##~##

மனப் போராட்டத்துக்கு முடிவு தேடும் தொடர்

''உனக்கென்ன குறைச்சல்..? உங்க அப்பா ஏராளமா சேர்த்து வெச்சிருக்காரு. புகுந்த வீட்டிலும் வசதிக்கு குறைச்சல் இல்லை. கேவலம், பத்தாயிரத்துக்கும், பதினைந்தாயிரத்துக்கும் காலையில இருந்து சாயங்காலம் வரை நீ ஏன் ஒரு இடத்துல ஓடியாடி வேலை செய்யணும்? வேலைக்குப் போற இடத்துல நல்லவங்க, கெட்டவங்கனு நிறைய ஆம்பளைங்க இருப்பாங்க. அவங்க கேட்கிற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லணும். இப்படி ஒரு வேலைக்குப் போறதுக்கு பதிலா... அந்த நேரத்துல வீட்டை அழகுபடுத்தலாம்... பரபரப்பும் இல்லாம வாழலாம்... வாய்க்கு ருசியா சமைக்கலாம்... குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கலாம்!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- பெண்களை வீட்டுக்குள்ளேயே பூட்டி வைக்க, நம் சமுதாயம் அடிக்கடி சொல்லும் அறிவுரைகளில் இதுவும் ஒன்று.

இந்த ரீதியிலான ஓர் அறிவுரை, அனிதா ராமச்சந்திரனுக்கு பல முனைகளில் இருந்து வந்தது. அதை எந்த அளவுக்கு அவர் ஏற்றுக்கொண்டார் என்று பார்ப்பதற்கு முன்பாக, அவர் இப்போது என்னவாக இருக்கிறார் என்று சொல்ல வேண்டும். இந்தியாவின் மனித வள மேம்பாட்டுத் துறையில், இன்று இவர் முக்கிய முகம். ஆயிரம், இரண்டாயிரம் கோடிகள் என்று புழங்கும் மிகப்பெரிய கம்பெனிகளில் உயர்மட்டத்தில் இருக்கும் இரண்டு அதிகாரிகளுக்கு இடையில் ஏதாவது கருத்து வேற்றுமையா? 'என்னைவிட அந்த அதிகாரிக்கு அதிக சம்பளம் கொடுக்கிறார்களே’, 'எனக்கு ஏன் பதவி உயர்வு இல்லை’ என்றெல்லாம் நிர்வாகத்தின் மீது அதிகாரிகளுக்கு மனவருத்தம் வரும்போது... கம்பெனியின் முதலாளியே இதுபோன்ற பிரச்னைகளைக் கையாள முடியாது. இந்த நேரத்தில்தான் அனிதா போன்ற கௌரவமிக்க தொழில்முறை நிபுணர்களின் ஆலோசனையும் உதவியும் பெரிய நிறுவனங்களுக்குத் தேவைப்படும்.

குடும்பமா... வேலையா? - 8

சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளோடு நாள் கணக்கில் பேசி... அவர்களுடைய வருத்தம் நியாயமானதாக இருந்தால், உடனடியாக சரிசெய்ய நிர்வாகத்துக்கு பரிந்துரைப்பார். ஒருவேளை தன்னிடம் இந்த அசைன்மென்டை கொடுத்த கம்பெனியின் முதலாளியிடமே தவறு இருந்தால்... அதைச் சற்றும் தயங்காமல், அவர் மனம் நோகாமல் எடுத்துரைப்பார். சம்பந்தப்பட்ட அந்த மேலதிகாரியின் வருத்தம் நியாயமில்லாதது... என்று கருதினால், அதையும் நாசூக்கான வார்த்தைகளில் அவருக்குப் புரியவைப்பார்.

இத்தகைய பணியை... 'ரிவார்ட் மேனேஜ் மென்ட்’ என்றழைக்கிறார்கள். இந்தத் துறையில் இயங்கும் குறிப்பிடத்தக்க ஒரு சிலரில், அனிதா முக்கியமானவர். புகழ்பெற்ற 'ஏ.எஃப். ஃபர்கூஸன்’ கம்பெனியில் சுமார் 20 ஆண்டுகாலம் இத்தகைய பணியைச் செய்து தனக்கென்று ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்ட அனிதா, இப்போது 'செரிபிரஸ் கன்சல்டன்ட்’ என்கிற ஹெச்.ஆர் நிறுவனத்தை சொந்தமாக நடத்துகிறார். நாடு முழுவதும் கிளைகளைக் கொண்ட இந்நிறுவனத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நிபுணர்கள் வேலை பார்க்கிறார்கள். இவர்கள் அத்தனை பேரும் பெண்கள்!  

'பெண்கள் ஏன் வேலைக்குப் போக வேண்டும்?’ என்கிற சிந்தனை கொண்ட குடும்பச் சூழலில் இருந்து வந்தாலும், இந்த அளவுக்கு அனிதா உயர்ந்தது எப்படி?

அதை அவரே சொல்கிறார் கேளுங்களேன்...

''சிறுவயதில் இருந்தே பழமைக்கும் நிதர்சனத்துக்கும் நடக்கும் பல உரசல்களில் நான் சிக்கிக் கொண்டிருக்கிறேன். ஆனாலும், 'குரலை உயர்த்தாமல், சண்டை போடாமல், சத்தமே இல்லாமல் சாதுர்யமாகவும் பொறுமையாகவும் செயல்பட்டால்... நினைத்ததை சாதிக்க முடியும்’ என்கிற எண்ணம் கொண்டவள் நான்.

அப்பாவுக்கு ஊர் ஊராக மாற்றலாகும் வேலை. அதனால் படிப்பு கெட்டுவிடக்கூடாதே என்ற எண்ணத்தில் மும்பையில் இருக்கும் என் தாத்தா - பாட்டியின் வீட்டுக்கு அனுப்பிவிட்டனர். பட்டப் படிப்பை முடித்த சமயம், யாருக்கும் அத்தனை சுலபமாக கிடைக்காத ஐ.ஐ.எம் கொல்கத்தாவில் எம்.பி.ஏ. ஸீட் கிடைத்தது. 'கட்டிக் கொடுக்கப் போகும் பொண்ணு. அவ்வளவு தூரமெல்லாம் போக வேண்டாம். அவ படிச்சது போதும்’ என்று அப்பாவிடம் புலம்பினார் பாட்டி. எனக்கோ படிப்பும் வேண்டும், பாட்டியின் சம்மதமும் வேண்டும். 'சரி, மும்பையிலயே ஜம்னாலால் பஜாஜ் இன்ஸ்டிட்யூட் இருக்கே... அங்க சேர்ந்து படிக்கிறேன்’ என்று எல்லோரையும் சம்மதிக்க வைத்து, அங்கேயே எம்.பி.ஏ. சேர்ந்தேன்.

கல்லூரியில் பேச்சு போட்டி என்றால், நான்தான் கில்லி மாதிரி. கோப்பைகளை அள்ளிக் குவிப்பேன். ஆனால், அதையெல்லாம் பார்த்த என் அம்மா என்ன சொன்னார் தெரியுமா... 'அனிதா... நாலு பேர் பார்க்கும்படி இந்த கோப்பைகளை வைக்காதே. சரியான வாயாடினு பட்டம் கொடுத்துடுவாங்க. அப்புறம் உன்னை யாருமே கல்யாணம் பண்ணிக்கமாட்டாங்க’ என்கிற கவலையான அட்வைஸ்தான்.

குடும்பமா... வேலையா? - 8

படிப்பு முடிந்ததும், 'வேலைக்குப் போக வேண்டாம்னு சொன்னா கேட்கமாட்டா. போனாபோகுது பேங்க்ல குமாஸ்தா வேலைக்குப் போகட்டும்’ என்று வீட்டில் அனைவரும் மனதை தேற்றிக்கொண்ட சமயம், 'ஏ.எஃப். ஃபர்கூஸன்’ நிறுவனத்தில் ஆலோசகராக சேர விண்ணப்பித்தேன். இன்டர்வியூ செய்த அதிகாரிகள், 'இது சாதாரண வேலை இல்லை. கால நேரம் பார்க்காமல் உழைக்க வேண்டி இருக்கும். மணிக்கணக்கில் மீட்டிங்கில் கலந்துகொள்ள வேண்டும். பல கம்பெனிகளின் உயர் அதிகாரிகளோடு அடிக்கடி ஆலோசனை செய்ய வேண்டி இருக்கும். இதெல்லாம் ஒரு பெண்ணால் முடியாது. அதனால்தான் இதுவரை எங்கள் கம்பெனியில் ஒரே ஒரு பெண்ணைக்கூட வேலைக்கு அமர்த்தவில்லை. ஆனால், நீ படிப்பில் கோல்ட் மெடல் வாங்கி இருப்பதால்... உன் விண்ணப்பத்தை நிராகரிக்க முடியவில்லை. உன்னால் இந்த வேலையை செய்ய முடியுமா?’ என்று கேட்டார்கள். 'முடியும்’ என்று சொல்லி வேலையில் சேர்ந்த நான்... மளமளவென்று பல அடுக்குகளை கடந்தேன். பெண்ணை வேலைக்கு அனுப்பவே பயந்த அம்மாவுக்கும் பாட்டிக்கும் அப்போதுதான் உலகம் கொஞ்சம் புரிய ஆரம்பித்தது.

திருமணம் ஆனபோது, புகுந்த வீடும் ஏறக்குறைய நான் பிறந்த வீடு மாதிரி பழமையில் இருந்தது. அங்கே ஆண்கள் சாப்பிட்டு முடித்த பிறகுதான் பெண்கள் சாப்பிட வேண்டும். தனக்கு வாய்த் திருப்பது வேலைக்குப் போகும் மருமகள் என் பதையே மாமியார் ஏற்றுக்கொள்ள சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். நான் செய்யும் வேலையோ... பம்பரமாக சுழல வேண்டிய பரபரப்பான  வேலை. இதை என் மாமியார் எப்படி எதிர்கொண்டிருப்பார் என்பதை நீங்களே கற்பனை செய்துகொள்ளுங்கள்.

கம்பெனியில் இருக்கும் இரு அதிகாரிகளுக்கு இடையில் மனகசப்பு வந்தால்... அதைத் தீர்ப்பதுதான் என் வேலை. அப்படியிருக்க, வீட்டில் மாமியாருடன் மனக்கசப்பு ஏற்பட விட்டுவிடுவேனா என்ன? எங்கே பிரச்னை வந்தாலும், அதன் ஊற்றுக்கண்ணைத்தான் அணுக வேண்டும் என்று அலுவலகத்தில் நான் கற்ற பாடத்தின் அடிப்படையில், மாமியாரிடம் நேரடியாக பேசுவேன். இருவருக்கும் இடையில் என்ன பிரச்னை வந்தாலும், என் கணவரை தலையிட அனுமதிக்கவே மாட்டேன்.

என்னுடைய வேலை என்ன, அலுவலகம் எப்படி இருக்கும் என்பதை எல்லாம் கிளிப்பிள்ளைக்கு சொல்வதைப் போல பொறுமையாக மாமியாருக்கு சொல்வேன். உலகம் மாறிவிட்டது என்பதை ஒரே நாளில் நான் அவருக்குப் புரிய வைத்துவிடவில்லை. அதற்கு பல வருடங்கள் தேவைப்பட்டன. திருமணமாகி 14 ஆண்டுகள் கழித்து, மைத்துனருக்கு பெண் பார்க்க ஆரம்பித்தபோது, என் மாமியார் சொன்னது... 'நம்ம வீட்டுக்கு வரப்போறப் பொண்ணு, வேலைக்கு போறவளாத்தான் இருக்கணும்!’ நான் ஆச்சர்யமாக அவரைப் பார்த்தேன்.

'இந்த 14 வருஷத்துல எனக்கு நீ எத்தனை விஷயம் கற்றுக் கொடுத்திருக்கே? நீ படிச்சு வேலைக்கு போறதால் தானே... இத்தனையும் தெரியுது’ என்று விளக்கமும் தந்த மாமியார், அடுத்து சொன்னது -

'வேலைக்குப் போற மருமக வீட்டை நல்லபடியா பார்த்துக்கமாட்டானு முதல்ல நினைச்சது உண்மைதான். ஆனா, நீ ஒரு வீட்டை இல்லை, உன் கம்பெனியில் வேலை செய்யற நூறு பேர் வீட்டை இல்லை பார்த்துக்கறே! உன்னால் எத்தனையோ குடும்பம் பிழைக்குது. உன்னை நினைச்சா பெருமையா இருக்கு!’

இந்த பாராட்டுப் பத்திரத்துக்கு முன்பாக நான் வாங்கியிருக்கும் கோல்ட் மெடல் எல்லாம் எம்மாத்திரம்?!''

- மென்மையான புன்னகையுடன் கேட்கிறார் அனிதா!

- யோசிப்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism