Published:Updated:

`போராடினால் ஒரு பொற்காலம் உண்டு!' - ஓப்ரா வின்ஃப்ரேவின் வாழ்க்கை சொல்வது என்ன?

இவரின் வாழ்க்கையைப் படித்தால், போராடினால் நமக்கும் ஒரு பொற்காலம் உண்டு என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்!

ஒரு மனிதன் தனது மனோபாவத்தை மாற்றிக்கொள்வதன் மூலம் தனது எதிர்காலத்தையே மாற்றிக்கொள்ள முடியும் என்பதுதான் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதிலேயே மிகவும் சிறந்தது ஆகும்.
ஓப்ரா வின்ஃப்ரே

அமெரிக்காவில் கறுப்பினக் குடும்பத்தில் பிறந்து, கொடிய வறுமையின் பிடியில் வளர்ந்து, மிக நெருக்கமானவர்களாலேயே பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாகி, தன் பேச்சு சாமர்த்தியத்தால் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த `டாக் ஷோ குயின்’ எனப் புகழப்படுகிற ஓப்ரா வின்ஃப்ரே (Oprah Winfrey) சொன்ன வார்த்தைகள் இவை.

இந்த ஒப்ரா வின்ஃப்ரேவின் வாழ்க்கை வரலாற்றை Oprah Winfrey: A Biography of a Billionaire Talk Show என்ற புத்தகத்தில் மிக சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறார் ராபின் வெஸ்டன் என்னும் எழுத்தாளர். வின்ஃப்ரேவின் வாழ்க்கை எப்படிப்பட்டது என்பது குறித்து புத்தகத்திலிருக்கும் சில சம்பவங்களை வைத்து பார்ப்போம்.

கடினமான குழந்தைப் பருவம்

வெர்னிடா லீ, வெர்னான் வின்ஃப்ரே தம்பதிக்கு மிசிசிப்பியில் உள்ள கோஷிஆஸ்கோ என்னுமிடத்தில் ஒதுக்குப்புறமாக இருந்த ஒரு பண்ணையில் 1954-ம் ஆண்டு ஜனவரி மாதம் 24-ம் தேதி பிறந்தார் ஓப்ரா கெயில் வின்ஃப்ரே. விவிலியத்தில் வரக்கூடிய `ஓர்பா (Orpah)’ என்ற பெயர்தான் அவருக்கு வைக்கப்பட இருந்தது. ஆனால், உச்சரிக்க சிரமமாக இருக்கும் என்று நினைத்து (Oprah) என அழைக்கப்பட்டார். எனவே, இவர் பிறந்ததிலிருந்தே ஓப்ரா என்றே அறியப்பட்டார். இவர் பிறப்பதற்கு முன்பே தாயும் தந்தையும் பிரிந்துவிட்டனர். சிறுவயதில் மிகவும் வறுமையில் வாழ்ந்தார். உருளைக்கிழங்கு வைக்கக்கூடிய சாக்குகளில் உடையை தைத்துப் போட்டுக்கொண்டு பள்ளிக்கூடம் சென்ற அவரை உடன் படித்தவர்கள் கேலி செய்தனர். தன்னுடைய பாட்டியின் அரவணைப்பில் பண்ணையிலேயே வாழ்ந்துவந்தார்.

Oprah Winfrey with Michelle Obama
Oprah Winfrey with Michelle Obama
Twitter / Oprah

சிறுவயதிலேயே இவர் பண்ணையில் `பார்வையாளர்’களாக இருந்த விலங்குகளுக்கு முன் நடிக்க ஆரம்பித்தார். பாட்டியின் கடுமையான வழிகாட்டுதலின் பேரில் தனது இரண்டரை வயதிலேயே படிப்பதற்குக் கற்றுக்கொண்டார். இவர் தனது இரண்டாவது வயதிலேயே தேவாலயக் கூட்டம் ஒன்றில் `When Jesus rose on Easter Day’ பற்றி பேசினார். அதன்பின் அவர் பள்ளியில் சேர்ந்த முதல் நாளன்று தனது ஆசிரியருக்கு, நான் முதல் கிரேடு படிக்கத் தகுதியுள்ளவள் எனக் கடிதம் எழுதினார். அந்த வருடத்திற்குப் பின் அவர் மூன்றாவது கிரேடுக்கு உயர்வு பெற்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பேசினால் பணம் கிடைக்கும்

6 வயதில் தன் அம்மாவுடனும், ஒன்றுவிட்ட இரண்டு சகோதரர்களுடனும் சேர்ந்து வசிப்பதற்காக மிகவும் மோசமாக இருந்த மில்வாக்கி (Milwaukee ghetto) என்கிற இடத்துக்கு அனுப்பப்பட்டார். 12 வயதில் தன் அப்பாவுடன் வசிப்பதற்காக டென்னசியிலிருக்கும் நாஷ்விலேக்குச் சென்றார். அங்கிருந்த குறுகிய காலத்தில் மிகவும் பாதுகாப்புடனும் மகிழ்ச்சியுடனும் இருந்தார். அதோடு சமூக மற்றும் தேவாலாயக் கூட்டங்களில் பேசினார். ஒரு முறை அவர் பேசியதற்கு சன்மானமாக 500 டாலர் அவருக்குக் கொடுக்கப்பட்டது. `பேசினால் பணம் கிடைக்கும்’ என அப்போது அவருக்குத் தெரியவந்தது.

வின்ஃப்ரேயை அவர் அம்மா மீண்டும் அழைத்தபோது, அவர் தன் அப்பாவின் வீட்டிலிருந்த பாதுகாப்பையும் விட்டுச் செல்ல வேண்டியிருந்தது. அவர் தனது 9 வது வயதிலிருந்தே தனது குடும்பத்தினரால் நம்பிக்கையானவர்கள் என நினைக்கப்பட்டவர்களால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு தொடர்ந்து ஆளாக நேரிட்டது. அவருடைய அம்மா அவ்வப்போது ஏதாவது வேலை செய்துவந்தார். எனவே, மகளை மேற்பார்வை செய்ய அவருக்கு நேரம் கிடைக்கவில்லை. சில ஆண்டுகளுக்குப் பின் அவருடைய அம்மா வின்ஃப்ரேயை அவர் அப்பாவிடமே திரும்ப அனுப்பினார்.

திருப்புமுனை தந்த தயார்படுத்துதல்

வின்ஃப்ரேயின் வாழ்க்கையை அப்பாதான் காப்பாற்றினார். அவர் மிகவும் கடுமையானவராக இருந்ததோடு, வின்ஃப்ரேக்குத் தேவையான வழிகாட்டுதலையும் அமைப்பையும், விதிமுறைகளையும், புத்தகங்களையும் கொடுத்தார். அவர் தன் மகள் வாராந்தர அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனக் கூறினார். ஒவ்வொரு நாளும் ஐந்து புதிய சொற்களைக் கற்பது வரை இரவுச் சாப்பாடுகூட சாப்பிடாமல் இருந்தார்.

வின்ஃப்ரே மிகச் சிறந்த மாணவியாகப் பரிணமித்தார். அவர் ட்ராமா க்ளப், டிபேட் க்ளப், ஸ்டூடன்ட் கவுன்சில் எனப் பலவற்றிலும் பங்கேற்றார். எக்ஸ் க்ளப் (Elks club) நடத்திய பேச்சுப் போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற்றதால் டென்னசி ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் படிக்க அவருக்கு ஸ்காலர்ஷிப் கிடைத்தது. அதற்கு அடுத்த வருடம் `White House Conference on Youth’ என்கிற நிகழ்வில் கலந்துகொள்ள இவர் அழைக்கப்பட்டார். நாஷ்விலேயில் இருந்த உள்ளூர் வானொலி நிலையம் ஒன்றால் இவர் `Miss Fire Prevention’ என முடிசூட்டப்பட்டார்.

முதல் அரட்டை நிகழ்ச்சி

அவர் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போது அவருக்கு இதழியல் மற்றும் ஊடகத்துறைகள் மேல் விருப்பம் ஏற்பட்டது. அவருக்கு உள்ளூர் தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்தித் தொகுப்பாளராக வேலை செய்ய வாய்ப்புக் கிடைத்தது. அவருடைய உணர்ச்சிபூர்வமான பாணி, செய்தி நிகழ்ச்சிக்கு ஒத்துவரவில்லை. எனவே, அவர் சரியாக வரவேற்படையாத பகல் நேர `அரட்டை’ நிகழ்ச்சியை (Chat show) நடத்த மாற்றப்பட்டார். அதுவே, அவருடைய சொந்த நிகழ்ச்சியான `தி ஓப்ரா வின்ஃப்ரே ஷோ’வாக நாளடைவில் மாறியது.

Oprah Winfrey
Oprah Winfrey
Twitter / Oprah

தி ஓப்ரா வின்ஃப்ரே ஷோ மிகவும் வெற்றிகரமான நிகழ்ச்சிகளில் ஒன்றாகவும், அதிக பேர் பார்க்கும் நிகழ்ச்சியாகவும் உருமாறியது. பல சமூக, பண்பாட்டுத் தடைகளை அந்நிகழ்ச்சி உடைத்தெறிந்தது. இதன் மூலம் ஓப்ராவும் பெண்களுக்கிடையே, குறிப்பாக அமெரிக்கப் பெண்களின் மத்தியில், ஒரு சக்திவாய்ந்த முன்மாதிரியாக உருவெடுத்தார். `நெருக்கமான ஒப்புதல் வாக்குமூலம்’ (intimate confessional form) என்கிற ஊடகத் தொடர்பு வடிவத்தை அறிமுகப்படுத்திய பெருமை இவரையே சாரும். இந்த வடிவத் தொடர்பு முறை இன்றைக்கு உலகெங்கும் ஊடக நிகழ்ச்சிகளில் பின்பற்றப்பட்டு வருகிறது.

டாக் ஷோ டு ஹாலிவுட் சினிமா

1985-ம் ஆண்டு, வின்ஃப்ரேயை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பார்த்த குயின்ஸி ஜோன்ஸ், இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்குடன் இணைந்து தயாரிக்கும் தனது படத்துக்கு ஏற்ற நடிகையாக இவர் இருப்பார் என நினைத்தார். அந்தப் படம் ஆலிஸ் வாக்கரின் நாவலான `தி கலர் பர்பிள்’-ஐ அடிப்படையாகக் கொண்டதாகும். அதுவரை அவருடைய நடிப்பு அனுபவம் என்பது 1978-ம் ஆண்டு ஆஃப்ரிகன் அமெரிக்கன் தியேட்டர் ஃபெஸ்டிவலின்போது அவர் மட்டும் பங்கேற்று நடித்த (one woman show) `தி ஹிஸ்டரி ஆஃப் ப்ளாக் விமென் த்ரூ ட்ராமா & சாங்க்’ (The history of black women through drama and song) என்கிற நாடகங்கள் மட்டும்தான்.

வேகமாகப் பரவிய ஓப்ராவின் புகழ்

`தி கலர் பர்பிள்’ வெளிவந்த பின் வின்ஃப்ரேயின் புகழ் உச்சம் தொட்டது. 1985-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் `கிங் வோர்ல்ட்’ என்கிற விநியோகஸ்தர் இவருடைய நிகழ்ச்சியை 138 நகரங்களுக்கு ஒளிப்பரப்பு செய்வதற்கான (ஊடக சரித்திரத்திலேயே முதன்முறையாக இத்தனை நகரங்களில் ஒளிபரப்பு செய்யப்படுவதற்கான உரிமை வாங்கி சரித்திரம் படைத்தது) சிண்டிகேட் உரிமையை வாங்கினார்.

1986-ம் ஆண்டு சமூகத்துக்கு பெரும் பங்கு ஆற்றியதற்காகக் கலைக்கான சிகாகோ அகாடமி விருதைப் பெற்றார். தேசிய பெண்கள் அமைப்பு அவருக்கு பெண் சாதனையாளர் விருது கொடுத்து கெளரவித்தது. தி ஓப்ரா வின்ஃப்ரே ஷோ, சிறந்த டாக் ஷோ எனத் தெரிவு செய்யப்பட்டு பல `எம்மி’ விருதுகளைப் பெற்றது. வின்ஃப்ரே சிறந்த டாக் ஷோ வழங்குநராகத் தெரிவு செய்யப்பட்டு கெளரவிக்கப்பட்டார். அவர் தனக்கே உரிய பாணியில் பாலிவுட் நட்சத்திரங்களான ஐஸ்வர்யா பச்சனையும் அபிஷேக் பச்சனையும் நேர்காணல் செய்ததை நீங்கள் `யூடியூப்’பில் காணலாம்.

மிகச் சிறந்த சந்தையாளர்

1996-ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஏர்-ரீடிங் க்ளப்பை வின்ஃப்ரே ஆரம்பித்தார். செப்டம்பர் 17-ம் நாள் அவர், `எல்லோரையும் வாசிக்க வைக்க வேண்டும்’ என்கிற தனது விருப்பத்தை அறிவித்தார். அவர் தன்னுடைய ரசிகர்களிடம், அவர் தெரிவு செய்த புத்தகத்தை வாங்குவதற்காக விரைந்து செல்லும்படி கூறியதுடன் அடுத்த மாதம் அந்தப் புத்தகம் குறித்து அனைவரும் சேர்ந்து கலந்துரையாடலாம்’ என்றும் அறிவித்தார். ஆரம்பத்தில் இதற்கான எதிர்வினை பிரமிப்பு ஊட்டக்கூடியதாக இருந்தது. அவர் பரிந்துரை செய்த `The Deep end of the Ocean’ என்கிற புத்தகம் சுமார் 8,50,000 பிரதிகள் விற்று `பெஸ்ட் செல்லரில்’ முதலிடத்தில் இருந்தது. இந்த க்ளப்பின் மூலம் வின்ஃப்ரே அமெரிக்காவில் ஒரு மிகப்பெரிய சந்தையாளர் என நிரூபணமானது.

Oprah Winfrey: A Biography of a Billionaire Talk Show Host
Oprah Winfrey: A Biography of a Billionaire Talk Show Host

பேசியே சம்பாதித்த ரூ.20,000 கோடி

இவருடைய பல விதமான ஊடக நிறுவனங்கள் இவரை தானாகவே உருவான பணக்கார பெண்மணிகளில் ஒருவராக மாற்றின. 2004-ம் ஆண்டிலிருந்து 2006-ம் ஆண்டு வரை ஃபோர்ப்ஸ் சர்வதேச பணக்காரர்களின் பட்டியலில் இடம்பெற்ற முதல் கறுப்பின பில்லியனர் இவர்தான். 2014-ம் ஆண்டு வின்ஃப்ரேயின் சொத்து மதிப்பு சுமார் 2.9 பில்லியன் டாலர் (இந்திய ரூபாயில் மதிப்பில் சுமாராக ரூ.20,000 கோடிக்கும் மேல்) ஆகும்.

போராளியின் நம்பிக்கை

பிறக்கும்போது நம் சூழ்நிலை எப்படிப்பட்டதாக இருந்தாலும், அதனால் நம் எதிர்காலம் முடங்கிக் கிடக்கப்போவதில்லை என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்தவர் வின்ஃப்ரே. ``நான் எதிர்காலத்தைப் பார்க்கும்போது, அதனுடைய பிரகாசம் எனது கண்களையே எரித்துவிடும் போலிருக்கிறது” என அவர் சொல்வதிலிருந்து வாழ்க்கை மீது அவருக்கு எவ்வளவு நம்பிக்கை இருந்தது என்று புரியும்.

``நான் கறுப்பினத்தைச் சேர்ந்தவள்தான். ஆனால், அது எனக்கொரு சுமையாக இருப்பதாக உணரவில்லை. அது ஒரு பெரிய பொறுப்பு என்றும் நான் நினைக்கவில்லை. அது என்னில் ஒரு பகுதிதானே தவிர, அது என்னை வரையறுக்காது” என்று சொல்கிறார் வின்ஃப்ரே.

இவரின் வாழ்க்கையைப் படித்தால், போராடினால் நமக்கும் ஒரு பொற்காலம் உண்டு என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு