Published:Updated:

வெற்றிகரமாக ஸ்டார்ட்அப் நிறுவனம் நடத்துவது எப்படி? - அகிலா

வெற்றிகரமாக ஸ்டார்ட்அப் நிறுவனம் நடத்துவது எப்படி? - அகிலா
பிரீமியம் ஸ்டோரி
News
வெற்றிகரமாக ஸ்டார்ட்அப் நிறுவனம் நடத்துவது எப்படி? - அகிலா

வழிகாட்டிசு.சூர்யா கோமதி, படம் : ப.பிரியங்கா

ன்று நிறைய பெண்கள் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை ஆரம்பிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். சிக்கல்களைச் சந்திக்கும்போதோ சோர்ந்துபோகின்றனர். அவர்களின் பிசினஸ் பாதையைச் சீராக்க, ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சந்திக்கும் அடிப்படை பிரச்னைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகளைப் பட்டியலிடுகிறார், ‘டை சென்னை’ (tie chennai) என்கிற தொழில்முனைவோருக்கான ஆலோசனை வழங்கும் நிறுவனத்தின் செயல் இயக்குநர் அகிலா.

கஸ்டமரின் தேவையை அறிய வேண்டும்!

ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்குத் தங்கள் வாடிக்கை யாளர்கள் யார், அவர்களுக்கான பொருளை எப்படிக் கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் தெளிவு இருக்க வேண்டும். இல்லையெனில் சந்தைப்படுத்துதலில் தேக்க நிலை ஏற்படும். அது நாளடைவில் நஷ்டத்தை ஏற்படுத்தலாம்.

சரியான திட்டமிடல் இன்மைக்கு நோ!

சிலர் ஓர் ஆர்வத்தில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களைத் தொடங்கிவிடுகின்றனர். அதற்கான சரியான திட்டமிடல் இல்லாதபோது, தயாரிப்பு, விலை நிர்ணயம், தரம் பார்த்தல், சந்தைப்படுத்துதல் போன்ற அடுத்தகட்ட செயல்பாடுகளில் தடுமாற்றங்கள் ஏற்படும். தொலைநோக்குடன்கூடிய நேர்த்தியான திட்டமிடல் இருந்தால்தான், தொழிலை வெற்றிகரமாகக் கொண்டுபோக முடியும்.

வெற்றிகரமாக ஸ்டார்ட்அப் நிறுவனம் நடத்துவது எப்படி? - அகிலா

பணத்தட்டுபாடு... சமாளிக்க வழி!

பெரிய நிறுவனங்களில் பணத்தைச் சுழற்சி முறையில் - அதாவது, வரும் லாபத்தை மீண்டும் முதலீடு செய்து, லாபத்தை அதிகரிப்பர். ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வங்கியில் கடன் வாங்கியோ, முதலீட்டாளர்களின் உதவியுடனோ நிறுவனத்தைத் தொடங்கும் சூழலில், அடுத்தடுத்த பணத் தேவை களுக்குத் தட்டுப்பாடு இருக்கும். எனவே, முதலில் சிறிய அளவில் முதலீடு செய்து, வருவாயை அதிகரித்து, அதன் பின்னர் அடுத்தகட்ட வளர்ச்சியைச் செயல்படுத்துவது சிறந்தது.

நிறுவன மேலாண்மையில் சமரசம் கூடாது!

யாருக்கு எந்தப் பொறுப்பு கொடுத்தால் நிறுவனத்தில் ஏற்படும் சிக்கலை எளிதில் தீர்க்க முடியும் என்பதில் தீர்க்கம் வேண்டும். ‘சிறிய முதலீடுதானே... யார் நிர்வகித்தால் என்ன?’ என்ற மனநிலையில் இருந்தால், நிறுவனத்துக்கு அடுத்தகட்ட வளர்ச்சி என்பது இருக்காது.

போட்டியாளர்களைக் கையாள்வதில் கவனம்!

போட்டியாளர்களையும் அவ்வப்போது கண்காணித்து, அவர்கள் செய்யும் புதிய முயற்சிகளுக்கு ஈடுகொடுத்து ரேஸில் நிற்கும் வகையில் தங்கள் நிறுவனத்திலும் அப்டேட்களைப் புகுத்த வேண்டும். அப்போதுதான் தொழிலில் காலூன்றவும் அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி நகரவும் முடியும்.

புதிய முயற்சிகள் வெல்லும்!

தொழிலுக்கு / தயாரிப்புப் பொருளுக்கு மக்களிடம் உள்ள வரவேற்பைப் பொறுத்து, ட்ரெண்டுக்கு ஏற்றாற்போல அதை இன்னும் எவ்வளவு பிடித்தமானதாக  கஸ்டமர்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கலாம் என்பதை யோசித்து, புதிய முயற்சிகள் எடுப்பதன் மூலம் வணிகத்தைப் பெருக்க முடியும்.

நேர மேலாண்மை அவசியம்!

நிறைய நிறுவனங்கள் தாங்கள் செய்ய நினைக்கும் வேலையைச் சிறிது நாள்கள் கழித்துச் செய்துகொள்ளலாம் எனத் தள்ளிவைத்துவிடுவர். இந்த இடைவெளியில் போட்டியாளர்கள் அந்த விஷயத்தைச் செய்து முடித்து விடுவர். இதனால் தொழிலில் பின்னடைவு ஏற்படும். எனவே, ‘அப்புறம் பார்த்துக்கலாம்’ என்பது வெற்றிக்கு எதிரி என்பதை உணர வேண்டும்.

தொழில்நுட்ப அறிவு தேவை!

இன்று வணிகத்தில் இணையம் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. அதிக வாடிக்கையாளர்களையும் இணையம் மூலம் பெற முடியும். எனவே, பிசினஸுக்குத் தேவைப்படும் தொழில்நுட்பத்தைத் தெரிந்துகொண்டே ஆக வேண்டும். ஆன்லைன் மூலம் சந்தைப்படுத்துவது, விற்பனை செய்வது போன்ற அடிப்படைகளையும் கற்றுக்கொள்ள வேண்டும். இதில் தயக்கமோ, சுணக்கமோ ஏற்பட்டால், தொழிலிலும் அது பிரதிபலிக்கும்.

தடை... அதை உடை!

தொழில் நேர்த்தியை முழுமையாகத் தெரிந்து களத்தில் இறங்கும்போது, மூலப்பொருள்கள் வாங்குவது, உற்பத்திப் பொருள்கள் தயாரிப்பு, சரியான ஆட்களை நியமிப்பது, விளம்பரம் மற்றும் விற்பனை போன்றவற்றில் தடைகள் வந்தாலும், அவற்றைச் சமாளிக்கும் திறன் கிடைக்கும். ஒவ்வொரு முறை சிக்கலைச் சந்திக்கும்போதும் தளர்ந்து போகாமல், அது அடுத்தகட்டத்துக்கான நுழைவுத் தேர்வு என்று நினைத்து தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும்.

அடுத்தவர் யோசனை... அளவுடன் இருக்கட்டும்!

ஆரம்பத்தில் பலரிடமும், ‘நஷ்டம் ஏற்பட்டுவிடுமோ’ என்ற தயக்கம் இருக்கும். அதனால் அடுத்தவர்களின் யோசனையைக் கேட்டுச் செயல்பட ஆரம்பிப்பர். ஆலோசனை கேட்கலாம். ஆனால், அதைச் செயல்படுத்த வேண்டுமா, வேண்டாமா என்கிற தெளிவு நமக்கே வேண்டும்.

உங்கள் ஸ்டார்ட்அப் சக்சஸாக வாழ்த்துகள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz