Published:Updated:

கலகலப்பாக பேப்பர் பைகளைத் தயாரிக்கும் மாற்றுத்திறனாளிப் பெண்கள்!

``இந்தப் பெண்கள் இங்கேயே இயற்கைச் சாயம் உருவாக்கும் பணியிலும் இவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்களின் பெற்றோர்கள் தங்களது ஓய்வு நேரங்களில் இவர்களோடு வந்து உதவுகிறார்கள். இதுபோன்ற பயிற்சிகளால், தங்கள் பிள்ளைகளிடம் நல்ல மாற்றங்கள் தெரிவதாக, பெற்றோர்கள் சொல்கிறார்கள்."

கலகலப்பாக பேப்பர் பைகளைத் தயாரிக்கும் மாற்றுத்திறனாளிப் பெண்கள்!
கலகலப்பாக பேப்பர் பைகளைத் தயாரிக்கும் மாற்றுத்திறனாளிப் பெண்கள்!

ரட்டைக் குடில்களுடன் ஒரு தொகுப்பு இடம் அது. ஒரு குடிலில் மட்டும் மொத்தம் மொத்தமாய்ப் பழைய நாளிதழ்கள் குவிந்துகிடக்கின்றன. மனநல வளர்ச்சி சவால் கொண்ட மாற்றுத்திறனாளிப் பெண்கள் 6 பேர் அந்த நாளிதழ்களை மடித்து ஏதோ செய்துகொண்டிருந்தனர். அவர்கள் வழிநடத்தும் பெண் பயிற்சியாளர்கள் இருவரும் உடன் அமர்ந்திருந்தனர். மதுரை பூமிகா சென்டரில் நாம் நுழைந்ததும் பார்க்கக்கூடிய காட்சிகள்தாம் இவை. மனநல வளர்ச்சி சவால் கொண்டவர்களுக்கு அடிப்படைத் தேவை அவர்களை அன்போடு அணுகுவதும், அவர்களின் நேரத்தை ஆக்கபூர்வமாக மாற்றி அமைப்பதுதான். அதை இந்த சென்டரில் நாம் கண்கூடாகப் பார்க்க முடியும். 

மதுரை, கடச்சனேந்தல் பகுதியில் பூமிகா, சென்டரை நடத்திவருகிறார், வழக்கறிஞர் ஜீனா. அவரிடம் பேசினேன். ``சென்ற ஆண்டுதான் இந்த ஹோமைத் தொடங்கினேன். நண்பர்களோடு பேசிக்கொண்டிருக்கும்போது வந்த ஐடியா இது" என்று சொல்லி, அனைவரையும் அறிமுகம் செய்துவைத்தார். ஒவ்வொருவரிடமும் பெயரைக் கேட்டதும், `நானு.. கஸ்தூரி, என்னது.. ப்ரியா ம்ஹூம்.. ஜெயப்ரியா, ஷாலு, நான்தான்.. சரண்யா, பாண்டிமீனா, பேரு.. சௌமியா' என அந்தப் பெண்கள் தங்கள் பெயர்களைத் தாங்களே அழுத்தத்தோடும் அழகோடும் உச்சரித்துப் புன்னகைத்தனர். 

இவர்களின் தினசரி பணி, காலையில் இந்தக் குடிலுக்கு வந்துவிட வேண்டும். இங்கு இருக்கின்ற பழைய பேப்பர்களை எடுத்து பைகள் தயாரிக்க வேண்டும். ஒரு பேப்பரை எடுத்து ஒருவர் மடிக்க, அடுத்தவர் பசை தடவ, இன்னொருவர் துளைகள் போட, மற்றொருவர் கைப்பிடிக்காகக் கயிற்றைக் கோக்க... இப்படித்தான் இங்கே ஒரு பை தயாராகிறது. இவ்வாறு நாள் முழுவதும், விதவிதமான பேப்பர் பைகள் தயாரிக்கும் பணி இவர்களின் கைவண்ணங்களால் வெகுஜோராக நடக்கிறது.

அரை கிலோ கொள்ளளவு கொண்ட மினி சைஸ் கைப்பை தொடங்கி, 2 கிலோ வரை பொருள்கள் கொண்டுசெல்லக்கூடிய பெரிய சைஸ் ஷாப்பிங் பைகள் வரைக்கும் ரகம் ரகமாக இவர்கள் தயார் செய்கிறார்கள். வாடிக்கையாளர்களின் ஆர்டரின்படி, வெவ்வேறு வடிவங்களிலும் செய்துதரப்படுகின்றன. ``மொத்தமா ஒரே நேரத்தில `10 ஆயிரம் பைகள், 20 ஆயிரம் பைகள் வேணும்' '' எனக் கேட்பார்கள். சிலர், `நீங்களா பார்த்து எப்போ எவ்வளவு கொடுத்தாலும் சரி' என்று சொல்லிடுவார்கள். இவற்றில், இரண்டாவது ரகம்தான் இந்த ஹோமுக்கான வணிகம்" என்று சொல்லுகின்றனர் இவர்களுக்குப் பயிற்சி கொடுக்கும் அமுதாவும் லதாவும்! மனநல வளர்ச்சி சவால் கொண்டவர்களைக் கையாள்வதிலும், அவர்களுக்கு முறையான பயிற்சிகள் கொடுப்பதிலும் 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்கள் இருவரும். 

``வெறுமனே பயிற்சியாக மட்டுமே அல்லாமல் ஆட்டம் பாட்டம், உடற்பயிற்சிகள் என்று இடையிடையே புத்துணர்வு பெறுவதற்கும் நாங்க ஏற்பாடு செய்கிறோம். பாட்டுப் போடச்சொல்லி, அவங்கே கேட்பாங்க. உடனே பயிற்சிக்கு சின்ன பிரேக் கொடுத்துவிட்டுப் பாட்டைக் கேட்டு ஆடுவாங்க" என அமுதா சொல்ல, அழகுப் பெண்கள் அத்தனை பேரும் அந்த உல்லாசச் சிரிப்பலை அந்த ஹோமை நிறைத்தது.

மீண்டும் ஜீனாவிடம் பேசியபோது, ``என்னுடைய மகளும் மனவளர்ச்சிக் குறைபாடு உடையவர்தான். இப்போது அவருக்கு 35 வயது. அதனால், இவர்களின் வலியை முழுமையாக நான் அறிவேன். அதுமட்டுமன்றி, இவர்களுக்கு இதைச் செய்வதன்மூலம் எனக்கு மனநிறைவு கிடைக்கிறது; வாழ்வு முழுமை பெறுவதாய் உணர்கிறேன். சுவாரஸ்யமான ஒரு நிகழ்ச்சியைச் சொல்லுகிறேன். ஜெயப்ரியா முதல்முறையாகக் கயிறு கோக்கப் பழகுவதற்குச் சிரமப்பட்டார். பல நாள் பயிற்சிகளுக்குப் பிறகு ஒருநாள், அவராகவே கயிறு கோத்ததும் அவரும் நாங்களும் சொல்ல முடியாத மகிழ்ச்சியில் ஆழ்ந்துபோய் துள்ளத் தொடங்கினோம். இதுபோதுமே!" என்று ஜீனா சொல்ல, அனைவரது கண்களினுள்ளும் தெரிந்தன அந்த ஆனந்தத்தின் சுவடுகள். 

``இந்தப் பெண்கள் இங்கேயே இயற்கைச் சாயம் உருவாக்கும் பணியிலும் இவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்களின் பெற்றோர்கள் தங்களது ஓய்வு நேரங்களில் இவர்களோடு வந்து உதவுகிறார்கள். இதுபோன்ற பயிற்சிகளால், தங்கள் பிள்ளைகளிடம் நல்ல மாற்றங்கள் தெரிவதாக, பெற்றோர்கள் சொல்கிறார்கள்" என்று சொல்லும்போதே ஜீனா முகத்தில் ஒரு பெருமிதம். ஜீனாவின் இந்த முயற்சிக்குக் கைகொடுக்கும் விதமாக நண்பர்கள் இலவசமாக பேப்பர்களைத் திரட்டிக்கொண்டுவந்து தருகின்றனர். 

``இவர்களின் அற்புதப் பணியாலும், அயராத முயற்சியாலும் உருவாகும் இந்த பேப்பர் பைகளை மொத்தமாய் வாங்கிப் பயன்படுத்த வேண்டும்" என மக்களுக்குக் கோரிக்கையை முன் வைக்கிறார் ஜீனா. ஆம்! இவர்களின் வணிகம் அதிகரிப்பதன்மூலம், இவர்களுக்கு ஊக்கம் கிடைக்கும், பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு மாற்றான பொருள்கள் எல்லோருக்கும் சென்று சேரும்.