வாசகிகள் பக்கம்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

நீங்களும் செய்யலாம்

நீங்களும் செய்யலாம்
பிரீமியம் ஸ்டோரி
News
நீங்களும் செய்யலாம்

சாஹா, படங்கள் : வீ.நாகமணி

சிக்கன் வொர்க்... கட்ச் வொர்க்... மிரர் வொர்க் ஏற்றம் தரும் எம்ப்ராய்டரிங்! -  ஸ்ரீதேவி 

``எம்ப்ராய்டரிங்கில் ஏராளமான வகைகள் உண்டு. காலப்போக்கில் காணாமல் போனவை பல... காலம் கடந்தும் ஃபேஷனில் இருப்பவை சில. அந்த வகையில் சிக்கன் வொர்க், கட்ச் வொர்க், மிரர் வொர்க் வேலைப்பாடுகளுக்கு எப்போதும் மக்கள் மத்தியில் வரவேற்பு உண்டு. கலைநயமும் கற்பனைவளமும் உள்ள பெண்கள் இவற்றைக் கற்றுக்கொண்டு கணிசமாகக் காசு பார்க்கலாம்’’ என்கிறார் சென்னை, சின்மயா நகரைச் சேர்ந்த ஸ்ரீதேவி.

நீங்களும் செய்யலாம்

‘`எம்.பில் படிச்சிருக்கேன். 2007 வரை `ஆர் அண்டு டி' துறையில வேலை பார்த்தேன். அப்புறம் வேலையைத் தொடர முடியலை. சின்ன வயசுல பொழுதுபோக்கா கத்துக்கிட்ட எம்ப்ராய்டரிங்கை இன்னிக்கும் பண்ணிட்டிருக்கேன். வேலையை விட்டதும், பொழுதுபோக்கையே பிசினஸா மாத்திக்கிட்டேன். தரமணி பாலிடெக்னிக்ல எம்ப்ராய்டரிங் புரொஃபஷனல் கோர்ஸ் முடிச்சிருக்கேன். இப்போ எனக்கு 50-க்கும் மேலான எம்ப்ராய்டரிங் வகைகள் தெரியும். நான் பண்றதுலயே மிகவும் பிரபலமானவை சிக்கன் வொர்க், கட்ச் வொர்க் மற்றும் மிரர் வொர்க்...’’ - அறிமுகம் கூறியபடியே தன் ஸ்பெஷல் எம்ப்ராய்டரிங்கின் பெயர்க் காரணங்களையும் விளக்குகிறார்.

‘`சிக்கன் வொர்க் என்பது லக்னோவின் பாரம்பர்ய எம்ப்ராய்டரிங் ஸ்டைல். அது சாப்பிடற சிக்கன் இல்லை... `Chikan’. இதற்கு எம்ப்ராய்டரினு அர்த்தம். இதை ‘ஷேடோ வொர்க்’குன்னும் சொல்றோம். கட்ச் வொர்க் என்பது குஜராத் ஸ்பெஷல். கட்ச் மாவட்டத்துல பிரபலமானதால அந்தப் பெயர். மிரர் வொர்க் பத்தி எல்லாருக்கும் தெரியும். ஆரம்ப காலத்துல ஒரிஜினல் கண்ணாடிகள் வெச்சு செய்திட்டிருந்தோம். அதைத் துவைக்கிறதுலயும் பராமரிக்கிறதுலயும் சிரமங்கள் இருந்ததால, இப்போ செயற்கைக் கண்ணாடிகள் பயன்படுத்திச் செய்யறோம்’’ என்கிற ஸ்ரீதேவி, எம்ப்ராய்டரிங் பிசினஸில் ஆர்வமுள்ளோருக்கு வழிகாட்டுகிறார்.

நீங்களும் செய்யலாம்

என்னென்ன தேவை... எவ்வளவு முதலீடு?

எம்ப்ராய்டரிங் நூல் கண்டுகள் (விருப்பமான கலர்களில்), விருப்பப்பட்டால் ஒரிஜினல் கண்ணாடித் துண்டுகள், சமிக்கி போன்ற செயற்கைக் கண்ணாடிகள் (ஒரு பாக்கெட்  25 ரூபாய்க்குக் கிடைக்கும்), எம்ப்ராய்டரி லூப், ஊசிகள் போன்றவை அடிப்படைத் தேவைகள். நீங்களே துணியும் வாங்கி வொர்க் செய்து கொடுக்கப் போகிறீர்கள் என்றால் எந்த மாதிரியான துணி என்பதைப் பொறுத்து அதற்கான செலவும் கூடும். வாடிக்கையாளர் கொடுக்கும் துணியில் வெறும் எம்ப்ராய்டரி வேலைப்பாடு மட்டும் செய்து கொடுக்கப் போகிறீர்கள் என்றால் வேலைப்பாட்டுக்கான செலவு மட்டும்தான். ஆக, 500 ரூபாய் முதலீட்டிலிருந்து இந்தத் தொழிலில் இறங்கலாம்.

சிக்கன் வொர்க் செய்ய ஆர்கண்டி துணி சிறந்தது. கட்ச் மற்றும் சிக்கன் வொர்க்கை எந்தத் துணியிலும் செய்யலாம்.

பிசினஸ் வாய்ப்பு? லாபம்?

வேலைப்பாட்டின் தன்மையைப் பொறுத்தது லாபம். கழுத்துப் பகுதிக்கும் கைகளுக்கும் மட்டும் சிம்பிளாக வேண்டும் எனக் கேட்கிறவர்கள் இருக்கிறார்கள். கழுத்துப் பகுதியை அடைத்ததுபோல ஆடம்பரமாக வேண்டும் என்போரும் இருக்கிறார்கள். அதற்குத் தேவையான மெட்டீரியல், உழைப்பு போன்றவற்றைப் பொறுத்தே லாபம் வைக்க முடியும்.

பிளவுஸுக்கான மிரர் வொர்க் எம்ப்ராய்டரிங் என்றால் ஒரே நாளில் முடித்துவிடலாம். கட்ச் வொர்க் மட்டும் கொஞ்சம் தாமதமாகும் என்பதால் ஒரு வாரம் தேவை. சிக்கன் வொர்க் என்றால் நான்கு நாள்களில் முடிக்கலாம். சல்வார், சேலை என்றால் இன்னும் சில நாள்கள் தேவை.

துப்பட்டாவுக்கான கட்ச் மற்றும் சிக்கன் வொர்க்குக்குத் துணியுடன் சேர்த்து 500 முதல் 700 ரூபாய் வாங்கலாம்.  மிரர் வொர்க் என்றால் கொஞ்சம் குறைவாக வாங்கலாம். சேலை என்றால் 1,500 ரூபாய். 50 சதவிகித லாபம் நிச்சயம்.

நீங்களும் செய்யலாம்

வாய்வழி விளம்பரம்தான் இதில் கைகொடுக்கும். ஏற்கெனவே உள்ள டிசைன்களையே செய்து கொடுக்காமல் வாடிக்கையாளர்களின் விருப்பம் கேட்டுச் செய்து கொடுப்பது பிசினஸைப் பெருக்கும். சின்ன அளவில் துணி வியாபாரம் செய்கிறவர்களுடன் இணைந்து செய்யலாம். வீட்டின் அருகிலுள்ள துணிக்கடைகள் மற்றும் பொட்டீக்கில் பேசி, உங்கள் வேலைப்பாடுகளை அங்கே டிஸ்ப்ளே செய்யலாம். வாட்ஸ்அப் குழுக்களில் உங்கள் வேலைப்பாடுகளைப் படம் எடுத்துப் பகிர்ந்து ஆர்டர் பிடிக்கலாம்.

கடன் வசதி?

மகளிர் சுயஉதவிக் குழுக்களில் இருப்போர் உள்கடன் வசதி பெறலாம். பிசினஸ் அடுத்தகட்டத்தை நோக்கி நகரத் தொடங்கும்போது, நீங்களாகவே விதவிதமான மெட்டீரியல்கள் வாங்கி, எம்ப்ராய்டரிங் செய்து வாடிக்கை யாளர்களுக்கு விற்கலாம்.

பயிற்சி?

ஒரே நாள் பயிற்சியில் மூன்று வகையான எம்ப்ராய்டரிங்கையும் கற்றுக்கொள்ளலாம். கட்டணம் 500 ரூபாய். அடிப்படை எம்ப்ராய்டரிங் தெரிய வேண்டும் என்கிற அவசியமில்லை. ஆர்வமுள்ள யாரும்
செய்யலாம்.