குடும்பமா... வேலையா? - 4

மனப் போராட்டத்துக்கு முடிவு தேடும் தொடர்

'குடும்பமா... வேலையா?’ என்ற கேள்வி வேண்டுமானால் ஒன்றாக இருக்கலாம். ஆனால், ஒவ்வொரு பெண்ணுமே பல்வேறு விதமான சூழ்நிலைகளில் இருந்துதான் இக்கேள்வியைச் சந்திக்கிறாள். சூழ்நிலைகள் சிக்கல் நிறைந்ததாக இருப்பதாலேயே பலசமயங்களில் பதிலும் குழப்பம் நிறைந்ததாகவே இருக்கிறது. நம்மூரைச் சேர்ந்த ரேணுகா ராம்நாத்துக்கு இக்கேள்வி எழுந்த சூழ்நிலை அசாதாரணமானது. தவிர, காலம் அவருக்கு எந்த சாய்ஸும் கொடுக்கவில்லை. 'குடும்பம் - வேலை இந்த இரண்டையும் எப்படி சமாளிக்கப் போகிறாய்?’ என்றுதான் அவரிடம் கேள்வி எழுப்பியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##

காலம் எழுப்பிய கேள்விகளை ரேணுகா எப்படி சமாளித்தார்? அதைப் பற்றி பார்ப்பதற்கு முன்பாக ரேணுகா யார் என்பதைச் சொல்லியாக வேண்டும். ஆசிய அளவில் பிஸினஸில் சாதனை படைத்த 50 பெண்களில் ஒருவர் என்று 'ஃபோர்ப்ஸ்’ பத்திரிகையால் பாராட்டப்பட்டவர். சூப்பர் மார்க்கெட், ஹைப்பர் மார்க்கெட், விமான சர்வீஸ்... போன்ற துறைகள் எல்லாம் நம்நாட்டில் இன்று கணிசமாக வளர்ந்திருக்கிறது என்றால்... அதில் ரேணுகாவின் பங்கும் முக்கியமானது. ஏர் டெக்கான் தொடங்கி, பேன்டலூன்ஸ் வரை, பி.வி.ஆர் சினிமாஸ் துவங்கி... சுபிக்ஷா வரை பல சிகரங்களையும் பள்ளத்தாக்குகளையும் கண்டவர் ரேணுகா.

ஐ.சி.ஐ.சி.ஐ வென்ச்சரின் ஆரம்பம் முதற்கொண்டு அதன் மேலாண் இயக்குநராக செயல்பட்டு அதை நிர்மாணித்த இவர், இப்போது 'மல்டிபிள் ஆல்டர்னேட் அசட் மேனேஜ்மென்ட்’ என்கிற நிறுவனத்தை சொந்தமாக நடத்தி வருகிறார். கோடிக்கணக்கில் பணம் வைத்திருக்கும் நிதி நிறுவனங்களிடம் இருந்து பணத்தை வாங்கி, பிரகாசமான எதிர்காலம் கொண்ட வளர்ந்து வரும் தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்வதுதான் ரேணுகாவின் வேலை.

குடும்பமா... வேலையா? - 4

ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாயும் கரன்ட் கம்பியில்கூட வேலை பார்த்துவிடலாம். ஆனால், சிலரிடமிருந்து பல ஆயிரம் கோடிகளை வாங்கி... அதை பல கம்பெனிகளில் முதலீடு செய்வதும்... செய்த முதலீடு செம்மையாக வளர கண் இமைக்காமல் பாதை போட்டு காவல் இருப்பதும்... அதிலிருந்து கிடைக்கும் லாபத்தை பணம் கொடுத்தவர்களுக்கு உரிய காலத்தில் திரும்ப கொடுப்பதும்.... நிமிடத்துக்கு 60 ஹார்ட் அட்டாக்களை வரவழைக்கக்கூடிய வேலை. என்றாலும் இதை பாலே நடனம் மாதிரி மிக அற்புதமாக செய்து வருகிறார் ரேணுகா! குடும்பம் - வேலை... இந்த இரண்டையும் இவர் எப்படி பேலன்ஸ் செய்கிறார் என்பதை இப்போது அவரது வார்த்தைகளிலேயே கேட்போம்.

''என்னதான் மும்பையில் வசித்தாலும், அடிப்படையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த குடும்பம் என்பதால் எங்கள் வீட்டில் நிறைய கட்டுப்பாடுகள். நான் பள்ளிப் படிப்பை முடித்த சமயம், 'பெண்களுக்கு இன்ஜினீயரிங் சரிவராது’ என்று என் அண்ணன் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தான். 'அதை எப்படி நீ முடிவு செய்ய முடியும்?’ என்று நான் வீரமாதா ஜிஜாபாய் இன்ஜினீயரிங் கல்லூரிக்கு விண்ணப்பித்தேன். டெக்ஸ்டைல் என்பது பெண்களோடு தொடர்பு உடையது. அதனால் டெக்ஸ்டைல் இன்ஜினீயரிங் எடுத்தால் அண்ணன் கொஞ்சம் சமாதானம் ஆவான் என்ற எண்ணம்.

ஆனால், இன்டர்வியூவுக்கு போனபோதுதான் தெரிந்தது... டெக்ஸ்டைல் இன்ஜினீயரிங் என்பது முழுக்க முழுக்க ஆண்கள் மட்டுமே படிக்கும் துறை என்று! அந்தக் கல்லூரி துவங்கப்பட்டதில் இருந்து மொத்தமே மூன்று, நான்கு பெண்கள்தான் டெக்ஸ்டைல் இன்ஜினீயரிங் படித்து இருக்கிறார்களாம். நேர்முகத் தேர்வின்போது இதை சொன்ன பிரின்ஸிபால், 'நீ வற்புறுத்தி கேட்பதால் உனக்கு நான் ஸீட் கொடுத்துவிடுவேன். ஆனால், நீ நான்கு வருடம் படித்து முடித்த பிறகு, உனக்கு யாரும் வேலை கொடுக்க மாட்டார்கள். காரணம்... பிரமாண்டமான இயந்திரங்களை இயக்கும் பஞ்சாலைகளில் பெண்கள் வேலை செய்வது சிரமம். அதனால் வேலை என்றுகூட இல்லை... நீ பெண் என்பதால் புராஜெக்ட் செய்யக்கூட எந்த பஞ்சாலையும் உனக்கு வாய்ப்பு கொடுக்காது!’ என்று எச்சரித்தார்.

குடும்பமா... வேலையா? - 4

இளரத்தம் என்பதால் விடாப்பிடியாக டெக்ஸ்டைல் இன்ஜினீயரிங்கே சேர்ந்தேன். என்னுடைய வகுப்பில் என்னைத் தவிர அனைவருமே ஆண்கள். என்னதான் மும்பை என்றாலும் நான் படித்த காலத்தில் அந்தக் கல்லூரி கொஞ்சம் கட்டுப்பெட்டியாகவே இருந்தது. சக மாணவர்கள் யாரும் முகம் கொடுத்து பேசவில்லை. வகுப்பறையில் தனிமையில் இருப்பதைப் போலவே உணர்ந்தேன்.

ஒரு வருடம் இப்படிக் கழிந்தது. எஞ்சி இருக்கும் மூன்று வருடங்களும் இப்படியேதான் இருக்கும் என்றால், அது மிகப்பெரிய நரகமாகத்தான் இருக்கும் என்பதால், என்ன பிரச்னை என்று யோசித்தேன். இரண்டாம் ஆண்டு வகுப்புகள் துவங்கியபோது புத்தம் புது மனுஷியாக வகுப்புக்குச் சென்றேன். 'நான் பெண். அதனால் என்னை ஸ்பெஷலாக நடத்த வேண்டும்’ என்று அடிமனதில் படிந்திருந்த எதிர்பார்பை துடைத்தெறிந்தேன். மற்ற விஷயங்கள் எல்லாம் தானாகவே சரியாக ஆரம்பித்தன. எந்தவித விகல்பமும் இல்லாமல் சக மாணவர்களோடு ஐக்கியமாகி படிக்க ஆரம்பித்தேன். கல்லூரியை விட்டு கோல்டு மெடலோடு வெளியே வந்தேன். டெக்ஸ்டைல் இன்ஜினீயரிங் மட்டுமல்ல, வாழ்க்கையை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் அக்கல்லூரியில் கிடைத்த அனுபவம்தான் எனக்கு சொல்லிக் கொடுத்தது.

'சக மாணவர்கள் எல்லாம் திமிர் பிடித்தவர்கள். ஆசிரியர்கள் எல்லாம் அறுவை மன்னர்கள். குடும்பத்தில் இருப்பவர்களால் என்னை புரிந்துகொள்ள முடியவில்லை.... என்று சுற்றி இருப்பவர்களை குறை சொல்லிக் கொண்டிருந்தால், இருக்கும் இடத்திலேயேதான் இருப்போம். மாற வேண்டியது சுற்றி இருப்பவர்கள் இல்லை. அவர்களை நம்மால் மாற்றவும் முடியாது. நாம்தான் மாறியாக வேண்டும்!’ என்கிற மாமந்திரத்தை கல்லூரிதான் போதி மரம் மாதிரி எனக்கு உணர்த்தியது.

திருமணமாகி ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் வேலைக்குச் சேர்ந்து வாழ்க்கை ஒரு பக்கம் சுறுசுறுப்பாகவும் சந்தோஷமாகவும் ஓடிக் கொண்டிருந்தது. வங்கி வேலை என்றதுமே... ஒரே இடத்தில் உட்கார்ந்து பார்க்கும் வேலை என்று கற்பனை செய்து கொள்ளக்கூடாது. நான் வேலை பார்த்தது தனியார் வங்கி. அதுவும் இலக்குகளை நிர்ணயித்துவிட்டு, எட்டிப்பிடிக்க எப்போதும் ஓடிக்கொண்டே இருக்க வேண்டிய பரபரப்பான வேலை. வேலை விஷயமாக பல கம்பெனிகளின் உயர் அதிகாரிகளை தினம் தினம் சந்திக்க வேண்டி இருக்கும்.

கர்ப்பிணியான நான், லிஃப்ட் கூட இல்லாத பல கட்டடங்களில் மூன்றாவது மாடிக்கு ஏற வேண்டிய நிர்ப்பந்தம் அடிக்கடி நேரும். அங்கு மீட்டிங் ஆரம்பித்துவிட்டால்... லஞ்ச் டைம் கடந்து கொண்டிருப்பதுகூட யாருக்கும் தெரியாது. 'வாயும் வயிறுமா இருக்கீங்களே... பாத்ரூம் போகணுமா... சாப்டீங்களா?’ என்றெல்லாம் எந்த கிளயன்ட்டும் கேட்க மாட்டார்கள். இத்தகைய சூழல்களில்... கல்லூரி காலத்தின்போது எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை நினைவுபடுத்திக் கொள்வேன். 'பெண் என்பதால் என்னை ஸ்பெஷலாக நடத்துங்கள் என்று சொல்லி யாரிடமும் எந்த சலுகையும் கேட்கக் கூடாது’ என்று எனக்கு நானே திரும்பத் திரும்ப சொல்லிக் கொள்வேன்.

குடும்பமா... வேலையா? - 4

எல்லா ஆண்களாலும், பெண்களின் கஷ்டங்களைப் புரிந்துகொள்ள முடியாது. போகும் இடத்தில் நாம் சந்திக்கும் ஆண்கள் எல்லாம் நம்மைப் புரிந்துகொண்டு நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதே அறியாமை என்பது எனக்குப் புரிய ஆரம்பித்தது. இந்த புரிதலே எனக்குள் ஒரு புதிய தெளிவை ஏற்படுத்தியது. அதனால் இலக்குகளை என்னால் சுலபமாக எட்ட முடிந்தது. சவாலான புதிய பொறுப்புகளைக் கொடுத்தார்கள். குடும்பத்திலும் சந்தோஷத்துக்கு பஞ்சமே இல்லை. அன்பான கணவர், அழகான இரண்டு குழந்தைகள், பாசமிக்க அப்பா, அம்மா, உடன் பிறந்தவர்கள், அம்மா என்று நான் அழைக்கும் மாமியார்... என்று சகலமும் எனக்கு கடவுளின் கிருபையால் வாய்த்தது.

இந்த சந்தோஷமான காலகட்டத்தில் குடும்பத்தோடு சுற்றுலா சென்றுவிட்டு வீட்டுக்கு காரில் திரும்பியபோது, விபத்தில் என் கணவர் எங்களை விட்டு பிரிந்துவிட... வாழ்க்கையே தலைகீழாக புரட்டிப் போடப்பட்டு விட்டது. அப்போது என் மகனுக்கு வயது 7. மகளுக்கு வயது 3. வீட்டுச் சுமை முழுவதையும் சுமக்க வேண்டிய நிர்ப்பந்தம் மொத்தமாக என் தோளில் வந்து உட்கார்ந்தது!

வீட்டில் இருந்து குழந்தைகளைக் கவனிப்பதா... அல்லது வேலைக்கு போய் குழந்தைகளின் படிப்புக்கும், வீட்டுத் தேவைக்குமான பணத்தை சம்பாதிப்பதா என்கிற கேள்வி என்னைக் குடைந்தெடுத்தது..!''

ரேணுகா என்ன செய்தார்?

யோசிப்போம்...