Published:Updated:

மதிப்பெண் தாண்டிய வாழ்க்கை! -சென்னைப் பெண் ராஜலட்சுமியின் புதிய பிசினஸ் முயற்சி

``படிப்பிலும் பிசினஸிலும் ஒரே நேரத்தில் கவனம் செலுத்துவது கொஞ்சம் சிரமம்தான். ஆனால், ரெண்டையும் ரசித்து செய்வதால் கஷ்டம் தெரியலை.

மதிப்பெண் தாண்டிய வாழ்க்கை! -சென்னைப் பெண் ராஜலட்சுமியின் புதிய பிசினஸ் முயற்சி
மதிப்பெண் தாண்டிய வாழ்க்கை! -சென்னைப் பெண் ராஜலட்சுமியின் புதிய பிசினஸ் முயற்சி

ஸ்கூலில் சொல்லிக்கொடுக்கிற பாடம் மட்டுமே நம்முடைய எதிர்காலத்தைத் தீர்மானிக்காது. புத்தகத்தைத் தாண்டியும் நமக்குள் இருக்கும் திறமையை வெளிப்படுத்தி வாழ்க்கையில் ஜெயிக்கணும்’’ என்று தொலைநோக்குப் பார்வையுடன் பேசுகிறார் ராஜலட்சுமி. 17 வயதாகும் இவர், `கல்ச்சர் நெட்வொர்க்’ என்ற நிறுவனத்தைத் தொடங்கி, அதன் சி.இ.ஓ-வாகச் செயல்பட்டு வருகிறார். சிறப்பான செயல்பாடுகள் மூலம் C.I.M.S.E (Chamber of Indian Micro small and medium enterprises) வழங்கிய இளம்தொழில் முனைவோருக்கான விருதைப் பெற்றுள்ளார். ``படிப்பிலும் பிசினஸிலும் ஒரே நேரத்தில் கவனம் செலுத்துவது கொஞ்சம் சிரமம்தான். ஆனால், ரெண்டையும் ரசித்து செய்வதால் கஷ்டம் தெரியலை’’ என்று சொல்லும் ராஜலட்சுமி தன்னுடைய பிசினஸ் பற்றிய தகவல்களைப் பகிர்கிறார்.

``சில நிறுவனங்கள் பெரிய அளவில் பிசினஸ் பண்ணிட்டு இருப்பார்கள், ஆனால், அவர்களுக்குத் தங்களுடைய பிசினஸ்ஸை மற்றவர்களுக்குப் புரிய வைப்பதிலும் விளம்பரப்படுத்துவதிலும் நிறைய தடுமாற்றங்கள் இருக்கும். அதற்கான தீர்வுதான் என்னுடைய பிசினஸ். என்னைத் தேடி வரும் நிறுவனங்களுக்கு, அவர்களைச் சரியான முறையில் விளம்பரப்படுத்திக்கொள்ளத் தேவையான தகவல்களை உருவாக்கித் தருகிறேன். உண்மையில், இந்தப் பிசினஸுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு இருக்கிறது. நமது நாட்டில் குறிப்பாக, தமிழ்நாட்டில் இதன் முக்கியத்துவத்தை மக்கள் உணர ஆரம்பித்திருக்கிறார்கள். ஒரு நிறுவனத்தைப் பற்றிச் சொன்னதும், விளம்பர ஏஜென்சியான்னுதான் முதலில் கேட்பார்கள். விளம்பர ஏஜென்சிகள் தங்களுடைய கஸ்டமர்கள் சொல்வதற்கு ஏற்ப,  டிஜிட்டல் பேனர்களாகவோ, கட் அவுட்களாகவோ உருவாக்கித் தருவார்கள். ஆனால், நாங்கள் எங்களுடைய கஸ்டமர்களின் பிசினஸ், அவர்களின் வாடிக்கையாளர்கள், டிரெண்ட் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து எந்த மாதிரியான ஊடகத்துக்கு என்ன மாதிரியான தகவல் கொடுத்தால், அவர்களின் பிசினஸுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பதைக் கண்டறிகிறோம். பிறகு, அதற்கேற்ற மொழியில் தகவல்களை உருவாக்கிக் கொடுப்போம்’’ என்றவர் பிசினஸ் தொடங்கும் ஆர்வம் ஏற்பட்டதைப் பற்றிப் பகிர்கிறார்.

``எனக்குச் சின்ன வயதிலிருந்தே எழுத்து மீது அதிக ஆர்வம். தமிழ் மற்றும் ஆங்கிலம் என ரெண்டு மொழியிலுமே கவிதை, கட்டுரைகள் எழுதுவேன். நிறைய பரிசுகளும் வாங்கியிருக்கிறேன். என் தோழி ஒருத்தி, பள்ளியில் படித்துக்கொண்டே பார்ட் டைமாக பிசினஸ் பண்ணிக்கொண்டிருந்தாள். அப்போது, அவளின் பிசினஸ் பற்றி மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லும் வகையில், அதே நேரம் எளிமையான மொழிநடையில் தகவல்கள் கேட்டாள். நானும் எழுதிக்கொடுத்தேன். என்னுடைய கருத்து உருவாக்கத்துக்குச் சமூக வலைதளங்களில் நிறைய பாராட்டுகள் கிடைத்தன. அப்போதுதான் வெளிநாடுகளில் இதுபோன்று கருத்து உருவாக்கம் செய்துதரும் பிசினஸ் இருப்பது தெரிய வந்தது. பலநாள் தேடுதலுக்குப் பின், நாமும் இதைப் பிசினஸாகச் செய்யலாம் என்று மனதில் ஒரு நம்பிக்கை தோன்றியது. அம்மா- அப்பாவிடம் சொன்னேன். `படிப்பைப் பாதிக்காமல் எதை வேண்டுமானாலும் பண்ணிக்கோ’ என்று க்ரீன் சிக்னல் கொடுத்துவிட்டார்கள். . அதன் பின், `கல்ச்சர் நெட்வொர்க்’ என்ற ஆன்லைன் பிசினஸைத் தொடங்கினேன்.பிசினஸிலுள்ள நுணுக்கங்கள், பொருத்தமான வார்த்தைகளைப் பயன்படுத்துதல் என ஆரம்பத்தில் நிறையவே சிரமப்பட்டேன். மற்றவர்களின் பிசினஸ் பற்றி சரியான புரிதல் இருந்தால் மட்டுமே சரியான தகவலை உருவாக்க முடியும் என்பதால், அனைத்து வகையான பிசினஸ் பற்றி நிறைய படித்தேன். `இந்த வயதில் இதெல்லாம் தேவையா’ என்றுகூட நிறைய பேர் கிண்டல் செய்தார்கள்.

என்னைப் பொறுத்தவரை பிசினஸ் செய்ய வயது முக்கியம் இல்லை, பயிற்சி இருந்தால் போதும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். பிஸினஸையும் படிப்பையும் சரியான திட்டமிடலுடன் இருக்கிறேன். தினமும் ஸ்கூல் முடித்து வந்ததும் ஹோம் வொர்க்கை முடித்த பின், பிசினஸ் பற்றி ஆன் லைனில் நிறைய படித்தேன். எந்த முதலீடும் இல்லாமல் என்னுடைய கற்பனைத்திறனையும் நம்பிக்கையையும் அடிப்படையாகக்கொண்டு தொடங்கிய பிசினஸ் இன்று, எனக்கான அடையாளமாக மாறிவிட்டது. சில நேரங்களில் தமிழ், ஆங்கிலம் தவிர்த்து பிற மொழியிலும் கருத்துருவாக்கம் செய்ய வேண்டிய சூழல் வருவதால், இந்தி, மலையாளம், தெலுங்கு என மற்ற மொழிகள் பேசத் தெரிந்த என் ஃப்ரெண்ட்ஸ் நான்கு பேரை என் பிசினஸில் சேர்த்துக்கொண்டேன். நாங்கள் எழுதும் ஊடகம் மற்றும் விளம்பரப் படுத்தும் முறையை அடிப்படையாக வைத்து கட்டணம் வசூலிக்கிறோம். ப்ளஸ் டூ முடித்த பின், இதே பிசினஸ்ஸை தேசிய அளவில் செயல்படுத்தும் திட்டம் உள்ளது. என்னுடைய ஆர்வத்தைப் புரிந்துகொண்ட என் அம்மா, அப்பாவுக்குதான் தேங்க்ஸ் சொல்ல வேண்டும். எல்லாக் குழந்தைகளுக்கும் ஒரு திறமை ஒளிந்து இருக்கும். அதைச் சரியான வயதில் அடையாளப்படுத்தினால் போதும் லட்சக்கணக்கில் பீஸ் கட்டி, மார்க் பின்னாடி ஓடத்தேவையில்லை. படிப்பைத் தாண்டிய எதிர்காலம் நிச்சயம் இருக்கிறது’’ எனத் தம்ஸ் அப் காட்டுகிறார் ராஜலட்சுமி.