Published:Updated:

ரூ.5,000 முதலீடு டு 80 லட்சம் டர்ன் ஓவர்! - ஆசிரியரின் பிசினஸ்வுமன் அவதாரம்

அபிராமி
பிரீமியம் ஸ்டோரி
News
அபிராமி

சிறு துளி பெரு வெள்ளம்

“பிசினஸ் பண்ற ஆர்வத்துல எந்தப் பயிற்சியும் எடுத்துக்காம சோதனை முயற்சியாகவே இந்தத் தொழிலைத் தொடங்கினேன். தடுமாறாம, துவண்டுபோகாம சமாளிச்சதால, ஓரளவுக்கு வெற்றியும் கிடைச்சிருக்கு. என் ஊழியர்கள் எவ்வித அழுத்தமும் இல்லாம வேலை செய்யணும், வாடிக்கையாளர் திருப்தியடையுற மாதிரி தரமான பொருள்களைத் தயாரிக்கணும்னு சீரான வளர்ச்சியை நோக்கி உற்சாகமா வேலை செய்றோம்” – ஊழியர்களை அறிமுகப்படுத்தியவாறே இனிமையும் எளிமையுமாகப் பேசுகிறார் அபிராமி.

சென்னையிலுள்ள இவரது ‘கோல்டன் லோட்டஸ்’ நிறுவனத்தில் ரிட்டர்ன் கிஃப்ட், பரிசுப் பொருள்களை வழங்குவதற்கான பாக்ஸ் மற்றும் பைகள் தயாராகின்றன. 5,000 ரூபாய் முதலீட்டில் தொழில் தொடங்கியவர், இன்று மாதம் பல லட்சங்களில் வருமானம் ஈட்டுகிறார்.

“பிறந்த வீடும் புகுந்த வீடும் பிசினஸ் குடும்பங்கள். சில வருஷம் டீச்சரா வேலை செஞ்ச நிலையில், 14 வருஷத்துக்கு முன்பு சுயதொழில் ஆர்வம் உண்டாச்சு. கல்யாணத்தில் ரிட்டர்ன் கிஃப்ட் கொடுக்கும் பேப்பர் பேக் ஆர்டர் கிடைச்சது. 5,000 ரூபாய் முதலீட்டில் வீட்டில் இருந்தே தொழிலைத் தொடங்கினேன். நான் டிசைன் செய்து, வெளியில் பிரின்ட் பண்ணி, ஒரு வேலையாள் வெச்சு பைகளைத் தயாரிச்சேன். நிறைய சொதப்பல்களால ஆர்டரை முடிக்கிறதுக்குள் அந்தக் கல்யாணமே முடிஞ்சுடுச்சு. நஷ்டமே மிஞ்சினாலும் அந்த ஆர்டர்ல நிறைய அனுபவங்கள் கிடைச்சது.

அபிராமி
அபிராமி

ஹேண்ட்பேக், கிஃப்ட் பேக்ஸ் உட்பட பல பொருள்களையும் வெளியூரிலிருந்து வாங்கி, சின்ன கடையில் வெச்சு விற்பனை செஞ்சேன். மெதுவா வாடிக்கையாளர் வட்டாரம் அதிகரிச்சதும், தயாரிப்பு யூனிட்டைத் தொடங்கினேன். சில ஊழியர்களுடன், பேப்பர் மற்றும் துணிகளில் பாக்ஸ், பைகளைத் தயாரிச்சோம். பண்டிகை சீஸன்ல ஆர்டர்கள் குவியறது, பல நேரங்கள்ல வேலையில்லாம இருக்கிறதுனு நிலையில்லா சூழலே தொடர்ந்துச்சு. ‘பிசினஸ்னா இதெல்லாம் சகஜம். துவண்டுபோயிட்டா நடையைக் கட்ட வேண்டியதுதான். சாய்ஸ் உன்னோடது’ன்னு குடும்பத்துல சொன்னாங்க. என்ன ஆனாலும், ஒரு கை பார்த்துடலாம்னு பிசினஸ்ல முழு கவனம் செலுத்தினேன். நிலையான ஆர்டர்களைப் பிடிச்சேன்” என்பவர், படிப்படியாக வளர்ச்சியை எட்டியிருக்கிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

“கடந்த 10 வருஷத்துல ரிட்டர்ன் கிஃப்ட் கொடுக்கும் கலாசாரத்துலயும், அதைக் கொடுக்கும் பைகளிலும் நிறைய புதுமைகள் வந்திடுச்சு. அத்தகைய பைகளுடன், ஜவுளிக்கடைகளில் ஆடைகளை பேக் செய்வதற்கான அட்டை பாக்ஸ், உணவு டெலிவரிக்கான பேப்பர் பைகளையும் பல வருஷமா தயாரிக்கிறோம்.

முன்னணி நிறுவனங்கள், மருத்துவமனைகள் பலவும் எங்க வாடிக்கையாளர்கள். அவங்க ரெகுலரா ஆர்டர் கொடுப்பதைத் தாண்டி, உடனடித் தேவைக்கு எங்க யூனிட்ல டிஸ்பிளேயில் இருக்கும் பைகளையும் வாங்கிட்டுப் போவாங்க. எனவே, உற்பத்தி தொய்வின்றி நடக்குது.

 ஊழியர்களுடன்...
ஊழியர்களுடன்...

மாசத்துக்குப் பல ஆயிரம் பாக்ஸ், பைகளைத் தயாரிக்கிறோம். தவிர, சுப நிகழ்ச்சிகளுக்கான அழைப்பிதழ் கார்டுகளை டிசைன் பண்ணி, வெளியில் பிரின்ட் பண்ணி விற்பனை செய்றேன். சூப், ஐஸ்க்ரீம் பேப்பர் கப்புகளையும் தயாரிக்க ஆரம்பிச்சிருக்கேன். புதுப்புது யுக்திகளைக் கையாண்டு தொழிலைப் படிப்படியா விரிவுபடுத்துறேன்” என்று புன்னகைப்பவர், 15 பேருக்கு நேரடியாக வேலைவாய்ப்பு கொடுத்திருக்கிறார்.

பின்னணிப் பாடகி சைந்தவி, கர்னாடக இசைப் பாடகர் டி.எம்.கிருஷ்ணா குடும்பம், ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிகல் உட்பட பல்வேறு செலிபிரிட்டி வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள அபிராமி, ஆண்டுக்கு 80 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக டர்ன் ஓவர் ஈட்டுகிறார்!

“யார் உதவியையும் எதிர்பார்க்காம தொழிலில் தனியாளா ஏற்ற இறக்கங்களைக் கத்துக் கிட்டேன். இதுவரை எந்தக் கடனும் வாங்கலை. வரும் வருமானத்தை அப்படியே தொழில்ல முதலீடு செய்றேன். ஒருபோதும் நஷ்டம் ஏற்படாம, நிதானமான வளர்ச்சியை நோக்கிப் போயிட்டிருக்கேன். மூத்த மகளும் இப்போ என் தொழில்ல இணைஞ்சிருக்கா.

இனி கூடுதல் வளர்ச்சியை நோக்கிப் போகப் போறோம்” என்னும் அபிராமியின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் ஆனந்தம்!