கடந்த இதழில், `பிராவிடென்ட் ஃபண்டுக்கு (பி.எஃப்) 8.35%, பப்ளிக் பிராவிடென்ட் ஃபண்டுக்கு (பி.பி.எஃப்) 7.8% வட்டி வழங்கப்படும் எனக் குறிப்பிட்டிருந்தீர்கள். இந்த வட்டி வித்தியாசம் ஏன், மாதச் சம்பளம் வாங்குபவர்களுக்கு எது பெஸ்ட்?' எனப் பல வாசகிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
நாட்டு மக்களுக்கு, அவர்களின் ஓய்வுக்காலத்தில் சமூகப் பாதுகாப்பு (social security) அளிக்க வேண்டியது, அரசின் கடமை. ஆனால், இந்தியாவில் அந்த நிலை இல்லை. எனவே, பணியாளர்கள் சம்பளத்தில் பிடிக்கப்படும் பி.எஃப்-க்கு அதிக வட்டி அளிக்கப்படுகிறது.

பி.பி.எஃப் என்பது நாட்டு மக்கள் அனைவருக்குமான முதலீட்டுத் திட்டம். இதில் வேலை பார்ப்பவர்கள், சுய தொழில் செய்பவர்கள், வேலையில்லாதவர்கள் யார் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். கடைசி காலத்தில் அதிகத் தொகை தேவை என நினைக்கும் சம்பளக்காரர்கள், பி.எஃப் தவிர கூடுதல் தொகை வேண்டும் என்கிறவர்கள், முதலீட்டில் ரிஸ்க் எடுக்க தயங்குபவர்கள் போன்றோர் இதில் முதலீடு செய்யலாம்.
பி.எஃப் போலவே இதற்கும் முதலீடு, முதிர்வுத் தொகைக்கு வரிச் சலுகை உண்டு. நிதியாண்டில் செய்யப்படும் முதலீட்டுக்கு வருமான வரி, பிரிவு 80சி-யின்கீழ் நிபந்தனைக்குட்பட்டு அதிகபட்சம்
ரூ.1.5 லட்சத்துக்கு வரிச் சலுகை இருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பி.எஃப் மற்றும் பி.பி.எஃப் எல்லாம் சேர்த்துதான் இந்த ரூ.1.5 லட்சம் வரிச் சலுகை. எனவே, வரிச் சலுகைக்காக முதலீடு செய்பவர்கள் பி.எஃப்-ல் ஒரு பிரிவான விருப்ப பி.எஃப்(வி.பி.எஃப்)-யைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
மாதச் சம்பளக்காரர்கள், தங்கள் சம்பளத்தில் பிடிக்கப்படும் பி.எஃப் தொகையைப்போல இருமடங்கு வரை வி.பி.எஃப் ஆகப் பிடிக்கச் சொல்லலாம். அதாவது, ஒருவரின் சம்பளத்தில் பி.எஃப் ரூ.3,000 பிடிக்கப்படுகிறது எனில், அவர் வி.பி.எஃப் ஆக ரூ.1,500/ரூ.3,000/ரூ.6,000 பிடிக்கச் சொல்லலாம். வி.பி.எஃப் தொகையும் பி.எஃப் கணக்கிலேயே சேரும். இந்தத் தொகைக்கும் வருமான வரிச் சலுகை உண்டு. பி.எஃப்-க்கு அளிக்கப்படும் வட்டியே இதற்கும் அளிக்கப்படும்.

தனியார் நிறுவனங்களில் சம்பளத்தில் பிடிக்கப்படும் பி.எஃப் தொகைக்கு இணையான தொகையை நிறுவனமும் அவரின் பி.எஃப் கணக்கில் செலுத்தும். வி.பி.எஃப்-ல் அப்படி இல்லை. நிறுவனம் எந்தத் தொகையும் போடாது என்பது முக்கியமான விஷயம்.