தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

கிட்ஸ் மனம் கவரும் கிலுகிலுப்பை! - ரமணி

கிட்ஸ் மனம் கவரும் கிலுகிலுப்பை! - ரமணி
பிரீமியம் ஸ்டோரி
News
கிட்ஸ் மனம் கவரும் கிலுகிலுப்பை! - ரமணி

நீங்களும் செய்யலாம்

ங்கள் குழந்தைக்கோ, உங்களுக்கு நெருங்கியவர்களின் குழந்தைகளுக்கோ உங்கள் கைப்பட தைத்த அல்லது எம்ப்ராய்டரிங் செய்த உடைகளைக் கொடுக்கும்போது எப்படியெல்லாம் மகிழ்வீர்கள்? நம் கைப்படத் தயாராகும் எதுவும் அப்படித்தான் அளவிலாத மகிழ்வையும் ஆத்ம திருப்தியையும் தரக்கூடியது. உங்கள் வீட்டின் குட்டிச் செல்லத்துக்கு உங்கள் கைப்பட குட்டியாக ஒரு கிலுகிலுப்பை செய்து தர முடிந்தால்..? அதை ஆட்டும்போதெல்லாம் அந்தப் பிஞ்சு முகத்தில் மலரும் புன்னகைக்கு உலகில் ஈடு இணை இருக்குமா, என்ன?

``உங்கள் குழந்தைகளுக்குச் செய்வதோடு, தெரிந்தவர்கள், அக்கம்பக்கத்து வீட்டினரின் குழந்தைகளுக்கும் செய்து கொடுப்பதன் மூலம் இதையே ஒரு குட்டி பிசினஸாகவும் மாற்றிக்கொள்ளலாம்'' என்கிறார் பாண்டிச்சேரியைச் சேர்ந்த கைவினைக் கலைஞர் ரமணி.

கிட்ஸ் மனம் கவரும் கிலுகிலுப்பை! - ரமணி

``எட்டாவதுதான் படிச்சிருக் கேன். கிராமத்துல பிறந்து வளர்ந்ததால வேலைக்குப் போக வாய்ப்பு கிடைக்கலை. அதே நேரம் வீட்டுக்குள்ளேயே சும்மா பொழுதைப் போக்கவும் விருப்பமில்லை. சின்னச்சின்னதா நிறைய கைவினைக் கலைகள் செய்யக் கத்துக்கிட்டேன். வீட்டுல சும்மா இருக்கிற நேரத்துல வயர் கூடைகள் பின்னுவேன். அதுல நிறைய துண்டு வயர் மீந்துபோகும். அதையெல்லாம் வீணாக்காம சின்னச் சின்ன பொம்மைகள், கைவினைப் பொருள்கள் செய்வேன். எதைச் செய்தாலும் அதில் மத்தவங்க ஏற்கெனவே செய்ததைக் காப்பியடிக்காம, என்னுடைய கிரியேட்டிவிட்டி இருக்கணும்னு கவனமா இருப்பேன். அப்படி நானா டிசைன் பண்ணினதுதான் இந்தக் கிலுகிலுப்பைகள். என் பேத்திக்காக முயற்சி செய்து பார்த்தேன். கடைகளில் வாங்கும் கிலுகிலுப்பை  மட்டமான பிளாஸ்டிக்கில் செய்யப்பட்டதா இருக்கும். முனைகள் கூர்மையா இருக்கும். கீழே விழுந்து உடைஞ்ச துண்டுகளைக் குழந்தைகள் வாய்க்குள்ளே போட்டுக்கிட்டா ஆபத்து. நான் டிசைன் பண்ணும் கிலுகிலுப்பைகளில் இப்படி எந்த ஆபத்தும் இல்லை. அப்பப்போ கழுவி, காயவெச்சுப் பயன்படுத்தலாம்'' என்கிற ரமணி, கிலுகிலுப்பை தயாரிக்கத் தேவையான பொருள்கள், முதலீடு உள்ளிட்ட மற்ற விஷயங்களைப் பகிர்கிறார்.

என்னென்ன தேவை?  எவ்வளவு முதலீடு?

கூடை பின்னும் வயர், சோடா பாட்டில் மூடிகள், சோழிகள், ஒரு ரூபாய் நாணயம்... அவ்வளவுதான்.

ஒரு பண்டில் வயர் 35 முதல் 40 ரூபாய்க்குக் கிடைக்கும். சோழிகள் ஒரு கிலோ 50 ரூபாய்க்குக் கிடைக்கும். பல கடைகளிலும் சோடா பாட்டில் மூடிகளை இலவசமாகவே கொடுப்பார்கள். 200 ரூபாய் முதலீடு போதுமானது.

கிட்ஸ் மனம் கவரும் கிலுகிலுப்பை! - ரமணி

ஒரு நாளைக்கு எத்தனை செய்யலாம்? விற்பனை வாய்ப்பு எப்படி?

ஒரு பண்டிலில், அளவைப் பொறுத்து, மூன்று முதல் ஐந்து கிலுகிலுப்பைகள் செய்யலாம்.  கூடை போடுபவர்கள், அதில் மீதமாகும் துண்டு வயர்களை அளவெடுத்து வெட்டியும் செய்யலாம். பிளாஸ்டிக் கவர்கள் தடை செய்யப்பட்டுவிட்டதால், கூடைகளுக்கான மவுசு அதிகரித் திருக்கிறது. வயர் வாங்கி, கூடைகள் பின்னி விற்கலாம். கூடவே பகுதிநேரமாக கிலுகிலுப்பைகளும் செய்யலாம். ஒருநாளைக்கு 10 கிலுகிலுப்பைகள் செய்ய முடியும்.

ஆன்லைன் கடைகளில் 75 ரூபாய்க்கு விற்கிறார்கள். நாம் அதைவிடக் குறைவாக 60 அல்லது 65 ரூபாய்க்கு விற்கலாம்.

நேரமின்மை, பொறுமையின்மை போன்ற காரணங்களைச் சொல்பவர்கள், கிலுகிலுப்பை செய்யத் தெரிந்தவர்களிடம் மூலப்பொருள்களை வாங்கித் தந்து, ஒரு கிலுகிலுப்பைக்கு 20 ரூபாய் கமிஷன் அடிப்படையில் செய்து வாங்கினாலும் லாபம்தான். செய்து கொடுப்பவர்கள் ஒரு நாளைக்கு 200 ரூபாய் சம்பாதிக்க முடியும்.

கிட்ஸ் மனம் கவரும் கிலுகிலுப்பை! - ரமணி

குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருள்கள் விற்பனை செய்கிற கடைகளில் ஆர்டர் பிடிக்கலாம். பிறந்த நாள் பார்ட்டிகளை நடத்திக்கொடுப்பவர்களிடம் பேசிவைத்துக் கொண்டால், அவர்கள் நடத்தும் அத்தனை பார்ட்டிகளிலும் ரிட்டர்ன் கிஃப்ட்டாகக் கொடுக்கலாம். வீட்டுக்கு அருகிலுள்ள ஃபேன்ஸி ஸ்டோர்களிலும் ஆர்டர் பிடிக்கலாம். பாதிக்குப் பாதி லாபம் தரும் பிசினஸ் இது.

பின்னல் பழகிவிட்டால், இதை ஒரு வேலையாக உட்கார்ந்து செய்ய வேண்டிய அவசியமிருக்காது. டி.வி பார்த்துக்கொண்டே, குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித் தந்தபடியே, பயணங்களின்போது... இப்படி வேறு வேலைகளுடன் சேர்த்துச் செய்யலாம். அலுப்பே தெரியாது.

பயிற்சி?

ஒரே நாள் பயிற்சியில் நான்கு மாடல்கள் கற்றுக்கொள்ள மூலப்பொருள்களுடன் சேர்த்துக் கட்டணம் 500 ரூபாய்.

-சாஹா , படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்