியாது எனில், ஆலோசகரின் உதவியுடன் அதைக் கண்டறியுங்கள். மூன்றாவது, ஒவ்வொரு நிராகரிப்புக்குப் பிறகும், என்ன கற்றுக்கொள்கிறீர்கள் என்பது முக்கியம். தொடர்ந்து ஒரே தவறை செய்வதால், எந்தவிதமான பலனும் இல்லை. இதைக் கற்றுக்கொண்டால் சிறப்பான தொழில்முனை வோராக இருக்கலாம்’’ என்றார்.

பெரிய தியேட்டர்களால்தான் வெற்றியைத் தர முடியும்...

இந்தக் கருத்தரங்கில் பேசிய ஏ.ஜி.எஸ் சினிமா நிறுவனத்தின் சி.இ.ஓ அர்ச்சனா கல்பாத்தி பேசியது பலரின் கவனத்தை ஈர்த்தது. ‘‘சிறிய படங்களில் புதிய ஸ்டார்கள் உருவாகிறார்கள். அங்குதான் புதிய வித்தியாசமான கதைகள் சொல்ல முடியும். உதாரணமாக, யோகி பாபு நடித்த ‘மண்டேலா’ என்னும் படம் ஓ.டி.டி-யில் வெளியானது. ஒருவேளை, தியேட்டரில் வெளியாகி இருந்தால், மிகப் பெரிய வெற்றி அடைந்திருக்கும். ‘ஜதி ரத்னவேலு’ என்னும் சிறிய பட்ஜெட் தெலுங்கு படம் தியேட்டரில் வெளியாகி பெரிய அளவுக்கு வெற்றி அடைந்தது. இந்த வெற்றியை / தொகையை ஓ.டி.டி தர முடியாது. ஓ.டி.டி என்பது தயாரிப்பாளர்களுக்கு வரம். அதில் நிறைய பரிசோதனை செய்ய முடியும். ஆனால், பெரிய வெற்றியை தியேட்டர்களால் மட்டுமே தர முடியும்.

மண்டேலா ஓ.டி.டி-க்கு ரூ.4 கோடிக்கு விற்கப்பட்டது. ஒருவேளை, தியேட்டரில் வெளியாகியிருந்தால், ரூ.10 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டி இருக்கும் குறைந்தபட்சம் ரூ.7 கோடியாவது கிடைத்திருக்கும். தவிர, ஓ.டி.டி, சாட்டிலைட் உரிமம், மாற்று மொழி உரிமம் என ஒவ்வோர் இடத்திலும் அந்தப் படத்துக்கான மதிப்புத் தொகை கிடைத் திருக்கும். இதன் காரணமாகத் தயாரிப்பாளர்கள் தியேட்டர் களை விரும்புகிறார்கள். ஒருவேளை, படம் நன்றாக இல்லையெனில், எதிர்மறையாக ஒவ்வோர் இடத்திலும் மதிப்பு குறையவும் வாய்ப்பிருக்கிறது.

ஒரு தியேட்டர் கட்ட 35 - 60 கோடி ரூபாய் செலவாகிறது. ஆனால், எங்களால் டிக்கெட் விலையை உயர்த்த முடியாது. தவிர, ஜி.எஸ்.டி, உள்மாநில வரி, மொழிகளுக்கேற்ப வரி இருக்கிறது. பணியாளர்களுக்குச் சம்பளம் மற்றும் தொடர்ந்து ஊதிய உயர்வு தந்தாக வேண்டும். இந்த நிலையில், டிக்கெட்,உணவு மற்றும் பார்க்கிங் மூலமாகத்தான் எங்களது வருமானம் இருக்கிறது’’ என்றார் அவர்.

இந்த ‘டைகான்’ கருத்தரங்கம் அடுத்த ஆண்டாவது நேரில் நடக்கும் என்று எதிர்பார்ப்போம்!

கிரிஷ் சுப்ரமணியன்
கிரிஷ் சுப்ரமணியன்

‘‘36 மாதங்களுக்குத் தாக்குப்பிடித்தால் ஜெயித்துவிடலாம்..!’’

கிரிஷ் சுப்ரமணியன், சார்ஜ்பீ.

“ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ‘பிரைசிங்’ முக்கியம். நீங்கள் எந்த வகையான வாடிக்கையாளர்களைச் சென்றடையப் போகிறீர்கள் என்பதை உங்களின் விலைதான் சொல்லும். நீங்கள் குறைவான விலையை நிர்ணயம் செய்தால், அதற்கேற்ற வாடிக்கையாளர்கள் வருவார்கள். அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்யலாம். ஆனால், விலை மூலமாக வாடிக்கையாளர்களை நன்றாகப் புரிந்துகொள்ளலாம். விலையைக் கொஞ்சம் உயர்த்தி வாடிக்கையாளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று பார்க்கலாம். சில வாடிக்கையாளர்கள், ‘அதுதான் உங்களின் மதிப்பு’ என்பார்கள். இன்னும் சிலர் வேறு மாதிரி நினைக்கலாம். விலை என்பது நிச்சயம் ரிஸ்க்கான, பயத்தை உருவாக்கக்கூடிய முடிவுதான். அதனால், நிறுவனம் தொடங்கும்போது துல்லியமான விலையை நிர்ணயம் செய்ய வேண்டாம். காலப்போக்கில் விலை கூடலாம் அல்லது குறையலாம். நான் நிறுவனம் தொடங்கியபோது, ‘36 மாதத்துக்கு உன்னால் தாக்குப்பிடிக்க முடியுமா’ என என் மெண்டார் கேட்டார். 36 மாதங்களுக்கு தாக்குப்பிடிக்கும் அளவுக்கு வலிமை இருக்கிறதா என்பதைத் தொழில்முனைவோர்கள் புரிந்துகொண்ட பிறகு, பிசினஸில் இறங்க வேண்டும்.”