தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

குறைந்த முதலீடு... நிறைவான வருமானம்... பிசினஸில் சாதிக்க அட்டகாசமான 25 தொழில்கள்

பிசினஸில் சாதிக்க அட்டகாசமான 25 தொழில்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
பிசினஸில் சாதிக்க அட்டகாசமான 25 தொழில்கள்

நம் சுற்றுவட்டாரத்தில் தினந்தோறும் பலவிதமான நிகழ்வுகள் நடக்கும் நிலையில், ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான விருந்தினர்களுக்கு உணவு சமைக்க, பாத்திரங்களுக்கான தேவை முக்கியத்துவம் பெறுகிறது

பெண்களின் சம்பாத்தியம்... அவர்களின் குடும்பப் பொருளாதாரத்தை மட்டுமன்றி, ஒரு நாட்டின் வளர்ச்சி யையும் தீர்மானிக்கும் சக்தியாகத் திகழ்கிறது. அதற்கு, இந்தியாவின் பொருளாதாரம் சிறந்த எடுத்துக்காட்டு. உலக அளவில் வளரும் நாடுகளில் இந்தியா முன்னிலையில் இருக்க, கணிசமான பெண்கள் வேலைக்குச் செல்வதும் முக்கிய காரணம். ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் சம்பாதிப்பதால் என்ன பலன்?

குடும்பத்தில் பணம் அதிகம் சேர்வதுடன், அந்தக் குடும்பத்தின் வாங்கும் திறனும் அதிகரிக்கும். இதனால் வரவு, செலவு இரண்டும் சுழற்சி முறையில் நடைபெறுவதால், புதுப்புது தேவைகள் உருவாகி, பல்வேறு தொழில் வாய்ப்புகளுடன், பலருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும். அப்படி யானால், ஆண்களும் பெண்களும் அதிக அளவில் வேலைக்குச் சென்றால் மட்டுமே போதுமா?

 ராமசாமி தேசாய்
ராமசாமி தேசாய்

மக்கள் தொகைப் பெருக்கம், வேலையில்லா திண்டாட்டம், உழைப்புக்கு ஏற்ப ஊதியம் கிடைக்காதது, தேவைக்கும் உற்பத்திக்கும் இடையேயான இடைவெளி அதிகரிப்பு, பணியிடப் பிரச்னை போன்ற பல விஷயங்கள் பலருக் கும் சரியான வேலை அமையாமல்போக காரணங்களாகின்றன. ஒருவர் வேலைக்குச் செல்வதைவிட, சுயதொழில் செய்வதால்தான் நாட்டுக்கும் வீட்டுக்கும் கூடுதல் பலன்கள் கிடைக்கும். எப்படி என்கிறீர்களா?

புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்; பணப்புழக்கம் அதிகரிக்கும்; உள்நாட்டு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகள் உயரும்; அந்நியச்செலாவணி பெருகும்; பிறரைச் சார்ந்திருக்காமல் சுயமாக முடிவெடுக்கலாம்; தனிநபர் வருமானம் உயரும்; அரசுக்கு வரி வருவாய் கூடும். சுயதொழில்தான் ஒரு நாட்டின் வளர்ச்சியுடன், தனி நபரின் வளர்ச்சியையும் தீர்மானிக்கும். எனவே தான், புதிய தொழில்முனைவோர்களை உருவாக்க, மத்திய மற்றும் மாநில அரசுகள் கடனுதவி சலுகைகளை அதிகமாக வழங்கி ஊக்கப்படுத்துகின்றன. அப்படியென்றால் எல்லோரும் தொழில்முனைவோராக ஆகிவிட முடியுமா?

குறைந்த முதலீடு... நிறைவான வருமானம்... பிசினஸில் சாதிக்க அட்டகாசமான 25 தொழில்கள்

‘தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும்’ என்ற பாடல் வரியைப் போல, இலக்கை நோக்கிய தேடல், அதைச் செயல்படுத்துவதற்கான ஆற்றல், சரியான திட்டமிடல், வளர்ச்சிக்கான வாய்ப்புள்ள தொழில்களைத் தேர்வுசெய்வது... இவையெல்லாம் சரியான நேர்க்கோட்டில் பயணித்தால், நீங்களும் தொழில் முனைவோராக வீறுநடை போடலாம். அதற்கான தொடக்கப்புள்ளியாக வழிகாட்டுகிறது, இந்த இணைப்பிதழ்.

படித்தவர்கள், படிக்காதவர்கள், இல்லத்தரசிகள், வெளி வேலைக்குச் செல்ல முடியாதவர்கள் உட்பட அனைத்துத் தரப்பினருக்கும் கைகொடுக்கும், குறைந்த முதலீட்டில் தொடங்குவதற்கான காலத்துக்கு ஏற்ற புதிய தொழில் வாய்ப்புகள் குறித்து வழிகாட்டுகிறார், திருச்சியைச் சேர்ந்த ‘சி.ஆர்.பிசினஸ் சொல்யூஷன்’ நிறுவனத்தின் நிர்வாகியும், தொழில் ஆலோசகருமான ராமசாமி தேசாய்.

உங்கள் வளர்ச்சிக்கான ஏணிப்படியில் பயணிக்கலாம், வாருங்கள்...

குறைந்த முதலீடு... நிறைவான வருமானம்... பிசினஸில் சாதிக்க அட்டகாசமான 25 தொழில்கள்

டிக்கெட் புக்கிங் சேவை

‘ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்வது’ – இணையம் பிரபலமாகாத 2000-ம் ஆண்டில், இந்தப் புதிய ஐடியாவுடன் தொடங்கப்பட்ட ‘மேக் மை ட்ரிப்’ நிறுவனம், டிக்கெட் முன்பதிவு மற்றும் பயண ஏற்பாடு செய்துகொடுக்கும் துறை களில் நாட்டுக்கே ரோல் மாடலாகத் திகழ்கிறது. இந்த நிறுவனம் கையிலெடுத்த கான்செப்ட்டை பின்தொடர்ந்து, சிறியதும் பெரியதுமாக இந்தியாவில் ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் பெருகிவிட்டன.

தமிழகத்தில் 50 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் நகரங் களில் வசிப்பதால், படிப்பு, வேலை, சுற்றுலா என அடிக்கடி வெளியூர் பயணங்களுக்குச் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இவர்களில் படித்த மற்றும் படிக்காதவர்கள் பலருக்கும் விமானம், ரயில், பேருந்துப் பயணங்களுக்கான டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான தேவைகள் இருக்கின்றன. எனவே, இந்தத் துறையில் ஆர்வம் உள்ளவர்கள் அல்லது இதுகுறித்துக் கற்றுக்கொள்ளும் ஆர்வம் உள்ளவர்கள், டிக்கெட் முன்பதிவு செய்து கொடுப்பதைத் தொழிலாகவும் செய்யலாம்.

பயண ஏற்பாடுகளுடன், கோயில்களில் கட்டண தரிசனத்துக் கான டிக்கெட், சினிமா டிக்கெட், உள்ளூர் மற்றும் வெளியூர் ஹோட்டல்களில் தங்குவதற்கான டிக்கெட் புக்கிங், வெளியூர் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலா குறித்து வழிகாட்டுவது போன்ற ஏற்பாடுகளை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ செய்துகொடுக்கலாம்.

படித்தவர்கள், வீட்டிலிருந்தே இந்தத் தொழிலை ஆரம்பிக்க லாம். தனி இணையதளம், ஆப் மூலமாக வாடிக்கையாளர்களை எளிதாக ஈர்க்கலாம்.

இதெல்லாம் அவசியம்: இணைய வசதியுடன் ஒரு கம்ப்யூட்டர், பிரின்டர், ஸ்கேனர் போதும். சுற்றுலாத்துறை சார்ந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து கவனித்துக்கொண்டே இருக்க வேண்டும்.

முதலீடு: 50,000 ரூபாய் முதலீட்டிலேயே ஆரம்பிக்க முடியும்.

குறைந்த முதலீடு... நிறைவான வருமானம்... பிசினஸில் சாதிக்க அட்டகாசமான 25 தொழில்கள்

கேட்டரிங் தொழில்

தொழில்நுட்பத்தின் பிடியில் உலகம் எப்படித்தான் உருமாறி னாலும், உலக மக்கள் அனைவரின் முதல் தேவையாக உணவுதான் எப்போதும் முதலிடம் பிடிக்கும்.

வீட்டு உணவைப் போன்ற ருசி, தரம், கட்டுப்படியான விலை... வாடிக்கையாளர்களின் இந்தப் பிரதான எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்தால், நம் தொழிலுக்கு விளம்பரமே தேவைப்படாது. தினசரி உணவு விற்பனையுடன், மாலை நேரங்களில் சூப் விற்பனை, விசேஷ வீடுகளுக்கு இனிப்புகள் மற்றும் ஸ்நாக்ஸ் தயாரித்துக் கொடுப்பது, பார்ட்டி ஆர்டர்ஸ் எனப் பலதரப்பட்ட ஆர்டர்களும் கைவசம் இருக்கும்படி பார்த்துக்கொண்டால், வீட்டிலிருந்தபடியும் ஜோராக சம்பாதிக்கலாம்.

உருளைக்கிழங்கு மற்றும் நேந்திரம் சிப்ஸ் இரண்டுக்கும் எல்லா பகுதிகளிலும் ஆண்டு முழுக்க விற்பனை வாய்ப்புகள் இருக்கின்றன. இவற்றை வீட்டிலேயே தயாரித்து, பேக்கரி, மளிகைக்கடை, டிபார்ட்மென்டல் ஸ்டோர்களுக்கு மொத்த விலையில் அல்லது கால் கிலோ, அரை கிலோ என சில்லறை விலையில் விற்பனை செய்யலாம். இந்த சிப்ஸ் வியாபாரத்தையே தனி தொழிலாகவும் செய்து முன்னேற முடியும்.

இதெல்லாம் அவசியம்: சமையலுக்கான உணவுப் பொருள்கள், அடுப்பு, பாத்திரங்கள்.

முதலீடு : 50,000 ரூபாய்க்கும் குறைவாகவே தேவைப்படும். கடை தொடங்குவதாக இருந்தாலும், தொடக்கத்தில் 10x15 சதுரஅடி பரப்பளவில் இருவர் மட்டுமே வேலை செய்யும் வகையில் சிறிய அளவில் தொடங்கி, படிப்படியாகத் தொழிலை விரிவுபடுத்தலாம்.

குறைந்த முதலீடு... நிறைவான வருமானம்... பிசினஸில் சாதிக்க அட்டகாசமான 25 தொழில்கள்

ஈவென்ட் பிளானர்

வீடு, அலுவலகம், கல்வி நிலையங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், நட்சத்திர ஹோட்டல் என எல்லா திசைகளிலும் பலவிதமான கொண்டாட்டங்கள் களைகட்டும் யுகத்தில் இருக் கிறோம். பிறந்தநாள், திருமணநாள் போன்ற தனிப்பட்ட நிகழ்ச்சி களுக்கும், அலுவலக மற்றும் விருந்தினர்கள் பங்குபெறும் அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளுக்குமான ஏற்பாடுகளைச் செய்து கொடுக்கவும், ஈவென்ட் பிளானர்களின் பங்கு முக்கியமானதாக இருக்கிறது. அழைப்பிதழ் வடிவமைப்பு, உள் அலங்காரம், உணவு, விளையாட்டுப் போட்டிகள், ரிட்டர்ன் கிஃப்ட், போட்டோ மற்றும் வீடியோ எடுப்பது, கலை நிகழ்ச்சிகள், சர்ப்ரைஸ் நிகழ்வுகள், சிறப்பு விருந்தினர்களை வரவழைப்பது என பலவிதமான வேலை களையும் விரைவாகவும் நேர்த்தியாகவும் செய்து கொடுக்கும் திறன் பெற்றிருப்பதால், நடுத்தர மக்கள் முதல் கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை பலதரப்பினரும் ஈவென்ட் பிளானர்களின் சேவையை எதிர்பார்க்கின்றனர்.

படித்தவர்கள் மற்றும் வெளியுலக அனுபவம் கொண்ட படிக்காதவர்களும் இந்தத் துறையில் களமிறங்கலாம். குடும்பத் தினர் மற்றும் நண்பர்களின் வீட்டு நிகழ்ச்சியிலிருந்து ஆரம்பித்து, இந்தத் தொழிலுக்கான சகலத்தையும் கற்று, வெளி ஆர்டர்களை எடுக்க ஆரம்பித்தால், கிடுகிடுவென வளரலாம். தேவைக்கேற்ப பணியாளர்களைப் பயன்படுத்தவேண்டிய தேவை இருக்கும் என்பதால், பொறுப்பான நபர்களைத் தேர்வு செய்வது முக்கியம்.

இதெல்லாம் அவசியம்: அலங்காரம் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டுக்கான பொருள்கள்.

முதலீடு: 50,000 ரூபாய்க்கும் குறைவான முதலீட்டிலேயே ஆரம்பிக்கலாம். பெரிய அளவில் செய்வதாக இருந்தால், சில லட்சம் தேவைப்படும்.

குறைந்த முதலீடு... நிறைவான வருமானம்... பிசினஸில் சாதிக்க அட்டகாசமான 25 தொழில்கள்

பெண்களுக்கான வாகனப் பயிற்சி மையம்

வாகனப் பயன்பாடு மற்றும் பெண்கள் வாகனம் ஓட்டுவது இரண்டிலும் தமிழகம் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. பெண்கள் வீட்டைத் தாண்டிப் பயணிப்பது, வேலைக்குச் செல்வது, சம்பாதிப்பது போன்ற காரணங்கள் இந்த முன்னேற் றத்தை உறுதிசெய்கின்றன. ஆண்களின் தயவை எதிர் பார்க்காமல், சுயமாகப் பயணிக்கும் மனப்பாங்கு பெண்களுக்கு அதிகரித்துவருகிறது.10 ஆண்டுகளுக்கு முன்பு வரை, ஆட்டோ, டாக்ஸி போன்றவற்றில் அரிதாகவே பயணம் செய்த நம்மில் பலரும், இன்று மாதத்துக்குப் பலமுறையாவது இந்த வாகனப் பயன்பாட்டை மேற்கொள்ளும் வாழ்க்கை முறைக்கு மாறியிருக்கிறோம். இந்த எல்லா மாற்றங்களுக்கும் தேவையும் ஆர்வமும்தான் தூண்டுகோலாக இருக்கின்றன.

கிராமப் பெண்களும்கூட ஆட்டோ ஓட்டுநராக, வேகமாகவும் விவேகமாகவும் செயல்படுகின்றனர். ஆர்.டி.ஓ அலுவலகத்தில், கியர் பைக் மற்றும் கார் ஓட்டி லைசென்ஸ் எடுக்க, பல தரப்பட்ட பெண்களும் வரிசைகட்டி நிற்கின்றனர். வாகனப் பயன்பாடு அதிகரிக்கும் வேளையில், ஓட்டுநர்களாகப் பெண் களுக்கான வேலைவாய்ப்பும் அதிகரிக்கிறது. ஆனால், ஆண்களை ஒப்பிடும்போது, இளம் வயதிலேயே வாகனம் ஓட்டிப் பழகுவதற்கான வாய்ப்பு, பெண்களுக்கு அதிகம் கிடைப்பதில்லை. இதனால், நம்பகமான வாகன ஓட்டுநர் பயிற்சி மையத்தைத்தான் அவர்கள் நாடவேண்டிய நிலை இருக்கிறது. வாகனம் ஓட்டுவதில் அனுபவம் கொண்டவர்கள், அந்தத் திறனையே மூலதனமாகக் கொண்டு, இருபாலருக்கும் அல்லது பெண்களுக்கான பிரத்யேகமான வாகனப் பயிற்சி மையத்தைத் தொடங்கலாம்.

இதெல்லாம் அவசியம்: நல்ல இயக்கத்திலுள்ள பழைய இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் இருந்தாலே போதுமானது. பயிற்சியாளர், குறைந்த பட்சம் பத்தாம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். ஆர்.டி.ஓ அலுவலகத்தில் அங்கீகாரம் பெற்ற பிறகே பயிற்சி மையத்தை ஆரம்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு, அருகிலுள்ள ஆர்.டி.ஓ அலுவலகத்தையும், மாவட்டத் தொழில் மையத்தையும் அணுகலாம்.

முதலீடு: தோராயமாக ஒரு லட்ச ரூபாய் தேவைப்படும்.

குறைந்த முதலீடு... நிறைவான வருமானம்... பிசினஸில் சாதிக்க அட்டகாசமான 25 தொழில்கள்
Visual Generation Inc.

மனிதவள மேம்பாட்டுப் பயிற்சி வழங்குதல்

ஒரு நிறுவனத்தில் சேரவும், அங்கு நிலையான வளர்ச்சியைப் பெறவும், திறமை மட்டுமன்றி நம் நடத்தையும் முக்கியமானதாகப் பார்க்கப்படும். நேர்முகத் தேர்வில் எப்படிச் செயல்பட வேண்டும், வேலைக்குச் சேர்ந்த பிறகு, நிறுவனத்தில் நடந்துகொள்ளும் விதம், மற்றவர்களிடம் நம் பேச்சு, பழக்கவழக்கம், உடை, ஒவ்வொரு கட்டத்திலும் நம்மை மேம்படுத்திக்கொள்வது போன்ற அத்தியாவசிய வழிகாட்டுதல்கள், இளைஞர்கள் பலருக்கும் சரியாகச் சென்றுசேர்வதில்லை.

இதுகுறித்த அனுபவம் உள்ளவர்கள், மனிதவள மேம்பாட்டுப் பிரிவு படிப்பு முடித்தவர்கள், பல்வேறு நிறுவனங்களில் பணி யாற்றியவர்கள், கற்றுக்கொள்ளும் ஆர்வம் உள்ளவர்கள் இந்த வேலையைக் கையில் எடுக்கலாம். சுற்றுவட்டாரத்தில் கல்லூரி இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள், படிப்பை முடித்து வேலை தேடுவோர், படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் அலைபவர்கள் எனப் பலதரப்பினருக்கும், மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியை அளிக்கலாம். பிற நிறுவனங்களுடன் நட்பை ஏற்படுத்திக்கொண்டு, நம்மிடம் பயிற்சி பெற்ற இளைஞர்களை அங்கு வேலைக்கு சிபாரிசு செய்யலாம். அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் விரும்பும்பட்சத்தில், அவர்களின் ஊழியர்களுக்கும் இதுபோன்ற பயிற்சிகளை வழங்கலாம்.

இதெல்லாம் அவசியம்: தமிழ், ஆங்கிலம் மற்றும் பிற மொழி களில் எழுதவும் பேசவும் தெரிந்திருப்பதுடன், நிறுவனங்களின் எதிர்பார்ப்புகளை ஓரளவுக்காவது தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

முதலீடு: வீட்டில் அல்லது சிறிய அலுவலகத்தில்கூட தொடங்கலாம் என்பதால், 30,000–50,000 ரூபாய் முதலீடு இருந்தாலே போதுமானது.

குறைந்த முதலீடு... நிறைவான வருமானம்... பிசினஸில் சாதிக்க அட்டகாசமான 25 தொழில்கள்

காய்கறிகள் விநியோகம்

பல்வேறு வேலைகளுக்கு நடுவே, உணவகங்கள், விடுதிகள், அன்னசத்திரங்கள், விசேஷ வீடுகளுக்குத் தேவையான காய்கறிகள் உரிய நேரத்தில் வந்து சேர்வதிலும், அவற்றைக் குறைந்த விலைக்கு வாங்குவதிலும் சிக்கல்கள் ஏற்படலாம். இதுபோன்ற தேவையைப் பயன்படுத்தி, அவர்களுக்குத் தேவை யான காய்கறிகளைத் தினம்தோறும் சப்ளை செய்வதைத் தொழிலாகவும் செய்யலாம்.

விவசாயத்திலும், விவசாய விளைபொருள்கள் விற்பனையிலும் நேரடி அல்லது மறைமுக அனுபவமோ, ஆர்வமோ இருப்பவர் களும், நேரங்காலம் பார்க்காமல் உழைக்கத் தயாராக இருப்பவர் களுக்கும் இந்தத் தொழில் கைகொடுக்கும். சந்தைகளுக்கு நள்ளிரவில் அல்லது அதிகாலையில் காய்கறிகள் வந்துசேரும் போதே அவற்றைக் குறைந்த விலைக்குக் கொள்முதல் செய்து, வாகனத்தின் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்ய வேண்டும். உணவகங்கள் மட்டுமன்றி, மளிகைக்கடைகள், டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸ், கல்வி நிறுவனங்கள், இளைஞர்கள் விடுதி ஆகியவற்றுக்கும் காய்கறிகளை விநியோகம் செய்யலாம். தொழில் வளர்ந்த பிறகு, வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கும் அனுப்பலாம். ஆரம்பத்தில் சில மாதங்களுக்காவது தினமும் நேரில் சென்று வியாபாரத்தைக் கவனிக்க வேண்டும். பிறகு, நம்பகமான பணியாளர்களைக் கொண்டு இருந்த இடத்திலிருந்தே வேலைகளைக் கண்காணிக்கலாம்.

இதெல்லாம் அவசியம்: நம்பகமான வாகன ஓட்டுநர்கள், இருசக்கர வாகனங்கள் அல்லது ஓரிரு ஆட்டோக்கள், ட்ரை சைக்கிள், டெம்போ போன்ற தேவைக்கேற்ற வாகனங்களை செகண்ட் ஹேண்டில் வாங்கியும் பயன்படுத்தலாம்.

முதலீடு: ஒரு லட்சம் ரூபாய் தேவைப்படும்.

குறைந்த முதலீடு... நிறைவான வருமானம்... பிசினஸில் சாதிக்க அட்டகாசமான 25 தொழில்கள்

நாற்றங்கால் நர்சரி அமைத்தல்

அரசுத்துறைகள் சார்பாக நெடுஞ்சாலைகளில் செடி வளர்ப்புப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன. தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பாக அவ்வப்போது அதிக எண்ணிக்கையிலான செடிகள் சாலையோரங்களில் நடப் படுகின்றன. இதுபோன்ற தேவைக்கும் நர்சரிகளுக்குமான செடிகள் மற்றும் நாற்றுகளை வளர்த்து விற்பனை செய்யலாம். இதற்கு ஓர் அறை அல்லது பாதுகாப்பான கொட்டகை ஒன்று இருந்தாலே போதுமானது.

மண் நிரப்பிய பிளாஸ்டிக் ட்ரேயில் பூச்செடிகள், காய்கறிகள் மற்றும் பழச்செடிகள், அலங்காரச் செடிகள் ஆகியவற்றுக்கான விதைகளைத் தூவி, நாற்றுகளை உருவாக்கி, அவற்றைச் சிறிய பிளாஸ்டிக் கவர்களில் செடியாக வளர்த்து விற்பனை செய்யலாம். பதியம் செய்து ஒரு தாவரத்திலிருந்து பல்வேறு செடிகளையும் உருவாக்கலாம். கிராமம், நகரத்தினர், படித்தவர்கள், படிக்காதவர்கள் என எல்லாத் தரப்பினராலும் இந்தத் தொழிலைச் செய்ய முடியும். வாடிக்கையாளர்கள் அதிகரித்ததும், மண், இயற்கை உரம், பிளாஸ்டிக் கவர், பிளாஸ்டிக் பக்கெட், பிளாஸ்டிக் ட்ரே, நீர் ஊற்றும் பூவாளி, விதைகள் என செடி வளர்ப்புக்கான பொருள் களையும் விற்பனை செய்யலாம். செடி வளர்ப்புக்கான நேரடி மற்றும் ஆன்லைன் வகுப்புகளையும் நடத்தலாம். பிறர் தோட்டங் களுக்கான பராமரிப்பு சேவைகளையும் கட்டண முறையில் செய்து கொடுக்கலாம்.

இதெல்லாம் அவசியம்: செடி வளர்ப்புக்கான அடிப்படையான உபகரணங்கள். வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்கு உரிய விளக்கம் அளிக்கும் வகையில், செடி வளர்ப்பில் அனுபவம் இருக்க வேண்டும்.

முதலீடு: 50,000 ரூபாய்க்கும் குறைவான தொகையில் ஆரம்பிக்கலாம்.

குறைந்த முதலீடு... நிறைவான வருமானம்... பிசினஸில் சாதிக்க அட்டகாசமான 25 தொழில்கள்

இயற்கை உரம் தயாரித்தல்

நிலத்திலும் மொட்டைமாடியிலும் செடி வளர்க்கும் பலருக்கும், செடிகளின் வளர்ச்சிக்குப் பயன்தரும் உரங்களைத் தயாரித் துப் பயன்படுத்த வாய்ப்புகள் அமைவதில்லை. கிச்சன் கழிவுகள் மற்றும் காய்கறிச் சந்தையில் சேகரித்த உணவுக் கழிவுகளுடன், சாணம், ஆட்டுப்புழுக்கை, கோமியம், மண் புழுக்கள், இலைத்தழைகள் போன்றவற்றைச் சேர்த்து மட்கச் செய்து, கால் கிலோ, அரை கிலோ, ஒரு கிலோ அளவிலான ரெடிமேட் உரமாக விற்பனை செய்யலாம். இவை ஒரு கிலோ 6 ரூபாய் வரை விற்பனையாகின்றன. இதற்கென ரெடிமேட் தொட்டிகளும் விற்கப்படுகின்றன.

மாட்டுச்சாணம், எருமைச்சாணம், ஆட்டுப்புழுக்கை அதிகம் கிடைத்தால், இவற்றைத் தனித்தனியே காய வைத்து அரைத்து, செடிகளில் தூவி விடுவதற்கு ஏற்ப பல்வேறு எடை அளவுகளில் விற்பனை செய்யலாம். இயற்கை விவசாயம் செய்வோர், மாடித்தோட்டம் அமைத்திருப்போர், இயற்கை அங்காடிகள், நர்சரிகளுக்கு இந்த உரத்தினை விற்பனை செய்யலாம். இதேபோல மண்புழுக்களையும் சாணத்தையும் கொண்டு மண்புழு உரம் தயாரித்து தனியாக விற்பனை செய்யலாம். இதற்கு மழைநீர் புகாத வகையில் சிறிய கொட்டகை இருந்தால் போதுமானது.

இதெல்லாம் அவசியம்: சாணம், மண்புழுக்கள், இலைத் தழைகள் தேவை. 200 - 400 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெரிய பிளாஸ்டிக் டிரம் 5 - 10 வைத்திருந்து, சுழற்சி முறையில் உரம் தயாரிக்கலாம்.

முதலீடு: 30,000 ரூபாய் முதலீட்டிலிருந்தே ஆரம்பிக்கலாம்.

குறைந்த முதலீடு... நிறைவான வருமானம்... பிசினஸில் சாதிக்க அட்டகாசமான 25 தொழில்கள்

அலங்கார மாலைகள் கட்டுவது / மலர் அலங்காரம்

மல்லிகை, கனகாம்பரம், அரளி, சம்பங்கி போன்ற பூக்களை சரம் சரமாகத் தொடுத்து அசத்துவதில் பெண்களுக்கு நிகர் யாருமில்லை. அதேபோல டிசைனர் மாலைகளைக் கட்டுவதில் ஆண்கள்தான் கில்லாடிகளாக இருக்கின்றனர். ‘டிரெண்டி லுக்’ குடன், எடை குறைவாக இருக்கும் டிசைனர் மாலைகள், ஆடம்பர மான விசேஷங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் அதிகம் பயன் படுத்தப்படுவதுடன், வெளிநாடுகளுக்கும் அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

நம்மூரில் விளையும், உள்ளூரில் அதிகம் பயன்படுத்தப்படும் அதே பூக்கள்தான். ஆனால், அவற்றைப் பல்வேறு டிசைன்களில், கூடுதல் சிரத்தையுடன் வடிவமைப்பு செய்துகொடுத்தால், அந்த மாலைக்கான மதிப்பு பன்மடங்கு அதிகரிக்கும். பணியாளர்களின் திறனுக்கு ஏற்ப அவர்களுக்கான சம்பளமும் ஆச்சர்யப்படும் வகையில் கிடைக்கும். மாலைகளைக் கட்டுவதில் ஆர்வ முள்ளவர்கள், திறனை வளர்த்துக்கொள்ளத் தயாராக இருப் பவர்கள், வீட்டிலிருந்தபடியே இந்தத் தொழிலைத் தொடங்கலாம்.

ஏலக்காய் உள்ளிட்ட நறுமணப் பொருள்களிலும் மாலை தொடுத்துக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யலாம். மலர் மற்றும் மாலை ஏற்றுமதி நிறுவனங்கள், பூ அலங்காரம் செய்யும் நிறுவனங்கள், மலர் அலங்காரக் கண்காட்சிகளுக்கு வடிவமைப்பு செய்துகொடுப்பது போன்ற வர்த்தக வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

கோயம்புத்தூரிலுள்ள வேளாண் பல்கலைக்கழகம், தோட்டக் கலைத்துறை மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலமாக இதற்கானப் பயிற்சிகளைப் பெறலாம்.

இதெல்லாம் அவசியம்: பல ஊர் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளிடம் நட்பு வைத்து, குறைவான விலையில், உரிய நேரத்தில் மலர்களை வாங்கும் திறன் தேவை. புதுமையான யோசனையுடன், காலத்துக்கு ஏற்ப தொழில் உத்திகளை வகுக்க வேண்டும்.

முதலீடு: 50,000 ரூபாயிலேயே ஆரம்பிக்கலாம்.

குறைந்த முதலீடு... நிறைவான வருமானம்... பிசினஸில் சாதிக்க அட்டகாசமான 25 தொழில்கள்
VectorStock.com/30111862

மொழிபெயர்ப்பு பணி

பல மாநிலத்தினருக்கும், பிற நாட்டினருக்கும் பொதுவான செய்தியை அல்லது விளம்பரத்தை, இருந்த இடத்திலேயே மொழி பெயர்ப்பு செய்து கொடுத்து அட்டகாசமான வருமானம் ஈட்டலாம். விளம்பரங்கள், கட்டுரைகள், கடிதங்கள், நூல்கள், இணையப் பக்கங்கள், மெயில்களுக்கான பதில் அனுப்புதல் போன்ற பல தேவைகளுக்கு அனுபவம் உள்ள மொழிபெயர்ப்பாளர்கள் தேவைப் படுகின்றனர். தவிர, வெப் சீரிஸ், குழந்தைகளுக்கான குறும்படங்கள், கார்ட்டூன் வீடியோக்கள், சினிமா போன்றவற்றில் சப் டைட்டில் எழுதிக் கொடுப்பதற்கான வாய்ப்புகளும் அதிகம் இருக்கின்றன.

சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பெருநகரங்களிலும், நிறுவனங்கள் அதிகம் இருக்கும் பிற மாநிலங்களிலும் இந்தத் தொழிலுக்கான வரவேற்பு அதிகம் இருக்கிறது. வாசிப்புப் பழக்கம் அதிகம் உள்ளவர்களுக்கு, எழுத்தாற்றலும் மொழி பெயர்ப்பு செய்யும் ஆற்றலும் எளிதில் கைகூடும். எத்தனை மொழிகளில் புலமை பெற்றிருக்கிறோமோ அதற்கேற்ப நம் வருமான வாய்ப்புகளை விரிவுபடுத்திக் கொள்ளலாம். ஆன்லைன் வாயிலாகப் பிற மொழிகளைப் பயிற்றுவிப்பதுடன், மொழி பெயர்ப்பு குறித்த ஆலோசனைகளை வகுப்பாகவும் நடத்தலாம். வெளிநாட்டு மொழி களைத் தெரிந்திருப்பவர்கள், இந்தத் தொழிலில் அதிக வருமானம் ஈட்டலாம். இல்லத்தரசிகள், மாணவர்கள், பிற வேலைக்குச் செல்வோர், பணி ஓய்வுபெற்றவர்களுக்கு நிச்சயமாக இந்த வேலை பயன்தரும்.

இதெல்லாம் அவசியம்: மொழி வளமும், கற்றுக்கொள்ளும் ஆர்வமும், பிற மொழியினரிடம் உரையாடவும், சரியான முறையில் மொழி பெயர்க்கும் திறனும் இருந்தால், வீட்டிலிருந்தபடியே அலுவலகத்துக்குச் செல்பவர்களைவிடவும் அதிகமாகச் சம்பாதிக்க முடியும்.

முதலீடு: இணைய வசதியுடன், ஒரு கம்ப்யூட்டர் இருந்தாலே போதுமானது.

குறைந்த முதலீடு... நிறைவான வருமானம்... பிசினஸில் சாதிக்க அட்டகாசமான 25 தொழில்கள்

ரெடிமேட் ஆடைகள் விற்பனை

ஆடைகளைத் தரமானதாகத் தயாரிப்பது ஒரு விதமான கலை என்றால், அந்த ஆடைகளில் கூடுதலான பொலிவை உண்டாக்கிக் கூடுதல் விலைக்கு விற்பதும் காலத்துக்கு ஏற்ற கலைத்திறன்தான். தரம் மற்றும் கட்டுப்படியான விலைக்குப் பெயர் போன பகுதி களில், மொத்த விலைக்கு ஜவுளிகளை வாங்கி வந்து, அதில் ஸ்டோன் வொர்க், ஆரி, எம்ப்ராய்டரிங், ஜரிகை, பிளாக் பிரின்டிங் போன்ற வேலைப்பாடுகளைச் செய்து மதிப்புக்கூட்டப்பட்ட ஆடைகளாக, கூடுதல் விலைக்கு விற்பனை செய்யலாம்.

ஆரம்பத்தில் 20,000 ரூபாய்க்குள் ஆடைகளை வாங்கலாம். கூடுதல் வேலைப்பாடுகள் செய்த ஆடைகளை, தெரிந்த வட்டாரத்தில் விற்பனை செய்து, வியாபார வாய்ப்புகள் அதிகரித்த பிறகு, அதிக விலைக்கு ஜவுளிகளைக் கொள்முதல் செய்யலாம். ஆடைகள் வீண் போகாத பொருள்தான் என்றாலும், வாடிக்கை யாளர்கள் புதுப்புது டிசைன்களை விரும்புவார்கள் என்பதால், வாடிக்கையாளர்களின் ரசனையை அவர்களுக்கு முன்பாக நாம் அறிந்து, அதற்கேற்ப புதுவரவு ஆடைகளை விற்பனை செய்ய வேண்டியதும் அவசியம்.

இந்தத் தொழில் செய்பவர்கள், கட்டாயமாக சமூக வலைதளப் பக்கத்தை உருவாக்கி, தங்களிடம் இருக்கும் டிசைன்கள் மற்றும் ஆடைகளைப் பதிவிட்டு விளம்பரப்படுத்த வேண்டும். வாடிக்கை யாளர்களின் விருப்பங்களைத் தெரிந்துகொள்ள அவர்களின் ரசனைகளைக் கேட்டுத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ப ஆடை களை விற்பனை செய்யலாம்.

இதெல்லாம் அவசியம்: ஃபேஷன் விஷயத்தில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். எப்போதும் கற்றுக்கொள்ளும் ஆர்வத் துடன் இருக்க வேண்டும்.

முதலீடு: ஆரம்பத்தில் 50,000 ரூபாய் போதுமானது.

குறைந்த முதலீடு... நிறைவான வருமானம்... பிசினஸில் சாதிக்க அட்டகாசமான 25 தொழில்கள்

கணினி மற்றும் டைப்ரைட்டிங் பயிற்சி

உற்பத்தி அல்லாத பிற துறைகளில் திறன் சார்ந்த வேலைக்குச் செல்லும் பெரும்பாலானோருக்கும் கணினிப் பயன்பாடு இன்றி யமையாததாக இருக்கிறது. இதனால், பள்ளி மற்றும் கல்லூரிக் காலத்திலேயே கணினிப் பயன்பாடு குறித்துத் தெரிந்துகொள்ள மாணவர்கள் பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். கணினியில் வேகமாகத் தட்டச்சு செய்வதற்கு, டைப்ரைட்டிங் பயிற்சி உதவு கிறது. இதனாலும், பத்திரப்பதிவு, அலுவலக ஆவணங்கள் உள்ளிட்ட தேவைகளுக்குத் தட்டச்சு செய்பவர்களின் பங்களிப்பு தேவைப்படுகிறது.

மத்திய, மாநில அரசுகளின் தட்டச்சுப் பணிகளுக்குச் செல்லவும் இந்தப் பயிற்சி உதவும். கணினிப் பயன்பாடு அதிகம் பிரபலமாகாத கிராமங்களில், பெண்கள் மற்றும் மாணவர்களுக்கு, டைப்ரைட்டிங் மற்றும் கணினிப் பயிற்சி இன்றளவும் உதவியாக இருக்கிறது. எனவே, டைப்ரைட்டிங்கில் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் இளநிலை அல்லது முதுநிலைவரை தேர்ச்சி பெற்றவர்கள், கணினிப் பயன்பாட்டில் அனுபவம் உள்ளவர்கள், இதனை தொழிலாகவும் எடுத்துச் செய்யலாம். நம்மிடம் கற்றுக் கொள்ள வருபவர்கள், அனுபவத்துக்காக மட்டுமன்றி, டைப் ரைட்டிங்கில் அரசுத் தேர்விலும் கலந்துகொள்ள வழிகாட்டும் வகையில் அனுமதியுடன் பயிற்சி மையத்தையும் தொடங்கலாம். இதற்கான வழிகாட்டுதல்களுக்கு மாவட்ட தொழில் மையத்தை அணுகலாம்.

வீட்டில் போதிய இடவசதி இல்லையெனில், சிறிய வாடகைக் கட்டடத்திலும் இந்தத் தொழிலைத் தொடங்கலாம். மக்கள் அதிக அளவில் வசிக்கும் பகுதி, கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு அருகில் இந்தத் தொழிலைத் தொடங்குவது பயன்தரும். தேவை இருப்பின், பிரின்டர் மற்றும் ஜெராக்ஸ் மெஷின் பயன்படுத்தி, இதர சேவைகளையும் வழங்கலாம்.

இதெல்லாம் அவசியம்: கம்ப்யூட்டர், தமிழ் மற்றும் ஆங்கில டைப்பிங் இயந்திரங்கள்.

முதலீடு: இடத்தேவை போக, 50,000 ரூபாய் முதலீட்டிலேயே இந்தத் தொழிலைத் தொடங்க முடியும். பயிற்சி மையமாகத் தொடங்கினால், குறைந்தபட்சம் ஒரு லட்சம் ரூபாய் தேவைப்படும்.

குறைந்த முதலீடு... நிறைவான வருமானம்... பிசினஸில் சாதிக்க அட்டகாசமான 25 தொழில்கள்

வளர்ப்புப் பிராணிகளுக்கான சேவை தொழில்கள்

பிராணிகள் வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர்கள், தாங்கள் வளர்க் கும் பிராணிகளுக்குத் தேவையான உணவு, உபகரணங்கள், அலங்காரப் பொருள்கள், மருந்துகள் ஆகியவற்றைச் சிறப்பான தாகத் தேர்வு செய்ய ஆர்வம்காட்டுவார்கள். அதுகுறித்த விவரங்களைச் சமூக வலைதளங்கள் மற்றும் நண்பர்கள் வட்டாரத்தில் தெரியப்படுத்தி, விருப்பம் உள்ளவர்களுக்கான பொருள்களை வாங்கிக் கொடுத்து அதையே வியாபாரமாகவும் செய்யலாம்.

பாதுகாப்புக்கான பெல்ட், செயின், கூண்டு, கண்ணாடித் தொட்டிகள், தீவனங்கள், உணவு வைக்கும் தட்டுகள், பிரத்யேக உணவுகளைத் தயாரித்து அல்லது பிறரிடமிருந்து வாங்கி, கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யலாம். நாம் வளர்க்கும் வளர்ப்புப் பிராணிகளின் குட்டிகளுடன், பிறரிடமிருந்து பிராணிகளை வாங்கியும், வீட்டிலிருந்தபடியே தேவைப் படுவோருக்கு விற்பனை செய்யலாம். அனுபவமும் இடவசதியும் இருக்கும்பட்சத்தில், வெளியூர் செல்பவர்கள் தங்களின் வளர்ப்புப் பிராணிகளை விட்டுச் செல்வதற்கான பராமரிப்பு மையத்தையும் நடத்தலாம். அதிக எண்ணிக்கையிலான வளர்ப்புப் பிராணிகளை வளர்த்தாலும், வணிக ரீதியிலான பராமரிப்பு மையத்தை நடத்தினாலும், உள்ளாட்சி அமைப்பில் பதிவு செய்ய வேண்டும்.

இதெல்லாம் அவசியம்: வளர்ப்புப் பிராணிகள் குறித்த அடிப்படை தெளிவும், அவற்றை வளர்த்த முன் அனுபவமும் இருக்க வேண்டும். பிராணிகளுக்கான தேவைகள், நோய் மேலாண்மை குறித்தும் ஓரளவுக்குத் தெரிந்திருந்தால் நல்லது.

முதலீடு: ஆரம்பத்தில் 50,000 ரூபாய் இருந்தாலே போதுமானது.

குறைந்த முதலீடு... நிறைவான வருமானம்... பிசினஸில் சாதிக்க அட்டகாசமான 25 தொழில்கள்

இயற்கை விளைபொருள்கள் விற்பனை

ரசாயன உரங்கள் பயன்படுத்தாமல் விளைவிக்கப்பட்ட அரிசி, தானியங்கள், பருப்பு வகைகள், காய்கறிகள், பழங் களுடன், மதிப்புக்கூட்டப்பட்ட தின்பண்டங்கள், இனிப்புகள், செக்கில் ஆட்டிய எண்ணெய் போன்ற உணவுப் பொருள் களுக்கு வரவேற்பு பெருகி வருகிறது. இவற்றை உற்பத்தி செய்யும் இயற்கை விவசாயிகள் மற்றும் தொழில்முனை வோர்களுக்கும், இவற்றுக்கான வாடிக்கையாளர்களுக்கும் இடையே பாலமாக இருந்து வருமானம் ஈட்டலாம்.

கொள்முதல் செய்த உணவுப் பொருள்களை நேரடி யாகவோ அல்லது மதிப்புக்கூட்டியோ விற்கலாம். சொந்த மாக ஒரு நிறுவனத்தை உருவாக்கி, அந்தப் பெயரில் விற்பனை செய்தால் தொழில் வளர்ச்சிக்குப் பயன் கிடைக்கும். உற்பத்தியாளர்களிடமிருந்து பெற்ற தொகையில், நமக்கான சேவை கட்டணத்தை நிர்ணயித்து (அதிகபட்சமாக 20 சதவிகிதம் லாபம் வைத்து) விற்பனை செய்யலாம். சரியான நபர்களிடம் நம்பகமான விளை பொருளைக் கொள்முதல் செய்வதுடன், இயற்கை விளை பொருள் என்பதைத் தெளிவுபடுத்தும் வகையில், ஒவ்வொரு பொருளின் பாக்கெட்டிலும் கண்கவர் லேபிளை ஒட்டி யிருப்பது அவசியம்.

இதெல்லாம் அவசியம்: தேவையான அளவு உணவுப் பொருள்கள் இருப்பு வைத்திருக்க வேண்டும். எடை மற்றும் பேக்கிங் இயந்திரம் தேவைப்படும்.

முதலீடு: ஆரம்பத்தில் 50,000 ரூபாய் போதுமானது.

குறைந்த முதலீடு... நிறைவான வருமானம்... பிசினஸில் சாதிக்க அட்டகாசமான 25 தொழில்கள்

கிளீனிங் சர்வீஸ்

ஆசையாய் வாங்கிய வாகனத்தில், ஆரம்பத்தில் தூசி படாமல் கவனமாகப் பார்த்துக்கொள்ளும் பலரும், காலப்போக்கில் வாகனப் பராமரிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அவசரமாக வெளியில் கிளம்பும்போதுதான் வாகனத்தைத் துடைப்பதையும், சில சமயம் தூசியுடனேயே வாகனத்தைப் பயன் படுத்துவதையும் பலரும் வாடிக்கையாகக் கொண்டிருப்பார்கள். இதுபோன்ற சிக்கல்களைத் தவிர்க்க, நகரப்பகுதியில் வாகனங் களைச் சுத்தம் செய்துகொடுக்கும் தொழில் பிரபலமாகிவருகிறது.

அடுக்குமாடிக் குடியிருப்புகள், வில்லாக்கள், வெளி வேலைக்குச் செல்வோர் அதிகம் குடியிருக்கும் பகுதிகளில் இந்தத் தொழிலுக் கான வரவேற்பு இருக்கிறது. காலை மற்றும் மாலையில் சில மணி நேரத்தை இதற்காக ஒதுக்கினாலே போதுமானது. ஒரு நபர், 4 – 5 மணி நேரத்தில் சுமார் 12 கார்கள் வரை சுத்தம் செய்யலாம். ஒருவரின் காரை வாரத்துக்கு ஒருமுறை வீதம், ஒரு வாரத்துக்கு தோராயமாக 70-க்கும் அதிகமான கார்களைச் சுத்தம் செய்ய முடியும். ஒரு காருக்கு 150 - 200 ரூபாய் வீதம், மாதம் 10,000 ரூபாய் வரை பகுதிநேரமாக சம்பாதிக்கலாம். தவிர, இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, டெம்போ, ரிக்‌ஷா போன்ற வாகனங்களையும் சுத்தம் செய்து கூடுதல் வருமானம் ஈட்டலாம். நாமே இந்த வேலையைச் செய்ய வேண்டும் என்பதில்லை. சரியான பணியாளர்களைக் கொண்டு ஆரம்பத்தில் நம் மேற் பார்வையில் வேலை நடப்பதைக் கண்காணித்து, பின்னர் வீட்டில் இருந்தபடியும் வேலை சரியாக நடப்பதை உறுதிசெய்யலாம். நம் அணுகுமுறை பிடித்துப்போனால், வீடு மற்றும் அலுவலகப் பராமரிப்புக்கான வாய்ப்புகளும் கிடைக்கலாம்.

இதெல்லாம் அவசியம்: கிளீனிங் செய்வதற்கான பொருள்கள்.

முதலீடு: பணியாளர்களுக்கு அட்வான்ஸ் கொடுக்கவும், உபகரணங் கள் வாங்கவும் ஆரம்பத்தில் 10,000–20,000 ரூபாய் தேவைப்படும்.

குறைந்த முதலீடு... நிறைவான வருமானம்... பிசினஸில் சாதிக்க அட்டகாசமான 25 தொழில்கள்

குழந்தைகளுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி

இசை, நடனம், ஓவியம், யோகா போன்ற கலைகளில் நமக்கு அதிக அனுபவம் இருந்தால், அதையே குழந்தை களுக்கான திறனை வளர்க்கும் பயிற்சியாகவும் கற்றுக் கொடுக்கலாம். மொழிகளைப் பயிற்றுவிக்கும் வகுப்புகளையும் நடத்தலாம். இதுபோன்ற கலைகள் நமக்குத் தெரியவில்லை என்றாலும்கூட, அந்தக் கலைகள் தெரிந்த நண்பர்களை ஒப்பந்த முறையில் வரவழைத்து, அவர்களுக்கான சன்மானம் கொடுத்து, பயிற்சி வகுப்புகளை நடத்தலாம்.

வீட்டினுள் அல்லது மொட்டைமாடியில்கூட இதுபோன்ற வகுப்பைத் தொடங்கலாம். தினசரி, வாராந்தர, மாதாந்தர, கோடைக்காலத்துக்கான வருடாந்தர சிறப்பு வகுப்புகள் என பலவகையிலும் வகுப்புகளை நடத்தலாம். கட்டுப்படியான கட்டணம், திறமையான பயிற்சியாளர்கள், பாதுகாப்பு, பல பயிற்சிகளும் ஒரே இடத்தில் கிடைப்பது போன்ற அம்சங்கள், அதிக எண்ணிக்கையிலான மாணவர்களை நம்மைத் தேடி வர வைக்க உதவும். பயிற்சியுடன் நின்றுவிடாமல், குழந்தை களின் திறனை வெளியுலகத்துக்குத் தெரியப்படுத்த, அவர்களை மேடையேற்றி அழகுபார்ப்பதற்கான வாய்ப்பு களையும் ஏற்படுத்திக் கொடுத்தால் நம் தொழிலுக்கான வரவேற்பு அதிகரிக்கும்.

இதெல்லாம் அவசியம்: திறமையான பயிற்சியாளர்கள், பாதுகாப்பான பயிற்சிக்கூடம்.

முதலீடு: ஆரம்பத்தில் 50,000 ரூபாய் போதுமானது.

குறைந்த முதலீடு... நிறைவான வருமானம்... பிசினஸில் சாதிக்க அட்டகாசமான 25 தொழில்கள்

கார்ட்டூன் பொம்மைகளை வாடகைக்கு விடுதல்

ஜவுளிக் கடைகள், உணவகங்கள், வியாபார ஸ்தலங்கள், கார்ப்பரேட் நிறுவனங்களின் நிகழ்ச்சிகளில் வாடிக்கையாளர்கள் மற்றும் விருந்தினர்களை வரவேற்க, விளம்பர உத்திக்காக வாசலில் பெரிய பொம்மைகள் மற்றும் கார்ட்டூன் உருவ மனிதர்களை இடம்பெறச் செய்து கலகலப்பாக்குவார்கள். இதற்கான பொம்மைகளைத் தயாரித்து அல்லது வாங்கி வாடகைக்குக் கொடுக்கலாம் அல்லது நேரடியாக விற்பனையும் செய்யலாம்.

வாய்ப்பு இருந்தால், கார்ட்டூன் கேரக்டரில் நடிக்கும் நபரையும் ஏற்பாடு செய்து கொடுக்கலாம். பெரிய நிகழ்ச்சிகள் என்றில்லாமல், கல்யாணம், பிறந்ததாள், கல்வி நிறுவனங்களில் சிறப்பு விழாக்கள், கோயில் திருவிழாக்களுக்கும் தேவைக்கேற்ற கார்ட்டூன் பொம்மைகளை, காற்று நிரப்பும் வகையிலான குழந்தைகளுக்கான விளையாட்டு சாதனங்களையும் வாடகைக்கு விடலாம். பொம்மை தயாரிப்பு நிறுவனங் களிடமிருந்து வேண்டிய பொம்மைகளைக் கட்டுப் படியான விலையில் வாங்கலாம். இத்துடன், விசேஷ நிகழ்ச்சிகளுக்கான ஹீலியம் மற்றும் அலங்கார பலூன்களையும் விற்பனை செய்யலாம்.

இதெல்லாம் அவசியம்: போதிய அளவிலான பலூன்கள் கையிருப்பு. நம்பகமான பணியாளர்கள்.

முதலீடு: ஆரம்பத்தில் 50,000 – 1,00,000 ரூபாய் தேவைப்படும்.

*****

காளான் வளர்ப்பு

காளான்... சைவப் பிரியர்கள் பெரும்பாலானோரின் விருப்பமான உணவு. தமிழகம் முழுக்கத் தேவை இருந்தாலும், எல்லா ஊர்களிலும் காளான் உற்பத்தி கணிசமான அளவில் நடை பெறுவதில்லை. புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள் நிறைந்த காளானை, அனைத்து வயதினரும் சாப்பிடலாம். சிப்பிக் காளான் மற்றும் பால் காளானை ஓரளவுக்கு நீர் வசதியுள்ள வெப்ப மண்டலப் பகுதியினரும் எளிதில் வளர்க்க முடியும். மொட்டுக் காளான், மலை வாசஸ்தலங்களில் நன்கு வளரும். காளான் வளர்ப்புமுறை மிகவும் எளிமையானதுதான்.

ஒவ்வோர் உரியிலும் 4 – 5 படுக்கைகள் வீதம், 500 சதுரஅடி அறையில் 500 – 600 படுக்கைகள்வரை அமைக்கலாம். உற்பத்தி செய்யப்படும் காளானை உடனுக்குடன் விற்பனை செய்ய வேண்டும். அல்லது, குளிர்சாதனப்பெட்டியில் வைத்திருந்து அவற்றை ஓரிரு தினங்களில் விற்பனை செய்துவிட வேண்டும். காளானை மதிப்புக்கூட்டியும் விற்பனை செய்யலாம். உணவகங்கள், மளிகைக்கடைகள், இயற்கை அங்காடிகள், டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் விற்பனை வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. கோயம்புத்தூரிலுள்ள வேளாண் பல்கலைக்கழகம், தோட்டக் கலைத்துறை அலுவலகம் மற்றும் அருகிலுள்ள வேளாண் அறிவியல் நிலையங்களில் காளான் வளர்ப்புக்கான பயிற்சிகள் கிடைக்கும்.

இதெல்லாம் அவசியம்: பாதுகாப்பான ஓலைக்கொட்டகை, வைக்கோல், விதைகள், பாலித்தீன் கவர்கள் தேவைப்படும். முறை யான பயிற்சியுடன் சில பண்ணைகளுக்குச் சென்று பார்வையிட்ட பிறகு, இந்தத் தொழிலில் இறங்கலாம்.

முதலீடு: 500 சதுர அடியில் பண்ணை அமைக்க, கட்டடத்துக்கான தொகை இல்லாமல், ஒரு லட்சம் ரூபாய் தேவைப்படும்.

குறைந்த முதலீடு... நிறைவான வருமானம்... பிசினஸில் சாதிக்க அட்டகாசமான 25 தொழில்கள்

ஸ்டேஷனரி பொருள்கள் விற்பனை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், வங்கிகள், கல்வி நிலையங்கள் அதிகமுள்ள பகுதியில் வசிப்போர், அவற்றுக்குத் தேவையான ஸ்டேஷனரி பொருள்களை விற்பனை செய்வதை நிலையான தொழில் வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். இதுபோன்ற அலுவலகங்களுக்குத் தேவையான எழுதுபொருள்கள், வெள்ளைக் காகிதம் (White Paper), நோட்டுப் புத்தகம், பசை, படிப்புக்குத் தேவையான வண்ணப் படங்கள் உள்ளிட்ட பல்வேறு பயன்பாட்டுப் பொருள்களையும் விற்பனை செய்வதன் மூலம் சிறப்பான வருமானம் ஈட்டலாம்.

பெருநகரங்கள், மாநகராட்சிகள், மாவட்ட தலைநகரங்களில் ஏராளமான வணிக நிறுவனங்களும் கல்விக்கூடங்களும் இருக் கின்றன. இவற்றில் குறைந்தபட்சம் 20 அலுவலகங்களுக்காவது மாதம்தோறும் ஸ்டேஷனரி பொருள்களை விற்பனை செய்தாலே, வெளி வேலைக்குச் செல்வதைவிடவும் அதிகமான வருமானம் சம்பாதிக்க முடியும். உள்ளூர் மட்டுமன்றி வெளியூர் நிறுவனங்கள், ஸ்டேஷனரி மற்றும் ஜெராக்ஸ் கடைகள், இ-சேவை மையங்கள் போன்றவற்றுக்கான ஆர்டர்களையும் பிடித்தால், இந்தத் தொழிலைப் பெரிய வர்த்தகமாகவும் செய்யலாம். பிற நிறுவனங்களை விடச் சற்று குறைவான விலையை நிர்ணயித்தால், கூடுதலான ஆர்டர்கள் கிடைக்கும். இதன்மூலம் நமக்கான வருவாய் குறை யாமல் பார்த்துக்கொள்ளலாம்.

இதெல்லாம் அவசியம்: எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். தொழில் ரீதியான உள்ளூர் மற்றும் வெளியூர் பயணங் களுக்குத் தயாராக இருக்க வேண்டும். பொருள்களை உடனுக்குடன் சப்ளை செய்வதற்கு ஏற்ப குறைந்தபட்சம் ஓரிரு பணியாளர்களும், வாகன வசதியும் இருக்க வேண்டும்.

முதலீடு: ஒரு லட்சம் ரூபாய் தேவைப்படும்.

குறைந்த முதலீடு... நிறைவான வருமானம்... பிசினஸில் சாதிக்க அட்டகாசமான 25 தொழில்கள்

சமையல் வகுப்புகள்

நன்றாகச் சமைக்கத் தெரிந்தவர்கள், தங்களுக்குத் தெரிந்த சமையற்கலையைத் தொழில் வாய்ப்பாக மாற்றலாம். வீட்டிலிருக்கும் சமையல் பொருள்களைப் பயன்படுத்தி, இதற்கான பயிற்சி வகுப்புகளை நடத்தலாம். சமையலில் ஆர்வம் இருந்தும், சமையலில் நேரடி அனுபவம் பெரிதாக இல்லையென்றாலும், சமையல் புத்தகங்கள், யூடியூப் வாயிலாக வீட்டிலேயே பயிற்சி எடுத்து, சில வாரங்களில் சமையலில் போதிய திறனைப் பெற முடியும்.

அனுபவம், தொழில் நேர்த்தி, புதுமைகள், கற்றுக் கொடுக்கும் விதம்... இவைதான் பயிற்சி பெறுபவர்களை நம்மைத்தேடி வரவழைக்கும். வித்தியாசமான உத்தியுடன் கூடிய சமையல் வீடியோக்கள், யூடியூபில் ஹிட் அடிப்பதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். அதேபோன்று தனித்துவத்துடன், யதார்த்தமான மொழிநடையில் பேசி, சமையல் வீடியோக்களை ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் வெளியிடலாம். இதன்மூலம் நமக்கான வாடிக்கையாளர்கள் கூட்டம் பெருகுவதுடன், அந்த வீடி யோக்கள் மூலமாகவும் வருமானம் கிடைக்கும். ஓரிரு தினங்கள் பயிற்சி வகுப்புகளுடன், ஆன்லைன் பயிற்சி வகுப்புகளையும் நடத்தலாம். இத்துடன், வாய்ப்பு இருந்தால் உணவுப் பொருள்களைத் தயாரித்து விற்பனை செய்து கூடுதல் வருமானமும் ஈட்டலாம்.

இதெல்லாம் அவசியம்: சமையற்கலையில் போதிய அனுபவமும், பிறருக்குப் பக்குவமாகச் சொல்லிக்கொடுக்கும் ஆற்றலும் இருக்க வேண்டும். வீட்டில் இருக்கும் சமையல் பொருள்களைப் பயன்படுத்தியே வகுப்புகளை நடத்தலாம்.

முதலீடு: ஆரம்பத்தில் 50,000 ரூபாய் இருந்தாலே போதுமானது.

குறைந்த முதலீடு... நிறைவான வருமானம்... பிசினஸில் சாதிக்க அட்டகாசமான 25 தொழில்கள்

இட்லி, தோசை மாவு விற்பனை

நம் முன்னோர்கள் காலத்தில், பண்டிகை தினங்களில்தான் அரிசி மாவில் உணவுகளைச் செய்வார்கள். ஆனால், நம்மில் பலரும் தினமும் ஒரு வேளையாவது இட்லி, தோசை உள்ளிட்ட உணவுகளைச் சாப்பிடுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறோம். இவை எளிதில் செரிமானமாகும் ஆரோக்கிய உணவுகளாகவும் பரிந்துரைக்கப்படுகின்றன.

அரிசியைச் சுத்தம் செய்து, அதையும் உளுந்தையும் ஊறவைத்து, சரியான பதத்தில் ஆட்டி, நொதித்தல் வினை முடிந்த பிறகு, சமையல் செய்வதென்பது இன்றைய அவசர உலகத்தில் பலருக்கும் பொறுமையைச் சோதிக்கும் வேலை யாக இருக்கிறது. பல லட்சம் குடும்பங்களுக்கும் அத்தியா வசிய தேவையாக இருப்பதால், சிறியது முதல் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் பலவும், அரிசி மாவு விற்பனையில் முனைப்பு காட்டுகின்றன.

ஒரு கிரைண்டர் உதவியுடன் இட்லி, தோசை மாவு அரைத்து வீட்டிலிருந்தே விற்பனை செய்து சிறப்பான வருமானம் ஈட்ட முடியும். அருகிலுள்ள மளிகைக்கடைகள், உணவகங்கள், டிபார்ட்மென்டல் ஸ்டோர்களுக்கு அரைத்த மாவினை எளிதாக விற்பனை செய்யலாம். அதிக ஆர்டர்கள் வர ஆரம்பித்ததும், முதலீட்டை அதிகப்படுத்தி, கூடுதலான உபகரணங்களை வாங்கி, தொழிலை விரிவுபடுத்தலாம்.

இதெல்லாம் அவசியம்: அரிசி, உளுந்து, வெந்தயம் போன்ற மூலப்பொருள்கள். பெரிய கிரைண்டர், எடை மெஷின், பெரிய பிளாஸ்டிக் பக்கெட்டுகள், பேக்கிங் இயந்திரம், பிளாஸ்டிக் கவர்கள்.

முதலீடு: 50,000 ரூபாயிலிருந்து தொழிலை ஆரம்பிக்கலாம்.

குறைந்த முதலீடு... நிறைவான வருமானம்... பிசினஸில் சாதிக்க அட்டகாசமான 25 தொழில்கள்
VectorStock.com/30845385

ஆன்லைன் வகுப்புகள்

இசை, நடனம், ஓவியம், படிப்பு, போட்டித்தேர்வு, மொழிப்பாடம், யோகா, உணவு தயாரிப்பு, உளவியல் ஆலோசனை, தன்னம்பிக்கை வகுப்பு, ஃபிட்னெஸ் வகுப்புகள், கைவினைப் பொருள்கள் தயாரிப்பு, பொருளாதார ஆலோசனை, உயர்கல்விக்கான வழிகாட்டுதல், சுயதொழில் ஆலோசனை என பிறருக்குப் பயன்தரும் எந்தவிதப் பயன்பாட்டு விஷயங்கள் குறித்தும் ஆன்லைன் மூலமாக வகுப்புகளை நடத்தலாம். உள்ளூர், வெளியூர், வெளிநாடு என உலகின் எந்த மூலையில் இருப்பவர் களுக்கும், இணையம் வழியே வகுப்புகள் எடுக்கலாம்.

படித்தவர்கள், பலருக்கும் உதவும் துறைகளில் அனுபவம் பெற்றவர்கள், இருந்த இடத்திலிருந்தே ஒவ்வொரு மணி நேரத்தை யும் பயனுள்ள வகையில் செலவிட்டு, வருமானத்தைப் பெருக்க லாம். வேலைக்குச் சென்றுகொண்டே, பகுதி நேரமாகவும் இந்தத் தொழிலைச் செய்யலாம். ஸ்கைப், கூகுள் மீட், ஜூம் போன்ற பல செயலிகள் இதற்கென உதவுகின்றன. எளிமையான தொழில் என்றாலும், நாம் வழங்கும் பயிற்சி, வாடிக்கையாளர்களுக்குப் பயனுள்ளதாக அமைந்தால்தான், அவர்கள் தொடர்ந்து நம்மிடம் பயிற்சி பெறுவார்கள்; புதிய வாடிக்கையாளர்களும் கிடைப்பார்கள். ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், லிங்க்டுஇன் போன்ற சமூக வலைதளங்கள் மூலமாகவும், நண்பர்கள் வட்டாரத்தின் மூலமாகவும் ஆன்லைன் பயிற்சிக்கான விளம்பரங்களைச் செய்யலாம்.

இதெல்லாம் அவசியம்: பயிற்சிக்காகப் பயன்படுத்தும் ஆன் லைன் செயலிகளைப் பயன்படுத்தவும், இணையப் பயன்பாடு குறித்தும் தெரிந்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் இரண்டு மொழிகளுக்கு மேல் தெரிந்திருந்தால் கூடுதல் சிறப்பு.

முதலீடு: தொலைத்தொடர்புக்கான சாதனங்கள் தவிர, பெரிய செலவுகள் இருக்காது.

குறைந்த முதலீடு... நிறைவான வருமானம்... பிசினஸில் சாதிக்க அட்டகாசமான 25 தொழில்கள்

இ-சேவை மையம்

அரசின் சேவைகள் பலவற்றையும் இப்போது ஆன்லைன் வழியாகவே எளிதாகப் பெற முடிகிறது. ஆனால், அதுகுறித்த விழிப்புணர்வும் விவரமும் தெரியாதவர்களுக்கு, இ-சேவை மையங்கள் உடனுக்குடன் உதவுகின்றன. ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது, வாக்காளர் அடையாள அட்டையில் மாற்றம் செய்வது, மின்சாரம், தொலைபேசி, வருமான வரி, சொத்து வரி, குடிநீர் வரி போன்ற கட்டணங்களைக் கட்டுவது, ஆதார் அட்டையைப் பதிவிறக்கம் செய்வது என பெரும்பாலான சேவைகளையும் இந்த மையங்களின் மூலமாகப் பெறலாம்.

இந்தத் தொழிலைத் தொடங்குபவர்கள், tnesevai.tn.gov.in என்ற இணையதளத்தில் முதலில் பதிவு செய்ய வேண்டும். சிறிய கட்டடத்தில்கூட இந்தத் தொழிலைத் தொடங்கலாம். அரசு அலு வலகங்கள், மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் இந்த மையத்தைத் தொடங்குவது நல்லது. ஆன்லைன் விண்ணப்பம் சார்ந்த தேவை களுடன், லேமினேஷன், ஜெராக்ஸ், பிரின்ட் அவுட் எடுத்துக் கொடுப்பது போன்ற பிற சேவைகளையும் சேர்த்தே செய்யலாம். இந்தத் தொழிலுக்கான கூடுதல் விவரங்களை அறிய, அருகிலுள்ள அரசு இ-சேவை மையம், மாவட்ட தொழில் மையத்தை அணுகலாம். பொதுமக்கள் தங்களின் தனிப்பட்ட தகவல்களை நம்மை நம்பித் தெரிவிக்கிறார்கள் என்பதால், அதற்கேற்ப நாணயமாகவும் கண்ணிய மாகவும் இந்தத் தொழிலைச் செய்ய வேண்டும். தவறான அணுகு முறையில் செயல்பட்டால், பெயர் கெடுவதுடன், சட்ட ரீதியான சிக்கல் களுக்கும் நாம் உள்ளாக நேரிடும். எனவே, பொறுப்புடன் எச்சரிக்கை யுடனும் இந்தத் தொழிலைச் செய்தால், வருமானத்துக்கு உத்தர வாதம் உறுதி.

இதெல்லாம் அவசியம்: கணினிப் பயன்பாடு மற்றும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் டைப் செய்யத் தெரிந்திருக்க வேண்டும்.

முதலீடு: தனி நிறுவனமாகத் தொடங்கும்போது குறைந்த பட்சம் 1 – 2 லட்சம் ரூபாய் தேவைப்படும்.

குறைந்த முதலீடு... நிறைவான வருமானம்... பிசினஸில் சாதிக்க அட்டகாசமான 25 தொழில்கள்
nisi

பால் சார்ந்த பானங்கள் தயாரிப்பு

மோர், லஸ்ஸி, பாதாம் பால், ரோஸ் மில்க், மசாலா பால் போன்றவை மக்களால் விரும்பி பருகப்படும் பானங்கள். ‘இதுல என்ன வருமானம் கிடைச்சுடப் போகுது’ என நாம் குறைவாக எடைபோடும் தொழில்கள் பலவற்றிலும் பல கோடி ரூபாய் வர்த்தகம் புழங்கும். அந்த வகையில் பெட்டிக்கடைகள், பேக்கரிகள் மற்றும் சாலையோர தள்ளுவண்டிக்கடைகளில் இது போன்ற பானங்களின் விற்பனையில் கணிசமான வருமானம் கிடைப்பதுடன், ஆயிரக்கணக்கான குடும்பங்களும் வேலை வாய்ப்பு பெறுகின்றன.

இந்த பானங்களைத் தயாரிப்பது எளிமையானதுதான். அதே போல இவற்றுக்கான மூலப்பொருள்களும் எளிதாகவும் தடையின்றியும் கிடைக்கின்றன. பால் பொருள்கள் விரைவில் கெட்டுப்போவதைத் தவிர்க்க, பதப்படுத்துதல் முறைகளை வீட்டிலேயே எளிதாகச் செய்யலாம். எனவே, வீட்டிலிருந்தபடியே இந்தத் தொழிலைச் செய்து, நம் தயாரிப்புகளைச் சுற்று வட்டாரத்திலுள்ள உணவகங்கள், திரையரங்குகள், வணிக வளாகக் கடைகள், விசேஷ வீடுகளுக்கு சப்ளை செய்யலாம். அல்லது பிற நிறுவனங்களுக்கு நம் தயாரிப்புகளை மொத்த விலைக்கும் விற்கலாம். கூடவே, நெய், பழங்களால் தயாரிக்கப் படும் உணவுகளையும், ஜூஸ் போன்றவற்றையும் விற்பனை செய்யலாம். இதற்கான பயிற்சி, வேளாண் அறிவியல் நிலையம், தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலமாக வழங்கப்படுகிறது.

இதெல்லாம் அவசியம்: அடிப்படையான உபகரணங்கள், கண்ணாடி பாட்டில்கள், பிளாஸ்டிக் கவர்கள், குளிர்சாதனப் பெட்டி.

முதலீடு: ஆரம்பத்தில் ஒரு லட்சம் ரூபாயிலிருந்தே ஆரம்பிக்கலாம்.

சமையல் பாத்திரங்களை வாடகைக்கு விடுதல்

நம் சுற்றுவட்டாரத்தில் தினந்தோறும் பலவிதமான நிகழ்வுகள் நடக்கும் நிலையில், ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான விருந்தினர்களுக்கு உணவு சமைக்க, பாத்திரங்களுக்கான தேவை முக்கியத்துவம் பெறுகிறது. இதற்கான சமையல் பாத்திரங்களை வாடகைக்கு விடுவது லாபகரமான தொழிலாக இருக்கிறது. பெரிதாக எந்த அனுமதியும் தேவையில்லாத தொழில் என்பதால், வீட்டிலிருந்தபடியே அல்லது சிறிய நிறுவனமாகவும் இந்தத் தொழிலைச் செய்யலாம். வாடகைக்குக் கொடுத்த பாத்திரங்களை உரிய நேரத்தில் வாங்கிவந்து அடுத்த ஆர்டருக்கு கொடுப்பது, பாத்திரங்களைச் சுத்தமாகப் பராமரிப்பது, ஒரே நேரத்தில் பல ஆர்டர்களுக்குக் கொடுப்பதற்கு ஏற்ப போதுமான பாத்திரங்களை இருப்பு வைத்திருப்பது போன்றவைதான் பிர தான வேலைகள். பாத்திரங்களுடன், நிகழ்ச்சிகளுக்குத் தேவையான சேர், பந்தல் போன்ற பிற தேவைகளையும் செய்து கொடுத்து, கூடுதல் வருமானம் ஈட்டலாம்.

இதெல்லாம் அவசியம்: போதிய பாத்திரங்கள் கையிருப்பு இருக்க வேண்டும். உடனடியாக எடுக்கும் வகையில் அனைத்துப் பாத்திரங்களையும் வைத்திருக்க குடோன் அல்லது அறை தேவைப்படும்.

முதலீடு: ஆரம்பத்தில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு தேவைப்படும்.

ஏறு... ஏறு... முன்னேறு!

முக்கியக் குறிப்பு: எந்தத் தொழிலாக இருந்தாலும், சந்தைப்படுத்துதல் என்பது மிக மிக முக்கியம். அதாவது, நாம் தயாரிக்கும் பொருள்கள் அல்லது தரும் சேவைகளுக்கு எங்கே தேவையிருக்கிறது என்பதை முதலில் கண்டறிய வேண்டும். சந்தையைக் கண்டறியாமல் தொழிலைத் தொடங்கக்கூடாது. ஏற்கெனவே இத்தகைய தொழில்/சேவை நடக்கும் இடங்களுக்குச் சென்று, அவற்றை நடத்துபவர்களின் அனுபவ அறிவையும் கேட்டுப் பெறுவது நல்லது. அவர்களிடமே சந்தை வாய்ப்புகளையும் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.