Published:Updated:

வெற்றி பெற்ற பிசினஸ்மேன்களை கெளரவித்த நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் அவார்ட்ஸ்..!

நாணயம் விருதுகள் 2022
News
நாணயம் விருதுகள் 2022

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பிசினஸ் ஸ்டார் விருதுகள் ஆரம்பிக்கப்பட்டபோது, பிசினஸில் மிகப் பெரிய சாதனை செய்து, நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த தொழில்முனைவோர்களை ஊரறியச் செய்ய வேண்டும் என்கிற எண்ணம்தான் எங்கள் மனதில் இருந்தது...

Published:Updated:

வெற்றி பெற்ற பிசினஸ்மேன்களை கெளரவித்த நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் அவார்ட்ஸ்..!

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பிசினஸ் ஸ்டார் விருதுகள் ஆரம்பிக்கப்பட்டபோது, பிசினஸில் மிகப் பெரிய சாதனை செய்து, நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த தொழில்முனைவோர்களை ஊரறியச் செய்ய வேண்டும் என்கிற எண்ணம்தான் எங்கள் மனதில் இருந்தது...

நாணயம் விருதுகள் 2022
News
நாணயம் விருதுகள் 2022

தொழில்துறை வளர்ச்சியே நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் ஆதாரமாகத் திகழ்கிறது. இன்றைய தொழில்முனைவோர்கள் இந்த நவீன காலசூழலுக்கேற்ப புதிய யுக்திகளைக் கையாண்டு வெற்றிக்கொடி நாட்டி வருகின்றனர். தமது தொழிலில் மிகப்பெரும் வெற்றியை எட்டிய தொழில்முனைவோர்களை சிறப்பிக்கவே `நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார்' விருதுகள் தொடங்கப்பட்டது. இதுவரை 5 ஆண்டுகள் நடைபெற்றுள்ள நிலையில், 6-ம் ஆண்டு விருது விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் வரவேற்புரை நிகழ்த்திய விகடன் குழும நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன்...

பா.சீனிவாசன்
பா.சீனிவாசன்

``ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பிசினஸ் ஸ்டார் அவார்ட்ஸ் ஆரம்பிக்கப்பட்டபோது எங்கள் மனதில் இருந்த எண்ணம் ஒன்றே ஒன்றுதான்: பிசினஸில் மிகப் பெரிய சாதனை செய்து, நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த தொழில்முனைவோர்களை ஊரறியச் செய்ய வேண்டும் என்பதுதான். பெயர்பெற்ற ஒரு நிறுவனத்தில் வேலை செய்ய நினைத்த இளைஞர்கள் பலர், பிசினஸ் ஸ்டார் அவார்ட் நிகழ்ச்சியைப் பார்த்தபின் பெயர் சொல்லும் நிறுவனத்தைத் தொடங்கி நடத்த வேண்டும் என்று நினைக்கத் தொடங்கி இருப்பது ஆரோக்கியமான முன்னேற்றம்" என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில், ``தொழில் முனைவோரை ஊக்கப்படுத்தினால்தான் நம் நாடு செழிப்பாக இருக்கும் என்கிற நோக்கில் வழங்கப்படும் சிறப்பான விருது இது. இவ்விருதுகளைப் பெறவிருக்கிற தொழில் முனைவோருக்கு வாழ்த்துகள்" என்று கூறிய அவர், தமிழக அரசின் தொழில்துறை வளர்ச்சி சார்ந்து நடவடிக்கைகள் குறித்துப் பேசினார்.

அமைச்சர் தா.மோ.அன்பரசன்
அமைச்சர் தா.மோ.அன்பரசன்

``2030-ம் ஆண்டுக்குள் 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைவதற்காக சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில்துறையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த ஒன்றரை ஆண்டுகளில் மூன்று வகையான திட்டங்களில் 586 கோடி மானியத்துடன் 2,343 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டு 16,746 தொழில் முனைவோர்களை தி.மு.க அரசு உருவாக்கியிருக்கிறது. மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 7,253 நிறுவனங்களுக்கு 465.30 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டிருக்கிறது. கொரோனா காலத்தில் தொழில் நசிந்து விடக்கூடாது என்பதற்காக பேரிடர் காலகட்டங்களில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. சொத்துப்பிணையில்லாத கடன் பெறுவதற்காக 100 கோடி நிதியில் தமிழ்நாடு கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ் பலரும் கடன் பெற்றிருக்கின்றனர்'' என்றார் அமைச்சர் தா.மோ.அன்பரசன்.

விருது விழாவில் சிறப்புரை ஆற்றிய கவின்கேர் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி C.K. ரங்கநாதன்...

``கொரோனாவுக்குப் பிறகு நாம் VUCA உலகில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். VUCA என்றால் Volatility (நிலையற்றத்தன்மை), Uncertainty (நிச்சயமற்றத்தன்மை), Complexity (சிக்கலானது), and Ambiguity (தெளிவின்மை) ஆகும். கொரோனா காலகட்டத்தில் டிஜிட்டலைஷேசன் தானாக நடந்துவிட்டது.

சி.கே.ரங்கநாதன்
சி.கே.ரங்கநாதன்

தற்போது உள்ள சூழல் நமக்கு சம்பந்தமில்லாத கம்பெனிகளில் இருந்துகூட நமக்கு போட்டி வரலாம். எதற்கும் நாம் தயாராக இருந்துகொள்ள வேண்டும். எந்தவொரு விஷயமாக இருந்தாலும் சரி, பிரச்னையாக இருந்தாலும் சரி எளிமையாக அதற்கு நாம் பதில் கண்டுபிடித்துவிடலாம். எந்தவொரு நிறுவனம் தன் ஊழியர்களை ரிஸ்க் எடுக்க ஊக்குவிக்கிறதோ, அந்த நிறுவனம் நிச்சயம் அதிக வளர்ச்சி மற்றும் புதுமை அடையும்" என்றார்.

ஸ்டார்ட் அப் சேம்பியன் அவார்டு

இதற்கடுத்து பிசினஸ் ஸ்டார் அவார்ட்ஸ் விருது வழங்கும் நிகழ்ச்சி தொடங்கியது. முதல் விருதான ஸ்டார்ட் அப் சேம்பியன் விருது, `வேகூல் ஃபுட்ஸ் அன்ட் புராடக்ஸ்' என்கிற ஸ்டார்ட் அப் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.

இந்நிறுவனம் இன்று உணவு விநியோகச் சங்கிலியில் பெரிய சாதனையை நிகழ்த்தி வருகிறது. நேரடியாக விவசாயி களிடமிருந்து கொள்முதல் செய்து, அதை ஃப்ரெஷ்ஷாகவும், தரமாகவும் நம் தட்டுக்குக் கொண்டுவரும் மகத்தான பணியை நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் செயல்படுத்தி வருகிறது.

இந்தியாவின் 15 மாநிலங்களில் 35,000 விவசாயிகளுடன் இணைந்து தனது தடத்தைப் பதித்திருக்கும் வேகூல் நிறுவனத்தின் இணை நிறுவனரும் நிர்வாக இயக்குநருமான கார்த்திக் ஜெயராமனுக்கு, பாரத் மேட்ரிமோனி குழுமத்தின் நிறுவனரும் முதன்மை செயல் அலுவலருமான முருகவேல் ஜானகிராமனும், இண்டெக்ரா சாஃப்ட்வேர் நிறுவனத்தின் நிறுவனரும் மேலாண்மை இயக்குனருமான ஶ்ரீராம் சுப்ரமணியாவும் இணைந்து இந்த விருதை வழங்கினர்.

வெற்றி பெற்ற பிசினஸ்மேன்களை கெளரவித்த நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் அவார்ட்ஸ்..!

விருதைப் பெற்றுக்கொண்ட கார்த்திக் ஜெயராமன், ``தமிழ்நாட்டில்தான் தொழில் தொடங்குவதற்கான பாதுகாப்பான பாதை இருக்கிறது. இந்தப் பாதையில் பல வழிகாட்டிகள் இருக்கிறார்கள். சிலரிடம் அர்ஜுனனாகவும், சிலரிடம் ஏகலைவனாகவும் கற்றுக்கொண்டிருக்கிறேன். இந்தப் பாதைக்கு நாணயம் விகடன் ஒளி காட்டுகிறது" என்றார்.

விருது வழங்கியவர்களிடம், ``ஸ்டார்ட் அப் தொடங்கும்போது இளைஞர்கள் எந்தெந்த விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்?'' என்று கேட்டதற்கு, ``முதலில் compelling value proportion என்பது மிக மிக முக்கியம். இதில் கவனம் செலுத்த வேண்டும். இரண்டாவதாக, தொடர் வளர்ச்சி, முன்னேற்றம் உள்ளிட்ட compound effect என்பது முக்கியம்" என்று கூறினார் முருகவேல் ஜானகிராமன். இதே கேள்விக்கு பதிலளித்த ஶ்ரீராம் சுப்ரமணியா, ``ஸ்டார்ட் அப் தொடங்கும்போது ஆரம்பத்தில் பல தடைகள் இருக்கும், அதையெல்லாம் கடக்க அவர்களுக்கு தன்னம்பிக்கை வேண்டும். எப்போதும் நமது சேவை அல்லது பொருள் தனிச்சிறப்புடன் இருக்க வேண்டும். இவை இருந்தாலே நாம் சாதிக்க முடியும்" என்றார்.

பிசினஸ் இன்னோவேஷன் அவார்டு

எதிலும் புதுமை படைக்க வேண்டும் என்கிற நோக்கோடு மூத்த குடிமக்களுக்கு முன்னுரிமை தரும் மருத்துவமனையாக சென்னையில் காவேரி மருத்துவமனையைத் தொடங்கினார் டாக்டர் அரவிந்தன். மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் பயத்தைப் போக்க ஃபேமிலி டாக்டர் என்னும் கான்சப்ட், ஆர்ட்டிஃபீஷியல் இன்டலிஜென்ஸ் திறனுடன்கூடிய சி.டி ஸ்கேன், போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் நோயாளியை விரைவாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல உதவும் ஸ்மார்ட் ஆம்புலன்ஸ் என அடுத்தடுத்து அவர் கொண்டு வந்த பல புதுமைகள் காவேரி மருத்துவமனைக்கு மிகப் பெரிய நற்பெயரைப் பெற்றுத் தந்திருக்கிறது.

காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனரும் எக்ஸிகிட்டிவ் டைரக்டருமான டாக்டர் அரவிந்தனுக்கு Foxconn International Holding India நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரான ஜோஸ் ஃபாக்லர் பிசினஸ் இன்னோவேஷன் விருதினை வழங்கினார்.

வெற்றி பெற்ற பிசினஸ்மேன்களை கெளரவித்த நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் அவார்ட்ஸ்..!

விருதைப் பெற்றுக்கொண்ட டாக்டர் அரவிந்தனிடம், ``வெளிநாட்டவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக இந்தியாவுக்கு அதிக அளவில் வருகிறார்கள். குறிப்பாக, தமிழ்நாட்டில் உலகத்தரம் வாய்ந்த மருத்துவ வசதிகள் இருக்கிறதா" எனக் கேட்டதற்கு, ``கண்டிப்பாக... அதில் சந்தேகமே வேண்டாம். பணம் செலவழித்தால் யார் வேண்டுமானாலும் உலகத்தரத்திலான மருத்துவமனையைக் கட்ட முடியும். ஐரோப்பா, அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் மூன்றில் ஒரு பங்கு மருத்துவர்கள் இந்தியர்கள் அதிலும் தமிழர்கள்தான் அதிகம். வளர்ந்த நாடுகளில் வேலை செய்தவர்கள் திரும்பி வந்து மருத்துவமனை தொடங்கும்போது அவர்களுக்கு நிகரான மருத்துவ வசதிகளை உருவாக்குகிறார்கள். இதன் காரணமாகவே சென்னை இந்தியாவின் மருத்துவத்தலைநகராக விளங்குகிறது" என்றார்.

விருது வழங்கிய ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரிடம், இந்தியாவில் ஐபோனின் உற்பத்தி அதிகரிக்கவிருப்பது குறித்துக் கேட்டதற்கு, ``எலெக்ட்ரானிக் உற்பத்தி மூலம் 2026-ம் ஆண்டுக்குள் 300 பில்லியன் டாலர் பொருளாதாரத்தை ஈட்டும் முயற்சியில் இந்திய அரசு செயல் படுகிறது. எலெக்ட்ரானிக் மிகப் பெரிய தொழில்துறை. சாஃப்ட்வேரை விடவும் ஹார்ட்வேர்தான் முக்கியம். இதைத் தமிழ்நாட்டில் மிகச் சிறப்பாகச் செயல்படுத்த முடியும்" என்றார்.

சோஷியல் கான்ஷியஸ்னஸ் ஆன்த்ரபிரனர் அவார்டு

ஶ்ரீநிவாசன் சர்வீசஸ் டிரஸ்ட்டுக்கு, சோஷியல் கான்ஷியஸ்னஸ் ஆன்த்ரபிரனர் விருதை (Social Consciousness Award), அப்போலோ மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி நவீனும், கிளாசிக் போலோ நிர்வாக இயக்குநர் T.R.சிவராமனும் இணைந்து வழங்கினார்கள்.

வெற்றி பெற்ற பிசினஸ்மேன்களை கெளரவித்த நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் அவார்ட்ஸ்..!

ஶ்ரீநிவாசன் சர்வீசஸ் டிரஸ்ட் சார்பாக இவ்விருதைப் பெற்றுக்கொண்ட அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்வர்ண சிங், ``எங்கள் டிரஸ்ட் 1996-ம் ஆண்டு இரண்டு கிராமங்களில் மட்டும் தனது சமூகப் பணியைத் தொடங்கியது. இன்று ,2500 கிராமங்களில் எங்களது சமூக சேவை தொடர்கிறது. இதற்கு முக்கிய காரணமே டிவிஎஸ் குழுமத்தின் நிறுவனர்தான். எங்களது டிரஸ்ட்டில் சுமார் 5 மாநிலங்களில் பணிபுரியும் 400 பேரும் கிராமத்தில் வசிக்கிறார்கள். நானும் மாதத்தில் குறைந்தபட்சம் 25 நாள்கள் கிராமங்களைத்தான் சுற்றி சுற்றி வருகிறேன். நமது அனைத்து செயலிலும் புதுமை வேண்டும் என்பதுதான் எங்களது நிறுவனரின் கொள்கை. நாங்கள் ஆண்டுக்கு 25 கோடி ரூபாயை இந்த டிரஸ்டில் முதலீடு செய்கிறோம். இதற்கு மக்கள் நலனை மட்டுமே லாபமாக எதிர்பார்க்கிறோம்'' என்றவரிடம், உதவி தேவைப்படுபவர்கள் உங்களுடைய டிரஸ்ட்டை எப்படி அணுக வேண்டும் என்ற கேள்விக்கு, ``நாங்களே மக்களை நேரில் சென்று சந்திப்போம். அவர்கள் எங்களைத் தேடி வர வேண்டும் என்பதில்லை'' என்றார்.

தமிழ்நாட்டுக்கு பொருளாதாரம், சுற்றுசூழல் இரண்டும் முக்கியம். இதைப் பற்றிய உங்கள் கருத்து என்ற கேள்விக்கு கிளாசிக் போலோ நிர்வாக இயக்குநர் T.R.சிவராமன், ``சுற்றுச்சூழல் இல்லையென்றால் தொழிற்சாலை, பள்ளிக்கூடங்கள் என்றும் எதுவும் நடக்காது. வணிகம், தொழில், காலநிலை மாற்றம் என அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது'' என்றார்.

பிசினஸ் மென்டார் அவார்டு

தொழில்முனைவோர்களுக்கு வழிகாட்டும் பிசினஸ் மென்டார் விருதை சென்னை ஐ.ஐ.டி பேராசிரியர் அசோக் ஜுன்ஜுன்வாலாவுக்கு, கவின்கேர் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் C.K.ரங்கநாதன் வழங்கினார்.

வெற்றி பெற்ற பிசினஸ்மேன்களை கெளரவித்த நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் அவார்ட்ஸ்..!

``நீங்கள் வழிகாட்டிய தொழில்முனைவோரில் உங்களை வியக்க வைத்தவர் யார்?" என்று அவரிடம் கேட்டதற்கு... ``இதில் ஒருவரை மட்டும் குறிப்பிட்டுக் கூறுவது மிக மிகக் கடினம் என்றாலும், டெல்லி Jaypee Institute-ஐ சார்ந்த இரண்டு மாணவர்களைப் பற்றி சொல்கிறேன். நான் எப்போதும் பிஸியாக இருப்பதால், `நான் டெல்லி வரும்போது எனது பயண நேரத்தில் உங்களது கேள்விகளுக்கு பதிலளிக்கிறேன்' என்று கூறினேன். அதன்பிறகு எனது 3 டெல்லி பயணத்தில் என்னுடன் இணைந்து கொண்டார்கள். பிறகு, என் நிறுவனத்தில் இணைந்து பணியாற்றினார்கள். நான் அவர்களுக்கு ஆரம்ப சம்பளமாக 7,000 ரூபாய் வழங்கினேன். ஆனால், அவர்கள் தற்போது 2.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள கம்பெனியின் முதலாளிகள். அவர்கள் உமேஷ் சச்சதேவா மற்றும் ரவி செஹ்ராவாத் ஆவர். இன்னும் பலர் எதுவுமே இல்லாமல் தொடங்கி பல சாதனைகளை படைத்துள்ளனர். நீங்கள் கீழே விழுந்தாலும், திரும்ப எழுந்தாலே பல அதிசயங்களை படைக்கலாம்" என்று பதிலளித்தார்.

``நீங்கள் தொழில் தொடங்கும்போது நினைத்ததை எல்லாம் சாதித்துவிட்டீர்களா'' என்ற கேள்விக்கு பதிலளித்த கவின்கேர் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் C.K.ரங்கநாதன், ``தொழில் தொடங்கும்போது எனக்கு அதிக புத்திசாலித்தனம் கிடையாது. அதன்பிறகு செய்த சின்னச் சின்ன முன்னேற்றங்கள்தான் மிக மிக முக்கியம். குடும்பத்திலிருந்து பிரிந்து சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்கிற முடிவோடு தொழில் தொடங்கினேன். எந்தச் சூழலிலும் தோல்வியடைந்து மீண்டும் குடும்பத்திடம் சென்று நிற்கக்கூடாது என்று நினைத்தேன். நல்லவேளையாக, அப்படியொரு நிலை ஏற்படவில்லை" என்றார்.

பிசினஸ் மென்டார் அவார்டு (இன்ஸ்டிடியூஷன்)

அடுத்த விருது, பிசினஸ் மென்டார் அவார்ட் (இன்ஸ்டிடியூஷன்). 1956-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் டான்ஸ்டியாவுக்கு பிசினஸ் மென்டார் (இன்ஸ்டிடியூஷன்) அவார்ட் வழங்கினார் முன்னாள் அமைச்சரும், மாஃபா மற்றும் சி.ஐ.இ.எல் குழுமத்தின் நிர்வாக இயக்குநருமான பாண்டியராஜன். டான்ஸ்டியாவின் பிரசிடென்ட் மாரியப்பன் மற்றும் குழுவினர் இவ்விருதைப் பெற்றுக்கொண்டனர்.

வெற்றி பெற்ற பிசினஸ்மேன்களை கெளரவித்த நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் அவார்ட்ஸ்..!

மாரியப்பன் பேசுகையில், ``இந்த விருது எங்கள் அமைப்புக்கு கிடைத்த கெளரவம். எங்கள் அனைவருக்கும் பெரு மகிழ்ச்சி. ஆசிய கண்டத்திலேயே முதல், பெரிய தொழிற்பேட்டை கிண்டியில்தான் அமைக்கப்பட்டது. தமிழக முதலமைச்சர் பொறுப்புக்கு வந்தவுடனே, சிறு, குறு தொழில்களுக்கான மானியத்தொகையான 178 கோடியை ஒரே தவணையில் சாங்ஷன் செய்தார்'' என்றார்.

விருது வழங்கிய மாஃபா பாண்டியராஜனிடம் அரசியல்வாதி பாண்டியராஜனுக்கும் தொழில்முனைவோர் பாண்டியராஜனுக்கும் எவ்வளவு ரேட்டிங் தருவீர்கள் என்று கேட்க,

``ஹெச்.ஆர் பாண்டியராஜனையும் இதில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதுதான் எனது அடிப்படை... இன்றைக்கும் அத்தொழிலைச் செய்து வருகிறேன். அதற்கு 10-க்கு 9 மதிப்பெண் தருவேன். ஒரு தொழில்முனைவோராக பலமுறை வீழ்ந்திருக்கிறேன். மீண்டு எழுந்துமிருக்கிறேன். தொழில்முனைவோர் பாண்டியராஜனுக்கு 7 மதிப்பெண் தருவேன். அரசியலிலும் அப்படித்தான் வீழ்ச்ச்சியை சந்தித்து மீண்டு வந்திருக்கிறேன். இன்னும் போக வேண்டிய தூரம் அதிகம் இருக்கிறது என்பதால் அரசியல்வாதி பாண்டியராஜனுக்கு 5 மதிப்பெண்கள் தருவேன்" என்றார்.

பீனிக்ஸ் ஆன்த்ரபிரனர் அவார்டு

`எகைன் டிரிங்ஸ்' ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் நிறுவனரான வைத்தீஸ்வரனுக்கு `பீனிக்ஸ் ஆன்த்ரபிரனர் அவார்டை' வழங்கினார் மில்க்கிமிஸ்ட் நிறுவனத்தின் ஃபவுண்டர், சேர்மன் அன்ட் மேனேஜிங் டைரக்டர் சதீஷ்குமார்.

வெற்றி பெற்ற பிசினஸ்மேன்களை கெளரவித்த நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் அவார்ட்ஸ்..!

விருதைப் பெற்றுக்கொண்ட வைத்தீஸ்வரன், ``எல்லோரும் வெற்றிகளைத்தான் கொண்டாடுவார்கள். ஆனால், நாணயம் விகடன் தோல்விகளைக் கொண்டாடுகிறது. மிக்க மகிழ்ச்சி'' என்றவரைத் தொடர்ந்து, அவருக்கு விருது வழங்கிய மில்கி மிஸ்ட் சி.இ.ஓ சதீஷ்குமார் தன் வெற்றியின் சூத்திரத்தைப் பகிர்ந்து கொண்டார்.

``பால் போன்ற பரவலான வணிகத்தில் வெல்ல வேண்டு மென்றால் அதை மதிப்புக்கூட்டி விற்பதன் வழியேதான் சாத்தியப்படும். மில்கி மிஸ்ட் நிறுவனத்தின் அடையாளமாக பனீர் இருக்கிறது. பாலிலிருந்து உற்பத்தி செய்யப்படும் பனீரை மதிப்புக்கூட்டியதன் வழியே அடைந்த வெற்றி இது" என்றார்.

செல்ஃப்மேட் ஆன்த்ரபிரனர் அவார்டு

இறுதி விருதாக, ஆப்டஸ் வேல்யூ ஹவுஸிங் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநருமான, எம்.ஆனந்தனுக்கு செல்ஃப்மேட் ஆன்த்ரபிரனர் அவார்ட் வழங்கப்பட்டது. ஃபிரான்டியர் லைஃப்லைன் மருத்துவமனையின் தலைவர் மற்றும் சி.இ.ஓ-வான டாக்டர் செரியன் மற்றும் பொன்ப்யூர் கெமிக்கல்ஸ் குழுமத்தின் தலைவரும் மேலாண்மை இயக்குநருமான எம்.பொன்னுசாமி ஆகியோர் இணைந்து இவ்விருதை வழங்கினர்.

``சோழமண்டலம் ஃபைனான்ஸ், ஈக்விடாஸ் மைக்ரோ ஃபைனான்ஸ், மணப்புரம் ஃபைனான்ஸ், ஃபைவ் ஸ்டார் பிசினஸ் கிரெடிட் ஆகிய நிறுவனங்களில் இயக்குநராக 60 வயது வரை சம்பளத்துக்காக ஓய்வின்றி உழைத்தவருக்கு, ஓய்வுக் காலத்தில் சொந்தமாகத் தொழில் செய்து ஜெயிக்க வேண்டும் என்பது லட்சிய வெறி. ஓய்வு பெற்றபோது கிடைத்த பணத்தில் ஒரு பகுதியை வீட்டுச் செலவுக்காகத் தந்துவிட்டு, மீதமுள்ள 30 கோடி ரூபாயை முதலீடு செய்து, வீட்டுக்கடன் தரும் நிதி நிறுவனத்தைத் தொடங்கினார்.

சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம், இன்று 208 கிளைகளை விரித்திருக்கிறது. ஏழை விவசாயக் குடும்பத்திலிருந்து வந்து இன்று பல ஆயிரம் கோடிக்கு அதிபதியாக உயர்ந்திருக்கிறார் ஆனந்தன். விருது பெற்ற பிறகு ஆனந்தன் பேசுகையில், ``என் அனுபவத்தைத் தொழிலாக மாற்ற நினைத்தேன். உடன் வேலைப்பார்ப்பவர்களுடன் உழைத்தேன். வெற்றிபெற்றேன்'' என்று எளிமையாகக் கூறினார்.

வெற்றி பெற்ற பிசினஸ்மேன்களை கெளரவித்த நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் அவார்ட்ஸ்..!

விருது வழங்கிய இதய நோய் மருத்துவர் செரியனிடம், ``முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் குடும்ப மருத்துவரைப் பார்க்க வேண்டும் என்கிற நிலை இன்றைக்கு மாறி ஸ்பெஷலிஸ்டு களைத் தேடிச் செல்கிற நிலைக்கு வந்துள்ளதை எப்படிப் பார்க்கிறீர்கள்" எனக்கேட்டதற்கு,

``உலகம் பல தளங்களில் முன்னேறிக்கொண்டிருக்கிறது. இது மருத்துவத்திலும் எதிரொலிக்கிறது. இந்த மாற்றம் நல்லதுதான். இன்று கூகுளோபதி என்கிற மருத்துவம் முளைத்திருக்கிறது. எல்லோரும் கூகிளிலேயே பிரச்னைக்கான காரணம் மற்றும் தீர்வைத் தேடிக்கொள்கிறார்கள்" என்றதும் அரங்கில் சிரிப்பொலி எழுந்தது.

அடுத்தாகப் பேசிய பொன்னுசாமி, ``இந்தியாவில் தொழில் தொடக்க நினைப்பவர்கள் முதலில் தமிழ்நாட்டுக்குத்தான் வருகிறார்கள். ஏனென்றால், இங்கே வெளிப்படைத்தன்மை இருக்கிறது. 40 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டிலிருந்து நாம் வேலைதேடி வெளி மாநிலங்களுக்குச் சென்றோம். இன்றைக்குப் பிற மாநிலத்தவர்கள் வேலைதேடி தமிழ்நாட்டுக்கு வருகிறார்கள். இதுவே பெரும் வளர்ச்சி'' என்று பெருமை பொங்கக் கூறினார்.

இந்த விருது விழா நிகழ்ச்சி மிக சிறப்பாக நடந்துமுடிந்தது. இதில் பல தொழில்முனைவோர்கள் கலந்துகொண்டனர்!

இந்த விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு அப்போலோ ஹாஸ்பிடல்ஸ் முக்கியமான ஸ்பான்சராக இருந்தது. செரோ சர்ட்ஸ் & ட்ரவுசர்ஸ் நிறுவனம் அசோசியேட் ஸ்பான்சராகவும், நெக்ஸ்ட் நிறுவனம் அவுட்டோர் பார்ட்னராகவும் இருந்தன.