Published:Updated:

படித்தது ஆசிரியை ஆக... செய்வது மரச் செக்கு எண்ணெய் வியாபாரம்! புவனேஸ்வரியின் கதை

படித்தது ஆசிரியை ஆக... செய்வது மரச் செக்கு எண்ணெய் வியாபாரம்! புவனேஸ்வரியின் கதை
படித்தது ஆசிரியை ஆக... செய்வது மரச் செக்கு எண்ணெய் வியாபாரம்! புவனேஸ்வரியின் கதை

டல் பருமன், ரத்தக்கொதிப்பு, செரிமானமின்மை, நெஞ்செரிச்சல், மாரடைப்பு போன்ற பாதிப்புகளுக்கு நாம் சமையலில் பயன்படுத்தும் சுத்திகரிக்கப்பட்ட பாக்கெட் எண்ணெய்யும் ஒரு காரணம் என்று மருத்துவர்கள் மற்றும் உணவியல் நிபுணர்கள் சொல்லிவருகிறார்கள். அப்படி நாம் பயன்படுத்தும் பாக்கெட் எண்ணெய்க்கு மாற்றாக, இயற்கை முறையில் தயாராகும் மரச்செக்கில் ஆட்டப்பட்ட எண்ணெய்யைத்தான் அவர்கள் பரிந்துரைக்கிறார்கள். அதனால், சமீபகாலமாக மரச்செக்கு எண்ணெய் குறித்த விழிப்புணர்வும், அதன் பயன்பாடும் அதிகரித்துவருகின்றன. இதனால் முடங்கிக் கிடந்த மரச்செக்குகள் தற்போது உயிர்ப்பிக்கப்பட்டு வருகின்றன. இயற்கை ஆர்வலர்கள் பலரும் மரச்செக்கு அமைத்து எண்ணெய் ஆட்டி, விற்பனை செய்து வருகிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் திருச்சியைச் சேர்ந்த புவனேஸ்வரி.

திருச்சி, காஜாமலை பகுதியில் உள்ளது புவனேஸ்வரியின் `நலம்' எண்ணெய் உற்பத்தியகம். சொந்தமாக, மரச்செக்கு வைத்து தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், இலுப்பை எண்ணெய், பற்பொடி, சோப்பு, தயாரித்து விற்பனை செய்து வருகிறார். நாம் நேரில் சென்று, அவரைச் சந்தித்தோம். 

``என்னோட சொந்த ஊரு மதுரை. டீச்சர் டிரெயினிங் படிச்சிருக்கேன். ஆசிரியராகணும் என ஆசை இருந்தாலும், என் கணவரோட வேலை காரணமா மதுரையிலிருந்து திருச்சிக்கு வந்துட்டோம். அவருக்கு சமைக்கிறப்ப எல்லாம்... நாம சமையலுக்குப் பயன்படுத்தற எண்ணெய் தரமானதானு தோணிட்டே இருந்தது. அந்தச் சமயத்தில்தான் நானும் என் கணவரும், நம்ம குடும்பத்தோட தேவைக்காக இயற்கை முறையில் கிடைக்கிற எண்ணெயைப் பயன்படுத்தலாம் என்ற முடிவுக்கு வந்தோம். 

மரச்செக்கு எண்ணெய், நாட்டு மாட்டுப்பால் போன்ற இயற்கை உணவுகளுக்கு எங்க மொத்தக் குடும்பமுமே மாறினோம். அப்புறம் திருச்சிக்குப் பக்கத்துல இருக்கிற ஆவூர்ல எங்களுக்குத் தெரிஞ்சவங்கக்கிட்ட பொருளைக் கொடுத்து எண்ணெய் ஆட்டி விற்பனை செய்தோம். எங்களுக்கென 150-க்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு வந்துட்டதால, நாங்களே தனியாக மரச்செக்கு ஆலை ஆரம்பிச்சோம்.

நாங்க எண்ணெய் தயாரிக்கிறதுக்குத் தேவையான எல்லாப் பொருள்களையும் புதுக்கோட்டை இயற்கை வேளாண்மை உற்பத்தியாளர்கள் சங்கத்தில்தான் வாங்குறோம். ஆரம்பத்தில் நிறைய பேரு, இதுதான் ஒரிஜினல்னு சொல்லி எங்ககிட்ட ஏமாத்தி வித்துருக்காங்க. இப்போ கொஞ்சம் அனுபவம் அதிகமானதால, எது ஒரிஜினல், எது போலினு எங்களால சரியாக் கண்டுபிடிக்க முடியும். 

மிஷின் செக்கில் எண்ணெய் ஆட்டும்போது, இரும்பு உலக்கை ரொம்ப வேகமா எண்ணெய்யைப் பிழியும். அதனால ஏற்படுகிற வெப்பம் பிழிகிற எண்ணெய்யின் தன்மையையே மாற்றி விடும். மிகவும் மெதுவாகச் சுற்றும் வாகை மர உலக்கை உள்ள செக்கில் எண்ணெய் பிழியும் போதுதான் உயிரோட்டமுள்ள எண்ணெய் கிடைக்கும். ஏன்னா, இப்படிச் செய்யும் போது வெப்பம் ஏற்படாது. விதைக்குள்ளிருக்கும் எண்ணெயின் தன்மையும் அப்படியே கிடைக்கும். அப்படி, மரச்செக்கு மெதுவா சுத்துறதால 4 லிட்டர் எண்ணெய் எடுக்க குறைந்தது இரண்டு மணி நேரமாவது ஆகும்." என்று சொல்லும் புவனேஸ்வரியிடம், `வெளியூருக்கு எண்ணெய் அனுப்புகிறீர்களா?' என்று கேட்டோம்.

``நாங்கள் பிளாஸ்டிக் பாட்டில்களைப் பயன்படுத்துவதே கிடையாது. ஆனா, வெளியூர்ல இருக்கிறவங்க அனுப்பி வைக்கும்போது மட்டும் வேறுவழி இல்லாமல் பிளாஸ்டிக் பாட்டில்கள்ல எண்ணெய்யை அனுப்பி வைப்போம். பொதுவாக, நாம் அனுப்பும் பொருள் ஒரு நாளிலேயே கிடைத்து விடும். அவர்கள் கையில் எண்ணெய் கிடைத்த உடனேயே அதைப் பாத்திரத்தில் மாற்றிவிடவேண்டும் என்பதைத் தவறாமல் சொல்லி அறிவுறுத்துகிறோம்.

15, 20 நாள்களுக்கு மேல் பிளாஸ்டிக் பாட்டிலில் எண்ணெய் இருந்தால் அதைச் சில்வர் பாத்திரத்தில் ஊற்றி வெயிலில் காயவைத்தால் அதன் சுவை மாறாமலும், தீமை இல்லாமலும் இருக்கும். பொதுவாக, முன்னாடி எல்லாம் எங்க கடைக்கு வரவங்க, பாட்டில்ல வாங்கிட்டு போவாங்க. அதை மாற்றணும் என்பதால, பாத்திரம் எடுத்து வந்தா, 5 ரூபா கம்மின்னு ஒரு சலுகை கொடுத்தோம். அதிலேருந்து நிறைய பேர் பாத்திரம் எடுத்துவர ஆரம்பிச்சிட்டாங்க. 

எங்க குடும்பத்தில் இருக்கிற எல்லாரும் இப்போ முழுக்க முழுக்க இயற்கை முறையில் தயாரிக்கப்படும் பொருள்களைத்தான் பயன்படுத்திட்டு இருக்கோம். எண்ணெய் மட்டுமல்லாமல் திணை, எள்ளு, கடலை, கம்பு லட்டுன்னு பல பொருள்களைத் தயாரிக்கிறோம். ஒரிஜினலான நாட்டுச் சர்க்கரை, பனை வெல்லம், குளியல் பொடி, சோப்பு என எல்லாமே இயற்கையான பழைமை மாறாத ரெசிபியில நாங்களே அரைச்சு செய்றோம். இயற்கை உணவுமுறைகளின் மீது ஆர்வம் உள்ள பெண்களுக்கு மாதா மாதம் கடைசி சனிக்கிழமை எண்ணெய் தயாரிக்கிறது பத்தி இலவசமாகக் கத்தும் தரேன். இன்னும் பலருக்குச் கத்துத் தரவும் தயாராக இருக்கிறேன். இந்தத் தொழில்ல குறைஞ்ச லாபம் கிடைத்தாலும் மனசு சந்தோஷத்துக்குப் பஞ்சமில்லை" என்று பூரிக்கிறார் புவனேஸ்வரி.