Published:Updated:

``கல்லு கண்ணுல தெறிக்கும், கை ரேகை தேயும்'' - ஆட்டுக்கல் செய்யும் செல்வியம்மா!

`எங்க தொழிலை வளர்த்தெடுங்கய்யா'னு எங்க சங்கத்து மூலமா சென்னைக்கு நாலஞ்சு தடவை போய் பெரிய பெரிய ஆபீஸர்கள்கிட்ட கோரிக்கை வெச்சுட்டு வந்தோம். ம்ஹூம்... ஒண்ணும் நடக்கலை'' என்கிறார் வேதனையுடன்.

``கல்லு கண்ணுல தெறிக்கும், கை ரேகை தேயும்'' - ஆட்டுக்கல் செய்யும் செல்வியம்மா!
``கல்லு கண்ணுல தெறிக்கும், கை ரேகை தேயும்'' - ஆட்டுக்கல் செய்யும் செல்வியம்மா!

``இன்னைக்கும் பல கிராமங்களில் 80, 90 வயசு பாட்டிகள், எந்தவித நோவும் இல்லாமல் ஜம்முன்னு நடமாடுறாங்க. காரணம், சமையல் வேலைகளுக்கான தயாரிப்பை அம்மி, குலவி, ஆட்டுக்கல், உரல், திருகையில செஞ்சதுதான். எட்டு மைல் தூரம்னாலும், `நடராஜா சர்வீஸ்'லேயே போவாங்க. 12 பிள்ளைகளைப் பெற்றிருந்தாலும் 90 வயசுலேயும் தெம்பா இருக்காங்க. ஆனால், இன்னைக்கு உள்ள பெண்கள் 30 வயசுலேயே மூட்டுவலி, உடம்பு வலினு ஒரு கிலோமீட்டர்கூட நடக்கறதில்லை. மிக்ஸி, கிரைண்டர்ன்னு உடம்புக்கு வேலை கொடுக்காம ஈஸியா செய்து அவங்களும் நோயாளி ஆகிட்டாங்க. அம்மி, குலவி விற்கும் எங்க பொழப்பும் சீந்துவாரில்லாம போயிட்டு" என வேதனையோடு ஆரம்பிக்கிறார் செல்வி.


 

கரூரிலிருந்து ஈரோடு செல்லும் சாலையில், ஆசாரிப்பட்டறை என்ற கிராமத்தின் சாலையோரம் குடும்ப உறுப்பினர்களாக ஆட்டுக்கல் ஒன்றை செதுக்கிக்கொண்டிருந்தார் செல்வி அம்மா. கணவர், மூன்று மகன்கள், மூத்த மருமகள் என எல்லோருக்கும் இதுதான் வேலை. கடந்த பல வருடங்களாக இவர்களது தொழில் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இந்தத் தொழிலிலிருந்த பலரும் விலகிவிட, `லாபமோ. நஷ்டமோ இதுவே நம் சாமி' என நிற்கும் மிக்குறைவானவர்களில் செல்வி குடும்பமும் ஒன்று. `இப்போ இல்லைன்னாலும், ஒருநாள் ஜனங்க புரிஞ்சுட்டு வருவாங்க. அன்னைக்கு நாங்கதான் ராஜா' என்கிறார் செல்வி அம்மா.


 

முகத்தில் பொடிந்த கடும் உழைப்பின் வியர்வைத் துளிகளைச் சேலை தலைப்பால் துடைத்துக்கொண்டே தொடர்கிறார் செல்வி. ``என் கணவர் குடும்பத்துக்குக் குலதொழிலே இதுதான். என் பொறந்த வீட்டுலயும் இதுதான் தொழில். வாக்கப்பட்டு வந்து 35 வருஷம் ஆவுது. என் கணவர் குடும்பம் செய்ற அம்மிக்கல், ஆட்டுக்கல்லை வாங்க சுத்துபட்டுல போட்டி நடந்த காலம் உண்டு. அந்தளவுக்கு நேர்த்தியா பண்ணுவார். ஒரு ஆட்டுக்கல்லை செஞ்சு முடிக்கிறதுக்குள்ளே அதை வாங்க 10 பேர் சொல்லிவைப்பாங்க. ஆனா, மிக்ஸி, கிரைண்டர், மாவு அரைக்கிற சின்ன மெஷின் என வந்தபிறகு, கொஞ்சகொஞ்சமா எங்க பொழப்பு காத்தாட ஆரம்பிச்சது. இப்போ மாசத்துக்கு 10 அம்மியோ, ஆட்டுக்கல்லோ வித்தாலே பெருசுங்கிற நிலைமை. குடும்பமே வறுமையால் கஷ்டப்பட்டாலும் ஆறு பேரும் தொழிலை விடாம பண்றோம். பக்கத்துல காடு கரைகளில் கல் பாறை இருக்கும். கல் ஒன்றுக்கு 100 ரூபாய் கொடுத்து வாங்கிட்டு வருவோம்.

உடைக்க ஒருநாள், சைஸ் பண்ண ஒருநாள், குழி அடிக்க ஒருநாள்ன்னு ஒரு ஆட்டுக்கல் செய்ய மூணு நாள் ஆகும். அம்மி செய்ய இரண்டு நாள், திருகை செய்ய இரண்டு நாள், உரல் செய்ய மூணு நாள் ஆகும். உளிப்பட்டு உடையுற சின்னச் சின்ன கற்கள் கண்ணுல படீர்ன்னு அடிக்கும். கைரேகையே தேய்ஞ்சு போகும். இவ்வளவு பிரச்னைகளோடுதான் செய்யறோம். அப்படிச் செஞ்சதை அக்கம்பக்கத்து ஊர்களுக்கு வாடகைக்கு ஆட்டோ புடிச்சு கொண்டுபோய் விற்போம். சில நேரம் ஒருநாளைக்கு ஒண்ணுகூட விற்காது. ஆட்டோ வாடகைக்குக் காசு கொடுத்ததுதான் மிச்சம். அதனால், எங்க ஊர்லயே வித்துட்டிருக்கோம். இங்கேயும் வாரத்துக்கு ஒண்ணு விற்கிறதுக்குள்ளேயே தாவு தீர்ந்துடுது. அம்மி 400 ரூபாய், ஆட்டுக்கல் 600 ரூபாய், உரல் 800 ரூபாய், திருகை 300 ரூபாய்னு விற்கிறோம். `எங்க தொழிலை வளர்த்தெடுங்கய்யா'னு எங்க சங்கத்து மூலமா சென்னைக்கு நாலஞ்சு தடவை போய் பெரிய பெரிய ஆபீஸர்கள்கிட்ட கோரிக்கை வெச்சுட்டு வந்தோம். ம்ஹூம்... ஒண்ணும் நடக்கலை'' என்கிறார் வேதனையுடன்.

`ஆனாலும் எங்களுக்கு ஒரு நம்பிக்கை இருக்கு. இதோட அருமை ஜனங்களுக்கு மறுபடியும் தெரிய ஆரம்பிக்கும். ஏன்னா, அம்மி, ஆட்டுக்கல்லைப் பயன்படுத்தி சமையல் பார்த்த முந்தைய தலைமுறை பெண்கள், ஆரோக்கியமா வாழ்ந்தாங்க. டாக்டர்கிட்ட போகாமலே நலமா வாழ்ந்தாங்க. இப்போ, 20 வயசுலேயே உடம்பு பெருத்துடு. மாடியில் ஏறினால், மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்குது. 30 வயசுப் பெண்களுக்கு மூட்டுவலி, கழுத்து வலி, உடம்பு வலின்னு இருக்காங்க. நம்ம உடம்புல கை, கால், கழுத்துன்னு 9 ஜாயின்டுகள் இருக்குமாம். இதுக்கெல்லாம் வேலை கொடுத்து ஆரோக்கியமா வெச்சுக்கிட்டதில் அம்மி, ஆட்டுக்கல்லுக்குப் பங்கு இருக்கு. மிக்ஸி, கிரைண்டர்ன்னு பட்டனைத் தட்டுறதில் அதைச் சரிசெய்ய முடியாது. எப்படி இயற்கை உணவு மேலே நிறைய பேருக்கு நாட்டம் வந்திருக்கோ, அதுபோல, நமது பாரம்பர்யமான இந்தப் பொருள்கள் மேலேயும் மதிப்பு ஏற்படும். அதுவரை, நாங்க இந்தத் தொழிலை விடறதா இல்லை" என்கிறார் செல்வி குரலில் உறுதிபொங்க.