Published:Updated:

பெண்கள் பணியில் சிறக்க 8 யோசனைகள்!

பெண்கள் பணியில் சிறக்க  8 யோசனைகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
பெண்கள் பணியில் சிறக்க 8 யோசனைகள்!

நாணயம் எம்ப்ளாய்மென்ட்! - 9மு.சா.கெளதமன்

பெண்கள் பணியில் சிறக்க  8 யோசனைகள்!

ரு பெண், தன் பணிச் சூழலை  எப்படியெல்லாம் அழகாக்கிக்கொள்ள முடியும்..? இந்தக் கேள்விக்கான பதில் தெரிந்தால், பல பெண்கள் வேலைக்குச் செல்ல பயப்படுவது அல்லது திடீரென வேலையை விட்டு நின்றுவிடுவது போன்ற பிரச்னைகளே இல்லாமல் போய்விடும்.  இந்த ஒரு கேள்விக்கான பதில் கிடைக்காமல் இருப்பதினாலேயே பல பெண்களும் தங்கள் பணியில் தொடர்ந்து முன்னேறிச் செல்ல முடியாமல், நமக்கு விதிச்சது இவ்வளவுதான் என்று தேங்கிப்  போய்விடுகிறார்கள். 

பெண்கள், தங்கள் பணி வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக்கொள்ள எட்டு அருமையான யோசனைகளைச் சொல்கிறார் அவதார் கரியர் க்ரியேட்டர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் செளந்தர்யா ராஜேஷ்.

திருமணத்துக்கு முன்பு, சிட்டி பேங்கில் உயர் பதவியில் இருந்தவர். குழந்தை பிறந்த பிறகு எட்டு வருடம் குழந்தையை வளர்த்து, ஒரு தாயாக தன் கடமையை முடித்துவிட்டு, மீண்டும் கார்ப்பரேட் உலகத்தில் ஒரு வெற்றிகரமான தொழில் முனைவோராக இருப்பவர். அவர் சொல்லும் டிப்ஸ் இனி...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பெண்கள் பணியில் சிறக்க  8 யோசனைகள்!        உன்னை அறிந்தால்!     
 
நமக்குப் பிடித்தது எது என, நம்மால்தான் சொல்ல முடியும். அலுவலக வேலை ஆகட்டும், வீட்டு வேலை ஆகட்டும், நம்மால் எந்தமாதிரியான வேலைகளைச் செய்ய முடியும், எந்த வேலைகளைச் செய்ய முடியாது என்று நாம்தான் முதலில் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, முதலில் அலுவலக மற்றும் வீட்டுச் சூழ்நிலையைப் புரிந்துகொண்டு, உங்களுக்கு வீட்டில் இருக்கும் வேலைகளைப் பட்டியலிடுங்கள். அதற்கான நேரத்தையும் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். கணக்கிட்ட நேரத்தில் அனைத்து வேலைகளையும் முடித்துவிட முயற்சி செய்யுங்கள். அப்போதுதான் அலுவலக வேலைகளில் கவனம் செலுத்த முடியும்.

        வேலைக்கான  அப்டேட்!    
  
 நீங்கள் வேலை பார்க்கும் அதே துறையிலேயே இன்னும் ஏதாவது கோர்ஸ் படித்தால் நல்ல வேலை அல்லது பணி உயர்வு கிடைக்குமா, இன்னும் என்னவெல்லாம் அப்டேட் செய்துகொள்ளலாம் என்று பாருங்கள். அதற்கான நேரத்தைக் கட்டாயமாக ஒதுக்குங்கள். உங்களுக்கு தகுந்தாற்போல ஒரு வருட ஆன்லைன் கோர்ஸ் களைக் கூட படிக்கலாம். உங்களை எந்த அளவுக்கு ஒரு புரஃபஷனலாக வளர்த்துக் கொள்கிறீர்களோ, அந்த அளவுக்கு கார்ப்பரேட் உலகில் உயர் பதவியில் நுழைவது எளிதாக இருக்கும்.

        சுவர் இருந்தால்தான் சித்திரம்!       

நம் உடலையும், மனதையும் வலிமையாக வைத்துக்கொள்ள வேண்டும். இதை வேலைக்குப் போகும் பல பெண்கள் செய்வதில்லை. எனவே, உங்கள் உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள தினமும் குறைந்தபட்சம் ஒரு  மணி நேரமாவது செலவழியுங்கள். உங்கள் தோற்றம், உங்கள் நடை, உடை பாவனைகள்தான் இப்போது இருக்கும் கார்ப்பரேட் உலகத்தில் ஜெயிக்க வைக்கும். 

        உன்னை இழக்காதே!       

இந்தியப் பெண்களுக்கு உரித்தான விஷயம் இது. ஒரு அம்மாவுக்குள் ஒரு பெண் இருக்கிறாள். அந்தப் பெண்ணுக்கு என்று தனியாக ஆசைகள் இருக்கின்றன. இந்தியாவில் இருக்கும் குடும்பங்கள், இப்போதுதான் இதை உணரவே ஆரம்பித்து இருக்கின்றன. எனவே, அந்த ஏக்கத்தோடு மனது இருக்கும்போது, கண்ணை மூடிக்கொண்டு அலுவலகத்துக்கும், குடும்பத்துக்கும் இயந்திரத்தை போன்று உழைக்காதீர்கள்.

இந்த இயந்திர மனப்பான்மையில் இருந்து முதலில் வெளியே வாருங்கள். இந்தியாவில் நமக்குத் தேவை, பச்சடி கலாசாரம்தான். சூப் கலாசாரம் அல்ல. பச்சடியில் போடும் பொருட்கள் எல்லாம் தனித் தனியாகத் தெரியும். ஆனால், சூப்களில் அப்படித் தெரியாது. எனவே, உங்கள் குடும்பத்தையும் பச்சடி போன்று யாருடைய தனித்தன்மையும், குறிப்பாக உங்கள் தனித்தன்மை குலையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

எந்தக் காரணத்தை முன்னிட்டும், அலுவலக பணிகளிலோ அல்லது குடும்பச் சுமைகளிலோ, நீங்கள் உடைந்து  போய்விடக் கூடாது என்பதை அழுத்தமாக மனதில் வைத்துக்கொள்ளுங்கள். எந்தக் கஷ்டம் வந்தாலும் கலங்காத  மனத்திடத்தை பெண்கள் தங்களுக்குள் உருவாக்கிக்கொள்ள வேண்டும். 

        புதிதாக கற்றல்!       

அலுவலகம் சார்ந்த பொருளாதார வாழ்க்கையாக இருக்கட்டும், குடும்பம் சார்ந்த வேலைகளாக இருக்கட்டும், வாழ்க்கையில், நாம் எப்போது, புதிதாகக் கற்றுக் கொள்வதை நிறுத்துகிறோமோ, அன்று நாம் வாழ்கையை விட்டு வெளியே போகத் தொடங்கிவிடுகிறோம் என்று அர்த்தம். 

குழந்தை பெற்றெடுத்தபின், எப்படியோ  அடித்துப்பிடித்து வேலை வாங்கிவிட்டோம் என்று  கொஞ்சம் அசந்தால்கூட அவ்வளவுதான், நம்மை முன்னேறவிடாதபடிக்கு செய்து விடுவார்கள். நமக்கு வேலை கிடைத்திருக்கும் துறையில், அப்டேடட் வெர்ஷன்-ஆன கோர்ஸ்களைப் படிப்பது, நாம் வேலைக்குத்  தேவையான தொழில்நுட்ப வளர்ச்சிகளை கொஞ்சம் ஓவர் டைம் எடுத்தாவது கற்றுக்கொள்வது என்று நம் ஓட்டம் சீராக இருக்க வேண்டும்.

        வொர்க் லைஃப் பேலன்ஸ்!       

வேலையையும், வாழ்க்கையையும் இரண்டாகப் பார்ப்பதே தவறு என்பது என் கருத்து. வாழ்க்கைக்காகத்தான் வேலை. அதே நேரத்தில், வேலைதான் வாழ்க்கையில் எல்லாம் என்று நினைத்துவிடத் தேவை இல்லை. அப்படி நினைத்தால், நம் தனிப்பட்ட வாழ்க்கையில் நிறைய விஷயங்களை இழக்கவே செய்வோம்.  எனவே, எந்த வேலையாக இருந்தாலும், ஆத்மார்த்தமாக ரசித்து செய்யுங்கள், முக்கியமாக அலுவலகத்தில், ‘I am a mother you Know’ என்று ஒரு பெண்ணாக, ஒரு அம்மாவாகக் காரணம் காட்டி, உங்கள் வேலைப் பளுவை குறைத்துக் கொள்ளாதீர்கள். ஒன்று, இரண்டு நாட்களுக்கு வேண்டுமானால், இப்படிச் சொல்வதை மற்றவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். இந்தக் காரணத்தை தொடர்ந்து சொன்னால், பல முக்கிய வேலைகளில் இருந்து உங்களை ஒதுக்க ஆரம்பித்துவிடுவார்கள். இதனால் உங்கள் எதிர்காலம் மட்டுமல்ல, பெண்களை வேலைக்கு எடுப்பதையே யோசிக்கத் தொடங்கிவிடுவார்கள்.

        ஒருவருக்கொருவர் உதவுதல்!     
  

அழகான சுற்றத்தாரை உருவாக்குவது ஒரு கலை. அதைப் பெண்கள் பொதுவாகவே நன்றாக செய்வார்கள். என்றாலும், குடும்பத்தை வைத்துக் கொண்டு வேலைக்குப் போகும் பெண்களுக்கு அலுவலகத்தில் நல்ல நட்பு வட்டம் இருப்பது அவசியம்.

அலுவலகத்தில் பல புது நண்பர்கள் கிடைப்பார்கள். என்னதான் நண்பர்கள் கிடைத்தாலும்,  யாரை எங்கே வைத்துக்கொள்ள வேண்டும், எவ்வளவு பேச வேண்டும் என்பது உங்களுக்குத் தெரிய வேண்டும். உங்களுக்கென சில திறமைகள் இருப்பதுபோல, மற்றவர்களுக்கும் இருக்கும். அவர்களுக்கு நீங்களும், உங்களுக்கு அவர்களும் மியூச்சுவலாக சில உதவிகளை செய்து கொள்ளுங்கள். நீங்கள் ஒரு உதவி கேட்டால் அவர்கள் பெரும்பாலும் மறுக்காத அளவுக்கு, உங்கள் நட்பு வட்டம் இருக்க வேண்டும். 

        ஹெல்தி குரூப்!       

இன்று நாம் வாழும் உலகம் புதிது. நம் அபார்ட்மென்ட்டிலோ, நம் வீடு பக்கத்திலோ ஒரு மலையாளிக் குடும்பம், ஒரு தெலுங்குக் குடும்பம், ஒரு காஷ்மீர் குடும்பம் என்று பலதரப்பட்ட மக்கள் வாழலாம். இப்படி நம் சமூகம் மிக வேகமாக மாறி வருவதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்.

ஆக இது மாதிரியான புதுமையான மக்களை நாம் பார்க்கும்போது, அவர்களோடு சந்தோஷமாக, திறந்த மனதோடு பழகுங்கள். அவர்களிடம்  புதிதாக, என்ன கற்றுக்கொள்ள முடியுமோ கற்றுக் கொள்ளுங்கள். அவர்களின் உணவுகளை நீங்களே சமைத்து, குடும்பத்துக்குப் பரிமாறி பாருங்கள். இப்படி அவர்களுடைய ஆடை, அலங்காரம், சம்பிரதாயங்கள், கலை கலாசாரம்
என்று லைவ்வாக அவர்களிடம் வாழுங்கள்.

இது நட்பு வட்டத்தைக் கூட்டுவதோடு, நம் குடும்பத்தை நிர்வகிக்கவும், அலுவலகத்தில் புதிய ஐடியாக்கள் கொடுக்கவும் உதவியாக இருக்கும்.

அதேநேரம் நீங்களும், உங்களுடைய விஷயங்களை அவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள். வீட்டுக்கு என்று ஒரு நல்ல நட்பு வட்டத்தை அமைத்துக் கொள்ளுங்கள்.  நீங்கள் அலுவலகத்தில் பிஸியாக இருக்கும்போது, இவர்களின் உதவி நிச்சயம் கிடைக்கும்.’’  

இவர் சொன்ன இந்த எட்டு விஷயங்களையும் முயற்சித்துப் பாருங்களேன். உங்கள் அலுவலக வாழ்க்கை சிறக்கும்!

ஜாப் கார்னர்

பெண்கள் பணியில் சிறக்க  8 யோசனைகள்!

பாரத் மிகுமின் நிறுவனத்தின் போபால்  பிரிவில் 738 பணியிடங்கள்

பணியின் பெயர்:  அப்பிரன்டிஸ் பயிற்சி பணி

கல்வித்தகுதி:  பத்தாம் வகுப்புத் தேர்ச்சியுடன் ஐடிஐ

வயது வரம்பு: 25 வயது

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 31.1.2017

மேலும் விவரங்களுக்கு: http://careers.bhelbpl.co.in/app1617/app_main.jsp

தேசிய அனல்மின் நிறுவனத்தில் 120 பணியிடங்கள்

பணியின் பெயர்:   இன்ஜினீயரிங் எக்ஸிகியூட்டிவ் டிரைய்னி

கல்வித்தகுதி:  பி.இ/பிடெக்  & கேட் தேர்வில் அதிக மதிப்பெண்

வயது வரம்பு: 27 வயது

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பைச் சார்ந்தவர்களுக்கு கட்டணம் 150 ரூபாய். இதர பிரிவினருக்குக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 31.1.2017

மேலும் விவரங்களுக்கு: www.ntpccareers.net

பெண்கள் பணியில் சிறக்க  8 யோசனைகள்!

மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் 745 பணியிடங்கள்

பணியின் பெயர்:
   ஸ்டேசன் கன்ட்ரோலர் / டிரையின் ஆப்ரேட்டர்/ கஸ்டமர் ரிலேசன்ஸ்/ ஜூனியர் இன்ஜினீயர்/ மேற்பார்வையாளர்

கல்வித் தகுதி:  டிப்ளமோ எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் / பி.எஸ்சி., இயற்பியல், வேதியியல், கணிதம் படித்தவர்கள்

வயது வரம்பு: 28 வயது

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பைச் சார்ந்தவர்களுக்குக் கட்டணம் 400 ரூபாய். இதர பிரிவினருக்குக் கட்டணம் ரூ.150

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 28.1.2017

மேலும் விவரங்களுக்கு: http://www.delhimetrorail.com/career.aspx

கோவா கப்பல் தளத்தில்  105 அலுவலக பணியிடங்கள்

பணியின் பெயர்: இளநிலை மேற்பார்வையாளர், அலுவலக உதவியாளர்

கல்வித் தகுதி: இளநிலை பட்டப் படிப்பு / ஐடிஐ படிப்புடன் கம்ப்யூட்டர் சான்றிதழ் படிப்பு.

வயது வரம்பு : 35 வயது

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 30.1.2017

மேலும் விவரங்களுக்கு: http://  career.goashipyard.co.in/user/Job-List.aspx

- ஞா.சக்திவேல் முருகன்