தொடர்கள்
நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

‘VUCA’ நெருக்கடி... பிசினஸில் ஜெயிப்பது எப்படி? சி.கே.ஆர் சொல்லும் சீக்ரெட்ஸ்

சி.கே.ரங்கநாதன்
பிரீமியம் ஸ்டோரி
News
சி.கே.ரங்கநாதன்

பிசினஸ்

ரஷ்யா - உக்ரைன் போர், அமெரிக்கப் பொருளாதார மந்தநிலை, பணவீக்கம், வட்டி விகித உயர்வு என்று பல சவால்களை இந்த உலகம் சந்தித்துவருகிறது. இத்தகைய நெருக்கடியான சூழலைத்தான் ‘VUCA’ (Volatility, Uncertainty, Complexity and Ambiguity- VUCA) என்று சொல்கிறார்கள். இத்தகைய நெருக்கடியான சூழலில் உலகம் சிக்கியிருக்கும் போது தொழில்முனைவோர்கள் தங்களுடைய பிசினஸை வெற்றிகரமாக நடத்துவது எப்படி என்பது பற்றி அண்மையில் நடைபெற்ற நாணயம் விகடன் ‘பிசினஸ் ஸ்டார் அவார்ட்ஸ்’ நிகழ்ச்சியில் விரிவாகப் பேசினார் கவின்கேர் குழுமத்தின் தலைவர் சி.கே.ரங்கநாதன். இனி, அவர் பேசியதாவது...

‘VUCA’ உலகம்...

“இன்றைய உலகம் ஒரு வித்தியாசமான காலகட்டத்தில் இருக்கிறது. பிசினஸில் ஒரு பிரச்னை என்றாலே தலையெல்லாம் சுற்றும். இப்போது `VUCA’ என்கிற பெயரில் நான்கு விதமான பிரச்னையும் ஒன்றாக வந்திருக்கிற காலகட்டத்தில்தான் நாம் இருக்கிறோம். இவை ஒவ்வொன்றுமே பெரிய, வெவ்வேறான பிரச்னை. இவை எல்லாவற்றுக்கும் ஒரே மாதிரி நம்மால் எதிர்வினை ஆற்ற முடியாது. இவற்றில் எதுவுமே சாதாரண பிரச்னை என்று கடந்து போய்விடக்கூடியதும் அல்ல.

சி.கே.ரங்கநாதன்
சி.கே.ரங்கநாதன்

கொரோனா கொண்டு வந்த மாற்றம்...

‘VUCA’ உலகில் பல்வேறு நெருக்கடிக்கு மத்தியிலும் சிறப்பான வளர்ச்சியை நாம் அடைய வேண்டுமெனில், சில விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். அதில் முக்கியமானது, டிஜிட்டல் தொழில்நுட்பம்.

கொரோனா காலகட்டம் பல்வேறு நிலையற்றத் தன்மைகளைக் கொண்டிருந்தாலும், அது சில ஆக்கபூர்வமான மாற்றங்களையும் நிகழ்த்தியிருக்கிறது. கொரோனா காலத்தில் டிஜிட்டல் தொழில் நட்பங்களை யாருமே தவிர்க்க முடியாது என்கிற நிலை உருவானது. ‘வீட்டிலிருந்தபடி வேலை பார்க்க முடியுமா? சான்ஸே இல்லை’ என்று நினைத்த நிறுவனங்கள் எல்லாமே, கொரோனா காலத்தில் அலுவலக வேலைகளை வீட்டிலிருந்தே செய்ய முடியும் என்பதைப் புரிந்துகொண்டன. ஆன்லைனில் ஷாப்பிங்கும் இந்தக் காலத்தில் பெரிதாக வளர்ந்தது.

இப்போது கொரோனா முடிவுக்கு வந்தாலும், அது ஏற்படுத்திய மாற்றங்கள் எல்லாமே அப்படியேதான் தொடர் கின்றன. பல நிறுவனங்கள் வீட்டிலிருந்தபடியே வேலை செய்ய அனுமதிக்கின்றன. ஊழியர்களை அலுவலகத்துக்கு அழைத்தாலும் பலரும் வரத் தயாராக இல்லை. எனவே, வீட்டிலிருந்து வேலை செய்வது இனியும் தொடரும்.

இயந்திரமாகும் உலகம்...

உலகம் முழுக்கவே ஆட்டோமேஷன், டிஜிட்ட லைசேஷன் எனப் பெரிய அளவில் மாறியிருக் கிறது. இதனால் புதிய திறன் தேடல்களுக்கான தேவையும் உருவானது. இதைத்தான் இண்டஸ்ட்ரி 4.0 என்று சொல்கிறோம். ஐ.ஓ.டி (IOT), ஏ.ஐ (AI), ப்ளாக்செயின் போன்ற புதிய தொழில்நுட்பங்கள் ஆதிக்கம் செலுத்த ஆரம்பிப்பதால், புதிய திறன்கள் கொண்ட ஊழியர்களுக்கான தேவை அதிகமாகவே இருக்கிறது.

ஏற்கெனவே பழைய திறன்களோடு இருக்கும் ஊழியர்களைப் புதிய திறன்கள் கொண்டவர்களாக எப்படி மாற்றுவது என்கிற சவாலை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். இதை சாத்தியப்படுத்தும் நிறுவனங்கள் வேகமாக வளர்ச்சி அடைந்து, சந்தையில் தங்களுக்கான இடத்தைத் தக்க வைத்துக்கொள்கின்றன.

கொரோனாவுக்கு முன் அமெரிக்க சிலிக்கன்வேலிக்கு நான் போனபோது, எந்தெந்தத் துறையை எல்லாம் முழுமையாக இயந்திரமயப்படுத்தலாம் (Automate) என அங்கு ஆய்வு செய்து கொண்டிருப்பதைப் பார்த்து ஆச்சர்யப்பட்டேன். willrobotstakemyjob.com என்கிற இணைய தளம் எந்தெந்த வேலைகளில் எந்தளவுக்கு ஆட்டோமேஷன் செய்யப்படுகிறது என்பதைத் துல்லியமாகச் சொல்கிறது. நாம் செய்கிற வேலையில் அல்லது நிறுவனத்தில் ஆட்டோமேஷன் என்பது இப்போதைக்கு வராமல் இருக்கலாம். ஆனால், அந்த வேலை உலகின் எங்கோ ஒரு மூலையில் இயந்திரத்தின் உதவி யுடன் செய்யப்பட்டு வருகிறது என்பதே உண்மை. அதுஎப்போது வேண்டுமானாலும் இங்கும் வரலாம்.

மாறிய போட்டிச் சூழல்...

அதே போல, போட்டியும் இப்போது மாறிவிட்டது. முன்பு நம் துறையில் உள்ள நிறுவனங் களிடமிருந்துதான் போட்டி வரும் என்று நினைப்போம். ஆனால், சம்பந்தமே இல்லாத துறைகளைச் சேர்ந்த நிறுவனங் களிலிருந்தும் போட்டி வருகிறது. கார் துறையை எடுத்துக்கொண் டால், ஜி.எம் மோட்டார்ஸ், ஃபோர்டு, டொயோட்டா என்றிருந்த காலத்தில், எலான் மஸ்க் பேட்டரி தொழில்நுட்பத் தைப் பயன்படுத்தி டெஸ்லா காரை அறிமுகப்படுத்தினார். அது புதுவிதமான போட்டியைக் கொண்டுவந்தது. இன்று உலகம் முழுவதுமே பேட்டரி வாகனங் களுக்கான தேவை உருவாகி யிருக்கிறது.

கூகுள், ஆப்பிள், அமேசான் நிறுவனங்கள் எல்லாம் மருத்துவத் துறையில் அடியெடுத்து வைத்திருக் கின்றன. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஐந்து வருடத்துக்குப் பிறகு, நமக்கு என்ன நோய் வரலாம் என்று சொல்லும் அளவுக்கு வளர்ந் திருக்கின்றன.

எளிமை வெற்றி தரும்...

தொழில் சூழலில் காலப்போக்கில் விதிமுறைகள் நிறைய மாறிக் கொண்டே இருக்கும். எந்தளவுக்கு விஷயங்களை, வேலைகளை எளிமையாக்குகிறோமோ, அந்த அளவுக்கு நல்லது. ‘Breakthruogh Imperative’ என்று ஒரு புத்தகம் இருக்கிறது. இதில் சொல்லப்படும் முக்கியமான விஷயம், நுகர்வோர் கள் ஒரு பொருளைத் தேர்வு செய் வதற்கு பெரிதாகக் கஷ்டப்பட விரும்புவதில்லை. இரண்டு அல்லது மூன்று காரணிகளை மட்டுமே பார்ப்பார்கள். அவை என்ன வென்று தெரிந்துகொண்டு, அவற்றை நம் போட்டியாளர்களைவிட நாம் சிறப்பாக நம் தயாரிப்புகளில் தந்தால் நம்மால் நிச்சயம் ஜெயிக்க முடியும்.

நாங்கள் எங்கள் நிறுவனத்தில் எந்தவொரு பொருளைத் தயாரித்தாலும் அதை வாடிக்கையாளர்கள் வாங்குவதற் கான காரணிகளில் கவனம் செலுத்தி, ‘சிக்வின்’ (SignificantWinning) என்கிற முறையைப் பயன்படுத்தி, வாடிக்கை யாளர்களைத் திரும்பத் திரும்ப எங்களுடைய தயாரிப்பு களை வாங்கும்படி திட்டமிட்டுச் செயல்பட்டு வருகிறோம்.

இந்தியாவில் ஒரு காலத்தில் அம்பாசிடர் கார் மட்டுமே இருந்தது. அந்தச் சமயத்தில்தான், மாருதி சுஸூகி 800 காரை அறிமுகம் செய்தது. விலை குறைவு, பெட்ரோல் செலவு குறைவு, பராமரிப்புச் செலவு குறைவு என மூன்று விஷயத்தில்தான் மாருதி கவனம் செலுத்தியது. மற்ற கார் நிறுவனங்கள் ரூ.4 லட்சத்துக்கு கார் விற்றபோது, மாருதி ரூ.2 லட்சத்துக்கு காரை வெளியிட்டது. மற்ற கார்கள் நிறுவனங்கள் ஒரு லிட்டருக்கு 10 கி.மீ செல்லும் என்கிறபோது மாருதி 14, 15 கி.மீ என்று வித்தியாசம்காட்டி யது. இந்த மூன்று காரணமுமே வாடிக்கையாளர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்ததால், மாருதி 800-ன் வெற்றி அம்பாசிடரை ஓரங்கட்டவில்லை, சந்தையிலேயே இல்லாமல் ஆக்கியது. எனவே, எந்தத் தயாரிப்பாக இருந்தாலும் வாடிக்கையாளர்கள் விரும்புகிற மாதிரியான விஷயங்களில் கவனம் செலுத்தினால் வெற்றி நிச்சயம்.

மாறவில்லை எனில், மறைய வேண்டியதுதான்...

மெக்கன்சி நிறுவனம் பல நிறுவனங்களை ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் தெளிவாகச் சொன்ன விஷயம் என்னவெனில், ஏற்கெனவே செய்துவரும் விஷயங்களில் மட்டுமே முழுமையாகக் கவனம் செலுத்தும் நிறுவனங்கள் பெரிய அளவுக்கு வளர்ச்சி அடையவில்லை. ஆனால், நிறைய பரிசோதனைகளைப் புதிதாகச் செய்துபார்க்கிற நிறுவனங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. புதிய விஷயங்களைத் தொடர்ச்சியாக முயற்சி செய்யும்போது எல்லாமே வெற்றி அடையாது. ஆனால், எல்லாமே தோற்றும் போகாது. தெரிந்த தையும் செய்ததையுமே செய்துகொண்டிருக்காமல், தொடர்ந்து புதிய பரிசோதனைகளைச் செய்துகொண்டே இருக்க வேண்டும். சிறிய அளவில் முயற்சிகளை செய்து பார்க்கும்போது அந்தத் தோல்வியால் அதிக நஷ்டம் இருக்காது. அதைத்தான் ‘fail fast, fail cheap’ என்போம். ஒரு முயற்சியை 12 மாதம் செய்வதற்குப் பதிலாக, 4 - 6 மாதத்திலேயே முடிப்பது நல்லது. அதே சமயம், நாம் எடுக்கிற ரிஸ்க் நம்முடைய அடிப்படையான செயல்பாடுகளை பாதிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் (Artificial Intelligence) போன்ற அதிநவீன தொழில்நுட்பங்கள் தொழில்துறைகளில் மிகப் பெரிய தாக்கத்தைக் கொண்டுவருகிறது. நாம் நினைத்தே பார்க்க முடியாத பல சாதனைகளை நம்முடைய வாழ்க்கையில், வேலையில் செய்துகொண்டிருக்கிறது. நம்முடைய போட்டி யையும் வேறு தளத்துக்கு மாற்றியிருக்கிறது.

முன்பு தொழில்நுட்பம் ஒரு வேலையை எளிதாகச் செய்ய (Enabler) உதவியது. ஆனால், இப்போது அது மிகப் பெரிய ‘ஸ்ட்ராட்டஜிக்’ ஆயுதம். இனிவரும் காலங்களில் டிஜிட்டல் தொழில்நுட்பம், ஏ.ஐ போன்ற வற்றைப் பயன்படுத்தாத நிறுவனங்கள் சந்தையில் நிலைத்து நிற்பது கடினம் என்பதே நிதர்சனமான உண்மை.

‘VUCA’ நெருக்கடி... பிசினஸில் ஜெயிப்பது எப்படி? சி.கே.ஆர் சொல்லும் சீக்ரெட்ஸ்

அடுத்த திட்டம் என்ன?

சந்தையின் தேவை என்ன, என்னென்ன மாற்றங்கள் நடக்கின்றன, அடுத்து என்ன எதிர்பார்க்கிறது என்று பார்க்க வேண்டும். அதே சமயம், சக போட்டியாளர்கள் என்ன செய்கிறார்கள், அவர் களுடைய அடுத்த திட்டம் என்ன என்பது குறித்து தொடர்ந்து ஆராய்வோம். காரணம், where are we, where we should go. நாம் இயங்கிக் கொண்டிருக்கிற துறை சார்ந்து மட்டும் இதை எல்லாம் செய்வதுடன் நிறுத் திக்கொள்ள மாட்டோம். நமக்கான வாய்ப்பு எந்தத் துறையில் எல்லாம் இருக் கிறது என்பதையும் ஒருபக்கம் பார்த்துக்கொண்டேதான் இருப்போம்.

வேலை பார்க்காத ஊழியர்கள்...

Price’s law என்று ஒரு கருத் தாக்கத்தை பிரைஸ் என்பவர் கொண்டு வந்தார். ஒரு நிறுவனத்தில் உள்ள மொத்தப் பணியாளர்களில் மூன்றில் ஒரு பகுதி ஊழியர்களே நிறுவனத்தின் 50% வேலை யைச் செய்கிறார்கள். ஊழியர்களின் எண்ணிக்கை உயர உயர, அதிகமான ஊழியர்கள் குறைவான பங்களிப்பையே தருகிறார்கள். குறைவான ஊழியர்களைக் கொண்டு அதிகமான பங்களிப்பைத் தரும் நிறுவனங்களே போட்டி யாளர்களைத் தாண்டி நிலைத்து நிற்கும் நிறுவனங் களாக உள்ளன. நமது நிறுவனத்தில் எல்லா ஊழியர் களும் சரியான அளவில் பங்களிப்பை செய்கிறார்களா என்று பார்ப்பது அவசியம்!

யாருடன் சண்டை?

கம்பெனிக்குள் பல பிரச்னைகளை வைத்திருப் போம். ஒவ்வொரு நாளும் அந்த பிரச்னைகளை சமாளிப் பதே பெரிய வேலையாக இருக்கும். இப்படி கம்பெனிக் குள்ளேயே சண்டை போட் டுக்கொண்டிருந்தால், சந்தையில் போட்டியாளர் களிடம் எப்போது சண்டை போடுவது? எனவே, யாருடன் சண்டை போடுவது என்பதை முதலில் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு தனிநபராக செய்யக்கூடிய வேலை, இன்னொருவருடன் சேர்ந்து செய்கிற வேலை, ஒரு குழுவாக செய்கிற வேலை என வேலைகளைப் பிரிக்கலாம். இந்த வேலைகளில் எந்த பிரச்னையும் இல்லாமல் இருந்தால்தான் நிறுவனம் வலுவாக இருக்கும். அதற்கு தகவல்தொடர்பு மிகவும் முக்கியம். பக்கத்திலேயே உட்கார்ந்துகொண்டு மெயில் அனுப்பிக்கொண்டிருப் பார்கள். நமக்குள்ளேயே ஒற்றுமையும், பேச்சுவார்த் தையும் இல்லை எனில், எந்த வேலையும் ஒழுங்காக நடக்காது. நமக்குள் இருக்கிற பிரச்னைகளை எல்லாம் முதலில் அடையாளம் கண்டு சரிசெய்ய வேண்டும். அப்போதுதான் போட்டி யாளருடன் இன்னும் நம்பிக் கையுடன் நம்மால் சண்டை போட முடியும்.

நேரத்தை வீணடிக்கக் கூடாது...

நேரம் என்பது மிகவும் முக்கியம். நிறுவனத்தை நடத்துபவர்கள் நேரத்தை எதில் செலவு செய்கிறோம் என்று பார்க்க வேண்டும். ‘நான் என் நேரத்தை முழுமையாகப் பயன்படுத்துகிறேன்; கடுமையாக உழைக்கிறேன். ஆனால், என் டீம் அதைச் செய் வதில்லை’ என்று நீங்கள் சொன்னால், உங்களிடம் ஏதோ பிரச்னை இருக்கிறது என்று அர்த்தம். ஹார்டுவொர்க்கைவிட ஸ்மார்ட்வொர்க்தான் முக்கியம். நான் ஒரு சாஃப்ட்வேர் பயன்படுத்துகிறேன். கடந்த வாரத்தில் நான் என் நேரத்தை எதிலெல்லாம் செலவு செய்தேன் என்பதையெல்லாம் அந்த சாஃப்ட்வேர் துல்லியமாகக் காட்டும். என் நேரத்தில் 30 சதவிகிதத்தை என் தினப்படி வேலைகளுக்கு ஒதுக்கினால், அடுத்து என்ன என்று யோசிக்கவே நேரம் இருக்காது. நேர மேலாண்மையைத் திறம்பட செய்ய வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்துக்கு நாம் தயாராக முடியும்.

கற்றுக்கொண்டே இருங்கள்...

தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். நம்மை நாம் மேம்படுத்திக் கொள்ளவில்லை எனில், வளர்ச்சியை மறந்துவிட வேண்டும். கற்பது, நம் திறனை வளர்த்துக்கொள்வது நம் வாழ்க்கையில், வேலையில் முக்கியம். என் நிறுவனத்தில் ஒவ்வொரு வரும் அவரவர் துறை சார்ந்த புத்தகங்களைப் படிக்க நேரம் ஒதுக்கியிருக் கிறேன். ரிசர்ச் டெவலப் மென்ட், மார்க்கெட்டிங், பேக்கேஜிங், டிஜிட்டல் என அவர்கள் சம்பந்தப் பட்ட புத்தகங்களைப் படித்துவிட்டு, அதை எல்லோரும் எளிதில் புரிந்துகொள்ளும்படி பிரசன்டேஷன் செய்ய வேண்டும். ஊழியர்கள் அதிலிருந்து கற்றுக் கொண்டதை எப்படி நம் நிறுவனத்தில் ஈடுபடுத்தி மாற்றங்களைக் கொண்டு வரலாம் என விவாதிப்போம். இது போன்ற முயற்சிகள்தான் நிறுவனத்தைத் தொடர்ந்து துடிப்புடன் வைத்திருக்கும். இதைத்தான் ‘Invest yourself programme’ என்பார்கள். இதன்மூலம் ஊழியர்களுக்குத் தேவையான அறிவையும் அனுபவத்தையும் குறுகிய காலத்திலேயே கொண்டு வர முடியும்!

தோல்வி குறித்த பயம்..!

“ஊழியர்களுக்குத் தோல்வி குறித்த பயம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஊழியர்கள் எதையாவது முயற்சி செய்ய நினைக்கும்போது, ‘தோல்வி அடைந்துவிட்டால் என்னை ஒரு மாதிரியாகப் பார்ப்பார்களோ, சம்பளத்தைக் குறைப்பார்களோ...’ என்று பயப்படுவார்கள். அப்படி பயப்படும் ஊழியர்கள் புதிய முயற்சி செய்யமாட்டார்கள். எந்த நிறுவனம் ரிஸ்க் எடுத்து, ஊழியர்களைப் புது முயற்சி எடுக்க அனுமதிக்கிறதோ, அந்த நிறுவனங்கள் ஜெயித்துக் கொண்டே இருக்கும்” என சி.கே.ஆர் சொன்னதை நிறுவனங்கள் கவனிக்க வேண்டும்.

செலவில் கவனம் தேவை..!

“பொதுவாக, விலைவாசி உயர்ந்துகொண்டே இருந்தாலும், நம்முடைய தயாரிப்புகளை முடிந்தவரை மக்கள் வாங்கக்கூடிய விலையில் வைத்திருக்க வேண்டியது அவசியம். அதற்கு நிறுவனத்தின் செலவினங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சமீபத்திய விலைவாசி ஏற்றத்தில் எங்களுடைய தயாரிப்புகள் விலை ஏறியது. ஆனால், போட்டி நிறுவனங்களின் தயாரிப்புகள் எங்கள் தயாரிப்புகளின் விலை ஏற்றத்தில் பாதி அளவுக்கே ஏறின. அதனால் அவர்கள் சிக்கல் இல்லாமல் செயல்பட முடிந்தது. விலைவாசி ஏறுகிறது என்பதை மட்டுமே சொல்லிக்கொண்டிருக்காமல், முடிந்தவரை செலவுகளைக் குறைத்து, விலையையும் குறைவாகக் கொடுப்பது மிகவும் முக்கியம்.

இதற்கு மூலப்பொருள்கள், மூலதனம் எல்லாமே எந்த அளவுக்கு முழுமையாகப் பயன்படுத்தப் படுகிறது என்று கண்காணிக்க வேண்டும். நிறுவனத்தின் ஒவ்வொரு செலவையும் நாம் கவனிக்க வேண்டும். வீணாகக்கூடிய விஷயங்களில் அலட்சியம் காட்டாமல் தீவிர கவனம் செலுத்த வேண்டும். ‘wage war on waste’ என்று அதைக் குறிப்பிடுவோம். நிறுவனத்துக்குள்ளிருந்து வெளியே செல்கிற தயாரிப்புகளை மட்டும் பார்த்தால் போதாது; பின்பக்கமாக வெளியேறக்கூடிய கழிவுகளிலும் கவனம் இருக்க வேண்டும்” என்றார் சி.கே.ஆர்.