குடும்பமா... வேலையா? - 2

 மனப் போராட்டத்துக்கு முடிவு தேடும் தொடர்

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ன் மேரி ஸ்லாட்டர்... அமெரிக்காவின் புகழ்பெற்ற பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில், சர்வதேச உறவுகள் குறித்து மாணவர்களுக்குப் பாடம் எடுக்கும் பேராசிரியையாக இப்போது பணியாற்றுகிறார். இதற்கு முன்..?

அமெரிக்கா எந்த தேசத்தோடு வர்த்தக உறவுகொள்ள வேண்டும், எந்த தேசத்தோடு ராணுவ ரீதியான நட்பு பாராட்ட வேண்டும் என்பது துவங்கி... சர்வதேச அரசியலில் அமெரிக்காவின் நிலை, கொள்கை, வியூகம்... எல்லாம் எப்படி இருக்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதிக்கு வழிகாட்டும் உயர் அதிகாரியாக (Director of Policy Planning for the United States Department of State) பணியாற்றியவர் மேரி. அறிவும் அனுபவமும் முதிர்ச்சியும் கொண்ட எத்தனையோ பேர் இருந்தாலும், தெளிந்த சிந்தனையும் தீர்க்கமான செயல்பாடும் கொண்டவர்களுக்கு மட்டுமே இத்தகைய வாய்ப்பு கிடைக்கும்.

ஒரு நாள் கனடா, அடுத்த நாள் ஃபிரான்ஸ் என்று பல நாடுகளின் ஜனாதிபதிகளிடமும் பிரதமர்களிடமும் கசப்பான உண்மைகளையும் நிதர்சனங்களையும் காயப்படுத்தாத வார்த்தைகளால் புன்னகைத்துக் கொண்டே உணர்த்த வேண்டிய 'டிப்ளோமேட்டிக்' வேலை. ஒரு வார்த்தை பேசுவதாக இருந்தாலும், ஓராயிரம் முறை யோசித்து பேச வேண்டிய மிகமிக ஜாக்கிரதையான வேலை. அதிஉயர்ந்த பதவிதான். ஆனால், கம்பி மேல் நடப்பதைப் போல கவனமாக செய்ய வேண்டிய வேலை. ஒரே ஒரு நொடி கவனம் பிசகினாலும்... ஆட்டத்தில் இருந்தே காலி! உணர்ச்சிவசப்பட்டு ஒரே ஒரு பொருத்தமில்லாத வார்த்தையை சொல்லிவிட்டாலும் அது நாட்டுக்கே, பெரும் பின்னடைவை ஏற்படுத்திவிடும். சிலசமயங்களில் நட்பு நாடுகளைக்கூட எதிரிநாடாக்கி விடக்கூடும்.

மேரியின் கணவரும் பல்கலைக்கழக பேராசிரியர். இந்த தம்பதிக்கு பதின்பருவத்தில் இருக்கும் இரண்டு பிள்ளைகள். எட்டாம் வகுப்பு படிக்கும் மூத்த பையனுக்கு வயது 14. ஆறாம் வகுப்பு படிக்கும் தம்பிக்கு 12 வயது.

குடும்பமா... வேலையா? - 2

இனி, மேரி பேசுவதைக் கேட்போமா...

''இப்படி ஒரு பதவி கிடைக்காதா... என்று தகுதியும், அனுபவமும் கொண்ட பலரும் ஏங்கிக் கொண்டிருக்கும் அந்த வேலையில் சேர, ஜனாதிபதி மாளிகையில் இருந்தே அழைப்பு வந்ததால் சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போனேன். பிள்ளைகள் நியூஜெர்சியில் படித்துக் கொண்டிருந்ததால் வேலைக்காக அவர்களை பாதியிலேயே பள்ளிக்கூடம் மாற்றவில்லை. தவிர, கணவருக்கும் நியூஜெர்சியில்தான் வேலை. அதனால் வீட்டை மாற்றுவது பற்றி நான் யோசிக்கவே இல்லை. நியூஜெர்சிக்கும் வாஷிங்டனுக்குமான தூரம்... 325  கிலோ மீட்டர். சில மணி நேரங்களில் கடக்கக் கூடியதுதான். திங்கட்கிழமை காலையில் நியூஜெர்சியில் இருந்து வாஷிங்டனுக்கு சென்று, வெள்ளிக்கிழமை மாலை... அல்லது இரவு வீட்டுக்கு திரும்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். நான் செய்யும் வேலையின் முக்கியத்துவத்தை உணர்ந்த கணவரும், வீட்டில் இரண்டு பிள்ளைகளைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை முழுக்கவே எடுத்துக் கொண்டார்.

ஒரு நாள் நியூயார்க் நகரில் இருக்கும் ஐக்கிய நாடுகள் சபையில் மிகமுக்கியமான ஒரு கூட்டம். உலகத்தின் பல மூலைகளில் இருந்தும் தலைவர்களும், ஜனாதிபதிகளும், பிரதமர்களும் வந்திருந்தார்கள். அவர்களை எல்லாம் ஜனாதிபதி ஒபாமாவும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரியும் இடைவெளியே இல்லாமல் ஒருவர் மாற்றி ஒருவரை சந்தித்து பலவிதமான ஆலோசனைகள் செய்து கொண்டிருந்தார்கள். அன்று மாலை, வெளிநாட்டு தலைவர்களை கௌரவிக்கும்விதமாக ஒபாமா மிகப்பெரிய விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார். அந்தத் தலைவர்களை எல்லாம் வரவேற்று உபசரிக்க வேண்டிய கடமை எனக்கு. விருந்தில் ஓடியாடி ஒவ்வொரு தலைவராக சந்தித்து கவனித்துக் கொண்டிருந்த வேளையில்... வீட்டில் இருந்து போன். மறுமுனையில் எட்டாம் வகுப்பு படிக்கும் மூத்த மகன். 'மாம்... நாளையில் இருந்து நான் பள்ளிக்கூடம் போகமாட்டேன்!’ என்று ஒற்றை வரியில் ஒரு தகவல் சொன்னான். என்னைச் சுற்றி உலகமகா தலைவர்கள் பலர் சூழ்ந்திருந்த நிலையிலும், சராசரியான ஓர் அம்மாவாக, ''ஏண்டா அப்படி சொல்றே?'' என்று என்னால், பதற்றப்படாமல் இருக்க முடியவில்லை அந்த நொடியில்!

''நாளையில் இருந்து பரீட்சை துவங்குகிறது. எனக்கு ஒன்றுமே தெரியாது. பரீட்சையில் போய் என்ன எழுதுவது?'' என்று அடுத்தொரு குண்டைத் தூக்கிப் போட்டான்.

அன்று இரவு வீடு திரும்ப வெகு நேரம் ஆகிவிட்டது. என்றாலும், மாற்றி மாற்றி அவனை நான் சமாதானப்படுத்தினேன்.

நாட்கள் செல்லச் செல்ல... இப்படி நான் எங்காவது முக்கியமான மீட்டிங்கில் இருக்கும்போது வீட்டில் இருந்து பெரியவனோ... சின்னவனோ பேசுவார்கள். ஒரு சிலசமயம் அவர்களின் பள்ளி ஆசிரியர்கூட பேசுவார். அப்படித்தான் ஒரு நாள் பெரியவனின் ஆசிரியர் பேசினார்... 'இனி ஒருநாள்கூட உங்கள் பையனின் அட்டகாசத்தை எங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது. அவன் வீட்டுப் பாடமும் செய்வதில்லை. வகுப்பையும் கவனிப்பதில்லை. மற்ற மாணவர்களையும் பாடத்தைக் கவனிக்க விடுவதில்லை. ஏதாவது கேட்டால், தடித்த வார்த்தைகளால் கோபப்படுகிறான். இனியும் இவன் எங்கள் பள்ளியில் இருந்தால், மற்ற மாணவர்களின் படிப்பு கெட்டுவிடும். தயவுசெய்து உங்கள் பையனை வேறு பள்ளியில் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்படிச் சொல்வதற் காக நாங்கள் வருத்தப்படுகிறோம்.’

குடும்பமா... வேலையா? - 2

ஆண்கள் எட்டும் உயரங்களை பெண்களாலும் எட்ட முடியும் என்று ஆணித்தரமாக நம்புகிறவள் நான். வீடு - வேலை... இந்த இரண்டையும் வேலைக்குப் போகும் பெண்களால் பேலன்ஸ் செய்ய முடியும் என்பதிலும் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவள். அத்தனைக்கும் மேலாக வாஷிங்டன் வேலையையும் மிகவும் நேசித்தவள். இருந்தபோதும் அந்த வேலையை துறந்துவிட்டு, வீட்டுக்கு பக்கத்தில் ஏற்கெனவே நான் பேராசிரியையாக இருந்த பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்திலேயே மீண்டும் சேர்ந்துவிட்டேன்!

வெள்ளை மாளிகை வேலையை நான் ராஜினாமா செய்யப்போன சமயம், என் நெருங்கிய தோழி ஒருத்தி, 'என்ன இது முட்டாள்தனமான முடிவு! உன்னைப் போன்ற ஒரு துணிச்சலான பெண்மணியே, குடும்பத்தைப் பார்த்துக் கொள்ள முடியவில்லை என்று இதுபோன்ற அதிகாரம் மிகுந்த வேலையை உதறிவிட்டு, ஈஸியான வேலையைத் தேடிப் போய்விட்டால்... உன்னை ஆதர்சமாக நினைத்துக் கொண்டு இருக்கும் பல பெண்களின் மன உறுதியை அது குலைத்துவிடும். அவர்கள் பொருட்டாவது நீ உன் முடிவை மறுபரிசீலனை செய்’ என்றாள். என் முடிவில் உறுதியாக இருந்ததால், நியூஜெர்சி திரும்பிவிட்டேன். என் தோழி எச்சரித்ததைப் போலவே பேராசிரியர் வேலைக்கு திரும்பியதும் பலர் அதிருப்தியோடு இ-மெயில் அனுப்பி இருந்தார்கள்.

'அத்தனைக்கும் ஆசைப்படு என்று சொல்வது சுலபம். ஆனால், ஒரு பெண்ணால், அதுவும் பதின்பருவத்தில் இரண்டு பையன்களை வைத் திருக்கும் ஒரு தாயால் அத்தனைக்கும் ஆசைப்பட முடியாது!’ என்று என் மனதில் பட்டதை அப் படியே 'தி அட்லான்டிக்’ பத்திரிகையில் நான் கட்டுரை எழுதினேன் அதைப் படித்துவிட்டு,

'உங்களால் முடியாது என்றால், பேசாமல் இருக்க வேண்டியதுதானே..? அதற்காக எந்த ஒரு பெண்ணாலும் எல்லாவற்றுக்கும் ஆசைப் பட முடியாது என்று நீங்கள் எப்படி பொதுமைப் படுத்தி - பலவீனப்படுத்தி எழுதலாம். உங்கள் எழுத்து எத்தனை பெண்களை வீட்டுக்குள்ளேயே முடக்கும் தெரியுமா? பணி இடங்களில் ஆண் களோடு போட்டி போட்டுக் கொண்டு முன்னேறத் துடிக்கும் பல பெண்களை உங்கள் கருத்து கீழ்நோக்கி இழுத்துவிடும் என்று உங்களுக்குத் தெரியாதா..?’ என்று கோபப்பட்டார்கள்.

ஒரு காலத்தில் நானே இப்படி பேசிக் கொண்டிருந்தவள்தான் என்பதால்... எனக்கு இவை ஒன்றும் புதிதாகத் தெரியவில்லை. ஆனால், வாழ்க்கை எனக்கு அனுபவப்பூர்வமாக சொல்லிக் கொடுத்ததை என்னால் பொய் என்று எப்படி மறுதலிக்க முடியும்?!''

- புன்னகை மாறாமல் கேட்கிறார் மேரி.

தன்னை நோக்கி வந்த கூர்மையான கேள்விகளுக்கும், வாழ்க்கை முன் எதிர்நின்ற சவாலான சந்தர்ப்பங்களுக்கும் மேரி சொன்ன பதில்கள்... அடுத்த இதழில்!

யோசிப்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism