Published:Updated:

காலை டீக்கடை, மதியம் துணி பிசினஸ்... வறுமையை வென்ற பத்மாவதி அம்மா!

வெற்றிக்கான மந்திரச் சொற்கள், அம்பானிகளிடம்தான் கிடைக்கும் என்றில்லை, பத்மாவதி போன்ற அம்மாக்களிடமும் கிடைக்கும். 

காலை டீக்கடை, மதியம் துணி பிசினஸ்... வறுமையை வென்ற பத்மாவதி அம்மா!
காலை டீக்கடை, மதியம் துணி பிசினஸ்... வறுமையை வென்ற பத்மாவதி அம்மா!

ம்மில் எத்தனையோ பேர், 'நேரமே ஓட மாட்டேங்குது', 'எனக்கேத்த வேலை இன்னும் சிக்கலை' எனச் சொல்லிச் சொல்லியே காலம் கடத்துகிறோம். ஆனால், 'எனக்கு 24 மணி நேரம் பத்தலை' என்கிறார் பத்மாவதி. காலையும் மாலையும் டீ வியாபாரம், இடைப்பட்ட பகல் முழுவதும் டி.வி.எஸ்.எக்ஸலில் புடவை உள்ளிட்ட துணிகளை விற்பது எனப் பரபரப்பாக இயங்குகிறார் பத்மாவதி. 'அந்த வேலை எல்லாம் எனக்கு செட்டாகாது' என்கிறவர்களுக்கு மத்தியில், 'கிடைக்கும் வேலைகளைச் செவ்வனே செய்வேன்' எனப் புன்னகிக்கிறார் பத்மாவதி.

கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியத்தில் இருக்கிறது நடுப்பாளையம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர், பத்மாவதி. கணவர் ரகுபதி, ஒரே மகள் சந்தியா என அளவான குடும்பம். 48 வயதாகும் பத்மாவதி, 29 வருடங்களாக ஊர் ஊராகப் போய் துணி விற்கிறார். சிலரை முதல்முறைப் பார்க்கும்போதே ஒரு வாஞ்சை வந்து ஒட்டிக்கொள்ளும். அப்படிதான் பத்மாவதி அக்கா மீது நமக்கு ஏற்பட்டது. "பத்திரிகையில செய்தி போடுற அளவுக்கு நான் பெருசா ஒண்ணும் பண்ணிடலையே கண்ணு" என்று வெட்கப் புன்னகையுடன் தொடர்கிறார். 

"நான் பொறந்த இடத்திலயும் சரி, வாக்கப்பட்டு வந்த இடத்திலுயும் சரி, கொடுமையான வறுமை. ஆனால், இன்னைக்கு நல்லா இருக்கோம். காரணம், நானும் என் புருஷனும் நேரம் காலம் பார்க்காம உழைச்ச பேய் உழைப்புதான். நான் பொறந்தது, ஈரோடு பக்கம் பழையக்காரவீதி. அப்பா டைலர் கடை வெச்சிருந்தார். பத்தாவது முடிச்ச நான், வீட்டு வறுமையை ஓட்ட, புடவை, ஜாக்கெட், கைலி, வேட்டின்னு மொத்தமா வாங்கிவந்து ஊருக்குள்ளே விற்பேன். சாதாரணமாவே, ஒருத்தரைப் பார்த்த நிமிஷத்திலேயே அன்னியோன்யமா பேச ஆரம்பிச்சுடுவேன். அந்தக் குணம் எனக்கு துணையா இருந்துச்சு. வெளியூர்களுக்கு போய் துணிகளை விற்க நினைச்சேன். 'பொட்டப் புள்ளைக்கு ஏன் இந்த வேலை? அப்பாவுக்கு ஒத்தாசை கடையில இருந்துகிட்டு, அடுப்படி சோலியையும் பாரு'னு எல்லோரும் சொன்னாங்க. 

நான் அசரலை. வீடுல சமாதானப்படுத்தி, அப்பாவுக்குத் தெரிஞ்சவர்கிட்ட துணிகள் வாங்கி, சைக்கிளில் வெச்சுக்கிட்டு, சுத்துப்பட்டு கிராமங்களில் விற்க ஆரம்பிச்சேன். பஸ்ஸ்டாப், கேணி, காடுகரைன்னு பெண்கள் கூட்டம் இருக்கிற இடங்களுக்கு போய், 'யக்கா...உங்க நெறத்துக்கு இந்த துணியை உடுத்துனா பார்க்கிறவங்க கண் அடைஞ்சு போவும். கையைக் கடிக்காத விலைதான். இப்பவே முழுசா பணம் தர வேண்டியதில்லை. நாள் கணக்கிலோ, வாரக் கணக்கிலயோ கொஞ்சம் கொஞ்சமா கொடுங்க'னு சொல்வேன்.

29 வயசுலதான் என்னை இவருக்குக் கட்டிக்கொடுத்தாங்க. சின்னதாராபுரத்துல சின்னதா டீக்கடை வெச்சிருந்தார். பெருசா போணியில்லை. அவரை நம்பி தம்பி, தங்கைகள் இருந்தாங்க. அதனால், இங்கே வந்த பிறகும் சைக்கிளிலேயே போய் துணி வியாபாரம் பார்க்க ஆரம்பிச்சேன். நல்லா டீ போடவும் கத்துக்கிட்டு கடையில் டீ போட ஆரம்பிச்சேன். காலையில 6 மணியிலிருந்து 11 மணி வரை கடை வியாபாரம். அப்புறம், 4 மணி வரை துணி வியாபாரத்துக்குக் கிளம்பிடுவேன். 4 மணிக்கு பொறவு மறுபடியும்  டீ வியாபாரம். இதுக்கு நடுவுல கடையிலேயே சாப்பாடு செஞ்சு வீட்டுக்கு அனுப்பிடுவேன். ''அவரும் நானும் மாஞ்சு மாஞ்சு உழைச்சு அவர் தம்பி, தங்கைகளுக்கு கல்யாணம் பண்ணி முடிச்சோம். 'ஒரே பொண்ணு போதும்'னு எங்க குழந்தை ஆசையை நிறுத்திக்கிட்டோம்'' எனப் பிரமிக்கவைக்கிறார் பத்மாவதி.

''ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவை ஈரோடு போய்தான் துணிகளை மொத்தமா கொள்முதல் பண்ணிட்டு வருவேன். தினமும் ஊர் ஊராகப் போய் விற்பேன். ஆறு வருஷமாத்தான் டி.வி.எஸ் எக்ஸல் வாங்கி அதுல போறேன். எல்லோர்கிட்டயும் சகஜமா பேசி, அவங்க வீடுகள்ல உட்காந்து வியாபாரம் பண்றதால 15 கிராம மக்களும் என்னை அவங்க வீட்டுல ஒருத்தியாவே நினைக்கிறாங்க. வாக்கப்பட்டு வந்தப்போ, புருஷனுக்கு காணி நிலம்கூட கிடையாது. மழை, வெயிலை வீட்டுக்குள்ளே கூட்டியாரும் ஓட்டைக் கூரையா வீடு இருந்துச்சு. நானும் புருஷனும் சொந்தகாரங்க வீட்டு விசேஷத்துக்குப் போனால், 'வக்கத்தவங்க'னு காதுபடவே பேசியிருக்காங்க. கண்ணீர் முட்டிட்டு வந்தாலும், 'நாமளும் நல்லா வருவோம்' என்கிற வைரக்கியம் மனசுல இருக்கும்.

இன்னைக்கு ஓரளவு செல்வாக்கா இருக்கோம். அதே சொந்தகாரங்க இப்போ வலிய வந்து பேசறாங்க. உழைப்பு என்னைக்கும் சோடை போகாது; யாரையும் கைவிடாது கண்ணு. உழைக்க பயந்தவங்க வீட்டுலதான் வறுமை நிரந்தரமா உட்கார்ந்திருக்கும். 'இந்த வேலையைப் பார்க்கிறதா?'னு வறட்டு கெளரவம் பார்த்தே பலரும் வாழ்க்கையை வறுமையிலேலே தொலைச்சுடறாங்க. பொழைக்க ஆயிரம் வழிகள் இருக்கு கண்ணு. பொய் சொல்றது, களவாடுறது, அடுத்தவங்களை ஏமாத்தறதைத் தவிர, உழைச்சு சம்பாதிக்கிற எந்த பொழப்பும் நம்மை வாழவைக்கும்" என்றபடி, தனது டூவீலரை கிளப்புகிறார் பத்மாவதி.

வெற்றிக்கான மந்திரச் சொற்கள், அம்பானிகளிடம்தான் கிடைக்கும் என்றில்லை, பத்மாவதி போன்ற அம்மாக்களிடமும் கிடைக்கும்.