“களத்தில் மக்களைச் சந்திக்கும் அனுபவம் மகத்தானது!” - நெகிழும் மாணவப் பத்திரிகையாளர்கள்

விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2021-22
சமரசமின்றி அறத்தின் பக்கம் நின்று பத்திரிகை யாளராகப் பணியாற்றுவது பெரும் பொறுப்பு. அதை ஒரு பயிற்சியாக மாணவப் பருவத்திலேயே ஏற்படுத்தும் முயற்சிதான் விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம். இத்திட்டத்தின் 29வது பேட்ச்சாக 2021-22-ம் ஆண்டில் பயற்சி பெற்ற மாணவர்களில் சிறப்பாகப் பங்களித்தவர்களுக்கான பாராட்டு விழா, விகடன் அலுவலகத்தில் நடை பெற்றது. விகடன் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன், மாணவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழும் பரிசும் வழங்கிச் சிறப்புரை ஆற்றினார்.

‘‘ஊடகத்துறையில் பல வருட அனுபவமிக்க மூத்த பத்திரிகையாளர்கள் செய்யக்கூடிய; ஏன், செய்ய முடியாத சிலவற்றையும் மாணவப் பத்திரிகையாளர்களான நீங்கள் சாதித்திருக்கிறீர்கள். கடந்த ஆண்டு அரசு வழங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பின் தரமற்றதன்மையை முதலில் வெளிக்கொண்டு வந்தது நம் மாணவப் பத்திரிகையாளர்தான். அந்தப் பிரச்னை தமிழகத்தின் பேசுபொருளாக மாறியது.
அரசியல் செய்திகள், சினிமா நேர்காணல்கள், டாக்குமென்ட்ரி எனப் பத்திரிகையாளராக மட்டுமல்லாமல், வீடியோ புரொடியூசராக, புகைப்படக்கலைஞராக, வி.ஜே-வாக, வீடியோ எடிட்டராக பல தளங்களில் சிறப்பான பங்களிப்பைச் செய்திருக்கிறீர்கள்'' என்று பெருமிதத்துடன் வாழ்த்தினார் சீனிவாசன்.

பரிசுகள் பெற்ற மாணவர்கள்
`அவுட் ஸ்டாண்டிங்’ பிரிவில் இரா.மா.அடலேறு, செ.சுபஸ்ரீ, ஆ.பி.அர்ஜுன், பி.ஜீவ கணேஷ், கு.சௌமியா, கார்த்திகா ஹரிஹரன், நா.நிவேதா, ஜே.பி.ரேகாஸ்ரீ, ப.முத்துகுமார், வெ.ஸ்ரீதர் தேர்வாகினர். ‘எக்சலன்ஸ்’ பிரிவில், இரா.விஷ்ணு, ஏ.சூர்யா, ப.சுர்ஜித், வெ.தயாநிதி, ரா.கீர்த்திகா, கோ.கி.மித்தேஷ் பரிசு பெற்றனர். ‘டிஸ்டிங்ஷன்’ பிரிவில், ர.பரதவர்ஷினி, ரா.மௌனீஸ்வரன் தேர்வு பெற்றனர். `ஃபர்ஸ்ட் கிளாஸ்’ பிரிவில் வே.அரவிந்த்குமார், சே.அறிவுச்செல்வன், ச.ஃபிசா, வி.தருண், க.சிவபாலன், ஸ்ரீ இலக்கியா ஆகியோர் தேர்வாகினர். அவுட் ஸ்டாண்டிங் பிரிவில் தேர்வானவர்களுக்கு ரூ.5,000 ரொக்கமும், எக்சலன்ஸ் பிரிவில் தேர்வானவர்களுக்கு ரூ.2,500 ரொக்கத்தையும் தனிப்பட்ட முறையில் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன் அன்பளிப்பாக வழங்கி உற்சாகப்படுத்தினார்.
வாசகர் சத்தியநாராயணாவின் சிறப்புப் பரிசு:
விகடன் குழுமத்தின் தனிப்பெரும் பலமே அதன் வாசகர்கள்தாம். அவர்களில் தீவிர வாசகராக இருக்கும் சத்தியநாராயணா ஒவ்வோர் ஆண்டும் சிறப்பாகச் செயல்படும் மாணவப் பத்திரிகையாளர்களுக்கு தானே மதிப்பெண் இட்டுப் பாராட்டி, பேனா பரிசளிப்பார். இம்முறையும் அதேபோல பரிசுகளுடன் சிறப்புப்பரிசும் வழங்கினார். விகடன் குழுமம் தேர்வுசெய்த மாணவர்கள் பட்டியலும், சத்தியநாராயணா தேர்வுசெய்த மாணவர்கள் பட்டியலும் வழக்கம்போல கிட்டத்தட்ட ஒன்றாகவே அமைந்தது, வாசகர்களுக்கும் விகடனுக்கும் இடையேயான அலைவரிசைக்கு ஒரு சோற்றுப் பதம்.

மாணவர்களின் அனுபவப் பகிர்வு...
``புகைப்படக் கலைஞராக பயிற்சியில் தேர்வான நான் கட்டுரைகள் எழுதுதல், சமூக வலைதளப் பக்கத்திற்குப் பணியாற்றுதல் எனப் பல தளங்களில் இயங்கினேன். அதற்கான வாய்ப்பையும், உத்வேகத்தையும் அளித்தது விகடன்தான்’ என நம்பிக்கையுடன் பேசினார் அடலேறு.
``ஜர்னலிசம் மாணவியான நான், கல்லூரியில் கற்றதைவிடப் பல மடங்கு விஷயங்களை விகடனில் கற்றுக்கொண்டேன்’’ என்றார் கார்த்திகா ஹரிஹரன். “வி.ஜே-வாக எப்படித் தயாராக வேண்டும், பொதுமக்களிடம் கருத்து கேட்பது எப்படி எனப் பல விஷயங்களை அறிந்துகொண்டேன்” என்றார் வி.ஜே-வாகப் பயிற்சி பெற்ற ஆர்.பி.அர்ஜுன்.
“கட்டுரைகளுக்காக எழுதுவதோடு, ஒரு டாக்குமென்ட்ரி தயாரிக்க எழுத்துப் பணி எவ்வளவு அவசியம் என்ற பயிற்சி மிகப் பெரிய அனுபவம்’’ என்றார் ப.ஜீவகணேஷ்
``தொடர் பயிற்சியால் எடிட்டிங்கின் நுட்பங்களைக் கற்றுக்கொண்டோம். இன்று பல பெரிய நிறுவனங்களிலிருந்து பணியாற்றும் வாய்ப்பு வருகிறது” என நெகிழ்ச்சியுடன் பேசினார்கள் வீடியோ எடிட்டர்களான முத்துகுமார் மற்றும் ஸ்ரீதர். ``எந்தச் செயலைச் செய்யும்போதும் நமக்கான கம்ஃபோர்ட் ஜோனிலிருந்து வெளியேறி வருகையில், நமது பல திறமைகளைச் செயல்படுத்த முடியும்” என உற்சாகத்துடன் கூறினார் செ.சுபஸ்ரீ.
``களத்திற்குச் சென்று மக்களைச் சந்திக்கையில் கிடைக்கிற அனுபவம் மகத்தானது. அதன் வழியே பல செய்திகளை வெளிக்கொண்டுவர முடிந்தது” என்றனர், நா.நிவேதா மற்றும் ஜே.பி.ரேகாஸ்ரீ. ``தீவிர வாசிப்பும், கள அனுபவமும்தான் செய்திகளைச் சரியான கோணத்தில் அணுக உதவும் என்பதைக் கற்றுக்கொண்டேன்” என்றார் கு.சௌமியா.
மாணவப் பருவத்திலேயே சமூக உணர்வும், மக்கள்மீதான பார்வையும் வளமான சமூகத்துக்கு அடிப்படை. அதை விகடன் தன் பணியாகவே செய்துவருகிறது `சமூகம் இன்புற்றிருக்கவே!’