##~##

 ''பல வருஷம் கழிச்சு கல்லூரித் தோழியை சந்திச்சா... நேரம் போறதுகூட தெரியாத அளவுக்கு அரட்டை, சந்தோஷம்னு பொழுதுபோகும். ஆனா, எங்க ரெண்டு பேர் விஷயத்துல நடந்ததே வேற. இப்ப, நாங்க ரெண்டு பேரும் சக்சஸ்ஃபுல் இல்லத்தரசி கம் பிசினஸ் உமன்...''

- முகமெல்லாம் பெருமை பொங்கச் சொல்லும் பிரியா பார்த்தசாரதி, தன் 'காலேஜ் மேட்' உமாவுடன் இணைந்து 'மாயாஸ் ஆர்க்’ எனும் பெயரில் ஆன்லைன் மூலமாக டிசைனர் ஜுவல் பிசினஸை நடத்திவருகிறார்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''நான், பக்கா சென்னைப் பொண்ணு. மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ்ல பி.எஸ்சி. ஸ்டாடிஸ்டிக்ஸ், எம்.பி.ஏ. இதைஎல்லாம் முடிச்சுட்டு... வேலை பார்த்துட்டிருந்த சூழல்ல, கல்யாணம் பண்ணி வெச்சுட்டாங்க. வீட்டுக்காரர் ஸ்ரீதர், பெட்ரோலியம் இன்ஜினீயர். கல்யாணம் முடிஞ்ச கையோட அமெரிக்காவுக்குக் கிளம்பிட்டோம். அங்கதான் பொண்ணு சௌம்யா பொறந்தா. அவருக்கு அடிக்கடி டிரான்ஸ்ஃபர் வந்துட்டே இருக்கும். அப்படி கனடாவுக்குப் போன சமயத்துல, வீட்டுல சும்மாவே இருக்கோமேனு ஈவ்னிங் காலேஜ்ல மறுபடியும் எம்.பி.ஏ. பண்ணினேன். குழந்தையைக் கவனிச்சுக்கறது தொடங்கி பலவிதத்துலயும் கணவர் பக்கபலமா இருந்தார். எங்க வாழ்க்கையை அழகாக்க பையன் அர்ஜுன் பொறந்தான். ஒரு மாசத்துல மும்பை... பிறகு, ஈரான் தலைநகர் டெஹ்ரான்னு டிரான்ஸ்ஃபர்.

பிசினஸ் திலகங்கள்! -  4

டெஹ்ரான்ல ஒரு ஸ்கூல்ல அட்மின் ப்ளஸ் ஃபைனான்ஸ் வேலைகளை பாத்துட்டிருந்தேன். எதேச்சையா ஷாப்பிங் போனப்ப, கலர் கலர் பீட்ஸ்களைப் பாத்தேன். அதைஎல்லாம் அள்ளிட்டு வந்து, என்னோட கிரியேட்டிவிட்டியையும் சேர்த்து, என் டிரெஸ்ஸுக்கு மேட்சான மாலைகள் செய்து போட்டுக்கிட்டேன். அதை பார்த்தவங்க எல்லாம் தனக்கும் செய்துதரச் சொன்னாங்க. 'அட, இந்த சைட் பிசினஸ் நல்லா இருக்கே'னு நெட், புக்ஸுனு பார்த்துப் பார்த்து ஜுவல்ஸ் செய்யக் கத்துகிட்டேன். அடுத்ததா நாங்க போன இடம்... துபாய். அங்கேயும் வித்தியாசமான மணிகள் கிடைச்சுது. அதையெல்லாம் வெச்சு நான் செய்த டிசைன்ஸை... ஸ்கூல் ஃபங்ஷன்ஸ்ல, மற்ற விழாக்கள்ல ஸ்டால் போடுறது... மார்க்கெட்டிங் பண்றது எல்லாம் கத்துகிட்டேன். 'எம்.பி.ஏ படிச்ச உனக்கு, இந்த வேலையெல்லாம் எதுக்கு?'னு கிண்டலடிப்பாங்க உறவுக்காரங்க. ஆனாலும், என்னோட ஆர்வம் குறையல'' என்றவரின் வாழ்க்கையில் நடந்த அந்த சந்திப்புதான், அவரை பிசினஸ் உமனாக மாற்றியிருக்கிறது.

பிசினஸ் திலகங்கள்! -  4

''அவருக்கு மலேசியாவுக்கு டிரான்ஸ்ஃபர் கிடைக்க.. அங்க போய்ச் சேர்ந்தோம். பல வருஷம் கழிச்சு காலேஜ் மேட் உமாவை அங்க பார்த்தேன்... பக்கத்து ஃப்ளாட்ல. அரட்டை, கலகலப்போட கூடுதல் சந்தோஷமா அவளும் என்னை மாதிரியே ஜுவல் டிசைன் பண்ணிட்டிருந்தா. 'நாம ஏன் சேர்ந்து பிசினஸ் பண்ணக் கூடாது?'னு யோசிச்சதுல 'க்ளிக்’ ஆனதுதான் 'மாயாஸ் ஆர்க்’ ஜுவல்லரி பிசினஸ். அவளோட பேர்ல இருந்த 'மா’, என்னோட பேர்ல இருந்த 'யா’, மணிமாலைகள் வளைந்து இருக்குங்கறத குறிக்கறதுக்காக 'ஆர்க்’ எல்லாத்தையும் சேர்த்து... 'மாயாஸ் ஆர்க்’னு பேர் வெச்சோம்.

குழந்தைகள், இல்லத்தரசினு எங்களோட கடமைகள் பத்தி விவாதிச்சோம். ஒரு ஷோரூம் ஆரம்பிச்சு, ரெண்டு பேரும் உட்கார்றது நடக்கற காரியமா தோணல. அது, 2010-ம் வருஷம். அப்பதான் 'ஆன்லைன் ஷாப்பிங்' பிரபலமாகிட்டு வந்துச்சு. இருந்த இடத்திலிருந்தபடியே பொருட்களை விற்பனை செய்ற கான்செப்ட் ரொம்ப புடிச்சு போச்சு. உடனே கம்பெனி பேரை பதிவு பண்ணி, ஐம்பதாயிரம் முதலீட்டுல ஃபேஸ்புக், ட்விட்டர், இ-மெயில் மூலமா மக்கள்கிட்ட எங்க தயாரிப்புகளை பரவவிட்டு ஆர்டர் பிடிச்சோம். வரவேற்பு சூப்பரா இருக்கவும், வெப்சைட் ஆரம்பிச்சோம். நாங்க தயாரிக்கற நகைகள், தரம், என்ன மெட்டீரியல், விலை எல்லாத்தையும் போட்டோவோட அப்லோட் பண்ணினோம். ஆர்டர்கள் குவிஞ்சுது. ஆன்லைன் பிசினஸைப் பொறுத்தவரை தரத்தோட, டிரெண்டியா, சேஃப்டியா கொண்டு

பிசினஸ் திலகங்கள்! -  4

போய்ச் சேர்க்கணும். எங்க தவறு நடந்தாலும்,  வாய் விளம்பரம் மூலமா கிடைச்ச பப்ளிசிட்டி, அதே பாணியில ரிவர்ஸ்ல தாக்க ஆரம்பிச்சு பேரை காலி பண்ணிடும். அதனால, அதுல நாங்க எப்பவுமே உறுதியா இருக்கிறோம். நான் இப்போ சென்னையில இருக்கேன். உமா... சிங்கப்பூர்ல இருக்காங்க. ஆனாலும் எந்த பிரச்னையும் இல்லாம பிசினஸ் ஓடுது'' எனும் பிரியாவின் வார்த்தைகளில் தேர்ந்த பிஸினஸ் உமனுக்கான அத்தனை அனுபவம் பளிச்சிடுகிறது.

''உமா மாடர்ன் ஜுவல்ஸ் பண்றதுல எக்ஸ்பர்ட். நான் டிரெடிஷனல் எக்ஸ்பர்ட். இதைத் தவிர, ரெண்டையும் இணைச்சு ஃபியூஷன் ஜுவல் டிசைன் பண்றது எங்களோட ஸ்பெஷல். அப்பப்ப மார்க்கெட் டிரெண்ட், பெண்களோட ரசனை பற்றி தெரிஞ்சுக்கறதால எந்த நாட்டு பெண்கள்... எந்த மாதிரி நகைகளை விரும்புவாங்கனு எங்களுக்குத் தெரியும்'' என்று சொல்லும் பிரியாவுக்கு சிங்கப்பூர், மலேசியா, மெக்ஸிகோ, ஆப்பிரிக்கா, நெதர்லேண்ட்ஸ், ஃபிரான்ஸ் என்று பல நாடுகளிலும் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள்!

''பெண்களுக்கு கிரியேட்டிவிட்டி ஜாஸ்தி. சும்மா இருக்கிற பொருளைக்கூட கூடுதல் அழகாக்கிடுவாங்க... ரொம்ப சமர்த்தா! அந்த திறமையைப் பயன்படுத்தி உட்கார்ந்த இடத்திலிருந்தே பிசினஸ் பண்ணலாம்ங்கிறதுக்கு நாங்களே மிகச்சிறந்த உதாரணம். எங்கயாவது ஒரு மூலையில ஷோரூம் திறந்திருந்தா... இந்தளவுக்கு சக்சஸ் பண்ணியிருக்க முடியுமானு தெரியல. வருங்காலத்துல ஒவ்வொரு பொண்ணுகிட்டேயும் எங்களோட 'மாயாஸ் ஆர்க்’ ஜுவல்ஸ் இருக்கணும்ங்கிறதுதான் எங்க லட்சியம். அதை எட்டுற நாள் ரொம்ப தொலைவுல இல்லை''

- வார்த்தைகளில் உறுதியேற்றிச் சொல்கிறார் பிரியா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism