மூன்றாண்டு கல்லூரிப் படிப்பைவிட அதிக வாய்ப்பு தந்தது விகடன்... மாணவப் பத்திரிகையாளர்கள் நெகிழ்ச்சி!

‘பொங்கல் பரிசுத்தொகுப்பின் தரமற்றத்தன்மையை வெளிக்கொண்டுவந்து அதை ‘டாக் ஆஃப் தமிழ்நாடாக’ மாற்றிக்காட்டிய திருப்பத்தூர் தருண்
`நாட்டின் எதிர்காலம் பள்ளி வகுப்பறையில்’ என்பார்கள். அப்படி, நாட்டின் நான்காவது தூணுக்கான சிறந்த அடித்தளத்தை ஏற்படுத்தும் திட்டமான ‘விகடன் மாணவப் பத்திரிகையாளர்கள் பயிற்சித் திட்டம்’ 29 ஆண்டுகளை நிறைவுசெய்திருக்கிறது. அதோடு, 2021-2022-ம் ஆண்டின் மாணவப் பத்திரிகையாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதில் சிறப்பாகச் செயலாற்றிய மாணவர்களுக்குச் சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கும் விழாவும் இனிதே நிறைவடைந்திருக்கிறது.

சாதித்த மாணவர்கள்... பாராட்டிய நிர்வாக இயக்குநர்!
தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பைக் கடின உழைப்பாலும், களப்பணிகளாலும் நிரப்பியிருக்கும் 29-வது பேட்ச் மாணவர்களின் உழைப்புக்கு உரிய அங்கீகாரம் வழங்கும் விழா, கடந்த டிசம்பர் 3-ம் தேதி ஆனந்த விகடன் அலுவலகத்தில் நடைபெற்றது. மோட்டார் விகடன் இதழாசியர் பி.ஆரோக்கியவேல் வரவேற்புரையுடன் தொடங்கிய நிகழ்ச்சியில், மாணவர்களின் பலத்த கைதட்டல்களுக்கிடையே விகடன் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன், அவர்களின் ஓராண்டு சாதனை குறித்துப் பேசினார்.
சிறப்புரையாற்றிய நிர்வாக இயக்குநர், ``புதிய மாணவர்களின் வரவேற்பு நிகழ்ச்சியுடன் ஒருங்கிணைந்து வழக்கமாக நடத்தப்படும் இந்தச் சான்றிதழ்கள் வழங்கும் விழா, கொரோனா சூழலால் இப்போது தனி நிகழ்ச்சியாக நடத்தப்படுகிறது. இது ஒரு `Odd பேட்ச்’-ஆக இருந்தாலும், Extraordinary பேட்ச். ஏனென்றால், ஊடகத்துறையில் மூத்த பத்திரிகையாளர்கள் செய்யக்கூடியவற்றை, ஏன் செய்ய முடியாதவற்றையும் மாணவப் பத்திரிகையாளர்களான நீங்கள் சாதித்துக்காட்டியிருக்கிறீர்கள். குறிப்பாக, ‘பொங்கல் பரிசுத்தொகுப்பின் தரமற்றத்தன்மையை வெளிக்கொண்டுவந்து அதை ‘டாக் ஆஃப் தமிழ்நாடாக’ மாற்றிக்காட்டிய திருப்பத்தூர் தருண், கள்ளக்குறிச்சி சம்பவத்தை லைவ் செய்த தயாநிதி, ஜல்லிக்கட்டைத் துணிச்சலுடன் லைவ் செய்த ரேகா ஸ்ரீ, 100 கட்டுரைகளுக்கு மேல் எழுதிக் குவித்த சுபஸ்ரீ, 100 வீடியோக்களுக்கு மேல் செய்த அர்ஜூன், அரசியல் கட்டுரைகள் எழுதிக் கலக்கிய நிவேதா, போட்டோகிராபராக நுழைந்து ஸ்போர்ட்ஸ் விகடனில் சக்கை போடுபோட்ட அடலேறு, பாரிஸ் கார்னர் பேருந்து நிலையத்துக்கு வெளிச்சம் பாய்ச்சிய கார்த்திகா, மக்கள் பிரச்னையை முன்னிலைப்படுத்திய சௌமியா, எஃப்.டி.எஃப்.எஸ் முதல் கோவில்பட்டி கருப்பட்டி வரை வீடியோவில் பன்முகம் காட்டிய ஜீவகணேஷ் எனப் பல மாணவர்கள் பல்வேறு இம்பேக்ட்களை நிகழ்த்தி, சாதித்துக் காட்டியிருக்கிறீர்கள்” என்றார் பெருமிதத்துடன்.

பரிசு பெற்ற மாணவர்கள்!
அதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு சிறப்பாகச் செயல்பட்ட மாணவ, மாணவியருக்கு விருதுகளையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார் விகடன் நிர்வாக இயக்குநர். அந்த வகையில், `அவுட் ஸ்டாண்டிங்’ பிரிவில் இரா.மா.அடலேறு, செ.சுபஸ்ரீ, ஆ.பி.அர்ஜூன், பி.ஜீவகணேஷ், கு.சௌமியா, கார்த்திகா ஹரிஹரன், நா.நிவேதா, ஜே.பி.ரேகாஸ்ரீ, ப.முத்து குமார், வெ.ஸ்ரீதர் ஆகியோரும், ‘எக்சலன்ஸ்’ பிரிவில், இரா.விஷ்ணு, ஏ.சூர்யா, ப.சுர்ஜித், வெ.தயாநிதி, ரா.கீர்த்திகா, கோ.கி.மித்தேஷ் ஆகியோரும், ‘டிஸ்டிங்ஷன்’ பிரிவில், ர.பரதவர்ஷினி, ரா.மௌனீஸ்வரன் ஆகியோரும் தேர்வாகினர். மேலும், `ஃபர்ஸ்ட் கிளாஸ்’ பிரிவில் வே.அரவிந்த்குமார், சே.அறிவுச்செல்வன், ச.ஃபிசா, வி.தருண், க.சிவபாலன், ஸ்ரீ இலக்கியா ஆகியோரும் தேர்வாகினர்.
இதில், அவுட் ஸ்டாண்டிங் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு ரூ.5,000 ரொக்கத்தையும், எக்சலன்ஸ் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு ரூ.2,500 ரொக்கத்தையும் தனிப்பட்ட முறையில் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன் அன்பளிப்பாக வழங்கினார்.
விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டம் தொடங்கப்பட்டது முதல் கடந்த 29 ஆண்டுகளாகத் திட்டத்தில் சிறப்பாகச் செயலாற்றிவரும் மாணவர்களின் பங்களிப்புகளைக் கவனித்து, அவர்களின் படைப்புகளை மதிப்பிட்டு, தனிப்பட்ட முறையில் அவர்களுக்குப் பேனாவைப் பரிசளித்துவரும் வாசகர் சத்தியநாராயணா, இந்த முறையும் சிறந்த மாணவர்களைப் பட்டியலிட்டுப் பரிசுகளை வழங்கினார். விகடன் நிறுவனம் தேர்வுசெய்த மாணவர்கள் பட்டியலும், வாசகர் சத்தியநாராயணா தேர்வுசெய்த மாணவர்கள் பட்டியலும் 98% ஒன்றாகவே அமைந்திருந்தது.

அனுபவம் பகிர்ந்த மாணவப் பத்திரிகையாளர்கள்!
பரிசுகள் பெற்ற குதூகலத்தில் மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.
``பிரஸ்மீட்டில் ஒரு கேள்வி கேட்கவே பயந்து தயங்கிக்கொண்டிருந்தவன் நான். இன்று உங்கள் அத்தனை பேர் முன்பாக தைரியமாகப் பேசுகிறேன் என்றால் அதற்கான கான்ஃபிடன்ட்டைக் கொடுத்தது விகடன்தான்’’ என நம்பிக்கையுடன் பேசினார் மாணவர் அடலேறு.
``விகடனுக்குள் வரும்போது ஜீரோவாகத்தான் வந்தேன். நிறைய தவறுகள் செய்தேன். அதையெல்லாம் பொறுத்துக்கொண்டு எடிட்டிங்கில் எல்லாமே கற்றுக்கொடுத்து, என்னை ஆளாக்கியது விகடன்தான். அதனால்தான் இன்று எனக்கு வெளியிலிருந்தும் நிறைய வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன” எனக் கண்ணீர் ததும்பப் பேசினார் முத்து குமார்.
மாணவி கார்த்திகா ஹரிஹரன், ``நான் பி.ஏ ஜர்னலிஸம் படித்த ஒரு மீடியா ஸ்டூடன்ட். எனது கல்லூரியில் மூன்று ஆண்டுகள் படித்து எனக்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளைவிட, இரண்டு மடங்கு அதிகமான வாய்ப்புகள் இந்த ஓராண்டுக்கால விகடன் மாணவப் பயிற்சியாளர் திட்டத்தில் எனக்குக் கிடைத்திருக்கிறது” என்றார் பெருமிதத்துடன்.
``நிறைய புத்தகங்கள் படிக்க வேண்டும். நிறைய இடங்களுக்குப் பயணிக்க வேண்டும். இதிலிருந்து புதுப்புது ஐடியாக்கள் கிடைக்கும். நல்ல வாசிப்பும், கள அனுபவமும்தான் நல்லமுறையில் நமக்கு எழுத உதவும் என்பதை அனுபவரீதியில் கற்றுக்கொண்டேன்” என்றார் சௌமியா. மேலும், ``மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தில் சிறப்பாகச் செயல்பட்டதால்தான் இன்று விகடன் நிறுவனத்திலேயே வேலை கிடைத்திருக்கிறது” என உற்சாகத்துடன் பேசினார்கள் நிவேதாவும் ரேகாஸ்ரீயும்.
நிகழ்ச்சியின் இறுதியில், மகிழ்ச்சி ததும்பும் பிரிவுப் புன்னகைகளுடன் குழுப் புகைப்படங்களை எடுத்துக்கொண்டார்கள் மாணவ, மாணவிகள். அனைவரையும் முறையாக வழியனுப்பிவைத்தார் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் கா.பாலமுருகன்.