நாட்டு நடப்பு
Published:Updated:

குதிரைவாலி சேவு, வெற்றிலை குளிர்பானம், கொடுக்காப்புளி மிட்டாய்...

மதிப்புக்கூட்டல் பணியில்
பிரீமியம் ஸ்டோரி
News
மதிப்புக்கூட்டல் பணியில்

மதிப்புக்கூட்டலில் அசத்தும் விருதுநகர் விவசாயி!

மதிப்புக்கூட்டல்

ஐ.நா மன்றம் 2023-ம் ஆண்டை சிறுதானிய ஆண்டாக அறிவித்ததால், உலகம் முழுவதும் பல நாடுகளில் இதுகுறித்த விழிப்புணர்வும், இதற்கான தேவையும் அதிகரித்துள்ளது. இது ஒருபுறமிருக்க, சமீபகாலமாகவே தமிழ்நாட்டு மக்கள், தங்களுடைய அன்றாட உணவில் சிறுதானியங்களைச் சேர்த்துக் கொள்ளும் வழக்கம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில்தான் தமிழ்நாட்டில் சிறுதானிய உற்பத்தி மற்றும் சந்தைக்குப் புகழ்பெற்ற விருதுநகர் மாவட்டம் கவனம் ஈர்க்கிறது. பெரும்பாலும் மானாவாரி நிலங்களைக் கொண்ட இம்மாவட்டத்தில் கம்பு, தினை, குதிரைவாலி, வரகு, சாமை, கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானியங்களும் சாகுபடி செய்யப்படுகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, இப்பகுதி விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் சிறுதானியங்களை நேரடியாகச் சந்தைகளில் விற்பனை செய்வதை வழக்கமாக வைத்திருந்தார்கள். ஆனால், தற்போது மதிப்புக்கூட்டலிலும் ஆர்வம் காட்டத் தொடங்கியிருக்கிறார்கள். இதற்கு உதாரணமாகத் திகழ்கிறார், சின்னதாதம்பட்டியைச் சேர்ந்த விவசாயி சிவக்குமார். சிறுதானிய உற்பத்தி மற்றும் மதிப்புக்கூட்டலில் வெற்றிநடைப் போடும் இவருக்கு மத்திய அரசு விருது வழங்கி கௌரவித்திருக்கிறது.

சிவக்குமார்
சிவக்குமார்

ஒரு பகல்பொழுதில் இவரைச் சந்திக்கச் சென்றோம். இவருடைய வீட்டின் அருகிலேயே சிறுதானியங்களை மதிப்புக்கூட்டும் நிறுவனம் இயங்கி வருகிறது. சிறுதானிய குக்கீஸ்களைப் பேக்கிங் செய்து கொண்டிருந்த சிவக்குமார், மிகுந்த மகிழ்ச்சியோடு நம்மை வரவேற்று உற்சாகமாகப் பேசத் தொடங்கினார். “இதுதான் என்னோட சொந்த ஊர். என்னோட அப்பா அரசாங்க ஊழியராக வால்பாறையில பணியாற்றினார். பல வருஷங்கள் அங்கதான் வளர்ந்தேன். வால்பாறை பகுதியில விவசாயம் செழிப்பா இருக்கும். அதைப் பார்க்குறப்ப எனக்கும் விவசாயத்துல ஆர்வம் வர ஆரம்பிச்சுது. பள்ளிப் படிப்பை முடிச்சதுமே விவசாயத்துல இறங்கணும்னு ஆசைப்பட்டேன். ஆனா பெற்றோரின் விருப்பத்துக்காகத் தொழிற்கல்வி படிக்க வேண்டியதாயிடுச்சு. சொந்த மாவட்டமான விருதுநகருக்கு பணிமாறுதலானதால, எங்க குடும்பம் இங்க குடிபெயர்ந்துச்சு. நான் கொஞ்ச நாள்கள் கேபிள் டிவி தொழில்ல ஈடுபட்டேன். அது எனக்குச் சரியா வராததால, கைவிட்டுட்டேன். வருமானத்துக்கு வேற என்ன செய்யலாம்ங்கற கேள்வி வந்தப்பதான், விவசாயம் செய்யலாம்ங்கற யோசனை வந்துச்சு. இது நாம சின்ன வயசுலயே ஆசைப்பட்டது. அதுக்கு இப்பதான் சரியான சூழல் அமைஞ்சுருக்குனு ரொம்ப ஆர்வமா 2008-ம் வருஷம் விவசாயத்துல இறங்கினேன்.

மதிப்புக்கூட்டல் பணியில்
மதிப்புக்கூட்டல் பணியில்

எங்க குடும்பத்துக்குச் சொந்தமான 6 ஏக்கர் பூர்வீக நிலம், எங்க உறவினர்களோட பராமரிப்புல இருந்துச்சு. அப்ப இந்த நிலத்துல ரசாயன முறையில அவங்க நெல் சாகுபடி செஞ்சுக்கிட்டு இருந்தாங்க. 2008-ம் வருஷம் இந்த நிலத்தை என்னோட கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்த பிறகு நானும் நெல் விவசாயம்தான் செஞ்சுக்கிட்டு இருந்தேன். கண்மாய், கிணறுகள்ல கிடைக்குற தண்ணீர் மூலம் பாசனம் பண்ணினேன். அடுத்த சில வருஷங்கள்ல கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுச்சு. இனி, நெல் விவசாயம் சாத்தியம் இல்லைங்கற முடிவுக்கு வந்து, 2013-ம் வருஷத்துல இருந்து மானாவாரியா கம்பு, கேழ்வரகு, குதிரைவாலி உள்ளிட்ட சிறுதானியங்கள சாகுபடி செய்ய ஆரம்பிச்சேன்.... முழுமையா இயற்கை முறையிலதான் பயிர் பண்ணினேன். நான் உற்பத்தி செஞ்ச சிறுதானியங்களை ஆரம்பத்துல அப்படியே தானியமாகத்தான் விற்பனை செஞ்சுக்கிட்டு இருந்தேன். அதுல எனக்கு நிறைவான லாபம் கிடைக்கல. அதனால மதிப்புக்கூட்டல் இறங்கலாம்னு முடிவெடுத்தேன்.

மதிப்புக்கூட்டல் பணியில்
மதிப்புக்கூட்டல் பணியில்

ஆரம்பத்துல சின்ன முதலீட்டுல இந்தத் தொழிலை தொடங்கினேன். சிறுதானியங்கள் தோல் நீக்க, மாவு அரைக்க, சிறுதானிய குக்கீஸ் தயார் செய்றதுக்கான இயந்திரங்கள், உபகரணங்கள்னு ஒவ்வொண்ணா வாங்கினேன். இதுவரைக்கும் 10 லட்சம் ரூபாய் முதலீடு செஞ்சிருக்கேன். நான் உற்பத்தி செய்ற சிறுதானியங்கள், என்னோட தொழிலுக்குப் போதுமானதா இல்லை. காரணம், எங்க குடும்பத்துக்குச் சொந்தமான 6 ஏக்கர் நிலத்துல ஒரு ஏக்கர்ல கொடுக்காப்புளி சாகுபடி செஞ்சிருக்கோம். மீதி 5 ஏக்கர்ல விதைப்போம் அறுப்போம்ங்கற முறையிலதான் சிறுதானியங்களைச் சாகுபடி செய்றேன். அடியுரமா எரு போட்டு, நல்லா உழவு ஓட்டிட்டு, விதைகளைத் தெளிக்குறதோட சரி... அவ்வளவுதான் வேற எந்தவித பராமரிப்பும் செய்றதில்லை. ஏக்கருக்கு 100 கிலோ வீதம் 5 ஏக்கர்ல மொத்தம் 500 கிலோதான் மகசூல் கிடைக்கும். இதனால எனக்குக் கூடுதலா தேவைப்படும் சிறுதானியங்களை இந்தப் பகுதி விவசாயிகள்கிட்ட இருந்து கொள்முதல் செஞ்சுக்குறேன்’’ என்று சொன்ன சிவக்குமார், சிறுதானியங்களில் தயார் செய்யப்படும் பலவிதமான மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் குறித்து விவரித்தார்.

சிறுதானிய பிஸ்கெட்கள்
சிறுதானிய பிஸ்கெட்கள்

‘‘கம்பு, வரகு, சாமை, தினை, குதிரைவாலி, கேழ்வரகு உள்பட மொத்தம் 6 வகையான குக்கீஸ் தயார் பண்றேன். சிறுதானிய ரெடிமிக்ஸ் சாப்பாத்தி மாவு, சிறுதானிய ரெடிமிக்ஸ் தோசை மாவு, சிறுதானிய பூரி ரெடிமிக்ஸ் மாவும் தயார் செய்றேன். சிறுதானியங்கள், பயறு வகைகள், பருப்பு வகைகள், மூலிகைகள்... இதெல்லாம் கலந்த சத்துமாவு மிக்ஸ் தயார் செய்றோம். நான் ஏற்கனவே சொன்ன சத்து மாவுல ஆளிவிதை, அமுக்கரா கிழங்கு சேர்த்துக் குழந்தைகளுக்கான ஸ்பெஷசல் ஹெல்த் மிக்ஸ் தயார் செய்றோம். ஆழிவிதையும், அமுக்கரா கிழங்கும் மனித உடலுக்கும் பல வகைகள்லயும் பலன் கொடுக்ககூடியது. இதனால் குழந்தைகள் மட்டுமல்லாமல், பெரியவர்களும் இதைச் சாப்பிடலாம். கம்பு அவல் மிக்சர், குதிரைவாலி தேங்காய் பால் பட்டன் சேவு, சாமை ரிப்பன் பக்கோடா, சோள கோன் பொரியல், கோதுமை கோன் பொரியல், ராகி அல்வா தயார் செய்றோம்.

சிறுதானிய பிஸ்கெட்கள்
சிறுதானிய பிஸ்கெட்கள்

சிறுதானியங்கள்ல பொங்கல் ரெடி மிக்ஸ் அறிமுகப்படுத்தி இருக்கோம். இதுக்கு மக்கள்கிட்ட அதிக வரவேற்பு இருக்கு. வரகு, சாமை, குதிரைவாலி, தினை... இந்த ஒவ்வொண்ணுலயுமே சாம்பார் சாதம் ரெடி மிக்ஸ் தயார் செய்றோம். குதிரைவாலி களி ரெடிமிக்ஸ், தினை களி ரெடிமிக்ஸ், சாமை களி ரெடிமிக்ஸ்சும் தயார் செய்றோம். சிறுதனிய களி ரெடிமிக்ஸ்கள்ல நாட்டுசர்க்கரை, உளுந்து, வெந்தயம் உள்ளிட்ட இன்னும் சில பொருள்கள் சேர்க்கப்பட்டிருக்கும்.

நான் தயார் செய்யக்கூடிய மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களுக்கு மக்கள் மத்தியில நல்ல வரவேற்பு இருக்கு. காலத்துக்கு ஏற்ப, புதுமையாகவும், விதவிதமாகவும் சிறுதானிய உணவு வகைகளை அறிமுகப்படுத்திக்கிட்டே இருக்குறதுனால, வியாபாரம் விறுவிறுப்பா நடக்குது. மாசம் 1 லட்சம் ரூபாய் அளவுக்கு லாபம் எடுத்துட்டு இருக்கேன். போக போக லாபம் அதிகரிக்கும் ’’எனத் தெரிவித்தார்.

தொடர்புக்கு, சிவக்குமார்,

செல்போன்: 98421 42049

அங்கீகாரம்
அங்கீகாரம்

க்யூ.ஆர் கோடு

சிறுதானிய ரெடி மிக்ஸ்களை எப்படிச் சமைக்கணும்னு பலருக்கும் சந்தேகம் இருக்கு. இதனால் செய்முறையை ரொம்பத் தெளிவா பாக்கெட்டுகள்ல பிரின்டிங் செய்றேன். ஒருவேளை அதைத் துல்லியமா புரிஞ்சுக்க முடியலைனா, க்யூ.ஆர் கோடு இருக்கும். அதை ஸ்கேன் செய்தால் போதும் யூடியூப்ல செய்முறை விளக்கத்துடன் கூடிய சமையல் செயல்முறை வீடியோ பார்க்கலாம்’’ என்கிறார் சிவக்குமார்.

குளிர்பானம்
குளிர்பானம்

வெற்றிலையில் குளிர்பானம்

‘‘வெற்றிலைச் சாறுல குளிர்பானம் தயார் செய்றோம். திருமணம், காத்துக்குத்து, கிரஹபிரவேஷம் மாதிரியான விஷேசங்களுக்கும்... அரசு நிகழ்ச்சிகளுக்கும் வெற்றிலை குளிர்பானம் கேட்டு நிறைய ஆர்டர்கள் கிடைக்குது. இதுல குறிப்பிட்டு சொல்லவேண்டிய சிறப்பான அம்சம் என்னென்னா, உத்தரகாண்ட் மாநில மலையடிவாரங்கள்ல விளையும் கரும்பில் இருந்து இயற்கை முறையில தயாரிக்கப்படும் சர்க்கரையைத்தான் இனிப்பு சுவைக்காக, வெற்றிலை குளிர்பான தயாரிப்புல பயன்படுத்துறோம். இதனால் அதிக நேரமானாலும் என்னோட வெற்றிலை குளிர்பானம் புளிப்பு தன்மைக்கு மாறாது இனிப்பு தன்மையோடவே இருக்கும். வெற்றிலை செரிமானத்துக்கு ரொம்ப நல்லதுங்கறதுனால இந்தக் குளிர்பானத்துக்கு மக்கள்கிட்ட பெரும் வரவேற்பு இருக்கு’’ என்கிறார் சிவக்குமார்.

சிறுதானிய மதிப்புக்கூட்டல்
சிறுதானிய மதிப்புக்கூட்டல்

உள்ளூர் பெண்களுக்கு வேலைவாய்ப்பு

“ஹெல்த் மிக்ஸ், சப்பாத்தி மாவு ரெடி மிக்ஸ்.. இதெல்லாம் 500 கிராம் பாக்கெட்டாகவும்... பொங்கல் மிக்ஸ், சாம்பார் சாதம் மிக்ஸ், அவல் வகைகள் 200 கிராம், 250 கிராம் பாக்கெட்டாகவும் பேக்கிங் செஞ்சு விற்பனை செய்றோம். இங்க நிறைய இயந்திரங்கள் பயன்படுத்தினாலும் கூட, உள்ளுர் பெண்களுக்கும் வேலைவாய்ப்பு கொடுக்குறேன். என்னோட நிறுவனத்துல எப்பவும் குறைந்தபட்சம் 5 பெண்கள் வேலைப் பார்க்குறாங்க’’ என்கிறார் சிவக்குமார்.

கொடுக்காப்புளி மிட்டாய்
கொடுக்காப்புளி மிட்டாய்

கொடுக்காப்புளி மிட்டாய்

விருதுநகர் மாவட்டத்தில் மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்யப்படும் பயிர்களில் கொடுக்காப்புளியும் முக்கிய இடம் வகிக்கிறது. குறிப்பாக, தாதம்பட்டி கொடுக்காப்புளி புகழ்பெற்றது. இதற்குப் புவிசார் குறியீடு பெறும் முயற்சியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகிறார்கள். கொடுக்காப்புளியிலிருந்து இனிப்பு மிட்டாய் மற்றும் ஜுஸ் அறிமுகப்படுத்தியுள்ளார் சிவக்குமார்.

கொடுக்காப்புளி மிட்டாய்
கொடுக்காப்புளி மிட்டாய்

முதல் அங்கீகாரம்

“சிறுதானியங்கள் மதிப்புக்கூட்டல்ல நான் ரொம்ப ஆர்வமாகவும் தீவிரமாகவும் ஈடுபடுறதை கவனிச்ச வேளாண் அதிகாரிகள், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நிகழ்ச்சிகளுக்குச் சிறுதானிய உணவு வகைகளை வழங்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தாங்க. என்னோட தயாரிப்புகளை ருசிப்பார்த்த அப்போதைய ஆட்சியர் மேகநாதரெட்டி, அனைவரின்முன்னிலையிலயும் மைக்கில் பேசி பாராட்டினார். இதுவே, பொதுவெளியில் வெளிப்படையாக எனக்குக் கிடைத்த முதல் அங்கீகாரம்” என நெகிழ்ச்சியோடு தெரிவித்தார் சிவக்குமார்.