##~##

மனப் போராட்டத்துக்கு முடிவு தேடும் தொடர்

ந்தவித சாய்ஸும் கொடுக்காமல், 'வீடு - வேலை... இரண்டையுமே நீதான் பார்த்துக்கொள்ள வேண்டும்’ என்று காலம் இட்ட கட்டளையை ஏற்று ஜெயித்த ரேணுகா ராம்நாத், கணவரின் திடீர் மறைவுக்குப் பின்னரும் வீடு, வேலை இரண்டையும் ஒருசேர கவனித்து, வெற்றிப் பாதையில் பயணிப்பதை, இங்கே தொடர்கிறார்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''கணவர் எப்போதும் சிரஞ்சீவியாக நம்மோடு இருக்கப் போகிறார் என்கிற எண்ணத்திலேயே வாழ்ந்து கொண்டிருந்த என்னை, அவருடைய திடீர் மரணம் இடியாகத் தாக்கியது. விபத்தினால் ஏற்பட்ட காயங்களுக்காக சிகிச்சை பெற்றுவந்த ஏழு வயது மகன், கணவர் இறந்த இரண்டாவது நாள் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்தான். 'அப்பா எங்கே?’ என்று அவன் தன் பெரியப்பாவிடம், கேட்க, சுவாமி படங்களுக்கு இடையே புதிதாக மாலை போட்டு மாட்டப்பட்டிருந்த கணவரின் புகைப்படத்தைக் காட்டினார். சிறிது நேரம் மௌனமாக இருந்தவன், 'நான் மருத்துவமனையில் இருந்து வரும் வரை எனக்காகக் காத்திருப்பீர்கள் என்று நினைத்தேன். ஆனால், அதற்குள் எல்லாவற்றையும் முடித்துவிட்டீர்களா... சரி, பரவாயில்லை’ என்று சொல்ல, சுற்றி இருந்த எங்கள் அத்தனை பேருக்கும் அழுகை வெடித்துக்கொண்டு வந்தது. அதேசமயம், அந்தச் சின்ன வயதில், அத்தனை பெரிய இழப்பை, இப்படி ஒரு பக்குவத்தோடு அவன் எதிர்கொண்டதை பார்த்து எனக்குள் அப்படி ஒரு பிரமிப்பு. இத்தனைக்கும் இதுநாள்வரை அவனுக்கு அப்பாதான் உயிர், உலகம்!

எல்லோரும் சோகம் அப்பிய முகத்தோடு உட்கார்ந்திருப்பதைப் பார்த்தவன், தனது பாட்டியிடம் சென்று, 'பாட்டி, கவலைப்படாதீங்க. அம்மாவை இனிமேல் 4 நாள் பேன்ட்டும், 3 நாள் புடவையும் கட்டிக்கச் சொல்றேன். அம்மா அப்படி செய்தா... எங்களுக்கு அம்மாவும் இருப்பாங்க, அப்பாவும் இருப்பார்!’ என்று சொல்ல... புதிதாக எனக்கு வந்திருக்கும் பொறுப்புகள் அந்தக் கணம்தான் 'சுரீர்’ என்று உறைத்தது. அந்த நேரம், மூன்று வயது மகள் என்னிடம் வந்து, 'அழாதீங்கம்மா, கண்ணைத் துடைச்சுக்குங்கம்மா, நல்ல புடவை கட்டிக்குங்கம்மா, சிரிங்கம்மா!’ என்று சொல்லி அழ ஆரம்பித்தாள்.

குடும்பமா... வேலையா? - 5

அழுது வீங்கிய கண்களைத் துடைத்தபோது, பார்வை மட்டுமல்ல... பாதையும் தெளிவாகத் தெரிய ஆரம்பித்தது. 'இனி குழந்தைகளுக்கு நாம்தான் அப்பா, அம்மா' என்பது நன்றாகவே புரிந்தது. கூடவே, எனக்குள் ஒரு வைராக்கியமும் பிறந்தது. கணவர் இருந்தால் என் பிள்ளைகளுக்கு என்ன மாதிரி படிப்பு கிடைக்குமோ, என்ன மாதிரி சந்தோஷம் கிடைக்குமோ, என்ன மாதிரி வாழ்க்கை கிடைக்குமோ... அவை எல்லாவற்றையும் நான் சாத்தியப்படுத்த வேண்டும். அப்பா இல்லை என்பதற்காக அவர்கள் எதையும் இழந்துவிடக் கூடாது!

கணவரை நான் இழந்த அந்த நேரம், யாருமே கொடுக்க முடியாத ஓர் ஆதரவை, நான் வேலை செய்த ஐ.சி.ஐ.சி.ஐ கொடுத்தது. என் சேர்மன், என்னை அழைத்து, 'உன்னுடைய குடும்ப சூழ்நிலை எனக்கு நன்கு தெரியும். உன்னுடைய குழந்தைகள் படிப்புக்கும் எதிர்காலத்துக்கும் மட்டுமல்ல... குடும்பத்தில் இருக்கும் பெரியவர்களின் வைத்தியச் செலவு துவங்கி, மாதாந்திர செலவுகள் வரை அனைத்துச் செலவுகளுக்கும் பணம் முக்கியம். நீ சரி என்று சொன்னால், நமது வங்கியோடு நல்ல உறவு முறையில் இருக்கும் ஜெ.பி.மோர்கன் என்ற அமெரிக்கக் கம்பெனியிலேயே வேலை வாங்கித் தருகிறேன். ஆனால், அதற்காக நீ நியூயார்க் போக வேண்டும். நீ யார், உன் திறமை என்ன என்றெல்லாம் இங்கு இருப்பவர்களுக்குத் தெரியும். ஆனால், ஜெ.பி.மோர்கன் உனக்கு புதிய கம்பெனி. உன்னை நிரூபிக்க, அங்கு கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். உன் குழந்தைகளை உன்னோடு அழைத்துச் சென்றால், வேலையில் முழுமையாகக் கவனம் செலுத்த முடியாது. ஒரே ஆண்டில் உன் திறமைகளைப் புரிந்துகொண்டு எல்லா வசதிகளையும் செய்து கொடுப்பார்கள். அதன்பிறகு குழந்தைகளை அமெரிக்காவுக்கு அழைத்துப் போய் நன்கு படிக்கவை’ என்று சொன்னார்.

ஐ.சி.ஐ.சி.ஐ எனக்கு இன்னொரு சாய்ஸும் கொடுத்தது. 'நீங்கள் இப்போது செய்யும் வேலை பரபரப்பான வேலை. கால நேரம் தெரியாமல் இலக்குகளை நோக்கி ஓடும் வேலை. இதில் உங்களால் தொடர்ந்து இருக்க முடியாது. குறைந்தது ஏழு மணிக்காவது நீங்கள் வீட்டுக்குப் போயாக வேண்டும். அதனால், இன்வெஸ்ட்மென்ட் பேங்க்கர் என்கிற இந்த வேலை வேண்டாம். ஒரே இடத்தில் உட்கார்ந்து கணக்கு எழுதும் செக்ஷனுக்கு நீங்கள் விரும்பினால் மாற்றல் கொடுத்துவிடுகிறோம்’ என்றும் சொன்னார்கள்.

குடும்பமா... வேலையா? - 5

என் சம்பளத்தை நம்பித்தான் குடும்பம் இருக்கிறது என்பது உண்மை. என்றாலும், பணத்துக்காக குழந்தைகளைப் பிரிந்து அமெரிக்கா போக நான் விரும்பவில்லை. அதேசமயம், இங்கேயே பார்த்துக் கொண்டிருக்கும் வேலையிலும் சமரசம் செய்துகொள்ளவில்லை. காரணம், செய்கின்ற வேலையில் எனக்கு திருப்தி இருக்க வேண்டும். அப்போதுதான் என்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியும். நான் மகிழ்ச்சியாக இருந்தால்தான், குடும்பத்தை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள முடியும் என்று முடிவெடுத்து, ஏற்கெனவே செய்து வந்த வேலையையே தொடர்ந்தேன்.  

'வாழ்க்கை ஒரு 'பிளாக் பாக்ஸ்’ மாதிரி. அதில் என்ன ரகசியங்கள் புதைந்து கிடக்கின்றன என்பது யாருக்கும் தெரியாது’ என்பார்கள். ஆனால், என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு நாளுமே ஒரு பிளாக்ஸ் பாக்ஸ் மாதிரிதான் விடிந்தது. ஆபீஸ் முடிந்து ஒவ்வொரு நாளும் லேட்டாக நான் வீட்டுக்கு வரும்போது, ஒரு புதிய பிரச்னை அங்கு எனக்காக காத்திருக்கும். நான் உள்ளே நுழையப்போவது ஒரு மகிழ்ச்சி ததும்பும் இல்லத்திலா அல்லது போர்க்களத்திலா என்பது எனக்கே தெரியாது. கணவரை இழந்து தவித்த அந்த நேரத்தில் எனக்கு உறுதுணையாக இருக்க வேண்டிய பெற்றோர்களும் துவண்டு போனார்கள். கணவரின் அகால மரணம், என்னைவிட அவர்களைத்தான் அதிகம் பாதித்தது. இந்த சமயத்தில் மாமியார்தான், என் பிள்ளைகளைப் பார்த்துக் கொண்டார்.

'ஏம்மா... ஒரு அஞ்சாயிரம் ரூபாய் குறைச்சலா சம்பளம் வந்தாகூட பரவாயில்லை. சாயங்காலம் அஞ்சு மணிக்கு வீடு வந்து சேர்ற மாதிரி வேலையைக் குறைச்சுக்க முடியாதா..?!’ என்று மாமியார் அப்பாவியாக கேட்பார். 'இது ஓட்டப் பந்தயம். ஒன்று, ஓடியாக வேண்டும்... இல்லையென்றால், முழுமையாக ஒதுங்கிக்கொள்ள வேண்டும்!’ என்பதை அவருக்குப் புரியவைக்க முடியாது. 'கொஞ்ச காலம்தான். எல்லாம் சரியாயிடும்!’ என்று சமாதானப்படுத்துவேன்.

ஒவ்வொரு நாளும் ஆபீஸ் விட்டு வந்ததும், அன்று ஆபீஸில் என்னவெல்லாம் நடந்தது, எங்கெல்லாம் போனேன், என்னவெல்லாம் பேசினேன் என்பதை பிள்ளைகளுக்கும் மாமியாருக்கும் விரிவாகச் சொல்வேன். காரணம்... ஆபீஸில் முழுத் திறமையோடும் ஈடுபாட்டோடும் வேலை செய்ய வேண்டும் என்றால், வீட்டில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மிகமிக அவசியமாயிற்றே! 'அம்மா, ஆபீஸில் என்ன வேலை செய்கிறார்' என்று புரிய வேண்டும் என்பதற்காக, சனிக்கிழமைகளில் குழந்தைகளையும் ஆபீஸுக்கு அழைத்துச் செல்வேன்.

என்னதான் டீம் மெம்பராக இருந்தாலும், ஒரு வேலையை ஒருவரிடம் ஒப்படைப்பதற்கும், அது சரியான திசையிலும் வேகத்திலும் நடக்கிறதா என்று உறுதி செய்துகொள்வதற்கும், ஏதாவது தவறு நடந்தால் அதை சரிசெய்வதற்கும் ஒவ்வொரு நாளும் எத்தனை பிரயத் தனப்படுகிறோம். அதேபோல வீட்டில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பினரிடமும் நேரமும் சிரத்தையும் எடுத்துக்கொண்டு ஒரு விஷயத்தை புரியவைக்க வேண்டியது அவசியம். மாறாக நம் பிள்ளைகள்தானே... நம் மாமியார்தானே... இவர்களுக்காகத்தான் காலையில் இருந்து ராத்திரி வரை நாயாக அலைந்து திரிந்து வேலை செய்கிறோம். ஆபீஸில் நடக்கும் விஷயங்   களை எல்லாம் இவர்களிடம் ஏன் விலா வாரியாகச் சொல்ல வேண்டும் என்று ஒரே ஒரு நாள்கூட வீட்டில் இருப்பவர்களை அலட்சியப்படுத்தியது கிடையாது! அதனால்தான் ஆபீஸில் நான் சந்தித்த அத்தனை சவால்களை யும் என்னால் தைரியமாக சமாளிக்க முடிந்தது!''

ரேணுகா, வங்கிப் பணியில் சந்தித்த சவால்கள்... அடைந்த இலக்குகள்....

- யோசிப்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism