தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

புதுசா யோசிங்க, சரியா செய்யுங்க, சக்சஸ் நிச்சயம்! - மோகனலட்சுமி

புதுசா யோசிங்க, சரியா செய்யுங்க, சக்சஸ் நிச்சயம்! - மோகனலட்சுமி
பிரீமியம் ஸ்டோரி
News
புதுசா யோசிங்க, சரியா செய்யுங்க, சக்சஸ் நிச்சயம்! - மோகனலட்சுமி

ஆச்சர்யம்சு.சூர்யா கோமதி, படங்கள் : சி.ரவிக்குமார்

‘`டீச்சர் ஆகணும், டாக்டர் ஆகணும்னுதான் எல்லாக் குழந்தைகளுக்கும் கனவு இருக்கும். நான், ‘வித்தியாசமா ஏதாச்சும் பண்ணணும்’னு பள்ளி நாள்களிலேயே யோசிச்சேன். வாழ்க்கையில் படிப்பு என்பது நாம் ஓர் இடத்துக்குள் நுழைவதற்கான கதவு. நீடிச்சு நாம அங்கே இருக்கணும்னா, அந்தக் கதவைத் தாண்டி, திறமையும் மாற்றி யோசிக்கிற புதுமையும் வேணும்’’ - வரிக்கு வரி அசத்துகிறார் மோகனலட்சுமி. குழந்தைகளுக்கு பிசினஸ் செய்யக் கற்றுக்கொடுக்கும் ‘கிட்ஸ்பிரனர்’ ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் உரிமையாளர். சென்னையைச் சேர்ந்த இவர், இதுவரை 400 குழந்தைகளை இளம் தொழிலதிபர்களாக மாற்றியிருக்கிறார்.

கல்லூரிப் படிப்பில் ஆர்வமில்லை!

‘`ப்ளஸ் டூ முடிச்சவுடன், ‘நான் காலேஜ்ல சேரலை, வீட்டிலிருந்தே புதுசா ஏதாச்சும் முயற்சி செய்றேன்’னு சொன்னப்போதே, ‘இப்போ படிக்கலைன்னா பின்னாடி கஷ்டப்படுவ’னு சொன்னாங்க பெற்றோர். என்றாலும், என் இலக்கை அவங்களுக்குப் புரியவெச்சுடலாம் என்கிற நம்பிக்கையில், மூணு வருஷம் டைம் கேட்டேன். என் கனவுக்காக எதிர்காலத்தைப் பணயம் வெச்சேன். பெற்றோரின் திருப்திக்காக பார்ட் டைம் ஏர்-ஹோஸ்டஸ் கோர்ஸில் சேர்ந்தேன். பின்னர் தொலைதூரக் கல்வியில் பேச்சிலர் ஆஃப் பிசினஸ் படிச்சேன்.

புதுசா யோசிங்க, சரியா செய்யுங்க, சக்சஸ் நிச்சயம்! - மோகனலட்சுமி

இருபது வயதிலேயே கிடைத்த ஏணி!

சின்னச் சின்ன ஈவன்ட்டுகள் நடத்துறது, காம்பயரிங் பண்றதுனு கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் என்னை நிரூபிக்கும் தருணங்களைத் தேடிட்டே இருப்பேன். 18 வயசுல, ஒரு தனியார் ஹோட்டலில் கெஸ்ட் மேனேஜ்மென்ட் பிரிவில் வேலைக்குச் சேர்ந்தேன். சம்பளத்தைவிட, அதில் எனக்குக் கிடைக்கிற அனுபவங்களில்தான் ஆர்வமா இருந்தேன். நிறைய கத்துக்கிட்டேன். என் சிறப்பான செயல்பாட்டால், அந்த ஹோட்டலின் உரிமையாளர் இந்தியாவில் உள்ள ஒரு யு.கே நிறுவனத்தில் அக்கவுன்ட் மேனேஜராகும் வாய்ப்பை எனக்கு வாங்கிக் கொடுத்தார். அங்கு சேர்ந்த ஒரே வருஷத்தில் பிராண்டு மேனேஜராக என் திறமையால் உயர்ந்தேன். ப்ளஸ் டூ முடிச்சுட்டு, தொலைதூரக் கல்வியில் படிக்கும் ஓர் இளம் பெண்ணுக்கு அது பெரிய வளர்ச்சி.

தன்னம்பிக்கைக்குக் கிடைத்த வெற்றி

அடுத்தகட்ட முயற்சிகளுக்கு உயர்கல்வி தேவைப்பட்டது. அதனால ரெகுலர்ல எம்.பி.ஏ படிக்க விண்ணப்பிச்சேன். ஆனா, இளநிலை தொலைதூரக் கல்வியில் படிச்சதால எந்த காலேஜ்லயும் எனக்கு அட்மிஷன் கிடைக்கல. சிங்கப்பூரில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன்.

எம்.பி.ஏ முடிவில் சமர்ப்பிக்கும் புராஜெக்ட்டில், குழந்தைகளுக்குத் தொழில் கற்றுக்கொடுப்பது பற்றி ஓர் ஆராய்ச்சிக் கட்டுரையைச் சமர்ப்பிச்சேன்.

திடீர்னு ஒருநாள், சிங்கப்பூர் மினிஸ்ட்டரி ஆஃப் எஜுகேஷனில் இருந்து ஒரு போன் கால் வந்தது. என்ன பிரச்னையோன்னு பயந்துகிட்டே பாஸ்போர்ட், சர்டிஃபிகேட்ஸ் எல்லாம் எடுத்துட்டுப் போன எனக்கு, ஓர் இன்ப அதிர்ச்சி. ‘உங்க புராஜெக்ட் சூப்பரா இருக்கு. குழந்தைகளுக்கான பிசினஸ் புராஜெக்ட்டை சிங்கப்பூரில் நடைமுறைப்படுத்த எல்லா உதவிகளையும் சிங்கப்பூர் அரசாங்கம் செய்யும்’னு சொன்னாங்க. அந்த நொடி, அதுவரை நான் தளராம அடைகாத்து வளர்த்து வந்த என் தன்னம்பிக்கைக்குக் கிடைச்ச வெற்றி. நான் உருவாக்கிய திட்டத்தை சிங்கப்பூரில் பாடமாகக் கொண்டுவர, அந்த அரசே உதவியது, எவ்வளவு பெரிய அங்கீகாரம்? ஆனந்தக் கண்ணீரை நான் சுவைத்த தருணம் அது!

தமிழ்நாட்டில் ஸ்டார்ட்அப்

சிங்கப்பூர், மலேசியாவில் நிறைய  பள்ளிகளில் நான் உருவாக்கிய கரிக்குலத்தை பாடத்திட்டமாகக் கொண்டு வந்தாங்க. இதுக்கு இடையில் எனக்குத் திருமணம் முடிந்தது. மூன்று வருடங்களில், ‘நாம இந்தியாவுக்குப் போகலாம்’னு நான் சொல்ல, சிங்கப்பூர்ல வேலை பார்த்துட்டு இருந்த என் கணவர், என் வளர்ச்சிக்காக அதுக்கு சம்மதிச்சார். தொழிற்சாலைகள் நிறைந்த சிவகாசியில் ஒரு வருடம் வீடு எடுத்துத் தங்கினோம். அங்கே நிலவிய தொழில்முறை, பொருளாதார நிலை போன்றவற்றை ஒரு வருடம் மக்களோடு மக்களா இருந்து கத்துக்கிட்டேன். அந்த அனுபவங்களை அடிப்படையா வெச்சுதான், இந்தியக் குழந்தைகளுக்கான பிசினஸ் கரிக்குலத்தை உருவாக்கினேன். சென்னையில் ‘கிட்ஸ்பிரனர்’ என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தைத் தொடங்கினேன்.

புதுசா யோசிங்க, சரியா செய்யுங்க, சக்சஸ் நிச்சயம்! - மோகனலட்சுமி

தொலைக்காத கனவு!

ஸ்டார்ட்அப் நிறுவனம் தொடங்க, பொருளாதார ரீதியாகப் பலமா இருக்கணும் என்பதுதான் எனக்குச் சொல்லப்பட்ட வரையறை. ஆனா, பணம் இல்லை என்பதற்காக என் கனவைத் தொலைக்க நான் தயாரா இல்லை. எல்லா மிடில்கிளாஸ் பெண்களும் தங்களின் கனவை ஏதாவது ஓர் இடத்தில் தொலைத்திருப்பாங்க. அவர்களில் ஒருத்தியா நான் கரைஞ்சு போயிடக் கூடாதுனு இருந்தேன். என் நம்பிக்கையையே முதலீடாகப் போட்டு பிசினஸைத் தொடங்கினேன்.

இவர்கள் குழந்தை தொழில்முனைவோர்!

குழந்தைகளுக்கு பிசினஸ் கற்றுக்கொடுக்கலாம் என்கிற எங்களின் கான்செப்ட்டை மக்களுக்குப் புரியவைப்பது ஆரம்பத்தில் சிரமமா இருந்தது. இப்போ, நிறைய பெற்றோர் எங்களைத் தேடிவந்து, கத்துக்கொடுங்க’னு கேட்கிறாங்க. ஏழு வயது முதல் பதினேழு வயதுவரையுள்ள குழந்தைங்களுக்கு, வாரம் ஒரு பிசினஸ் சென்டரில் பயிற்சி வகுப்புகள் நடக்கும். குழந்தைகளின் ப்ளஸ், மைனஸை உள்வாங்கி, அவர்களுக்கான பிசினஸாக என்னவெல்லாம் இருக்கலாம் என்ற ஓர் ஐடியா கொடுத்து, அவர்களையே தேர்வு செய்யச் சொல்லுவோம். குழந்தைகள் தங்களின் பிசினஸ் ஐடியாவைச் சொன்னதும், எங்ககூட தொடர்பில் இருக்கிற சில முதலீட்டாளர்களிடம் அவங்களை அறிமுகப்படுத்தி, முதலீட்டுத் தொகையை வாங்கிக் கொடுப்போம். அந்தத் தொழிலுடன் சம்பந்தப்பட்ட தொழில்முனைவோர், தொழிலதிபர்களைச் சந்திப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தருவோம். பின்னர், குழந்தைகளே பிசினஸைப் பார்த்துக்க ஆரம்பிச்சிருவாங்க. நிறுவனத்துக்குப் பெயர் வைக்கிறதில் இருந்து லாபக் கணக்கு பார்க்கிறதுவரை எல்லாமே குழந்தைகள்தாம் செய்வாங்க. அதற்கான பயிற்சிகளைச் செய்முறையாகவே அவர்களுக்குக்  கற்றுக்கொடுக்கறோம். மாசம் பத்தாயிரத்தில் இருந்து ஒரு லட்சம்வரை டர்ன் ஓவர் பார்க்கிற குழந்தைகள் இருக்காங்க. படிப்பு, பிசினஸ் ரெண்டிலும் பின்னியெடுக்கிறாங்க சொன்னா நம்ப மாட்டீங்க...  கிடைக்கிற லாபத்தைச் சேர்த்து வைக்கிறதைவிட, சமூக சேவைகளுக்காகச்  செலவிடுறதுலதான் குழந்தைகள் ஆர்வமா இருக்காங்க. 

புதுசா யோசிச்சா, அதைச் சரியா செஞ்சா... சக்சஸ்தான். இப்போ மாதம் ஐந்து லட்சம் வரை லாபம் எடுக்கிற நான், அதுக்கு ஓர் உதாரணம்!” - புத்துணர்வு பொங்க பேசி முடித்தார் மோகனலட்சுமி.

மதிப்பெண்ணில் இல்லை வாழ்க்கை... மனதில் தோன்றும் பொறியில்தான் உள்ளது!