Published:Updated:

குடும்பமா... வேலையா? - 11

நெடுஞ்சாலையாக மாறிய ஒத்தையடிப் பாதை!மனப் போராட்டத்துக்கு முடிவு தேடும் தொடர் - 11 பி.ஆரோக்கியவேல், ஓவியம்: பாரதிராஜா ஸ்டெப்ஸ்

குடும்பமா... வேலையா? - 11

நெடுஞ்சாலையாக மாறிய ஒத்தையடிப் பாதை!மனப் போராட்டத்துக்கு முடிவு தேடும் தொடர் - 11 பி.ஆரோக்கியவேல், ஓவியம்: பாரதிராஜா ஸ்டெப்ஸ்

Published:Updated:
##~##

''இந்த மாதிரி வேலையெல்லாம் பெண்களுக்கு சரிப்பட்டு வராது. பேங்க் வேலை, டீச்சர் வேலைனு பெண்களுக்கு ஏற்ற மாதிரியான வேலையைத் தேடும்மா...''

- இப்படி பெண்களுக்கு அட்வைஸ் செய்யும் பல கம்பெனிகள் இன்னமும்கூட இருக்கின்றன. ஆம், பலமாக முயற்சிகள் செய்து, பெரும் போராட்டங்களையெல்லாம் கடந்து, படிப்படியாக மேனேஜர் பதவி வரை ஒரு பெண் உயர்ந்தால்கூட, 'பெண், மேனேஜராக இருந்தால், அவருக்கு அடுத்த நிலையில் வேலை செய்யமாட்டேன்’ என்று ஆண்கள் மட்டுமல்ல, சமயங்களில் பெண்களேகூட மறுத்துவிடும் மனோபாவம் நம் ஊரில் தொடரத்தான் செய்கிறது. இன்றைக்கே இதுதான் நிலை என்றால், சுமார் 30, 40 ஆண்டுகளுக்கு முன்பு?!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இன்று விண்முட்ட நிற்கும் 'பயோகான்’ நிறுவனத்தை, பல ஆண்டுகளுக்கு முன்பு அஸ்திவாரத்தில் இருந்து எழுப்பிய கிரண் மஜூம்தார் ஷாவின் பயணம், வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் நல்ல முன்னுதாரணம். குஜராத்தைச் சேர்ந்தவரான கிரண்... படித்தது, வளர்ந்தது எல்லாம் பெங்களூருவில்தான். விலங்கியல் துறையில் பட்டப்படிப்பை முடித்த கிரண், மேற்படிப்பை ஆஸ்திரேலியாவில் முடித்தார். பெங்களூரு திரும்பியதும், தந்தை வேலை பார்த்த அதே 'யுனைடெட் ப்ரூவரீஸ்’ நிறுவனத்தில் வேலைக்குச் சேர விண்ணப்பித்தார்.

இன்டர்வியூ செய்த முதலாளி விட்டல் மல்லையாவுக்கு, கிரணை நன்கு தெரியும். என்றாலும், தொழில்ரீதியான கேள்விகளை முடித்துவிட்டு, 'நீ நல்ல புத்திசாலி. இந்தக் கம்பெனியில் சேர்வதற்கான அத்தனை தகுதியும் உனக்கு இருக்கிறது. ஆனால், நீ ஒரு பெண். உனக்கு இந்த வேலை சரிப்படாது. இங்கே வேலை செய்யும் ஆண்கள் எல்லாம் உன்னைவிட வயதிலும் அனுபவத்திலும் சீனியர்கள். ஒருபோதும் உன்னை மேல் அதிகாரியாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வேறு வேலை தேடிக்கொள்!’ என்று முகத்தில் அடித்தது மாதிரி சொல்லிவிட்டார்.

குடும்பமா... வேலையா? - 11

அடுத்து வந்த இரண்டு ஆண்டுகளும் இதேபோல கழிந்தன. இடைப்பட்ட காலங்களில் கிரணோடு பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்த பெண்கள் எல்லாம் திருமண அழைப்புகளை அடுத்தடுத்து கொண்டு வந்து கொடுத்துக் கொண்டிருந்தனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் எந்த வீடாக இருந்தாலும், 'பொண்ணுக்கு கல்யாணத்தை பண்ணி வெச்சுடலாம்!’ என்றுதான் முடிவெடுப்பார்கள். ஆனால், ''சொந்தமாக கம்பெனி ஆரம்பிக்கப் போகிறேன்!'' என்று கிரண் சொன்னபோது, கண்கள் பனிக்க ''சபாஷ்!'' என்று பாராட்டினார் அப்பா. ''நீ புத்திசாலி. தைரியசாலி. திறமையுள்ளவள். உன் மீது யார் நம்பிக்கை இழந்தாலும், ஒருபோதும் நீ, உன் மீது நம்பிக்கையை இழக்கக் கூடாது. உனக்கு உறுதுணையாக நான் பின்னால் நிற்பேன்!'' என்று உற்சாகப்படுத்தியதோடு, ''வங்கியில் அடகு வைத்து பணம் பெற்றுக்கொள்!'' என்று சொல்லி, வீட்டுப் பத்திரத்தைக் கொடுத்தார் அப்பா.

கிரண் உத்தேசித்திருந்த கம்பெனி, வழக்கமான கம்பெனி அல்ல. செரிமானத்தை துரிதப்படுத்தும் 'என்சைம்’ எனப்படும் நொதிப்பொருட்களை உற்பத்தி செய்யும் சிறிய தொழிற்கூடம். மொத்த மூலதனமே வெறும் பத்தாயிரம் ரூபாய்தான். இடம் தேடியபோது, மீண்டும் பிரச்னைகள் வரிசை கட்டின. இது என்ன கம்பெனி, இதில் என்ன மாதிரியான பொருளைத் தயாரிப்பார்கள் என்றே எவராலும் புரிந்துகொள்ள முடியவில்லை. அதுவும் ஒரு பெண் வந்து வாடகைக்கு இடம் கேட்டதால்... 'இவரை நம்பி வாடகைக்கு விட்டால் மாதா மாதம் வாடகையை ஒழுங்காக தரமுடியுமா?’ என்று பலருக்கும் சந்தேகம் வந்தது. அதனால் வீட்டிலேயே தொழிற்கூடத்தைத் துவங்க வேண்டியதாயிற்று.

பப்பாளிப் பழத்தில் இருந்து எடுக்கப்படும் நொதிப்பொருளை உற்பத்தி செய்யும் இந்தக் கம்பெனியில் வேலை செய்ய, நான்கைந்து பேர்தான் முதலில் தேவைப்பட்டார்கள். என்றாலும் தகுதியுள்ள எவருமே, 'ஒரு பெண் துவங்கியிருக்கும் தொழிற்கூடம்’ என்பதால் வேலையில் சேர முன்வரவில்லை. ஒரு டிராக்டர் மெக்கானிக் கொஞ்சம் போல ஆர்வம் காட்ட, அவருக்கு பயாலஜி சொல்லித் தந்து வேலை வாங்க வேண்டியதாக இருந்தது.

ஒரு பெண் துவங்கியிருக்கும் கம்பெனி என்பதால், பெண்கள் ஆர்வம் காட்டுவார்கள் என்று கிரண் எதிர்பார்த்தார். ம்ஹூம்... அதுவும் நடக்கவில்லை. இதைப் பார்த்து பரிதாபப்பட்டுக் கொண்டிருந்த கிரணின் கல்லூரித் தோழிக்கு, எதிர்பாராதவிதமாக அவர் பார்த்து வந்த வேலை பறிபோக, இங்கே வேலைக்குச் சேர்ந்தார்.

சென்னை, ஐ.ஐ.டி-யில் படித்துக் கொண்டிருந்த ஒரு மாணவன், தன் ஆராய்ச்சிக்கு கடனாக 'என்சைம்' கேட்டு வந்தபோது, 300 ரூபாய் பெறுமானமுள்ள அந்த உதவியை அவனுக்கு இலவசமாகவே செய்தார் கிரண். அவருடைய பேச்சு மற்றும் அணுகுமுறை பிடித்துப் போனதால், படிப்பு முடிந்த பிறகு வெளிநாட்டு வாய்ப்பைக்கூட மறுத்துவிட்டு, இந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தான். இப்படியெல்லாம் கஷ்டப்பட்டுத்தான் திறமைசாலிகளை வேலைக்குச் சேர்த்தார் கிரண்.

குடும்பமா... வேலையா? - 11

வேலைக்கு வருவதற்கே ஆட்கள் தயங்கும் நிலையில், தொழிற்சாலை துவங்க எந்த வங்கி கேட்டதுமே கடன் கொடுக்கும்? பல போராட்டங்களுக்கு பிறகு, கனரா வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி என்று கடன்களைப் பெற்று தொழிற்கூடத்தை விரிவுபடுத்தினார். உற்பத்தியான நொதிப்பொருட்களை அமெரிக்கா, ஐரோப்பா என ஏற்றுமதி செய்தார். பெரும்பாலும் ஆராய்ச்சி சார்ந்த வேலை என்பதால், வெறும் சம்பளம் கொடுத்து மட்டுமே யாரையும் தக்க வைத்துக் கொள்ள முடியாத சூழல். அதனால், லாபத்திலும் பங்குகளை வழங்கினார் கிரண். அதனால் திறமைசாலிகள் பலரும் தாங்களாகவே தேடி வந்து வேலையில் சேர்ந்தனர்.

அடுத்த கட்டமாக, மருந்து தயாரிப்பு பக்கமும் கிரண் பார்வையைத் திருப்ப... கம்பெனியின் வளர்ச்சி வேகம் எடுத்தது. 'ஐ.டி துறை போலவே பயோடெக்னாலஜி துறைக்கும் மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது' என்று உலகம் உணரத் துவங்கியது. பங்குச் சந்தையில் தன் கம்பெனிக்கு முதலீட்டை திரட்ட கிரண் முற்பட்டபோது... ஒரே நாளில் 4,500 கோடி ரூபாய் சேர்ந்தது. அதன்பிறகு, கம்பெனியும் ஊழியர்களும் ராக்கெட் வேகத்தில் வளர்ச்சியைக் கண்டார்கள்.

எல்லாவற்றையும் சாதித்து முடித்து நிமிர்ந்த கிரண், தன் 44 வயதில்தான் ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த ஜான் ஷா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். ஜான் ஷாவும் அங்கே பெரிய கம்பெனியின் எம்.டி. ஆனாலும், பயோகான் நிறுவனம் தொடர்பாக கிரண் எடுக்கும் எந்த முடிவிலும் அவர் தலையிடுவது இல்லை. ஒருசமயம் மனைவியின் கம்பெனியில் முதலீடு செய்வதற்கு சந்தர்ப்பம் வாய்த்தபோது, தன் நாட்டிலிருந்த தன் வீட்டை விற்று பங்குகளை வாங்கினார்.

ஊழியர்கள் எண்ணிக்கையை வைத்து கணக்கிட்டால்... இன்று உலகிலேயே 'பயோகான்’ ஏழாவது பெரிய பயோடெக்னாலஜி கம்பெனி! இதில் கணிசமான எண்ணிக்கையில் பெண்களை வேலைக்கு அமர்த்தி இருக்கிறார் கிரண்!

அன்று, ஒத்தையடிப் பாதை போட முதலடி எடுத்து வைத்தவர்... இன்று, ஒரு நெடுஞ்சாலையையே உருவாக்கியிருக்கிறார். கிரணின் இந்த வெற்றி, நிச்சயம் வணக்கத்துக்கு உரியதுதானே!

- யோசிப்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism