இன்றைக்கு பாரத் பே நிறுவனம் பற்றித் தெரியாதவர்கள் இருக்க முடியாது. பே டிஎம், ஜிபேவுக்கு அடுத்தபடியாக பலரும் பாரத் பே மூலம்தான் அதிகளவில் பணப் பரிமாற்றம் நடந்துவருகிறது. டீக்கடையாக இருக்கட்டும்; மளிகைக் கடையாக இருக்கட்டும்; பாரத் பே QR கோடைத்தான் பலரும் பயன்படுத்துகின்றனர்.
பாரத் பே இப்படிப் பிரபலமாக இருந்தாலும், அந்த நிறுவனத்தின் நிர்வாகத்துக்குள் ஆயிரம் சண்டை சச்சரவுகள். பாரத் பே நிறுவனத்தின் நிறுவனர் அஷ்நீர் குரோவர், ``நான் தொடங்கிய நிறுவனத்தில் இருந்தே என்னை வெளியேற்ற சதி செய்கிறார்கள். எனவே, நானே எனது நிறுவனத்தில் இருந்து வெளியேறுகிறேன்’’ என்று பணியாளர்களுக்கு நெடுங்கடிதம் ஒன்றை எழுதிவிட்டு, பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். என்ன நடந்தது பாரத் பே நிறுவனத்தில், ஏன் இந்த சர்ச்சை என்கிற கேள்விக்கான பதிலைப் பார்ப்போம்.
யார் இந்த குரோவர்?
டெல்லியில் உள்ள ஐ.ஐ.டி-யில் இன்ஜினீயரிங் முடித்தவர். அகமதாபாத்தில் உள்ள ஐ.ஐ.எம்மில் எம்.பி.ஏ படித்தவர். இதைத் தொடர்ந்து கோடக் மஹிந்திரா வங்கி, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் ஆகிய உலகின் புகழ்பெற்ற நிறுவனங்களில் பணியாற்றிவர். ஸ்டார்ட் அப் நிறுவனமான குரோஃபரின் தலைமை நிதி அதிகாரியாக இருந்தார். 2018-ம் ஆண்டு பாரத் பே நிறுவனத்தைத் தொடங்கினார்.
வேகமாக வளரந்த பாரத் பே நிறுவனம் யுனிகார்ன் நிலையை அடைந்தது. செக்யோயா கேப்பிடல், டைகர் குளோபல், ஸ்டெட் வியூ உள்ளிட்ட பல வென்ச்சர் கேப்பிடல் நிறுவனங்கள் முதலீடு செய்தன.
சர்ச்சைக் கிளப்பிய ஆடியோ
இந்த நிலையில், கடந்த ஜனவரியில் ஒரு ஜனவரியில் ஆடியோ வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியது. அதில் கோடக் மஹிந்திரா வங்கிப் பணியாளர் ஒருவருடன் குரோவர் பேசியாதாகக் கூறப்பட்ட ஆடியோ (நய்கா ஐ.பி.ஓ தொடர்பாக) வெளியானது. அதில் அந்த வங்கிப் பணியாளர்களை குரோவர் கடுமையாகப் பேசியதாகக் கூறப்பட்டது.
இந்த ஆடியோ போலியானது என்பதுடன், இதன் மூலம் தன்னிடமிருந்து சிலர் பணம் பறிக்கத் திட்டமிடுவதாக குரோவர் குற்றம் சாட்டியிருந்தார்.
இதற்கு முன்பாகக் கடந்த ஆண்டு அக்டோபரில் குரோவர் மற்றும் அவருடைய மனைவி இருவரும் கோடக் மஹிந்திரா வங்கி மீது வழக்கு தொடுத்தார்கள். இந்த வழக்கை சட்ட பூர்வமாக சந்திப்போம் என கோடக் வங்கி சொல்லி இருந்தது. இந்தக் கடுப்பில்தான் அவர் கோடக் வங்கி பணியாளரைக் காய்ச்சி எடுத்திருக்கிறார் என்கிற தகவல் பரவி, குரோவரின் இமேஜைக் கெடுத்தது.

முதலீடு செய்தவர்களுடன் மோதல்
பாரத் பே நிறுவனத்தில் செக்கோயா கேப்பிடல் நிறுவனம் அதிக அளவில் முதலீடு செய்துள்ளது. அதாவது, அந்த நிறுவனம் மட்டுமே 19 சதவிகிதத்துக்கும் அதிகமான பங்குகளை வைத்துள்ளது. இந்த நிறுவனத்துடனே கடுமையான வார்த்தைகளைப் பிரயோகித்து குரோவர் பேசுவதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக 2020-ம் ஆண்டு பாரத் பே இயக்குநர்கள் மற்றும் முதலீட்டாளர்களிடைய நடந்த காட்டமான மெயில் பரிவர்த்தனை பொதுவெளியில் கசிந்து சிக்கலை மேலும் சிக்கலாக்கியது.
நிறுவனம் பற்றிய சூட்டைத் தணிக்க குரோவரும் அவரின் மனைவியும் மார்ச் வரை விடுமுறையில் செல்வதாக அறிவித்தனர்.
கடுப்பேற்றிய ஆடிட்டிங்
குரோவர் இல்லாத நிலையில், அந்த நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை ஆடிட் செய்ய இயக்குநர் குழு பரிந்துரைக்க, இதைப் பார்த்து கடும் கோபம் அடைந்திருக்கிறார் குரோவர். ``இந்த ஆடிட்டை ஏன் ஊரறிய நடத்த வேண்டும்; காதும் காதும் வைத்த மாதிரி ரகசியமாக நடத்தி இருக்கலாமே! என் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் திட்டம் தீட்டி வருகிறார்கள். இவர்களுடன் நான் சண்டை போட்டது போதும். இனி நான் பதவி விலகுவதைத் தவிர வேறு வழியில்லை’’ என்று பணியாளர்களுக்கு நீண்ட கடிதம் எழுதிவிட்டு, தன்னுடைய பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் குரோவர்.

பயந்து ஓடும் குரோவர்
பாரத் பே நிறுவனத்தின் 9.5% பங்குகள் தற்போது குரோவரிடம் உள்ளன. இதை ரூ.4,000 கோடிக்கு விற்கவும் முயற்சி செய்து வருகிறார். தவிர, இந்த நிறுவனத்தின் கணக்கு வழக்குகள் ஆடிட் செய்யப்பட்டு இருப்பதால், அவர் செய்த பல முறைகேடுகள் தெரியவரும். அதற்கு பயந்தே அவர் அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறுகிறார் என்று இன்னொரு தரப்பினர் சொல்கிறார்கள்.
ஒரு நிறுவனம் வளர்ந்து பெரிதாகும்போது சிற்சில சண்டை சச்சரவுகள் தோன்றுவது இயற்கைதான். ஆனால், பாரத் பே-யில் இப்போது நடக்கும் மாற்றங்கள் அந்த நிறுவனத்தின் வளர்ச்சியையே கேள்விக்குறி ஆக்கிவிடும்போல இருக்கிறது.
தவறான பிசினஸ் பிளானை வைத்துக்கொண்டு சண்டை போட்டாலும் பரவாயில்லை. சரியான பிசினஸை பிளானை வைத்துக்கொண்டு, அதை மேலும் வளர்த்தெடுக்காமல், இப்படி சண்டை போடுவது அவர்களுக்குத்தான் இழப்பு என்பதை இவர்கள் எப்போது உணரப் போகிறார்கள்?