Published:Updated:

``லாபம் 30%.. சேவை 70%''- இன்போசிஸிலிருந்து விலகி இயற்கைக் காய்கறிகள் விற்கும் ஸ்ரீதேவி

``லாபம் 30%.. சேவை 70%''- இன்போசிஸிலிருந்து விலகி இயற்கைக் காய்கறிகள் விற்கும் ஸ்ரீதேவி
``லாபம் 30%.. சேவை 70%''- இன்போசிஸிலிருந்து விலகி இயற்கைக் காய்கறிகள் விற்கும் ஸ்ரீதேவி

``இயற்கை முறையில் சாகுபடி செய்யப்படும் காய்கறிகள், கனிகள், தானியங்களை வாங்கி, மாநகரத்தில் விருப்பம் உள்ளவர்களுக்கு விற்கிறேன். விவசாயிகளுக்கு லாபம் தரும் நோக்கில் முழுக்க முழுக்க சேவை அடிப்படையில் இதைச் செய்துட்டிருக்கேன். மனசுக்கு நிறைவா இருக்கு" எனப் பூரிப்புடன் பேசுகிறார், ஸ்ரீதேவி லட்சுமி.

 
கோவை நகரின் வடவல்லி பகுதியில், `பயோ பேசிக்ஸ்' என்ற பெயரில், கணவர் ரமேஷுடன் இணைந்து இயற்கை விவசாயப் பொருள்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்துவரும் பிசினஸ் செய்கிறார். கடந்த 4 வருடங்களாகக் கோவையில் வசித்துவரும் இவரின் முழுநேர வேலையே, இயற்கையுடன் வாழ்வது. சமீபத்தில், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் வானகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தவரிடம் பேசினேன். 

``இந்த வாழ்க்கை கொஞ்ச காலம்தான். அதை மத்தவங்களுக்குப் பயனுள்ளதா செய்யணும்னு ஆசைப்பட்டேன். அதனால்தான், கை நிறைய சம்பளத்தை தந்த வேலைகளை நானும் என் கணவரும் உதறிட்டு, இயற்கைக் காய்கறிகளை விற்கிற பிசினஸ் செய்கிறோம். பி.ஏ எக்கனாமிக்ஸ் படிச்ச நான் 1990-ம் வருஷம், ஸ்டேட் பேங்க் வேலையில் சேர்ந்தேன். பிறகு, எல்.ஐ.சியில் வேலை. அப்புறம், இன்போசிஸ் கம்பெனியில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைச்சது. எனக்கும் ரமேஷுக்கும் திருமணம் ஆச்சு.  ஒருகட்டத்தில், இன்போசிஸில் வேலையும் கசந்துடுச்சு. கல்லூரிப் பருவத்திலிருந்தே இயற்கைமீது அதிக ஈடுபாடு எனக்கு உண்டு. காடுகள், மலைகளைப் பற்றி அதிகம் படிப்பேன். தண்ணீர்ப் பிரச்னை பற்றி தெரிந்துகொள்வேன். இந்தச் சூழலில் கணவர் ரமேஷ், எம்.பி.ஏ படிக்க அமெரிக்கா போனார். நானும் இன்போசிஸ் வேலையை ரிசைன் பண்ணிட்டுப் போனேன். அங்கே எம்.ஏ சோசியாலஜி படிச்சேன். அங்கே எல்லோரும் சின்ன வயசிலேயே குண்டாக இருக்கிறதை கவனிச்சேன். காரணம், மோசமான உணவு முறை. 

அங்கே விவசாயிகளுடன் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைச்சது. அவங்க பிரச்னைகள், மார்க்கெட்டிங் சவால்கள் எனப் பல விஷயங்களை தெரிஞ்சுக்க முடிஞ்சது. நல்ல உணவுப் பொருள்களை விவசாயிகள் எல்லா நாடுகளிலும் உற்பத்தி செய்யத் தயாராக இருக்காங்க. ஆனால், அதற்குரிய கஸ்டமர்கள், மார்க்கெட்டிங் இல்லை. அதனால்தான், இயற்கை விவசாயத்தைவிட்டு தள்ளிப்போய்விட்டாங்க. 

இந்நிலையில், 2007-ம் வருஷம் இந்தியாவுக்கு வந்தோம். 2008-ல், பி.டி கத்தரிக்காய் பிரச்னை கிளம்பிச்சு. அதற்கு எதிராக மும்பையில் பல போராட்டங்களை, விழிப்பு உணர்வு கூட்டங்களை நடத்தினோம். பிரீத்தி என்கிற தோழியுடன் சேர்ந்து, `அர்பன் லீஃப்' என்கிற பெயரில் இயற்கை மாடி காய்கறித் தோட்டங்கள்,ஃபார்ம்களை அமைத்துக்கொடுக்கும் நிறுவனத்தை மும்பையில் தொடங்கினோம். பிரீத்திதான் நிறுவனத்துக்கு முதன்மையானவரா இருந்தார். அந்த கம்பெனி மூலம் நிறைய மாடித்தோட்டங்களை மும்பை முழுக்க அமைச்சோம். 2008-ம் வருஷம், திருத்துறைப்பூண்டியில் நடந்த நெல் திருவிழாவில் நம்மாழ்வார் அய்யாவைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றேன். அவர் பேச்சு என்னைக் காந்தமா இழுத்துச்சு. அவரது ஒவ்வொரு வார்த்தையிலும் இயற்கை கட்டமைக்கப்படுவதற்கான காரணிகள் வெளிப்பட்டுச்சு. அவரது பேச்சுகளை தொடர்ந்து கவனிக்க ஆரம்பிச்சேன். எனக்குள் இருந்த இயற்கை ஆர்வத்தை அவர் இன்னும் பலமடங்கு பலமாக்கினார்'' எனப் பரவசத்துடன் தொடர்கிறார் ஸ்ரீதேவி லட்சுமி.

``கணவருக்கு நெதர்லாந்தில் வேலை கிடைக்க, 2010-ம் வருடம் போனேன். இந்தியாவிலிருந்து நிறைய பேர் என்னைத் தொடர்புகொள்வார்கள். அவர்களுக்கு டாக்குமென்டரி பண்ணித் தருவது, ரிப்போர்ட் எழுதி தருவது, ஃபார்மிங் குரூப் விசிட் பண்ணுவதுன்னு இயற்கை நோக்கிப் பயணிக்க ஆரம்பிச்சேன். 2014- ல், மறுபடியும் இந்தியா வந்து, கோயமுத்தூரில் செட்டில் ஆனோம். 2014-ம் வருஷம், நானும் கணவரும் சேர்ந்து இந்த `பயோ பேசிக்ஸ்' கம்பெனியை ஆரம்பிச்சோம். 

நம்மாழ்வார் அய்யாவின் வழிகாட்டலில் பொள்ளாச்சி, கேரளா, கோவை உள்ளிட்ட பகுதிகளில் நிறைய விவசாயிகள் இயற்கை விவசாயம் செஞ்சுட்டிருந்தாங்க. ஆனாலும், மார்க்கெட்டிங் பண்ணமுடியாம தவிச்சாங்க. அவர்களிடம் பேசி, பொருள்களை வாங்கி, கோவை உள்ளிட்ட நகரங்களில் கஸ்டமர்களைப் பிடிச்சு விற்பனை செய்ய ஆரம்பிச்சோம். ஆரம்பத்தில், நிறைய சிரமப்பட்டோம். பலர் இயற்கை உணவு குறித்த விழிப்புஉணர்வே இல்லாம இருந்தாங்க. இன்னும் பலர், `நீங்க தர்றது இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டதுன்னு எப்படி நம்பறது?'னு கேட்டாங்க. ரொம்ப சிரமப்பட்டுதான் கஸ்டமர்களின் நம்பிக்கையைப் பெற்றோம். டோர் டெலிவரி செய்ய ஆரம்பிச்சோம்.


 

நாங்க உணவுப் பொருள்களை வாங்கும் விவசாயிகள் உண்மையில் இயற்கை முறையில்தான் உற்பத்தி செய்கிறார்களா என்பதைத் தொடர்ந்து கண்காணிக்கிறோம். அதற்கான சான்றிதழை செக் செய்யறோம். எங்க கம்பெனியில் நூற்றுக்கணக்கான விவசாயிகளும், ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட கஸ்டமர்களும் இருக்காங்க. நிறைய கஸ்டமர்களை உருவாக்குனா, இயற்கை விவசாயிகள் அதிகம் உருவாகுவாங்க என மெனக்கெட ஆரம்பிச்சிருக்கோம். இந்த வேலையை 70 சதவிகிதம் சேவை அடிப்படையிலும், 30 சதவிகிதம் மட்டுமே வியாபார நோக்கிலும் செய்கிறோம். போன், வாட்ஸ்அப், ஈமெயில் எனப் பல வழிகளில் கஸ்டமர்கள் எங்களைத் தொடர்புகொண்டு ஆர்டர் கொடுப்பாங்க. ஒரு கஸ்டமருக்கு மாதம் இருமுறை ஆட்டோ மூலம் டோர் டெலிவரி செய்யறோம். விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும் வகையில் விலை கொடுத்து பர்சேஸ் செய்கிறோம். இப்போ, எங்க கம்பெனியை ஆன்லைனிலும் ஆரம்பிச்சிருக்கோம். நலமான உணவு, நலமான விவசாயி, நலமான கஸ்டமர்கள் என்பதுதான் எங்க கம்பெனியின் நோக்கம். உலகம் முழுக்க பல லட்சம் கஸ்டமர்களை உருவாக்கி, தமிழக விவசாயிகள் அனைவரையும் இயற்கை விவசாயத்தை நோக்கித் திரும்பவைக்கணும். நோய் தராத, நலம் மட்டுமே தரவல்ல உணவுப் பொருள்களை உருவாக்கணும். இவற்றைத்தான் உச்சபட்ச இலக்கா வெச்சுச் செயல்படறோம். நம்மாழ்வார் அய்யா கருத்துகளின் வழிகாட்டுதலோடு அந்த இலக்கை எட்டிப் பிடிப்போம்" என்கிறார் ஸ்ரீதேவி லட்சுமி, நம்பிக்கை நிறைந்த குரலில்.