Published:Updated:

``மாதம் மூன்று லட்சம் மண் பொருள்களில் லாபம்!" சத்யாவின் மாத்தியோசி பிசினஸ்

சத்யா தயாரித்திருக்கும் மண்பொருள்கள்
சத்யா தயாரித்திருக்கும் மண்பொருள்கள்

சில ஆயிரங்களில் தொடங்கிய எங்களோட பிசினஸின் மாத வருவாய், இப்போ மூணு லட்சம் - சத்யா.

``ஆயிரக்கணக்கில் செலவுசெய்து, ஆடம்பரமான பொருள்களை வாங்கி வீட்டில் அடுக்கினாலும், மண் பொருள் தரும் அழகு கிடைக்குமா சொல்லுங்க. சில நேரத்தில் மண் பொருளுக்கு மவுசு குறையுறது என்னமோ உண்மைதான். ஆனா, காலத்துக்குத் தகுந்த மாதிரி மாத்தி யோசிக்க ஆரம்பிச்சா சக்சஸ்தான்" என்று பேச்சைத் தொடங்குகிறார், புதுச்சேரியைச் சேர்ந்த சத்யா. மண் பொருள்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் 10 வருடங்களாக ஈடுபட்டுவருகிறார், சத்யா. மண் பொருள்களின் உற்பத்தி பற்றியும் அதில் உள்ள சவால்கள் பற்றியும் நம்மிடம் பகிர்கிறார்.

மண்பொருள் தயாரிப்புப் பணியில்...
மண்பொருள் தயாரிப்புப் பணியில்...

``மண்பாண்டத் தொழிலில் புதுசா என்ன செய்யலாம்னு யோசிச்சேன். இப்போ, என் தொழில்தான் என் அடையாளமா இருக்கு.

நான் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிச்சிருக்கேன். என் வீட்டுக்காரரு ஒன்பதாம் வகுப்பு வரை படிச்சிருக்கார். எங்களுக்குத் திருமணம் நடந்தப்ப, வீட்டுக்காரர் மொபைல் வாங்கி விற்கும் கடை வெச்சிருந்தார். எல்லா நாளும் வியாபாரம் ஒரே மாதிரி இருக்கும்ணு சொல்ல முடியாது. அதனால, கிடைக்கிற வேற வேலைகளையும் சேர்த்து பார்ப்பார். நான் குடும்பத்தைப் பார்த்துட்டு வீட்டில்தான் இருந்தேன்.

அகல் விளக்குகள்
அகல் விளக்குகள்

குழந்தைகள் பிறந்த பிறகு, அவர் வருமானம் போதுமானதா இல்ல. அதனால, இரவு பகலா உழைக்க ஆரம்பிச்சாரு. அவருக்கு உதவலாம்னு முடிவுபண்ணி, வீட்டிலேயே சின்னதா கடை மாதிரி ஏதாவது ஆரம்பிக்கலாம்னு அவர்கிட்ட கேட்டேன். ஆரம்பத்துல வேண்டாம்னு சொன்னார். நான் கட்டாயப்படுத்தி சம்மதிக்க வெச்சுட்டேன்.

எங்க வீடு பாண்டிச்சேரில இருக்கிற்தால, அங்க டூர் வர்ற ஜனங்க எல்லாரும் மண் பாத்திரங்களை வாங்குவாங்க. அதனால, மண் பொருள் கடை தொடங்கலாம்னு சிலர் ஐடியா கொடுத்தாங்க. நல்ல பிசினஸ்னு எனக்கும் மனசுல பட்டது. குறைந்த முதலீட்டில் என் பிசினஸை ஆரம்பிக்க முடிவுபண்ணி லோனுக்காக பேங்க்குக்கு அலைஞ்சேன். அப்படியும் லோன் கிடைக்கல. வீட்டுல இருந்த நகையை அடைமானம் வெச்சு, புது பிசினஸைத் தொடங்கினோம்.

சத்யா மற்றும் அவன் கணவர்
சத்யா மற்றும் அவன் கணவர்
`எலந்தவடை பிசினஸ்... மாதம் 8 லட்சம் வருவாய்!' - ராஜலட்சுமியின் `மாத்தியோசி' கதை

ஆரம்பத்துல மண் பொருள்களை உற்பத்தி செய்றவங்ககிட்ட இருந்து வாட்டர் பாட்டில், தோசைக்கல், வீட்டு அலங்காரப் பொருள்கள், பொம்மைகள், மண் குக்கர்களை வாங்கி வித்தேன். ஒரு பொருளுக்கு 20 ரூபாய் வரை லாபம் கிடைக்கும். வீட்டுல சும்மா இருக்குற நேரம், அந்தப் பொருளை பெயின்டிங் செய்து அழகுபடுத்துவேன். பெயின்ட் செய்த பொருள் மற்ற பொருளைவிட கூடுதல் லாபத்துக்கு விற்பனை ஆச்சுங்கிறதால எல்லாப் பொருள்களையும் விதவிதமான கலர்ல பெயின்ட் பண்ணி விற்பனை செய்தேன். சின்னச்சின்ன நுணுக்கமான வேலைப்பாடுகள் பொருள்ல இருந்ததால, மக்கள்கிட்ட நல்ல வரவேற்பு கிடைச்சுது. என்னோட லாபமும் அதிகரிச்சுது.

சில வருஷங்கள்லயே மண் பொருள் எப்படி உற்பத்திசெய்றதுனு கத்துக்கிட்டு நானே உருவாக்க ஆரம்பிச்சுட்டேன். ஆனா, தொடர்ச்சியா மண் கிடைக்காததால, பொருள்களை உற்பத்தி செய்றதுல சிக்கல் இருந்துச்சு. ஒரு வண்டி மண்ணுக்கே ஆயிரக்கணக்கில் செலவிட வேண்டி இருந்துச்சு. மண்ணோட விலை நம்ம லாபத்தைக் குறைக்குமே தவிர, நஷ்டத்தை ஏற்படுத்தாது. அதனால தொடர்ந்து மண் பொருள் உற்பத்தி செய்றதுல ஆர்வம் காட்டினேன்" என்ற சத்யா, மண் பொருள் தயார்செய்யும் முறைபற்றிப் பேச ஆரம்பித்தார்.

எல்லா மாசமும் ஒரே மாதிரியான பொருள்கள் விற்பனை ஆகாது. அதனால, நாங்களும் எங்களுடைய உற்பத்தி முறையை மாத்திக்கிட்டே இருப்போம்.
சத்யா

``மண் பொருள் தயாரிக்கிறது அவ்வளவு சுலபமில்ல. மண் சரியான பதத்துக்கு வரலைனா பொருள் விரிசலாயிடும். அனால, நஷ்டம் நமக்குதான். மண்ணை வாங்கிட்டு வந்து மிதிச்சு பக்குவப்படுத்தி, செம்மண்ணையும் களிமண்ணையும் ஒண்ணா சேர்த்துப் பிசைஞ்சு, பொருளா தயாரிச்சு அவற்றைச் சூளையில வெச்சு ஒருநாள் முழுக்க சூடு பண்ணணும். அப்போதான் பொருள் உறுதியா இருக்கும். பிறகு கலரிங், டிசைனிங்னு வேலைப்பாடுகள் செய்யச் செய்ய கூடுதல் வருமானம் பார்க்க முடியும்.

என் பெயின்டிங் தனித்துவமா இருந்ததால, அதுவே முழுநேர பிசினஸா மாறிருச்சு. பிசினஸ் கொஞ்சம் சூடு பிடிச்சதும், என் கணவரும் என்னோட சேர்ந்து பிசினஸைப் பார்த்தார். பொருள்கள் உற்பத்திக்காக 10 பேரை வேலைக்கு சேர்த்திருக்கோம். அதிக அளவுல பொருள்கள் ஆர்டர் வரும்போது எங்க ஏரியா மக்கள்கிட்ட இருந்தும் பொருள்கள் வாங்கி, பெயின்டிங் வேலைகள் மட்டும் நாங்க செய்துகொடுப்போம். எங்க பொருள்கள் பெங்களூரு, சென்னை, கேரளா, ஹைதராபாத் என நாடு முழுக்க போகும்.

சத்யா மற்றும் அவரின் கணவர்
சத்யா மற்றும் அவரின் கணவர்

எல்லா மாசமும் ஒரே மாதிரியான பொருள்கள் விற்பனை ஆகாது. அதனால, நாங்களும் எங்களுடைய உற்பத்தி முறையை மாத்திக்கிட்டே இருப்போம். ஜனவரி பிப்ரவரி மாசங்கள்ல பொங்கல் பானை. மார்ச்-ஏப்ரல்-மே மாதங்கள்ல வாட்டர் பாட்டில், தண்ணீர்ப் பானை, செம்பு, டம்ளர் தயார் செய்வோம்.

ஜூன்- ஜுலை மாசங்கள்ல பிசினஸ் கொஞ்சம் டல்லா இருக்கும். ஏற்கெனவே உற்பத்தி செய்த பொருளை விற்பனை மட்டும் செய்வோம். ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை கொலு பொம்மைகள் தயாரிப்பு, டிசம்பர் மாதம் அகல் விளக்கு தயார் செய்றதுனு எங்க பிசினஸ் மாறிகிட்டே இருக்கும்.

சூழலுக்கு ஏற்ற மாதிரி பிசினஸ் செய்றதால, பிசினஸ் நஷ்டம் இல்லாம போயிட்டு இருக்கு. சில ஆயிரங்கள்ல தொடங்கின எங்க பிசினஸ்ஸின் மாத வருவாய் இப்போ மூணு லட்சம்.

தண்ணீர் ஜாடிக்கள்
தண்ணீர் ஜாடிக்கள்

யாரும் வேலை தரலைனு சமுதாயத்தைக் குறை சொல்லாம மாற்றத்தைத் தேடினா, நிச்சயம் வாழ்க்கையில் வெற்றிதான் " என்று நம்பிக்கை வார்த்தைகளைப் பகிர்கிறார் சத்யா.

அடுத்த கட்டுரைக்கு