Published:Updated:

வின்னிங் இன்னிங்ஸ் - 9

வின்னிங் இன்னிங்ஸ் - 9
பிரீமியம் ஸ்டோரி
News
வின்னிங் இன்னிங்ஸ் - 9

பாசிட்டிவ் பகுதிபரிசல் கிருஷ்ணா, படங்கள்: பா.காளிமுத்து

தடை தகர்

You get in life what you have the courage to ask for.

 - Oprah Winfrey

பெண்களின் கனவுகள் திருமணத்துக்குப் பிறகு முடங்கிவிடுவதாக, பொதுவாக ஒரு பார்வை உண்டு. வெகு சிலரே அந்தக் கூற்றைப் பொய்யாக்கி, வெற்றிச்சிறகை வானம் நோக்கி விரிக்கிறார்கள். ‘நேச்சுரல்ஸ்’ வீணா குமாரவேல் அவர்களில் ஒருவர்.

பரம்பரையாகவே வியாபாரக்குடும்பம். ஆனாலும் வீணாவுக்குத் தந்தையின் வியாபாரத்தில் ஆர்வமிருக்கவில்லை. எத்திராஜ் கல்லூரியில், படிக்கும்போதும் வியாபாரம் குறித்த சிந்தனை அவருக்கில்லை.

90களின் இறுதியில் ‘ஃபேஷன் இண்டஸ்ட்ரி’ கொஞ்சம் வளர ஆரம்பித்த சமயத்தில்தான், வீணாவும் பியூட்டி பார்லர்களுக்குச் செல்கிறார். சென்னையில் அப்போது இரண்டே வகை பியூட்டி சலூன்கள்தான் இருந்தன என்பதைக் கவனித்தார் வீணா.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
வின்னிங் இன்னிங்ஸ் - 9

பெரிய ஸ்டார்  ஹோட்டல்களில் இருப்பவை ஒருவகை. இன்னொரு வகை, சின்னச் சின்ன ஊர்களில் வீட்டிலோ வீட்டின் அருகிலோ ஒரு சிறிய அறையில் நடத்தப்படுபவை. பெரிய ஸ்டார் ஹோட்டலில் இருக்கும் பியூட்டி சலூன்களுக்குச் சாமானிய மக்கள் செல்லவே மாட்டார்கள். மிகச் சிறிய அளவில் நடத்தப்படுபவை, யாரையும் ஈர்க்காமல் இருந்தன. நடுத்தர மக்களும் வந்து செல்ல, சின்ன அளவில் ஒரு பியூட்டி சலூன் வைக்கலாமே என்ற எண்ணம் வீணா குமாரவேலுக்குத் துளிர்விட்டது அப்போதுதான். 

ஒரு தொழிலைத் தொடர்ந்து செய்துவருபவர்களுக்கும், அதைப் பற்றி எந்த யோசனையும் இல்லாமல்  தொழிலுக்குள் காலடி எடுத்து வைப்பவர்களுக்கும் பெரிய வித்தியாசம் உண்டு. ஏற்கெனவே அதைப் பற்றி அறிந்தவர்கள், அதே சாயலில் பயணிக்க நினைப்பார்கள். வீணாவுக்கு, பியூட்டி சலூன் வைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், அது இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற வரையறைகள் இல்லை. காற்றோட்டமான நல்ல சூழல், சுகாதாரமான, பயிற்சி பெற்ற, சருமத்துக்குப் பாதுகாப்பான அழகு சாதனப் பொருள்களைப் பயன்படுத்துதல் என்று திட்டம் வகுத்தார். அதற்கான பட்ஜெட்டோடு வங்கியை அணுகியவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

“பியூட்டி பார்லருக்கெல்லாம் அம்பதாயிரம், ஒரு லட்சம் போதுமே. எதுக்கு லட்சக்கணக்குல லோன்?” என்று வங்கியினர் நிராகரித்தனர். அப்போதும் திட்டத்தை மாற்றிக்கொள்ளாத வீணா, உறவினர்கள், நண்பர்கள் என்று கடன் வாங்கி, 18 வருடங்களுக்கு முன் நுங்கம்பாக்கத்தில், ‘நேச்சுரல்ஸ் பியூட்டி சலூனை’ ஆரம்பித்தார். 

“முதல் மூன்று வருடங்கள் பெரிய லாபமில்லை. சொல்லப்போனால் நஷ்டம்தான். ஆனால், தினமும் யாரோ ஒரு வாடிக்கையாளர் புன்னகையோடும் நன்றியோடும் சலூனை விட்டு வெளியேறுவது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது” என்கிறார் வீணா குமாரவேல்.

ஒரு சலூன், அதைச் சிறப்பாக நடத்துவது என்பதுதான் வீணாவின் அப்போதைய திட்டம். திறமையும் ஆர்வமும் இருப்பவர்களை, அவர்கள் தொடங்கும் தொழில் உள்ளிழுத்துக்கொள்ளுமல்லவா... அப்படித்தான் வீணாவுக்கும் நடந்தது. வாடிக்கையாளர்களின் வருகை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கத் தொடங்கியது. 

கணவர் குமாரவேலும் இவரோடு கைகோக்க... மூன்று வருடங்களுக்குப் பிறகு அண்ணா நகரில் அடுத்த கிளையைத் தொடங்கினார். மூன்று வருடங்களாகக் கிடைத்த அனுபவம் கைகொடுத்தது.ஆண்களுக்கும் பெண்களுக்குமான ஒரே பியூட்டி சலூன் வைக்கும் எண்ணம் வந்தது. இப்போது வங்கிகள் கைகொடுத்தன. ஆழ்வார்பேட்டை, அடையாறு, ஸ்பென்சர்ஸ் என்று கிளைகளை விரிவுபடுத்தினார். புதிய கிளைகளை யுனிசெக்ஸ் சலூன்களாக வடிவமைத்தார்.  தமிழகத்தின் முதல் யுனிசெக்ஸ் சலூன்கள் உருவானது அப்போதுதான். 

    கணவர் குமாரவேலின் வழிகாட்டுதலும் ஆலோசனைகளும் வீணாவுக்குப் பெரிய அளவில் கைகொடுத்தன.  வாடிக்கையாளர்களைக் கவரும் வண்ணம் திட்டங்களை அறிமுகப் படுத்தினார். முறையான பயிற்சிக்குப் பின் ஊழியர்களை நியமித்தார். வந்து செல்லும் வாடிக்கையாளர்களிடம் கருத்துகளைக் கேட்டு, சேவையை மேம்படுத்த என்னென்ன செய்ய வேண்டுமோ எல்லாவற்றையும் உடனுக்குடன் செய்தார்.
   
சில வருடங்களிலேயே, சென்னையில் பல இடங்களில் கிளைகள் முளைத்ததும், வாடிக்கையாளர்களிலேயே பலர் அவரவர்கள் ஊரில் கிளைகள் ஆரம்பிக்கக் கேட்டனர். அப்படி  வெளியூர் களிலும்  நேச்சுரல்ஸின் கிளைகள் முளைத்தன. அந்தச் சமயத்தில் தான் வேலையாட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. பயிற்சி கொடுக்கப்பட்டவர்கள், அவரவர் ஊரில் இருக்கவே பிரியப்பட்டனர். பல்வேறு ஊர்களில் கிளைகள் ஆரம்பிக்கப் பட, ஆட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது.  வடகிழக்கு மாநிலங்களிலிருந்து பணியாளர்களை அழைத்துப் பயிற்சி கொடுத்தார். பயிற்சிக்குப் பின், அவர்கள் தமிழகத்தின் வெவ்வேறு ஊர்களுக்குச் சென்று பணிபுரிய, அந்தச் சிக்கலும் தீர்ந்தது.

50 கிளைகளுக்கு மேல் வளர்ந்ததும், ‘ஃப்ரான்சைஸி’ முறைக்கு அனுமதி கொடுக்கத் தீர்மானித்தார். அதிலும் விண்ணப்பங்கள் வந்து குவிந்தாலும், ஆரம்பிக்கத் தயங்கினார்கள்.   உறவினர்கள், நண்பர்கள் என்று பட்டியல் எடுத்து அவர்களில் ‘வாரிசுகள் செட்டில் ஆகிவிட்டார்கள். அடுத்து நாம் என்ன செய்யப்போகிறோம்?’ என்ற எண்ணத்தில் இருக்கும் குடும்பத் தலைவிகளை அணுகினார். ஒரு தொழில்முனைவோராகத் தனக்குக் கிடைத்திருக்கும் சமூக அந்தஸ்தையும், மனத்திருப்தியையும் எடுத்துரைத்தார். முறையான பயிற்சியையும் ஆலோசனைகளையும் வீணா குமாரவேல் வழங்கத் தயாராக இருந்ததால், சிலர் ஆர்வம் காட்ட, மீண்டும் அங்கங்கே நேச்சுரல்ஸின் ‘ஃப்ரான்சைஸி’கள் தொடங்கின. 
  
பிறகு, பெரும்பாலும் நேச்சுரல்ஸின் ரெகுலர் வாடிக்கையாளர்களில் பலரும்தான் நேச்சுரல்ஸின் ஃப்ரான்சைஸிஸ் அனுமதி கேட்டு விண்ணப்பித்தனர். ​6 வருஷம் முன்பு சென்னையில் தங்கி, கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த ஒரிசாவைச் சேர்ந்த பெண் ஒருவர், நேச்சுரல்ஸின் வாடிக்கையாளர். கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, வீணாவிடம் புவனேஸ்வரில் நேச்சுரல்ஸின் ஃப்ரான்சைஸிஸ் அனுமதி கேட்டிருக்கிறார். இன்றைக்குப் புவனேஸ்வரில் நேச்சுரல்ஸின் பத்து பியூட்டி சலூன்களை நிர்வகித்து வருகிறார் அவர். 

வின்னிங் இன்னிங்ஸ் - 9

ஒரு தொழிலைத் தொடங்கி, அதற்கான பாதையில் சென்றுகொண்டிருக்கும்போது, சமூக மாற்றத்துக்கும் நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் பல தொழிலதிபர்களுக்கு உருவாகும்.   வீணாவுக்கும் அப்படியான எண்ணங்கள் தோன்றின. அப்படி உருவானதுதான் Naturals Enable என்கிற திட்டம். மாற்றுத் திறனாளிகளைப் பயிற்றுவித்து, அவர்கள் பணிபுரியும் சிறப்புக் கிளைகள் தொடங்கினார்.  விழிச்சவால் உடையவர் களுக்கு  Reflexology-யில் பயிற்சி கொடுத்தார். அதுபோலவே பல்வேறு மாற்றுத் திறனாளிகளுக்கும், அமில வீச்சுக்கும், தீக்காயங்களுக்கும் ஆளான பெண்களுக்கும் பயிற்சி கொடுத்து சிறப்புக் கிளைகளைத் தொடங்கினார். 

 “பொருளாதாரச் சுதந்திரம் பெண்களுக்குக் கொடுக்கும் தன்னம்பிக்கை மிக முக்கியமானது” என்கிறார் வீணா குமாரவேல். தன்னைப்போன்ற பெண் தொழில் முனைவோர்களை அதிகம் உருவாக்கியது தான் தனது பயணத்தை உற்சாகமாகச் செலுத்த உதவியது என்கிறார் வீணா.  350க்கும் மேற்பட்ட பெண் தொழில் முனைவோர்கள் நேச்சுரல்ஸால் உருவாகியிருக்கிறார்கள். எட்டுப் பேரோடு, ஒரு கிளையாக ஆரம்பித்த நேச்சுரல்ஸுக்கு, இன்று இந்தியா முழுவதும் 630 கிளைகள் உள்ளன. கிட்டத்தட்ட 10,000 ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். சென்னை, ஹைதராபாத், பெங்களூரு ஆகிய நகரங்களில் நேச்சுரல்ஸின் பியூட்டிஷியன் படிப்புக்கான அகாடமி உள்ளன. 1000 பெண் தொழிலதிபர்கள், 3000 பியூட்டி சலூன்கள் என்ற இலக்கை நோக்கிப் பயணிக்கிறார் வீணா.

“சவால்கள்தான் என் இந்தப் பயணத்தை சுவாரஸ்யமாக்கியது” என்கிறார் வீணா. இவர் ஆரம்பித்தபோது, ‘சலூனுக்கு வாடகைக்குக் கொடுக்கறதா?” என்கிற எண்ணம் சில ஊர்களின், கட்டட உரிமையாளர்களுக்கு இருந்தது. சலூன் ஆரம்பிப்பதற்குக் கடன் கொடுக்க வங்கிகள் தயங்கின. எல்லாமே மாற்றத்துக்குட்பட்டது தானே? பிறகு கட்டட உரிமையாளர்களே தங்கள் இடத்தில் நேச்சுரல்ஸின் பெயர்ப்பலகை இருப்பதைப் பெருமையாக நினைக்கும் நிலை வந்தது. இவர்களின் ‘பிசினஸ் மாடல்’ அறிந்த வங்கிகள் தாமாகக் கடனுதவி அளிக்க முன்வந்தன. வரும் ஆண்டுகளில் இலங்கை, துபாய், மலேசியா, அமெரிக்கா என்று கிளைபரப்பவிருக்கிறது ‘நேச்சுரல்ஸ்.’

தொழிலில் சவால்கள் வரும்போது நீங்கள் அடுத்து வைக்கும் ஓர் அடிதான், உங்கள் அடுத்த கட்டத்தைத் தீர்மானிக்கும். அந்த அடியை தைரியமாக வைக்கத் தயங்குபவர்கள், சாதனையாளர்கள் குறித்த புத்தகத்தை வாங்குகிறார்கள். தைரியமாய் முன்னோக்கிச் சென்றவர்கள் சாதனைப் புத்தகத்தில் இடம்பெறுகிறார்கள். வீணா குமாரவேல், அதிலும் ஒருபடி அதிகம் சென்று, சாதிக்க நினைக்கும் பெண்களை அடையாளம் கண்டு, அவர்களைத் தொழிலதிபர்களாக்கிக்கொண்டிருக்கிறார்.

வீணா குமாரவேலின் பிசினஸ் மொழிகள்

*
தினமும் நாம் கற்றுக்கொள்ள ஏதாவது ஒன்றிருக்கும். அப்படிக் கற்றுக் கொண்டவற்றை அடுத்தநாள் நடைமுறைப்படுத்துவது நம் தொழிலை முன்னேற்றும்.

வாய்ப்புகள் எங்கும் கொட்டிக்கிடக்கின்றன. யோசிக்கும் நேரத்தில் அவற்றில் ஒன்றைப் பயன்படுத்தி முன்னேறுகிறவர்கள் சமூகத்தில் அதிக கவனம் பெறுவார்கள். ​

*
எந்தச் சூழலிலும் முயற்சியைக் கைவிடாதீர்கள்... எந்தச் சூழலிலும்!