Published:Updated:

முடிவுக்கு வந்த சிக்கல்... விரைவில் வெளியாகுமா தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் ஐ.பி.ஓ?

Tamilnad mercantile bank ATM
Tamilnad mercantile bank ATM ( Photo: Vikatan )

இந்த வங்கியில் பல காலமாக நிர்வாக ரீதியிலான சிக்கல் இருந்துவந்தது. 1990-களில் எஸ்ஸார் குழுமத்தின் ரூயா 65% பங்குகளை வாங்கினார்.

100-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ஒருவழியாகப் பொதுபங்கு வெளியிடத் தயாராகிவிட்டது. 1921-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் பின்னாளில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியாக மாற்றப்பட்டது.

கடந்த சில ஆண்டுக் காலமாகவே ஐ.பி.ஓ குறித்த சிக்கல் நிலவி வந்த சூழலில் தற்போது பங்குதாரர்கள் ஒப்புதல் வழங்கி இருக்கிறார்கள். மொத்தமே 26,000 பங்குதாரர்கள் உள்ள வங்கியில் 75% பங்குதாரர்கள் இந்த ஐபிஓ-வுக்கு ஒப்புதல் வழங்கி இருக்கிறார்கள்.

ஆன்ட் குழுமத்தின் ஐ.பி.ஓ நிறுத்தம்... ஜாக் மாவுக்கு ஏன் செக் வைக்கிறது சீனா?

கடந்த 28-ம் தேதி வங்கியின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் இணையம் வழியாக நடந்தது. கடந்த ஏப்ரல் 9-ம் தேதி நடக்க இருப்பதாக இருந்த இந்த ஆண்டு பொதுக்குழு கூட்டம் கோவிட் தொற்று காரணமாகத் தள்ளிப்போடப்பட்டது. கடந்த 28-ம் தேதி நடந்த இந்தக் கூட்டத்தில் 2015-16 நிதி ஆண்டு முதல் 2018-19-ம் நிதியாண்டு வரையிலான காலகட்டத்துக்கு மொத்தமாகச் சேர்த்து இந்தக் கூட்டம் நடந்தது.

இந்தக் கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் வங்கியின் ஐ.பி.ஓ குறித்த தீர்மானமும் ஒன்றாகும். இதற்கு பெரும்பாலான முதலீட்டாளர்கள் ஒப்புதல் வழங்கியுள்ளனர். இந்தத் தகவல்கள் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்தத் தகவலை வங்கியின் முன்னாள் தலைவர் அண்ணாமலை உறுதிப்படுத்தி இருக்கிறார். மேலும், அடுத்த 12 மாதங்களில் இந்த ஐ.பி.ஓ வெளியாகும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

2016-ம் ஆண்டு ஐ.பி.ஓ குறித்து விவாதிக்கப்பட்டது. ஆனால், அப்போது பெரும்பாலான பங்குதாரர்கள் ஒப்புதல் அளிக்கவில்லை.

வ நாகப்பன்
வ நாகப்பன்
விகடன்

இந்த வங்கியில் பல காலமாக நிர்வாக ரீதியிலான சிக்கல் இருந்து வந்தது. 1990-களில் எஸ்ஸார் குழுமத்தின் ரூயா 65% பங்குகளை வாங்கினார். ஆனால், ரிசர்வ் வங்கியிடமிருந்து எதிர்ப்பு வந்ததால், அந்தப் பங்குகளை ஸ்டெர்லிங் குழுமத்தின் சிவசங்கரன் வசம் சென்றது. இதற்குப் பலமான எதிர்ப்பு கிளம்பியது. அப்போது அதிகாரத்தில் இருந்த எல்.கே.அத்வானி வரை பிரச்னை சென்றது. அதன் பிறகு, பங்குகளைத் திருப்பிக் கொடுக்க சிவசங்கரன் சம்மதித்தார். அதன் பிறகு இந்த வங்கி ஐ.பி.ஓ வருவது குறித்து பேச்சு எழுந்தாலும் அதற்கு பங்குதாரர்கள் அனுமதி தராமலே இருந்தனர்.

இது குறித்து பங்குச் சந்தை நிபுணர் வ.நாகப்பனிடன் உரையாடினோம்.

''இந்த வங்கியைப் பொறுத்தவரை, செயல்பாட்டில் பெரிய பிரச்னை இல்லை. ஆனால், பங்குதாரர்களிடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால் இதுவரை ஐ.பி.ஓ வெளியாகாமலே இருந்தது. தற்போது கருத்தொற்றுமை ஏற்பட்டிருப்பதால், ஐ.பி.ஓ வெளியாகிறது.

சாதாரணமாக ஒரு நிறுவனம் பங்குச் சந்தையில் பட்டியலாவதற்கும் வங்கிகள் பட்டியல் செய்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது. சாதாரண நிறுவனங்கள் லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படும். அதில் தவறு ஏதும் இல்லை. ஆனால், வங்கிகளுக்கு சமூகப் பொறுப்புள்ளது.

Bank
Bank

டெபாசிட், கடன் கொடுப்பது போன்ற நிதிசார்ந்த பொறுப்புகள் உள்ளன. அதனால் வங்கிகள் பட்டியலாகும்பட்சத்தில் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை இருக்கும். வங்கி செயல்பாட்டில் மற்றவர்களால் கேள்வி எழுப்ப முடியும்.

மேலும், பட்டியலிடப்படாத நிறுவனம் என்பதால் முதலீட்டாளர்கள் பல ஆண்டுக் காலமாக விற்பதற்கு வாய்ப்பு இல்லாமல் முதலீட்டைத் தொடர்கிறார்கள். இந்த ஐ.பி.ஓ-வால் முதலீட்டாளர்கள் தங்களது பங்குகளை விற்று லாபத்தை எடுத்துக்கொள்வதற்கு வாய்ப்பு கிடைக்கும்'' என அவர் கூறினார்.

கூடிய சீக்கிரம் இந்த வங்கியின் ஐ.பி.ஓ வரட்டும்!

அடுத்த கட்டுரைக்கு