ஆசிரியர் பக்கம்
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

அவள் 25... அவர்கள் 25! - ஒரு சர்ப்ரைஸ் திட்டம் - 2

கடனுதவித் திட்டங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
கடனுதவித் திட்டங்கள்!

பிசினஸில் சாதிக்க உதவும் எண்ணற்ற கடனுதவித் திட்டங்கள்!

உற்பத்தி முதல் விவசாயத் தொழில்கள் வரை அனைத்துத் தரப்பிலும் நிலையான வளர்ச்சியை உருவாக்க, மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு கடனுதவித் திட்டங்களைச் செயல் படுத்தி, தொழில்முனைவோர்களை ஊக்கப்படுத்தி வருகின்றன. அவற் றில், புதிய தொழில்முனைவோர்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய கடனுதவித் திட்டங்கள் குறித்த விவரங்களை வழங்குகிறார், திருச்சியைச் சேர்ந்த தொழில் ஆலோசகரான ராமசாமி தேசாய்.

ராமசாமி தேசாய்
ராமசாமி தேசாய்

1. யு.ஒய்.இ.ஜி.பி திட்டம் - (Unemployed Youth Employment Generation Programme)

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் வியாபாரம் சார்ந்த தொழில் தொடங்க இத்திட்டம் உதவுகிறது. திட்ட மதிப்பீடு 5 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். 25 சதவிகிதத் தொகை மானியமாகக் கிடைக்கும்.

தகுதி: 18 வயதைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும். பொதுப் பிரிவினர் 35 வயதுக்கு உட்பட்டவராகவும், சிறப்புப் பிரிவினர் 45 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். திட்ட மதிப்பீட்டில் குறைந்தபட்சம் 5 சதவிகித தொகையைச் சொந்த முதலீடாகப் பயன்படுத்த வேண்டும். குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. பி.எம்.இ.ஜி.பி திட்டம் (Prime Minis ter’s Employment Generation Programme)

பிரதம மந்திரியின் வேலை உரு வாக்கும் இந்தத் திட்டத்தில், உற்பத்தி தொழில்களுக்கு 50 லட்சம் ரூபாய் வரையிலும், சேவை தொழில்களுக்கு 20 லட்சம் ரூபாய் வரையிலும் கடனுதவி பெறலாம்.

பொதுப் பிரிவு பயனாளர்களில், நகர்ப் புறத்தைச் சேர்ந்தவர்களுக்கு 15 சதவிகிதமும், கிராமப்புறப் பகுதியினருக்கு 25 சதவிகிதமும் மானியம் கிடைக்கும். நகரப்பகுதியைச் சேர்ந்த எஸ்.சி, எஸ்.டி மற்றும் இதர பிற்படுத்தப் பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகள் ஆகிய சிறப்புப் பிரிவினர்களுக்கு 25 சதவிகிதமும், கிராமப்புறப் பகுதியினருக்கு 35 சதவிகிதமும் மானியமாக வழங்கப்படும்.

திட்ட மதிப்பீட்டில் பொதுப் பிரிவினர் 10 சதவிகிதத் தொகையையும், மற்ற சிறப்புப் பிரிவினர் 5 சதவிகித தொகையையும் சொந்த முதலீடாகப் பயன்படுத்த வேண்டும்.

தகுதி: குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி யுடன், 18 வயதைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

3. நீட்ஸ் திட்டம் (NEEDS Scheme)

புதிதாக தொழில் தொடங்குபவர்கள், உற்பத்தி மற்றும் சேவை தொழில்களுக்குக் கடனுதவி பெறலாம். இதில், 50 சத விகிதம் பெண் தொழில்முனைவோர் களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

ப்ளஸ் டூ, பட்டப்படிப்பு, பட்டயப் படிப்பு மற்றும் ஐ.டி.ஐ முடித்தவர் களுக்கு 10 லட்சம் ரூபாய் முதல் 5 கோடி வரை இந்தத் திட்டத்தில் கடனுதவி கிடைக்க வாய்ப்புள்ளது. 25 சத விகிதம் மானியம் கிடைக்கும்.

தகுதி: 21 வயதைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும். பொதுப் பிரிவினர் 35 வயதுக்கு உட்பட்டவராகவும், சிறப்புப் பிரிவினர் 45 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

4. ஸ்டாண்ட்-அப் இந்தியா திட்டம் (Stand-Up India Scheme)

பெண் தொழில்முனைவோர் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர், மலைவாழ் மக்கள் ஆகியோர் உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில் தொடங்க எந்த வித சொத்துப் பிணையமும் இல்லாமல் 10 லட்சம் ரூபாய் முதல் ஒரு கோடி ரூபாய் வரை இந்தத் திட்டத்தில் கடன் பெறலாம். திட்ட மதிப்பீட்டில் 25 சதவிகித தொகையை, பயனாளர் தங்கள் பங்காகப் பயன்படுத்த வேண்டும்.

தகுதி: 18 வயதைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

அவள் 25... அவர்கள் 25! - ஒரு சர்ப்ரைஸ் திட்டம் - 2

5. தேசிய கால்நடைத் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (National Lives tock Mission)

இந்தத் திட்டத்தில், ஆடு, கோழி, முயல், பன்றி ஆகியவற்றைப் பண்ணைத் தொழிலாக வளர்க்க, 50 சதவிகிதம் மானியத்துடன் வங்கிக் கடன் பெறலாம். கோழிப்பண்ணை அமைக்க அதிகபட்சமாக 50 லட்சம் வரையிலும் (25 லட்சம் ரூபாய் மானியம்), ஆட்டுப்பண்ணை மற்றும் பன்றி பண்ணை அமைக்க தலா ஒரு கோடி ரூபாய் வரையிலும் (50 லட்சம் ரூபாய் மானியம்) கடனுதவி கிடைக்கும்.

தகுதி: 18 வயதைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

6. தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் வழங்கும் கடன் திட்டம் (TAMCO - Tamil Nadu Minorities Economic Development Corporation Loan Scheme)

சிறுபான்மையினர் சமூகத்தினர் தொழில் தொடங்க அதிகபட்சமாக 30 லட்சம் ரூபாய் வரை, குறைந்த வட்டியில் வங்கிக் கடனுதவி கிடைக்கும். வட்டி விகிதம் 6 – 8 சதவிகிதத் துக்குள் இருக்கும்.

தகுதி: 18 – 55 வயதுக்குள் இருக்க வேண்டும்.

7. ஆதி திராவிடர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் வழங்கும் கடன் திட்டம் (TAHDCO - Tamil Nadu Adi Dravidar Housing & Development Corporation Loan Scheme)

எஸ்.டி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கான இந்தக் கடனுதவித் திட்டத்தில், அதிகபட்சமாக 7.5 லட்சம் ரூபாய் கடனுதவி பெறலாம். அதில், 30 சதவிகிதம் அல்லது 2.25 லட்சம் ரூபாய் என இரண்டில் எது குறைவோ அந்தத் தொகை மானியமாகக் கிடைக்கும். இந்தத் திட்டத்தில் மலைவாழ் மக்களுக்கு மட்டும் 50 சதவிகிதம் மானியம் கிடைக்கும்.

தகுதி: 18 – 55 வயதுக்குள் இருக்க வேண்டும்.

8. தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டுக் கழகம் வழங்கும் கடன் திட்டம் (TABCEDCO - Tamil Nadu Backward Classes Economic Development Corporation Loan Scheme)

பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற் படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த படித்த தொழில்முனைவோர், சுயதொழில் தொடங்க 15 லட்சம் ரூபாய் வரை குறைந்த வட்டியில் கடன் பெறும் தமிழக அரசின் திட்டம் இது. விற்பனை, சேவை மற்றும் உற்பத்தி சார்ந்த பலவித தொழில்களையும் இந்தத் திட்டத்தின் கீழ் தொடங்கலாம். வட்டி விகிதம் 6 – 8 சத விகிதத்துக்குள் இருக்கும்.

தகுதி: 18 – 55 வயதுக்குள் இருக்க வேண்டும்.

9. முத்ரா தொழில் கடன் திட்டம் (MUDRA LOAN Scheme)

உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களை ஏற்கெனவே செய்து வருபவர்கள் தொழில் விரிவாக்கம் செய்ய அதிகபட்சமாக 10 லட்சம் ரூபாய் வரை சொத்துப் பிணையம் இல்லாமல் வங்கிக் கடன் பெறும் திட்டம் இது.

`சிசு' (Shishu) என்ற பிரிவில் 50,000 ரூபாய் வரையிலும், `கிஷோர்' (Kishore) என்ற பிரிவில் 50,000 ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை யிலும், `தருண்' (Tarun) என்ற பிரிவில் 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை கடன் பெறலாம்.

தகுதி: 18 – 55 வயதுக்குள் இருக்க வேண்டும்.


10. பி.எம்.எஃப்.எம்.இ திட்டம் (Pradhan Mantri Formalisation of Micro Food Processing Enterprises Scheme)

உணவு உற்பத்தித்துறையில் புதிதாகத் தொழில் தொடங்க அல்லது இந்தத் துறை யிலுள்ள தொழில்முனைவோர் தொழில் விரிவாக்கம் செய்ய அதிகபட்சமாக 35 லட்சம் ரூபாய் வரை இந்தத் திட்டத்தில் வங்கிக் கடன் பெறலாம். திட்டச் செலவில் 35 சதவிகிதம் மானியமாகக் கிடைக்கும் (மானிய உச்சவரம்பு 10 லட்சம் ரூபாய்) திட்டச் செலவில் குறைந்தபட்சம் 10 சதவிகித தொகையைப் பயனாளர்கள் தங்கள் பங்காகப் பயன்படுத்த வேண்டும்.

தகுதி: 18 – 55 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேனீ வளர்ப்பு, மீன் வளர்ப்பு உட்பட இன்னும் பல்வேறு தொழில்களுக்கும் வங்கிக் கடனுதவிகள் கிடைக்கின்றன. மாவட்ட தொழில் மையம் மற்றும் வங்கியில் இதற்கான வழிகாட்டுதல்களைப் பெறலாம்.

அவள் 25... அவர்கள் 25!’ திட்டம் குறித்தும், தொழில்முனைவோராவதில் உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள் எதுவாக இருந்தாலும் எங்களுக்கு அனுப்பி வையுங்கள். தேர்ந்தெடுக்கப்படும் அவசிய மான கேள்விகளுக்கான விளக்கங்கள் அடுத்த இதழில் தரப்படும்...

குறிப்பு: உங்களின் கேள்விகளை ‘avalvikatan@vikatan.com’ என்ற மெயில் ஐ.டி மற்றும் Aval Vikatan ஃபேஸ்புக் பக்கத்தின் இன்பாக்ஸிலும் அனுப்பலாம். இந்தக் கட்டுரையை ஆன்லைனில் படிப்பவர்கள் கமென்ட் செக்‌ஷனிலும் குறிப்பிடலாம். தபால் மூலமாகவும் அனுப்பலாம்.

‘அவள் 25... அவர்கள் 25!’
அவள் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600 002.