##~##

மனப் போராட்டத்துக்கு முடிவு தேடும் தொடர்

'நாங்கள் எல்லாம் முற்போக்கு ஆசாமிகள்' என்று சொல்லிக் கொள்ளும் ஒரு சிலர்கூட, 'பெண்களுக்கு காலை ஒன்பது மணிக்கு ஆபீஸுக்கு போய், சாயங்காலம் ஐந்து மணிக்குள்ள வீட்டுக்கு வந்துறது மாதிரியான வேலைதான் சரிவரும்’ என்று சொல்வதைக் கேட்டிருக்கிறோம். மேலும் சிலர் இருக்கிறார்கள். 'பொம்பளைங்க வேலைக்குப் போகக்கூடாதுனு சொல்ற ஆள் நான் இல்லை. எனக்கு மனைவியாகப் போகிறவள் வேலைக்குப் போவதில் எனக்கு ஆட்சேபனையில்லை. ஆனால், ஆண்களிடம் பேசுவதற்கான அவசியமில்லாத ஸ்கூல் டீச்சர் போன்ற வேலையாக இருந்தால் ஓகே!’ என்று 'பரந்த' மனப்பான்மையோடு பேசுவார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒவ்வொரு காலகட்டத்திலும் பெண்களைச் சுற்றி ஒரு வட்டத்தைப் போட்டுக் கொண்டுதான் இருக்கிறது... இந்தச் சமுதாயம். இந்த மாய வளையத்துக்குள்ளேயே பெண்கள் இருந்துவிட வேண்டுமா... அல்லது தாண்டிச் செல்லலாமா?

'கோடு, வட்டம் என்பதெல்லாம் கடவுள் போட்டதல்லடி...
கொள்ளும்போது கொள்ளு. தாண்டி செல்லும்போது செல்லடி... படாஃபட்’

குடும்பமா... வேலையா? - 9

- இப்படி முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே சினிமாவில் பாடிவிட்டாலும், நடை முறையில் அதை செயல்படுத்துவது அத்தனை சுலபமானதாக இல்லை என்பதுதானே உண்மை!

ஆனால், கீத்து வர்மாவுக்கு அப்படி இல்லை. நாம் தினம்தோறும் பயன்படுத்தும் ப்ரூ காபி, ரெட் லேபிள் டீ, கிஸான் ஜாம், குவாலிட்டி வால்ஸ் ஐஸ்கிரீம்... போன்ற பல பொருட்களை விற்பனை செய்யும் 'யுனிலிவர்’ என்கிற பன்னாட்டு நிறுவனத்தின் எக்ஸிக்யூட்டிவ் டைரக்டர் அவர். இவருடைய அம்மா படித்தது 12 வகுப்பு வரைதான். தான் படிக்க வில்லை என்றாலும், தன் பெண்களாவது நன்றாக படிக்க வேண்டும் என்று மகள் கீத்து வர்மாவை பிஸினஸ் மேனேஜ்மென்ட் படிக்க வைத்தார். என்னதான் எம்.பி.ஏ படித்திருந்தாலும் கீத்துவுக்கு முதலில் கிடைத்தது 'ஃபீல்டு ஜாப்’ எனப்படும் களப்பணி.  

அப்போதுதான் அறிமுகம் செய்யப்பட்டிருந்த ஒரு டீத்தூளை, மக்களிடையே விளம்பரப்படுத்த 40, 50 பேர்களை அழைத்துக் கொண்டு ஊர்ஊராக... வீடுவீடாக சென்று... டீத்தூள் பாக்கெட்டுகளை இலவசமாக சாம்பிள் கொடுக்க வேண்டும். பிறகு, அடுத்த நாள் அதே வீடுகளுக்குச் சென்று டீத்தூள் எப்படி இருந்தது என்று கருத்துக் கேட்க வேண்டும். பின், அவர்களிடம் அந்த டீத்தூளை விற்பனை செய்ய முயற்சிக்க வேண்டும்.

வெயில், மழை பார்க்காமல்... சொந்த ஊரையும், வீட்டையும் பிரிந்து... ஊர் ஊராக சுற்ற வேண்டிய இப்படிப்பட்ட வேலைகளைத்தான் கீத்து வர்மா தொடர்ந்து பார்த்தார். இந்நிலையில், மனைவி எட்ட விரும்பும் உயரத்தை எட்ட ஊக்கம் கொடுக்கும் கணவர் அமைந்ததால், திருமணத்துக்கு பிறகும் 'நாடோடி வாழ்க்கை’ என்று கிண்டல் அடிக்கப்படும் இதே மார்க்கெட்டிங் வேலையை கீத்து வர்மா செய்தார். கம்பெனி நிர்ணயிக்கும் இலக்கை விரட்டிக் கொண்டு ஊர் ஊராக ஓடும் இந்த வாழ்க்கையில், சொந்த ஆசாபாசங்களுக்கெல்லாம் நேரமே கிடைக்காது.

''இப்படி, ஒவ்வொரு படிகளையும் கடந்துதான், நான் எட்ட வேண்டிய இலக்குகளை எட்டினேன்'' என்று சொல்லும் கீத்து வர்மா முன்னேறி இருக்கும் ஒவ்வொரு அடியும் பல சறுக்கல்களுக்குப் பிறகு எடுத்து வைத்த அடிகள்தான்!

''வாழ்க்கையில் சிரமங்களையும் தோல்விகளையும் சந்திப்பதில் தப்பில்லை. ஆனால், அதிலிருந்து பாடம் படித்தாக வேண்டும்'' என்று சொல்லும் கீத்து வர்மா, இதுபோன்ற வேலையில் இருந்துகொண்டே... தன் குடும்பத்தையும் இரண்டு பெண் குழந்தைகளையும் வளர்த்து ஆளாக்கியது... பெண்களுக்கே உரிய பொறுப்பின் உச்சம்!

''பன்னாட்டு நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இப்போது இருக்கிறேன் என்றால்... அதற்கு ஆரம்பத்தில் என் அம்மா, அப்பா, அதன் பிறகு, என் கணவர் ஆகிய மூன்று பேரும்தான் முக்கியக் காரணம். வலிமையானவளாகவும் ஆரோக்கியமானவளாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக, சிறுமியாக இருக்கும்போது எனக்கு யோகா சொல்லிக் கொடுத்தது துவங்கி... என் இரண்டு குழந்தைகள் பிறந்த நேரத்தில் என் வீட்டில் தங்கி குழந்தைகளுக்கு ஆறு மாதம் ஆகும்வரை கவனித்துக் கொண்டது வரை அம்மா எனக்கு பல வகைகளிலும் பக்கபலமாக இருந்தார்.

வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களைப் பார்க்க கற்றுக்கொடுத்தார் அம்மா என்று சொன்னால்... அப்பா, வேர்களை பார்க்க சொல்லிக் கொடுத்தார். எளிமையாக இருப்பது எப்படி? நலிந்தவர்களை எப்படி இனம் கண்டுபிடித்து உதவி செய்ய வேண்டும்... என்பது போன்ற விஷயங்களை அவர் எனக்கு சொல்லிக் கொடுக்கவில்லை. அவரைப் பார்த்து நானே கற்றுக்கொண்டேன். அடுத்ததாக என் கணவர். திடீரென்று ஒரு நாள் 'பெப்ஸிகோ’ கம்பெனியில் பொறுப்பான பெரிய வேலை கிடைத்தது. அதற்கு முன்பு பார்த்த வேலையைவிட பல மடங்கு பொறுப்பு. அதாவது கூடுதலாக பல நாட்கள் ஊர் ஊராக பயணம் செய்ய வேண்டி இருக்கும். நான் தயங்கினேன். ஆனால், தனக்கே அப்படி ஒரு வேலை கிடைத்ததைப் போல அத்தனை உற்சாகமாக, 'அசடு மாதிரி யோசிக்காதே. உன் உயரம் என்னன்னு உனக்கே தெரியாது. உன் திறமையை நிரூபிக்க இது ஒரு பெரிய வாய்ப்பு. தயங்காம வேலையில சேர்ந்துடு’ என்று உற்சாகப்படுத்தினார் கணவர். ஒரு சமயம் வெளிநாட்டு அசைன்மென்ட் வந்தபோது, 'குழந்தைகளைப் பற்றி எல்லாம் கவலைப் படாதே... நான் அவங்களை கவனிச்சுக்கிறேன். தைரியமா போயிட்டு வா!’ என்று என்னை விமானம் ஏற்றியவரும் அவர்தான்.

குடும்பமா... வேலையா? - 9

வீடியோ கேமில் முதல் லெவலில் விளையாடி ஜெயித்த மாதிரி, நான்காவது லெவலில் ஜெயிக்க முடியாது. வாழ்க்கையும் அதேமாதிரிதான். மாறுகின்ற சூழ்நிலைக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்க வேண்டும். என்னுடைய மூத்த பெண் பத்தாம் வகுப்புக்கு வரும் வரை எல்லாம் சரியாகப் போய்க்கொண்டிருந்தது. அவள் பத்தாம் வகுப்புக்கு வந்தபோது சிரமப்படுகிறாள் என்று தெரிந்தது. நான் வழக்கம்போல வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால்... குழந்தையின் படிப்பு பாதிக்கப்படக் கூடும் என்பதை உணர்ந்தேன். அதனால் நான் பார்த்துவந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு, குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தேன். அவர்களோடு என் நாள் முழுவதையும் செலவு செய்தேன். எண்ணி ஒன்பதே மாதம். என் பெண் பரீட்சை எழுதி முடித்ததும், என்னைப் பார்த்து அவள் கேட்ட முதல் கேள்வி, 'மம்மி, எப்ப நீ வேலைக்கு போகப்போறே...?’ என்பது தான். வேலை என்று வந்துவிட்டால் சூறாவளி யாக மாறிவிடுவேன் என்பது நான் வேலை பார்க்கும் கம்பெனிக்கு மட்டுமல்ல, போட்டி கம்பெனிகளுக்கும் தெரிந்த ஒன்று என்பதால்... மீண்டும் யுனிலிவர் கம்பெனியில் வேலைக்கு சேர்வதில் எனக்கு சிரமம் ஏற்படவில்லை!''

கீத்து வர்மாவைப் போல ஆதரவான அம்மாவும், அனுசரணையான கணவரும், அட்ஜஸ்ட் செய்து கொள்ளக்கூடிய குழந்தைகளும் எல்லோருக்கும் அமைந்துவிடாது. ஆனால், இப்படி கிடைக்கப் பெற்றவர்களில் எத்தனை பேர் அந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதில்தான் இருக்கிறது அவரவர் வெற்றியின் ரகசியம்!

- யோசிப்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism