Published:Updated:

23 வயது... மாதம் ஆறுலட்சம் வருமானம் - ஆன்லைன் பிசினஸில் கலக்கும் ஐஸ்வர்யா!

ஒவ்வோர் ஊரிலும் எது விலை மலிவாகக் கிடைக்கும். எங்கு எது பெஸ்ட்டுனு லிஸ்ட் எடுத்தேன். அதன் பின் புடவைக்கான பிசினஸ்ஸை ஆரம்பித்தேன்.

23 வயது... மாதம் ஆறுலட்சம் வருமானம் - ஆன்லைன் பிசினஸில் கலக்கும் ஐஸ்வர்யா!
23 வயது... மாதம் ஆறுலட்சம் வருமானம் - ஆன்லைன் பிசினஸில் கலக்கும் ஐஸ்வர்யா!

``படிப்பு மட்டுமே வாழ்க்கை கிடையாது. நம்மோட ஆசை, லட்சியம் எதுங்கிறதை நமக்குள்ள தேடிக் கண்டுபிடிச்சுட்டா நாம்தான் வெற்றியாளர் " எனத் தன்னம்பிக்கையுடன் பேசுகிறார் சென்னையைச் சேர்ந்த ஐஸ்வர்யா. பெண்களுக்கான ஃபேஷன் நகைகள், புடவைகளை விற்பனை செய்வதை தன்னுடைய பிசினஸாகக் கொண்ட இவருடைய மாத வருமானம் ஆறு லட்சம். 23 வயதாகும் ஐஸ்வர்யா பிசினஸ் தொடங்கியது பற்றியும் அதில் உள்ள சவால்கள் பற்றியும், வெற்றிக்கான போராட்டங்கள் பற்றியும் பகிர்கிறார்.

``வாழ்க்கையை அனுபவித்து வாழணும். எதையும் ஈசியா எடுத்துகிடணும்... இதுதான் என் வாழ்க்கையோட பாலிசி. ஸ்கூல்ல மார்க்குகாக அதிக ஸ்டிரெஸ் எடுத்துக்க மாட்டேன்.  ப்ளஸ் டூ முடித்ததும் ஆர்ட்ஸ் குரூப்தான் படிப்பேன்னு வீட்டில் தெளிவா சொல்லிட்டேன். என்னுடைய முடிவுக்கு முக்கியத்துவம் கொடுத்து அம்மா, அப்பா என்னுடைய இஷ்டத்துக்கு விட்டுட்டாங்க. ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியில் பி.காம் சேர்ந்தேன். படிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கிற மாதிரி எக்ஸ்டாரா கரிகுலர் ஆக்டிவிட்டிஸ்க்கும் முக்கியத்துவம் கொடுத்தேன். கல்லூரியில் மூன்றாமாண்டு படிக்கும் போது பிசினஸ் தொடங்குறது பற்றிய ஒரு ஒர்க் ஷாப் நடந்துச்சு. அதில் நான் கலந்துக்கிடேன். அதுதான் என்னுடைய வாழ்க்கையோட திருப்புமுனைனுகூடச் சொல்லலாம். அந்த ஒர்க் ஷாப் முடிச்சுட்டு வந்ததிலிருந்து என்னுடைய எண்ணம் முழுவதும் சொந்த பிசினஸ் தொடங்குவதில்தான் இருந்துச்சு.

முதன் முதலாக நூறு ரூபாய் முதலீட்டில் காலேஜ் கேம்ப்ஸ்ல `ஜூஸ் ஷாப்' ஸ்டால் போட்டேன். என் ஃப்ரெண்டோட அக்கா திருமணத்தில் ஸ்நாக்ஸ் ஸ்டால் போடுற பிளான் பண்ணியிருந்தாங்க. அவ கிட்ட கேட்டு என்னோட ஜூஸ் ஷாப்பை அங்க ஸ்டால் போட அனுமதி வாங்கினேன். பழத்தேர்வு, அடுத்தடுத்து ஜுஸ் போடுறது, வெவ்வேறு வகையான ஜூஸ் தயார் செய்றதுனு நிறைய சிரமப்பட்டேன். அவ்வளவு கஷ்டமும் லாபத்தை எண்ணும் போது மறந்து போச்சு. எங்க குடும்பத்திலேயே நான்தான் முதல் பிசினஸ் வுமன். எல்லோரும் எதுக்கு இந்த வேண்டாத வேலைனு ஆரம்பத்தில் சொன்னாலும் அம்மா, அப்பா எனக்குத் துணையாக இருந்தாங்க. அடுத்தடுத்து சில ஃப்ரெண்ட்ஸ் வீட்டு ஃபங்ஷனில் ஜூஸ், ஸ்நாக்ஸ் ஸ்டால்கள் போட்டேன். வெட்டிங் ஆர்டர் நிறைய வந்தது. கொஞ்சம் கிராண்டான கல்யாணத்தில் ஆர்டர் எடுத்தா ஜூஸ், ஸ்நாக்ஸ் ஸ்டால்ல வெரைட்டி காட்ட முடியும். அப்படியே கவனம் டிரஸ் மேல திரும்புச்சு. டிரஸ், ஃபேஷன் ஜுவல்ஸ் பத்தி தெரிஞ்சுக்க ஆறு மாசம் வெளி மாநிலங்களுக்கு டிராவல் பண்ணினேன்.

ஒவ்வொரு ஊரிலும் எது விலை மலிவாகக் கிடைக்கும், எங்கு எது பெஸ்ட்டுனு லிஸ்ட் எடுத்தேன். அதன் பின் புடவைக்கான பிசினஸை ஆரம்பித்தேன். வெவ்வேறு மாநிலங்களிலிருந்து யூனிக்கான புடவைகளை வாங்கி வந்து ``ஷாப்லைன் இந்தியா" என்ற என்னுடைய ஆன்லைன் பிசினஸை ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் விலை நிர்ணயம், குறிப்பிட்ட நேரத்தில் டெலிவரி செய்வது, டிரஸ்களின் டேமேஜ்னு நிறைய சவால்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. அதன் பின் நேரடியாகத் துணி நெய்பவர்களிடமிருந்தே துணிகளை கொள்முதல் செய்தேன். டஸர் சில்க, கோட்டா காட்டன், மைசூர் காட்டன், பனராஸி சில்க் என்பது போன்று முப்பது வகையான தனித்துவமான புடவைகளை விற்பனை செய்தேன். கல்லூரி, அப்பார்ட்மென்ட்கள்னு நிறைய இடங்களில் ஸ்டால்கள் அமைக்க ஆரம்பிச்சேன். சேலைக்கு மேட்சா பிளவுஸ் எங்க கிடைக்கும்னு என்கிட்ட கேட்க ஆரம்பிச்சாங்க,. அவங்களுக்காக நகை தயாரிப்பாளர்களிடமிருந்து நேரடிக் கொள்முதல் செய்ய ஆரம்பிச்சேன். குறைஞ்ச விலையில நான் நகை விக்கிறதுனால நிறைய பிசினஸ் ஆச்சு. இப்ப என்னோட கஸ்டமர் செலிபிரெட்டிகள், நடனக் கலைஞர்கள்தான். நூறு ரூபாயில் தொடங்கிய என்னுடைய பிசினஸின் தற்போதைய மாத  வருமானம் ஆறு லட்சம். அடுத்தடுத்த வளர்ச்சியை நோக்கி நிச்சயம் என்னுடைய பிசினஸ் பயணம் தொடரும் "என்று தம்ஸ் அப் செய்கிறார் ஐஸ்வர்யா.