##~##

மனப் போராட்டத்துக்கு முடிவு தேடும் தொடர்

விபத்தில் கணவரை இழந்த நிலையில், குடும்பம், குழந்தைகளின் படிப்பு இவற்றுக்காக தொடர்ந்து வேலைக்குச் சென்று சம்பாதிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட ரேணுகா ராம்நாத்... அல்லும்பகலும் பாடுபட்டு தான் எழுப்பிய அந்த உயரிய வங்கித்துறை  அலுவலகத்தில் இருந்து திடீரென்று ஒருநாள் வெளியே வர நேர்ந்த சோகச் சூழல் பற்றி சென்ற இதழ்களில் கூறியிருந்தார். அதிலிருந்து மீண்டு, இன்றைக்கு பெரும் நிறுவனம் ஒன்றின் தலைவியாக தான் உருவெடுத்த வரலாற்றை இங்கே தொடர்கிறார்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''ராஜ்ஜியத்தை ஆண்ட நான், திடீரென பூஜ்யத்துக்கு வந்துவிட்டது போன்ற உணர்வு மேலோங்கி இருந்த நேரம். என்னை நானே ரீ-சார்ஜ் செய்துகொள்ள, என் வாழ்கையில் நடந்த பெருமைப்படத்தக்க நிகழ்ச்சிகளை நினைத்துப் பார்த்துக்கொண்டேன்.

என்னுடைய ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி வாழ்க்கை யின் ஒரு காலகட்டத்தில், துபாயில் சென்று பணிபுரிய வேண்டிய சந்தர்ப்பமும் வந்தது. ஒரு இஸ்லாமிய நாட்டில்... ஒரு பெண், அதுவும் விதவைப் பெண். சாதாரண வங்கி வேலை செய்வதே சவாலானது. அதிலும் முதல் முதலாக இந்தியாவைச் சேர்ந்த விதவைப் பெண், அங்கே செல்வது மட்டுமல்லாது... ஐ.சி.ஐ.சி.ஐ. அலுவலகத்தையே அஸ்திவாரத்தில் இருந்து நிர்மாணிப்பது எத்தனை சவலான விஷயம்! எந்தவித தயக்கமும் இல்லாமல் அதை என்னிடம் நிர்வாகம் ஒப்படைத்தது. பிள்ளைகளோடு அங்கே சென்ற நான், அந்த வேலையை திறம்பட செய்துவந்தேன். வங்கியின் தலைவர் துபாய் வந்தபோது அந்நாட்டின் உயர் அதிகாரிகள், முக்கிய தொழில் அதிபர்கள் என்று பலரையும் அறிமுகம் செய்துவைத்தேன். அந்நாட்டின் பழக்க வழக்கங்கள்... நெளிவு சுளிவுகளை எல்லாம் புரிந்துகொண்டு நான் செயல்பட்டதைப் பார்த்த தலைவர், 'ரேணுகா... நீ சாதிக்கப் பிறந்தவள்!’ என்று சொன்னார்.

குடும்பமா... வேலையா? - 7

சோகம் மற்றும் சோர்வு என்னை சூழ்ந்து நின்ற இந்த நேரத்தில், துபாய் நினைவுகளை மனதில் ஓடவிட்டேன். நம்பிக்கை, மீண்டும் எனக்குள் ஊற்றெடுத்தது.

அப்போது, என் வீட்டு டெலிபோன் ஒலித்தது. மறுமுனையில் பேசியவர் ஒரு பெரிய வங்கியின் தலைவர். 'ரேணுகா... அவசரப்பட்டு தனியார் நிதி நிறுவனங்களில் சேர்ந்துவிடாதே. சுயமாக ஒரு நிறுவனத்தை துவங்கு. உன்னுடன் பிஸினஸ் செய்ய என் வங்கி மட்டுமல்ல... தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் நான்கும்கூட தயாராக இருக்கின்றன. சந்தேகம் இருந்தால்... மற்ற வங்கித் தலைவர்களின் மொபைல் நம்பர்களைக் கொடுக்கிறேன். ஊர்ஜிதம் செய்துகொள்’ என்றார். என்னால் இதை நம்பவே முடியவில்லை. 'அளவுக்கு அதிகமாக நம்பிக்கை வைக்கிறார்களோ?!' என்கிற எண்ணம் எழுந்தது.

'இதுநாள்வரை மிகப்பெரிய தனியார் வங்கிக்காக வேலை செய்தேன். வங்கியின் நற்பெயர், பின்பலம், பணபலம், திறமைமிக்க ஊழியர்கள்... என்று எனது வெற்றிக்குப் பின்னால் நிறைய விஷயங்கள் இருந்தன. ஆனால்... அது எதுவுமே இப்போது எனக்கு இல்லை’ என பணிவாக அவரிடம் சொன்னேன்.

அதற்கு, 'ரேணுகா... உன்னுடைய திறமையைப் பற்றியும் கடின உழைப்பு பற்றியும் எங்களுக்குத் தெரியும். வேறு ஒரு கம்பெனியின் வெற்றிக்காக இத்தனை ஆண்டுகளாக பாடுபட்ட உன்னால், சொந்த கம்பெனிக்கு பாடுபட முடியாதா?’ என்று கேட்டு, துவங்கப் போகும் புதிய நிறுவனத்துக்காக வாழ்த்துக்கள் சொல்லி போனை வைத்தார்.

வங்கிக்காக பல ஆயிரம் கோடிகளைப் புரட்டிய நம்மால், நம்முடைய நிறுவனத்துக்கு சில நூறு கோடிகளையாவது புரட்ட முடியும் என்கிற நம்பிக்கை எனக்குள் ஆழமாக விழுந்தது. நண்பர் ஒருவரின் வீட்டையே அலுவலகமாக மாற்றி, 'மல்டிபிள் ஆல்டர்னேட் அசட் மேனேஜ்மென்ட்' நிறுவனத்தைத் துவங்கினோம். வங்கிப் பணியில் இருந்தபோது என்னுடைய செயல்பாட்டை கவனித்துவந்த 'கனடா பென்ஷன் ஃபண்ட்’ நிறுவன அதிகாரிகள், என் போன் நம்பரைத் தேடிப்பிடித்து, 'உங்கள் நிறுவனத்தில் நாங்கள் 450 கோடி ரூபாய் முதலீடு செய்கிறோம்’ என்றபோது... எனக்குள் ஏற்பட்ட உணர்வுகளை வர்ணிக்கவே முடியாது.

பூர்வஜென்ம புண்ணியம் எல்லாம் உண்டா... இல்லையா... என்று தெரியாது. ஆனால், கடந்த காலத்தில் செய்த நல்ல விஷயங்கள், நம்மை தேடி தொடர்ந்து வரும் என்பது புரிந்தது. ஒரே ஒரு பாட்டு பின்னணியில் ஒலிக்க, ஒருவர் கோடீஸ்வரர் ஆவதெல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியம். வாழ்க்கையில் சாண் ஏறினால்... முழம் சறுக்குகிறதோ இல்லையோ... நிச்சயம் சாணாவது சறுக்கும்.

'ரேணுகா எதற்காக வங்கிப் பணியை விட்டு வெளியே வந்தார். வேறு நிதி நிறுவனங்களில் ஏன் வேலைக்குப் போகவில்லை. யாரும் வேலைக்கு சேர்த்துக் கொள்ளவில்லையா?’ என்பது போன்ற கேள்விகளை 'கனடா’ நிறுவனத்தின் வேறு சில அதிகாரிகள் எழுப்பினார்கள். வங்கிப் பணியில் என்னுடைய செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்துவந்த 'கம்ப்ட்ரோலர் அண்ட் ஆடிட்டர் ஜெனரல் ஆஃப் இந்தியா’, ஆபத்பாந்தவனாக வந்து 'கனடா நிறுவன’ அதிகாரிகளுக்கு இருந்த சந்தேகங்களைப் போக்கியதுடன், 'ரேணுகாவை வேறு எந்த நிதி நிறுவனத்திலும் சேர வேண்டாம் என்று சொன்னதே நாங்கள்தான். அவரை  நம்பித்தான் எங்களின் பல தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அவரோடு பிஸினஸ் செய்ய இருக்கின்றன’ என்று கூற, எங்கள் கம்பெனி டேக் - ஆஃப் ஆனது. இன்று, எங்கள் நிறுவனம் மூலமாக பல்லாயிரம் கோடிகளுக்கு வெற்றிகரமாக பரிமாற்றம் நடக்கிறது.

அமெரிக்காவில் படிக்கும் மகன், மகள் இருவருமே தோளுக்கு மேல் வளர்ந்துவிட்டார்கள். வேலை, வேலை என்று ஓடிக்கொண்டிருந்ததால்... பல நாட்கள் வீட்டுக்கு வராமல்கூட ஊர் ஊராக அலைந்திருக்கிறேன். பல நாட்கள் என் பிள்ளைகள் ஸ்கூலுக்கு கிளம்பும்போது அவர்களுக்கு லஞ்ச் பேக் கட்டிக் கொடுக்கும் சந்தோஷத்தை இழந்திருக்கிறேன். வீட்டுப்பாடம் செய்ய அவர்களுக்கு உதவும் சந்தர்ப்பங்கள் கைவிட்டுப் போயிருக்கின்றன. அவர்கள் வீடு திரும்பும்போது வாசலில் காத்திருக்கும் மகிழ்ச்சி யான தருணங்கள் எனக்கு வாய்த்ததில்லை.

'நம்மைப் போலவே அவர்களும் இதையெல்லாம் இழந்திருப்பார்களோ, அவர்களுக்கான சந்தோஷங்களைக் கொடுக்காமல் விட்டுவிட்டேனோ’ என்கிற சந்தேகம் மனதின் மூலையில் வெகுநாட்களாக ஒட்டிக்கொண்டிருந்தது. சமீபத்தில் அவர்கள் இந்தியா வந்தபோது வாய்விட்டு கேட்டேவிட்டேன். என் தோள் சாய்ந்து அவர்கள் சொன்ன பதில் - 'நீங்கள் எங்களுக்கு எப்போதெல்லாம் தேவைப்பட்டீர்களோ... அப்போதெல்லாம் எங்களுடன் இருந்திருக்கிறீர்கள். சந்தோஷமான தருணங்களிலும் சரி, மனம் சோர்ந்துபோன தருணங்களிலும் சரி... நாங்கள் எப்போதுமே உங்களை மிஸ் பண்ணியதில்லை அம்மா!’

வங்கியில் வேலை பார்த்த காலம்தொட்டு இன்று சொந்தமாக நிதி நிறுவனம் நடத்தும் இந்தக் காலம் வரை... எந்த ஒரு வேலையாக இருந்தாலும்... இதை நான் செய்தால்தான் சிறப்பாக இருக்கும் என்று ஒருபோதும் நான் நினைத்ததில்லை. இதை 'டெலிகேஷன் ஆஃப் அத்தாரிட்டி’ என்பார்கள். இதையேதான் வீட்டிலும் நான் செயல்படுத்தி வருகிறேன். என்னால் மட்டுமே என் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க முடியும், என்னால் மட்டுமே என் பிள்ளைகள் விரும்பும் சுவையான உணவை தயார் செய்து கொடுக்க முடியும் என்று ஒரு போதும் நினைத்ததில்லை.

இப்படி எல்லாம் பேசுவதால்... நான் சொல்வதுதான் சரி என்று அர்த்தம் இல்லை. ஹோம்மேக்கராக மட்டுமே இருப்பதில் எந்தத் தவறும் இல்லை. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வேலைக்கு போவதிலும் எந்தத் தவறும் இல்லை. ஆனால், 'நான் மட்டும் வேலைக்கு போயிருந்தா... அதுவும் அந்த வேலைக்கு போயிருந்தா... எப்படி எல்லாமோ இருந்திருப்பேன். உன்னால்தான் எதுவும் வேணாம்னு தலைமுழுகிட்டு வீட்டோடு இருந்துட்டேன்...’ என்பதுபோல பேசி, அடுத்தவர் மீது பழியைப் போடக்கூடாது. நம் வாழ்க்கையை நாம்தான் தீர்மானிக்க வேண்டும் என்பதுதான் என் கருத்து.''

'குடும்பமா... வேலையா?’ என்கிற கேள்விக்கு, தன் வாழ்க்கை அனுபவத்திலிருந்தே அழகாக பதிலை தேடிச் சொன்ன ரேணுகாவை, அடுத்த இதழில் தொடர்கிறார் இன்னொரு சாதனைப் பெண்மணி!

- யோசிப்போம்...