Published:Updated:

48 நாள்கள் விரதம் தந்த நல்லதொரு பிசினஸ்! - ஆதி ஈஸ்வரி

ஆதி ஈஸ்வரி
பிரீமியம் ஸ்டோரி
News
ஆதி ஈஸ்வரி

மாத்தி யோசி

தீவிர பாபா பக்தையான ஆதி ஈஸ்வரி, சாய்பாபாவுக்கான ஒரு பிரார்த்தனைக்காக 48 நாள்கள் விரதம் இருக்கப்போய், அது ஓர் அருமையான பிசினஸ் ஐடியாவைக் கொடுத்திருக்கிறது. இப்போது ஹோம் டெலிவரி ஆப்களில் பிரபலமாகவிருக்கும் சென்னையின் ‘மில்லட் மேஜிக் மீல்’ உணவகம்தான் அந்த பிசினஸ் ஐடியா. முழுக்க முழுக்க சிறுதானியங்களில் செய்யப்பட்ட உணவு வகைகள், சிறுதானிய குக்கீஸ், ஸ்நாக்ஸ் ஆகியவை மட்டுமே இங்கே கிடைக்கும்.

‘‘நான் தகவல்தொழில்நுட்பத்தில் டிப்ளோமா முடிச்சிட்டு, பாலிடெக்னிக் காலேஜில் வேலை பார்த்துட்டிருந்தேன். அப்புறம் திருமணமாகி, இந்தியாவில் பல ஊர்களில் இருந்தோம். என் கணவர் சுரேஷ்குமாருக்கு பன்னாட்டு நிறுவனமொன்றில் வேலை. நான் என் வேலையை விட்டுட்டாலும், கேட்டரிங் துறையில் ஏதாவது பிசினஸ் பண்ணலாம் என்ற ஆர்வம் உள்ளூர இருந்தது. ஏன்னா, திருநெல்வேலியைப் பூர்வீகமாகக்கொண்ட எங்க குடும்பத்தில் அம்மா நல்லா சமைப்பாங்க. அவங்ககிட்டதான் நான் சமையல் கத்துக்கிட்டேன். எந்த ஊர் ரெசிப்பியாக இருந்தாலும் கத்துக்கிட்டு பிள்ளைகளுக்குச் செய்து கொடுப்பேன்.

ஆதி ஈஸ்வரி
ஆதி ஈஸ்வரி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பெங்களூரில் நாங்க இருந்தபோது, வார இறுதியில் எங்க அப்பார்ட்மென்ட்டில் ஆர்டர் எடுத்து, நம்ம ஊர் இட்லி, தோசை, சாம்பார், சட்னி செய்து கொடுக்க ஆரம்பிச்சேன். என் கைப்பக்குவத்தை எல்லாருமே பாராட்டினாங்க. சுதந்திர தின விழாவுக்காக அப்பார்ட்மென்ட்டில் 250 பேருக்கான காலை ஆகாரத்தை இரண்டு உதவியாளர்களுடன் செய்தேன். அதுதான் நான் செய்த பெரிய ஆர்டர். பின்னாளில் நான் ஹோட்டல் துறையில் கால் வைக்கிறதுக்கான அடித்தளமும் அதுதான்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

2014-ல், ஒரு வேண்டுதலுக்காக 48 நாள்கள் அரிசி உணவைத் தவிர்த்திடறதா ஷீர்டி பாபாகிட்ட பிரார்த்தனை பண்ணிக்கிட்டேன். இட்லி, தோசை, சாதம் எதுவுமே சாப்பிடக் கூடாது. அதுக்குப் பதிலா என்ன சாப்பிடலாம்னு யோசிச்சப்போ சிறுதானியங்கள்தான் நல்ல சாய்ஸாக இருந்தது. தினை, வரகு, சாமை, குதிரைவாலி, கம்பு, கேழ்வரகுன்னு சிறுதானியங்களை வாங்கி, அவற்றில் இட்லி, தோசை, சப்பாத்தி, கஞ்சி, பொங்கல்னு எல்லா வெரைட்டிகளையும் முயற்சி செய்தேன். சிறுதானிய சாதத்தில் தண்ணீர் பின்னிக்கொள்ளாமல் உதிர் உதிராக வடிக்கிறதுக்கு என்ன செய்யணும், இட்லி கல்லு மாதிரி வராமல் பஞ்சு பஞ்சாக வர்றதுக்கு என்ன செய்யணும்... இப்படிப் பல ஆராய்ச்சிகளை அந்த உணவுகளில் செய்து பார்த்தேன்.

ரெசிப்பி
ரெசிப்பி

ஏகப்பட்ட ஆராய்ச்சிகளுக்குப் பிறகு சுவையான ரெசிப்பிகளைச் செய்றது எப்படிங்கற சூத்திரம் பிடிபட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

48 நாள்களும் மூணு வேளையும் சிறுதானிய உணவுகளைச் செய்து சாப்பிட்டதால், அந்தச் சமையலில் நல்ல அனுபவம் கிடைச்சுது.

நாங்க சென்னைக்கு வந்து செட்டிலான பிறகு, நான் முயற்சிசெய்து வெற்றிகண்ட ரெசிப்பிகளைப் பிறருக்குச் சொல்லிக் கொடுக்கலாமேன்னு நினைச்சு, சிறுதானிய சமையல் வகுப்புகள் நடத்தினேன். 2015-ல் சிறுதானிய சமையல் வகுப்புகளை நானும் என் தோழியும் சமையற்கலைஞருமான அன்னம் செந்தில்குமாரும் நடத்தினோம். எங்க வீட்டிலும் அவங்க வீட்டிலுமாக சுமார் 15 பேட்ச்சுக்கு வகுப்பு எடுத்தோம். ஒரு பேட்ச்சுக்கு 10 மாணவிகள் வந்தாங்க. சாதம், இட்லி, தோசை, உப்புமா, பிரியாணின்னு சாதாரணமாக நாம அரிசியில் செய்யும் எல்லா வெரைட்டிகளையும் சிறுதானியங்களில் செய்யும் விதத்தைக் கத்துக்கொடுத்தோம். வெளிநாட்டினர், டாக்டர்கள், வக்கீல்கள்கூட வகுப்புக்கு வந்தாங்க.

அந்த நேரத்தில் ரெஸ்டாரன்ட் தொடங்கும் எண்ணம் எல்லாம் இல்லை. எனக்குத் தெரிஞ்சதை மத்தவங்களுக்கும் சொல்லித் தரணும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது’’ என்று நீளமாக விவரித்து நிறுத்தினார் ஆதி ஈஸ்வரி.

தாகத்துக்குச் சுவையான பானகம் வந்தது. அருந்தியதும் உரையாடல் தொடர்ந்தது... ‘அப்புறம் எப்போ, எப்படி இந்த ரெஸ்டாரன்ட்டை தொடங்கினீங்க?’

48 நாள்களும் மூணு வேளையும் சிறுதானிய உணவுகளைச் செய்து சாப்பிட்டதால், அந்தச் சமையலில் நல்ல அனுபவம் கிடைச்சுது.

‘‘என்கிட்ட படிச்ச மாணவிகள் எல்லாம், ‘நாங்க என்னதான் செய்து பார்த்தாலும் நீங்க செய்ற டேஸ்ட் வரல மேடம்’ னு சொன்னாங்க. சரி... நாமே செய்து கொடுக்கலாமேன்னு, 450 சதுரஅடியில் ஓர் அறை எடுத்து, மதிய உணவாக ‘லஞ்ச் காம்போ’ மட்டும் செய்ய ஆரம்பிச்சேன். வாட்ஸ்அப் குரூப் மூலமாக அது பரவுச்சு. ஒரு நாளைக்கு எட்டு மீல்ஸ் வரை ஆர்டர் வரும். லஞ்ச்சை பேக் பண்ணி எடுத்துக்கிட்டு, நானே வண்டியில் போய் டெலிவரி கொடுத்துட்டு வருவேன். லோக்கல் பேப்பரில் எங்களைப் பற்றி ஒரு கட்டுரை வந்ததும் பலருக்குத் தெரியவந்தது. அப்போ ஆன்லைன் சேல்ஸ் இல்லை. போனில் ஆர்டர் கொடுப்பாங்க. ஆர்டர் நிறைய வர ஆரம்பிச்சபோது, கிச்சனில் கவனம் செலுத்த வேண்டியிருந்ததால், என்னால் டெலிவரிக்குப் போக முடியல. என் கணவர் சப்ளை பண்ணினார். இப்பவும் நிர்வாக விஷயங்களை அவர்தான் கவனிச்சுக்கிறார்.

சுமார் மூன்றரை வருஷங்கள் அந்தக் குட்டி கிச்சனில்தான் பிசினஸ் ஓடியது. ஸ்விகியில் சேர்ந்து, வாடிக்கையாளர்களிடம் 4.7 நட்சத்திர ரேட்டிங் வந்ததும், ஒரு நாளைக்கு எட்டு மீல்ஸ் போனது, மூணு வருஷத்தில் 120 மீல்ஸ் ஆக உயர்ந்தது’’ என்று கூறியபடியே, ஊழியரை அழைத்து வரகு புளியோதரைக்குப் பக்குவம் சொல்கிறார். பரோட்டாவுக்கு பிசைந்த மாவை பதம் பார்க்கிறார்.

48 நாள்கள் விரதம் தந்த நல்லதொரு பிசினஸ்! - ஆதி ஈஸ்வரி

‘‘லஞ்ச் நல்லா போக ஆரம்பிச்ச பிறகு, இட்லி, தோசை, பொங்கல், இடியாப்பம் என்று டின்னர் கொடுக்கத் தொடங்கினோம். அடுத்த முயற்சியாகக் குழந்தைகளும் முதியவர்களும் சாப்பிடற மாதிரி ரெசிப்பிகள் செய்தோம். போன வருஷம், அண்ணாநகரில் முதல் ரெஸ்டாரன்ட், எக்ஸ்ளூஸிவா டின்னருக்கு மட்டும் திறந்தோம். சீஸ் பால்ஸில் இருந்து கம்பு தோசை வரை எல்லாம் நல்லா போச்சு. 2019 ஜனவரியில் ஆழ்வார்பேட்டை கிளை திறந்தோம். முதலில் ஹோம் டெலிவரி மட்டும்தான். இப்போ காலை, மதியம், இரவு மூணு வேளையும் செயல்படும் முழு நேர ரெஸ்டாரன்ட் ஆயிடுச்சு’’ என்று நிறைவுடன் கூறுகிறார்.

இங்கே கலவை சாதங்கள், புலாவ், பிரியாணி வகைகள், பரோட்டா, புல்கா, சாலட் மற்றும் சூப் வகைகள் எல்லாமே சிறுதானியங்களில்தாம். பீட்சாகூட சிறுதானியத்தில் தயாராகிறது. சிறுதானியங்கள் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்காக குக்கீஸ் (குளூட்டன் இல்லாதவை) மற்றும் முறுக்கு, ரிப்பன் பகோடா, மில்லட் போர்பன் பிஸ்கட் போன்ற ஸ்நாக்ஸ் வகைகளையும் சிறுதானியங்களிலேயே செய்கின்றனர். பானகம், வெள்ளரி மோர், நெல்லிக்காய் சேர்த்த மாதுளை ஜூஸ், லஸ்ஸி போன்றவை இவர்களின் ஸ்பெஷல் அயிட்டங்கள். எதிலுமே வெள்ளை சர்க்கரை மற்றும் பிரிசர்வேட்டிவ் சேர்ப்பதில்லை. நாட்டுச்சர்க்கரை, எலுமிச்சைச்சாறு, தேன், கறுப்பு உப்பு, வெண்ணெய் போன்ற இயற்கை பொருள்கள் மட்டுமே சேர்க்கப்படுகின்றன.

``தினமும் மாலையில் ஒவ்வொரு நாளும் ஒரு சுண்டல் உண்டு. மோதகம், வரகரிசி கொழுக்கட்டை, கறிவேப்பிலை மினி இட்லி, சனிக்கிழமைகளில் இலைக் கொழுக்கட்டை என்று ஸ்பெஷல் மெனு வெச்சிருக்கோம். தினமும் வெரைட்டியாக நாங்க செய்யும் காய்கறிச் சட்னியும் (ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காய்), ஞாற்றுக்கிழமை ஸ்பெஷலான பீட்ரூட் வடையும் வாழைப்பூ டாப்பிங் செய்த அடையும் வாடிக்கையாளர்களின் ஃபேவரைட்’’ என்று சொல்லும் இவருக்கு அடுத்த கட்டமாக, சிறுதானிய ஈர மாவு, சமையலுக்கான பொடிகள் மற்றும் உடனடி உணவு வகைகள் ஆகியவற்றைத் தயாரித்து விற்கும் திட்டமும் உள்ளது.

48 நாள்கள் விரதம் தந்த நல்லதொரு பிசினஸ்! - ஆதி ஈஸ்வரி

இந்தத் தம்பதிக்கு ஒரு மகள், ஒரு மகன். இருவரும் முறையே மருத்துவமும் பொறியியலும் பயிலும் மாணவர்கள்.

‘‘48 நாள்கள் நான் விரதம் இருந்த பிரார்த்தனை நிறைவேறுச்சா, இல்லையா என்பதைவிட, என் தொழில் கனவை நனவாக்கியது என் விரதம்தானே!’’ என்கிறார் புன்னகையுடன்.

சிறுதானிய சமையல்... சில டிப்ஸ்

  • சிறுதானியங்களில் சாதம் வடிக்கும்போது, குக்கரில் வைப்பதைவிட பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்கவைத்து வடிப்பதே சிறந்தது. ஒரு டம்ளருக்கு மூன்று டம்ளர் என்ற அளவில் தண்ணீர் தேவை. தினைக்கு மட்டும் ஒரு டம்ளருக்கு நான்கு டம்ளர் தண்ணீர். பாத்திரம் அகலமாக இருக்க வேண்டும்.

  • சாதம் வடிக்கும்போது, அது குழையாமல் இருக்க, அடுப்பை அணைத்தபிறகு, சாதத்தில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றிய பின் கவிழ்த்தால் சாதம் குழையாமல் இருக்கும்.

  • சாமை, நீரிழிவாளர்களுக்கு நல்லது. தினை, குழந்தைகளுக்கு நல்லது.

  • லட்டு, பாயசம் போன்ற இனிப்பு வகைகளையும் தினையில் செய்யலாம்.

  • சாமையில் சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்றவை செய்தால் நன்றாக இருக்கும்.

  • எல்லா வகையான கலந்த சாதங்களுக்கும் வரகு ஏற்றது.