குடும்பமா... வேலையா? - 3
##~##

'உங்கள் எழுத்து, எத்தனை பெண்களை வீட்டுக்குள்ளேயே முடக்கும் தெரியுமா? ஆண்களோடு போட்டி போட்டுக் கொண்டு முன்னேறத் துடிக்கும் பல பெண்களை உங்கள் கருத்து கீழ்நோக்கி இழுத்துவிடும்...’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- இப்படி எழுந்த கூர்மையான கேள்விகளாலும், எதிர்நின்ற சவாலான சந்தர்ப்பங்களாலும் நிலைகுலையவில்லை ஆன் மேரி ஸ்லாட்டர்.

''குடும்பமா... வேலையா? என்கிற குழப்பமான கேள்வி எழுந்தபோது... வானளாவிய அதிகாரமும், உலகளாவிய அந்தஸ்தும் நிறைந்த அமெரிக்க வெளியுறவுத்துறை வேலையை உதறினேன். அதற்கு முன்பாக, என்னை நானே கேட்டுக் கொண்ட கேள்வி என்ன தெரியுமா? 'நான் யாருக்கு மிகமிக அவசியமாகத் தேவை? அமெரிக்க ஜனாதிபதி அலுவலகத்துக்கும், வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலரி கிளின்டனுக்குமா? அல்லது வீட்டுப்பாடத்தில் இருந்து, சகநண்பர்கள் வரை எதையும் புரிந்துகொள்ள முடியாமல் அவஸ்தைப்படும் என் பிள்ளைகளுக்கா?’

'பெண் என்பவளால், ஒரே சமயத்தில் பல உலகத் தலைவர்களை டீல் செய்யும் வேகமும், சாதுர்யமும், நிதானமும், பக்குவமும், தேவைப்படும் தூதரக வேலையையும் செய்ய முடியும்; கூடவே குடும்பம், குழந்தைகள் ஆகியவற்றையும் சிறப்பாகவும் பராமரிக்க முடியும்' என்று பேசினால்... கைதட்டல்கள் கிடைக்கும். ஆனால், அது உண்மையாக இருக்குமா? பெண்களை உற்சாகப்படுத்துகிறேன் பேர்வழி என்று, உண்மையான பிரச்னைகளை மூடிமறைப்பது... அவர்களுக்கு செய்யும் துரோகம் என்றே நான் கருதுகிறேன்.

நன்கு படித்த, உலகம் தெரிந்த, அனுபவமுள்ள, 'இந்த வேலை இல்லாவிட்டால்... இன்னொரு வேலை கிடைக்கும்’ என்கிற சாய்ஸ் உள்ள பெண்கள் இங்கே மிகக்குறைவு. வேலைக்குப் போகும் பெண்கள் எல்லோருமே அப்படி ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் இல்லை. 'வேலைக்கு போனால்தான் வீட்டு வாடகையே கொடுக்க முடியும்’ என்கிற சூழ்நிலையில் இருக்கும் பெண்கள் துவங்கி, கணவரின் ஒத்துழைப்பு கொஞ்சமும் இல்லாத பெண்கள் வரை பலதரப்பட்டவர்களும் சமூகத்தில் நிறைந்திருக்கிறார்கள் என்பதை நான் உணர்ந்தே இருக்கிறேன்.

வேலைக்குச் செல்லும் ஒரு பெண்ணுக்கு அனுசரணையான கணவன் அமைந்துவிட்டாலும்... குடும்பத்தையும் குழந்தைகளையும் மறந்து அவளால் நூறு சதவிகிதம் வேலையில் மூழ்கிவிட முடியும் என்று உறுதியாகச் சொல்லிவிட முடியாது. காரணம்... ஒரு தாயின் மனசு, குழந்தைகளை மையமாக வைத்தே சதாசர்வகாலமும் சுற்றிக் கொண்டிருக்கும்.

'ஆபீஸுக்கு கொஞ்சம் லேட்டானால் பரவாயில்லை. குழந்தையைப் பள்ளிக்கூடத்தில் விட்டுவிட்டுச் செல்லுங்கள்’ என்று கணவனிடம் சொன்னால், 'ஸ்கூல் வேனில் அனுப்பு. இல்லை டாக்ஸியில் அனுப்பு’ என்று வெடுக்கென்று பதில் சொல்பவர்களே இங்கே அதிகம். காரணம், ஆபீஸ் வேலைவிட்டு, குழந்தைகளைப் பள்ளிக்கூடம் அழைத்து செல்வதையோ... வீட்டுப்பாடம் சொல்லிக் கொடுப்பதையோ ஆண்களில் பெரும்பாலானவர்கள் குற்ற உணர்ச்சியோடுதான் செய்வார்கள்!

ஆண்களோடு போட்டி போட்டுக் கொண்டு வேலை செய்யும் இடத்தில் முன்னேற வேண்டும் என்றால்... ஒரு பெண்ணும் தன் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதை குற்ற உணர்ச்சியோடுதான் செய்ய வேண்டும். இந்த மனநிலை ஒரு பெண்ணுக்கு... குறிப்பாக ஒரு தாய்க்கு நிச்சயம் வரவே வராது! அதிகப்படியாக பயணம் செய்ய வேண்டி இருக்கும்... அல்லது ஆபீஸில் நேரம் செலவிட வேண்டி இருக்கும் என்கிற காரணங்களுக்காக எத்தனை பெண்கள் 'பதவி உயர்வே வேண்டாம். இந்த வேலையிலேயே இருந்துவிடுகிறேன்!’ என்று முடிவெடுத்து கீழ்மட்ட வேலைகளிலேயே தங்கிவிடுகிறார்கள் என்று நம் எல்லோருக்கும் தெரியும்தானே!

பெரிய பதவிகளில் பெண்கள் தொடர்ந்து வேலை செய்ய தடையாக இருப்பது எது என்று நான் ஆராய்ந்ததில் இரண்டு விஷயங்கள் தெளிவாகத் தெரிந்தன. முதலாவது, கல்வி முறை. பெண்கள் வீட்டோடு இருந்து குழந்தைகளைப் பார்த்துக் கொண்டபோது ஏற்பட்ட அதே கல்விமுறையை, பெண்கள் வேலைக்குச் செல்லும் இக்காலத்திலும் தொடர்வது சரியில்லை. வேலைக்குப் போகும் பெண்களின் வசதியைக் கருத்தில் கொண்டு கல்வி முறையை மாற்றியமைக்க வேண்டும்.

அடுத்து, அந்த கான்ஃபரன்ஸ், இந்த கான்ஃபரன்ஸ் என்கிற பெயர்களில் அடிக்கடி ஆண்கள் ஆபீஸ் டூர் ஏற்பாடு செய்வதை பல பெண்களால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.

குடும்பமா... வேலையா? - 3

இதைப்பற்றி கேட்டால்... 'இதெல்லாம் நமது கையில் இல்லை' என்கிற பதில்தான் கிடைக்கும். அப்படியென்றால், நமது கையில் என்னதான் இருக்கிறது? திட்டமிடுதலில்தான் சூட்சமம் இருக்கிறது. 25 வயதுக்குள் ஒரு பெண் திருமணம் செய்து, குழந்தைகள் பெற்றுக்கொண்டால்... அவளின் 43 வயதுக்குள் குழந்தைகள் பள்ளிப் படிப்பை முடித்து, கல்லூரிக்குப் போய்விடுவார்கள். 43 வயதில் ஒரு பெண்ணுக்கு உடம்பில் நல்ல தெம்பு இருக்கும். செய்யும் வேலையில் முழுகவனம் செலுத்த முடியும்.

இதை சொல்லும்போதே... இந்த திட்டத்தில் இருக்கும் குறைகள் எனக்குத் தெரியாமல் இல்லை. ஒரு பெண் 25 வயதுக்குள் திருமணம் செய்துகொண்டு குழந்தைகளையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால்... படிப்பை முடித்து வேலையில் சேர்ந்த உடனேயே இதெல்லாம் அடுத்தடுத்து நடந்தாக வேண்டும். அப்படி என்றால் 'கேரியர்’ என்பது ஆரம்பிக்கும்போதே சறுக்க ஆரம்பிக்கும். அதுமட்டுமல்ல... குழந்தைகள் சிறியவர்களாக இருக்கும்போதுதான் குடும்பத்துக்கும் பணம் அவசியமாகத் தேவைப்படும். அந்தச் சமயத்தில் வேலை, பதவி உயர்வு, சம்பளம்... எல்லாம் மிக முக்கியமானதாகவே இருக்கும். குழந்தைகள் கல்லூரி போகும்வரை காத்திருந்துவிட்டு, ஒரு பெண் ஆற அமர 43 வயதில் வேலை தேட ஆரம்பித்தால்... எங்கிருந்து கிடைக்கும்?

அதனால்தான் அமெரிக்காவில் பெரும்பாலான பெண்கள், படிப்பு முடிந்ததும் ஒரு வேலையில் செட்டில் ஆகிவிட்டு 30, 35 வயதில் குழந்தை பெற்றுக் கொள்வதை வழக்கமாக்கிக் கொள்கிறார்கள். ஆனால், வேலை, பதவி உயர்வு... என்று நான் அவர்களைவிட இன்னும் மும்மரமாக இருந்துவிட்டதால்... 35 வயதில்தான் குழந்தையைப் பற்றியே சிந்திக்க ஆரம்பித்தேன். முதல் குழந்தை பெற்றுக்கொள்வதற்கான வயது அல்ல அது என்பதால்... மருத்துவர்களின் உதவியோடு கருத்தரித்தேன். 38 வயதில்தான் முதல் குழந்தையே பிறந்தது. இரண்டாவது குழந்தை பிறக்கும்போது எனக்கு வயது 40.

திட்டமிட்டதைப் போலவே கேரியரின் உச்சத்துக்குப் போனேன். லேட்டாக குழந்தைகள் பெற்றுக் கொண்டதால் குழந்தைகளின் தேவைகளும் - வேலையின் பளுவும் ஒரே சமயத்தில் அழுத்தின. 'குடும்பமா... வேலையா..?' என்று கேள்வி எழுந்தபோது... இரண்டுக்கும் இடையில் ஒரு சாய்ஸை தேர்ந்தெடுத்தேன்.

வெள்ளை மாளிகை வேலை அளவுக்கு இப்போது நான் பார்க்கும் பேராசிரியர் வேலை கடினமானது இல்லை. இருந்தாலும் இதிலும் எட்டு மணி நேரத்துக்கு மேலாக வேலை. கருத்தரங்குகளில் வெளியுறவுக் கொள்கை பற்றி உரையாற்றுகிறேன். பத்திரிகை, தொலைக்காட்சி என பிஸியாகவே இருக்கிறேன். ஆனால், இந்த வேலைகளில் எதை வேண்டுமானாலும் வசதிக்கு ஏற்ப மாற்றி அமைத்துக்கொள்ள முடியும். பிள்ளைகளையும் சந்தோஷமாக கவனித்துக் கொள்ள முடியும். குடும்பத்தையும் வேலையையும் சரியாக பேலன்ஸ் செய்யாவிட்டால்... மகிழ்ச்சி இருக்காது என்பதே அனுபவ உண்மை!

ஆன் மேரியின் அனுபவம்... அமெரிக்க அனுபவம்! சரி... அதிகாரத்திலும் பொறுப்பிலும் உச்சத்தில் இருக்கும் நம் ஊர் பெண்கள், குடும்பத்தையும் வேலையையும் எப்படி சமன் செய்கிறார்கள்..?!

- யோசிப்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism