
எங்க ஏரியா ஸ்பெஷல்
புதுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூர் செல்லும் நெடுஞ்சாலையில் 25 கி.மீ தொலைவில் இருக்கிறது ஆதனக்கோட்டை. இந்த ஊருக்குள் நுழைந்த உடனேயே முந்திரி வாசம் மூக்கைத் துளைக்கிறது.
நெடுஞ்சாலையின் இரு புறமும், வழி நெடுகிலும் கீற்றுக் கொட்டகைகள். இந்த கொட்டகைக்குள்தான் வறுத் தெடுத்த, முந்திரிக் கொட்டை களிலிந்து பருப்புகளை எடுத்து, அதை பாக்கெட்டில் அடைத்து சாலையோரக் கடையிலேயே விற்பனைக்கு வைக்கின்றனர். வறுத்தெடுத்த பருப்புகளை விற்பனை செய்துகொண்டிருந்த ராதா விடம் பேசினோம்.

“20 வருஷத்துக்கும் மேல இந்தத் தொழில்ல இருக்கேன். ஆரம்பத்துல பத்து கடைக்கு உள்ளதான் இருந்துச்சு. இப்ப 110 கடைகள் வரைக்கும் இருக்கு. அது இல்லாம, சிலர் வீடுகள்லயும் உடைச்சு வெளி யூர்களுக்கு அனுப்புறாங்க.
ஆதனக்கோட்டை முந்திரி யோட சிறப்பே, முந்திரி சுவையா இருக்கிறதோட, எத்தனை நாள் வச்சிருந்தாலும், கெடாததுதான். சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டைன்னு முந்திரி அதிகமா பயிரிடற பகுதிகள்ல இருந்து மொத்தமா முந்திரிக்கொட்டகளை வாங்கிக்குவோம். ஆந்திரா, வெளிநாடுகள்ல இருந்தும் முன்னாடி முந்திரிக் கொட்டைகள் வந்துகிட்டு இருந்துச்சு. கொரோனாவுக்கு அப்புறம் வர்றதில்லை.
முந்திரிக்கொட்டை 80 கிலோ மூட்டை 10,000 ரூபாய் வரையிலும் போகுது. கோடையில சீஸன் நேரத்துல கொஞ்சம் வரத்து இருக்கும். விலையும் கொஞ்சம் குறையும். ஒரு மூட்டையை உடைச்சு எடுக்கிறதுக்கு கூலி 2,000 ரூபாய் வரைக்கும் ஆகுது.

ஒரு மூட்டையை வறுத்து அதிலிருந்து பருப்பு களை உடைச்சு எடுத்தா 15-ல் இருந்து அதிகபட்சமா 17 கிலோ வரை பருப்பு கிடைக்கும். 250 கிராம், 500 கிராம், 1 கிலோன்னு பாக்கெட் போட்டு விற்பனை செய்றோம். கிலோ 800 ரூபாய்க்கு விற்பனை செய் றோம். 17 கிலோவை விற்பனை செஞ்சா, ரூ.1,000 வரைக்கும் அதுல லாபம் பார்க்கலாம்” என்றார்.
அடுத்து வீரம்மாளுடன் பேசினோம்.
‘‘ஒரு சட்டியின்கீழே, ஓட்டையைப் போட்டு, அதில் முந்திரிக்கொட்டை களைப் போட்டுத் தீயை மூட்டி வறுத்தெடுப் போம். கொளுந்து விட்டு எரியும் தீயில, முந்திரிக் கொட்டையில் இருக்கும் பால், ஓட்டை வழியாக கீழே இறங்கிடும். கொஞ்ச நேரத்துல வறுத்தெடுத்த பருப்புகளைக் கீழே கொட்டி, கொட்டையை உடைச்சு பருப்பை தனியா எடுத்திடுவோம். சூடாக இருக்கிறபோதே உடைச்சு எடுத்தாதான் முழு பருப்பா கெடைக்கும்.
ஒண்ணு ஒண்ணா எடுத்து, உடைச்சு எடுத்த பருப்புகளை வெயில்ல காயப்போட்டு, அதிலயிருந்து தோலைப் பிரிச்சு எடுத்து, பாக்கெட்டுல அடைச் சோம்னா, அடுத்து விற்பனை செய்றதுதான் வேலை. வறுத்தெடுக்கிறதுல இருந்து பாக்கெட் செய்றது வரைக்கும் கொறஞ்சபட்சம் 5 பேர் வரைக்கும் வேலை பார்த்துக்கிட்டே இருக்கணும். அதிகமா பெண்கள்தான், இந்த வேலையில இருக்கோம்.
உடலுக்கு நல்லது, சுவையானதுங்கிறதால, நம்ம முந்திரியைத் தேடி வந்து வாங்கிக்கிட்டுப் போறாங்க. இப்ப, வெளிநாடுகளுக்கும் எங்க ஊரு முந்திரி ஏற்றுமதியாகிட்டு இருக்கு” என்றார்.
முந்திரி என்றாலே பண்ருட்டி நினைவுக்கு வரும். ஆனால், அடுத்த முறை ஆதனக்கோட்டை வழியாகப் போனால், வறுத்தெடுத்த முந்திரியை வாங்கி சாப்பிட மறக்காதீங்க!
நீங்களும் எழுதலாம்..!
வாசகர்களே... உங்கள் பகுதியிலிருக்கும் புகழ்பெற்ற சந்தை / மார்க்கெட், வியாபார ஸ்தலம், வெற்றிபெற்ற சிறுதொழில் முனைவோர், மாற்றி யோசித்து வெற்றிபெற்ற தொழில்முனைவோர் என்று நீங்கள் நன்கு அறிந்த / கேள்விப்பட்ட விஷயம் குறித்து சுவராஸ்யமான தகவல்களை புகைப்படங்களுடன் (கேமரா / செல்போன்) அனுப்புங்கள். வீடியோவுடன் அனுப்பினால் இன்னும் சிறப்பு. விகடன் இதழ்/டிஜிட்டல் / சோஷியல் மீடியா தளங்களில் பதிவிடப்படும் கட்டுரை / வீடியோ களுக்கு தகுந்த சன்மானம் உண்டு. அனுப்ப வேண்டிய இ-மெயில் முகவரி: navdesk@vikatan.com