Published:Updated:

குடும்பமா... வேலையா?- 12

குடும்பத்துக்காக குமாஸ்தாவாகவே இருக்காதீர்கள்! மனப் போராட்டத்துக்கு முடிவு தேடும் தொடர் - 12பி.ஆரோக்கியவேல், ஓவியம்: பாரதிராஜா

குடும்பமா... வேலையா?- 12

குடும்பத்துக்காக குமாஸ்தாவாகவே இருக்காதீர்கள்! மனப் போராட்டத்துக்கு முடிவு தேடும் தொடர் - 12பி.ஆரோக்கியவேல், ஓவியம்: பாரதிராஜா

Published:Updated:
##~##

'வேலை, குடும்பம் ஆகிய இரண்டும் வெவ்வேறு பாதைகள். ஒரு வண்டி ஒரே சமயத்தில் எப்படி இரண்டு பாதைகளில் பயணிக்க முடியாதோ... அதேபோல, ஒரு பெண்ணால் வேலை, குடும்பம் இரண்டையும் ஒரே சமயத்தில் சமாளிக்க முடியாது’ - என்ற எண்ணம் ஆண்களைவிட பெண்களின் மனதில் ஆழமாக வேர்விட்டு இருக்கிறது. தகுதியும் திறமையும் இருந்தும், தலைமைப்பொறுப்பு தேடி வந்தாலும், 'குடும்பச் சூழல்’ என்ற ஒற்றை வார்த்தையில் வலிய வரும் வாய்ப்பைக் கூடத் தூக்கி எறிந்துவிடுகிறார்கள், பெரும்பாலான பெண்கள்.

''பள்ளி, கல்லூரி, வேலை... என அனைத்திலும் ஆண்களை முந்திக் கொண்டு ஓடி வரும் பெண்கள், ஒரு கட்டத்துக்குப் பிறகு, ஏன் பின்தங்கி விடுகிறார்கள்.? பெண்களின் மனநிலை... அதிலும் குறிப்பாக வேலைக்குச் செல்லும் பெண்களின் மனநிலையே அதற்கு காரணம்'' என்று அடித்துச் சொல்கிறார், 'ஃபேஸ் புக்’ நிறுவனத்தின் தலைவர் செரில் சாண்ட்பர்க். 44 வயதான இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ படித்த இவர், உலக வங்கி, கூகுள், நிதி அமைச்சகம்... என அமெரிக்காவின் அதிகாரமும் பொறுப்பும் கொண்ட பல பதவிகளை வகித்த அனுபவம் கொண்டவர். வேலைக்குப் போகும் பெண்களின் இயல்புகளைப் பற்றி ஆராய்ச்சி செய்திருக்கும் செரில் சாண்ட்பர்க், தனது அனுபவத்தில் இருந்து சொல்லும் கருத்துக்களைக் கேளுங்கள்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆரம்ப நிலையில் ஆண்களுக்கு இணையாக வேலைக்கு செல்லும் பெண்கள், அடுத்தடுத்து உயர் பதவிகளுக்கு ஏன் உயருவதில்லை? என்னுடைய அனுபவத்தில் இருந்தே சொல்கிறேன். 'ஒரு புதிய ஊரில் அல்லது நாட்டில் அலுவலகத்தின் கிளையை ஆரம்பிக்கலாமா?’ என்று பேச்சு ஆரம்பமாகும்போதே, 'நான், நீ’ எனப் போட்டி போட்டுக் கொண்டு பொறுப்பை கேட்கிறார்கள், ஆண்கள். அவர்களை விட, தகுதியும் திறமையும் கொண்ட பெண்களிடம், 'நீங்கள் இந்த புதிய பொறுப்பை ஏற்றுக் கொள்கிறீர்களா?’ என்று நானாக கேட்டால்கூட, 'மொழி தெரியாது. ஊர் தெரியாது. நான் எப்படி இந்த வேலையை செய்ய முடியும்?’ என்று தயங்குவதைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் வெளிப்படுத்தும் பயத்தைவிட, மனதுக்குள் ஒளித்து வைத்திருக்கும் பயம்தான் பெரியது. 'நான் இந்த புதிய பொறுப்பை எடுத்துக் கொண்டால், ஐந்து மணியானால் வீட்டுக்குப் போக முடியாது. நேரத்துக்குப் போகாவிட்டால், குழந்தைகளை யார் பார்த்துக் கொள்வது? யார் சமைப்பது?’ - என்பது போன்ற குடும்ப ரீதியான கேள்விகள்தான் புதிய பொறுப்புகளை ஏற்கவிடாமல் பெண்களை குமாஸ்தாவாகவே வைத்திருக்கின்றன.

குடும்பமா... வேலையா?- 12

'நான் என்ன செய்வது? நான் கொடுத்து வைத்தது அவ்வளவுதான். என்னை வேலைக்குச் செல்ல கணவர் அனுமதிப்பதே பெரிய விஷயம்!’ - இது போன்ற சுயபச்சாதாபங்களில் இருந்து பெண்கள் வெளி வர வேண்டும். குடும்பத்தலைவியாக இருப்பவர்களுக்கு கனவுகள் இருக்கக்கூடாதா என்ன? 'இப்போது இருக்கும் நிலையைவிட நான்கு மடங்கு, அதிக அதிகாரத்தில் இருக்கும் ஒரு பதவியை அடைந்தால் என்னவெல்லாம் செய்வீர்கள்?’ என்று அடிக்கடி கற்பனை செய்து பாருங்கள். உங்கள் கனவை நனவாக்கத் திட்டமிட்டு வேலை செய்யுங்கள். 'வெற்றி கள் வந்தால் வழிகளும் கூடவே வரும்’ என்பதை நம்புங்கள். 'குழந்தைகளைக் கவனித்துக் கொள்வதில் மனைவியைப் போலவே கணவர்களுக்கும் சமபங்கு உண்டு’ - என்பது, அப்போது உங்கள் கணவருக்குத் தானாகவே புரியும். புரியவில்லை என்றால் புரிய வைக்க வேண்டிய பொறுப்பும் உங்க ளுக்குத்தான் இருக்கிறது.

'கணவராவது சில சமயம் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார். ஆனால், இந்த பிள்ளைகள் இருக்கிறார்களே...?’ என்ற கேள்வி உடனே எழும். பதின்பருவ வயதுக் குழந்தைகள் இருந்தால், 'அவர்கள்தான் உங்களின் மிகச்சிறந்த பயிற்சியாளர்கள்’ என்பதை நினைவில் கொள்ளுங்கள். அலுவலகத்தில் இருக்கும் பலர் உங்களது பேச்சைக் கேட்க மாட்டார்கள். 'ஒரு வேலையை ஏன் செய்ய முடியாது?’ என்பதற்கான காரணங்களைப் பற்றி அரை மணி நேரம் பேசுவார்கள். ஏறக்குறைய அலுவலக ஊழியர்களைப் போலத்தான் உங்கள் பிள்ளைகளும். அவர்களும் உங்கள் சொல்பேச்சை கேட்பதில்லை. அவர்களை சமாளிப்பது மிகப்பெரிய கலை. உங்கள் பேச்சை பிள்ளைகள் கேட்க செய்துவிட்டீர்கள் என்றால்... உங்கள் ஊழியர்களை எப்படி வேலை வாங்குவது என்ற கலை உங்களுக்குத் தானாகவே கைவந்துவிடும்.

புதிய பொறுப்புகளை பெண்கள் வலியச்சென்று ஏற்காமல் இருப்பதற்கு இன்னொரு முக்கிய காரணம், 'என்னால் இந்தப் பொறுப்பை ஏற்று வெற்றிகரமாக செயல்பட முடியுமா?’ என்ற சந்தேகம். பெண்கள் தங்களின் திறமையையும், ஆற்றலையும் தாங்களே குறைத்து மதிப்பிடுவது எந்த வகையில் சரி?

குடும்பமா... வேலையா?- 12

'நம்மை 'நல்ல பெண்’ என அலுவலகத்தில் இருக்கும் அத்தனை பேரும் சொல்ல வேண்டும்’ என்ற எண்ணத்தை முதலில் விட்டொழியுங்கள். 'நம்மால் அத்தனை பேருக்கும் நல்லவளாக இருக்க முடியாது’ என்ற உண்மையைப் புரிந்து கொண்டால்தான் முகத்தாட்சண்யம் பார்க்காமல், தவறாகத் தெரியும் விஷயங்களை 'தவறு’ என்று அழுத்தமாகச் சொல்ல முடியும். இதுவும் என் சொந்த வாழ்க்கை கற்றுக் கொடுத்ததுதான். 'அலுவலகத்தில் நினைப்பதை எல்லாம் பேச முடியாது. ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து நாகரிகமான வார்த்தைகளில்தான் பேச வேண்டும்’ என்பதெல்லாம் சரிதான். ஆனால், யாராவது தவறு செய்தால்... நாம் கோபத்தை காட்டாமல் மறைத்துக் கொள்ளக்கூடாது. அதே போல யாராவது நம்மைக் காயப்படுத்தினால் அழுவது கூட தவறில்லை. 'என்னது... அலுவலகத்தில் அழுவதா?’ என ஆச்சர்யம் காட்டாதீர்கள்.

அலுவலக நேரங்களில் ஒரு மனுஷியாகவும், மற்ற நேரங்களில் வேறு ஒரு மனுஷியாகவும் நம்மால் இருக்க முடியாது. பல நூறு வார்த்தைகள் சொல்லும் சங்கதிகளை, நமது அழுகை சுலபமாகப் புரிய வைத்துவிடும். இப்படிச் சொல்வதனால், 'மேலதிகாரிகள் முன்பு அழுதால் பதவி உயர்வு கிடைத்துவிடும்’ என்று அர்த்தமில்லை. அறிவு, துணிச்சல், உழைப்பு, சாதுர்யம், கோபம்... என்று அலுவலகத்தில் வெற்றி பெற பல ஆயுதங்கள் தேவை. அதில் நிச்சயம் அழுகையும் ஒரு ஆயுதம்தான்.

கடைசியாக ஒரு அட்வைஸ்...  'சட்சட்டுனு பிரமோஷன் வாங்கி பெரிய பதவிக்கு போகணும்னா 'காட்ஃபாதர்’ வேணும்’ என சில பெண்கள் சொல்வதை கேட்டிருக்கிறேன். ஆனால், உண்மை என்ன தெரியுமா? நான் அனுபவப்பூர்வமாக சொல்கிறேன். நன்றாக வேலை செய்து பாருங்கள். உங்களுக்கு 'காட்ஃபாதர்’ தானாகவே அமைவார்கள்!

நிறைவடைந்தது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism