Published:Updated:

``வேலையைத் திட்டமிட்டால் நேரம் கைக்குள் வரும்!’’ ஐ.ஐ.டி-அவள் விகடன் தொழில்முனைவோர் விழாவில் அனுஹாசன்

"உடல்நிலை சரியில்லை என்றால் சின்ன பிரச்னைகள்கூட மலைபோலத் தெரியும். பொறுமை இருக்காது. உடல் ஒத்துழைக்காது. உங்களுக்காகவும் கொஞ்சம் நேரம் ஒதுக்கிக்கொள்ளுங்கள். அப்போதுதான் உங்களைச் சுற்றியிருக்கிறவர்களை நன்றாக வைத்துக்கொள்ள முடியும்."

நடிகை அனுஹாசன்
நடிகை அனுஹாசன்

காஞ்சிபுரம் அருகே களியனூர் கிராமத்தில் உள்ள`ஹேண்ட் இன் ஹேண்ட்' வளாகத்தில் குறுந்தொழில் செய்யும் பெண் தொழில் முனைவோர்களுக்கான சிறப்புப் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. ஐ.ஐ.டி மெட்ராஸ் மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா, ‘CAMS’ அமைப்புகளோடு அவள் விகடனும் இணைந்து டிசம்பர் 3-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை இந்தப் பயிற்சி பட்டறையை நடத்தின. இதில், ஐ.ஐ.டி பேராசிரியர்கள் பெண்களுக்குச் சிறப்புப் பயிற்சி வகுப்பெடுத்தனர். அதன் நிறைவு விழா 6-ம் தேதி நடைபெற்றது.

பெண் தொழில் முனைவோர்கள் பயிற்சி
பெண் தொழில் முனைவோர்கள் பயிற்சி

நான்கு நாள் ஐஐடி பயிற்சியை நிறைவு செய்த பெண்கள் தங்கள் கணவரோடு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். புதிய அனுபவம் கிடைத்த மகிழ்ச்சியை அந்தப் பெண்களின் முகத்தில் பார்க்க முடிந்தது. தொழில் முனையும் பெண்கள் பயனுறும் வகையில் ‘Turning point’ என்ற யூடியூப் சேனலும் தொடங்கி வைக்கப்பட்டது.

பெண் தொழில்முனைவோருக்கு நிதி மற்றும் முதலீடு தொடர்பான புத்தகமும் மேடையில் வெளியிடப்பட்டது. ஹேண்ட் இன் ஹேண்ட் மற்றும் ஐ.ஐ.டி பயிற்சி மூலம் தொழிலில் வெற்றி பெற்ற பெண்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்தனர்.

கல்பனா சங்கர்-ஹேண்ட் இன் ஹேண்ட்
கல்பனா சங்கர்-ஹேண்ட் இன் ஹேண்ட்

ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா அமைப்பின் தலைவர் கல்பனா சங்கர், “புதிதாகத் தொழில் தொடங்கும் பெண்கள் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும். பிரச்னைகளை எப்படிச் சமாளிப்பது எனத் தெரியாமல் பாதியிலேயே தொழிலைக் கைவிட்டுவிடுவார்கள். தன்னம்பிக்கை இருந்தாலும் போதிய பயிற்சி இல்லாவிட்டால் தொழிலில் வெற்றி பெறமுடியாது. நான்கு பேருக்கு வேலை கொடுப்பவர்களும் இங்கே உள்ளார்கள். 40 பேருக்கு வேலை கொடுப்பவர்களும் இங்கே உள்ளார்கள். ஏற்றுமதி செய்பவர்களும் இங்கே இருக்கிறார்கள்.

ஐ.ஐ.டி சென்னை பேராசிரியர்கள் வழங்கிய பயிற்சி அவர்களுக்குப் பெரிய திருப்புமுனையாக அமையும். ஒரு குழந்தை நடக்கத் தொடங்கும்போது பலமுறை விழுந்து எழும். அதுபோலத்தான் தொழிலிலும் ஏற்ற இறக்கம் இருக்கும். இதுபோன்ற நேரங்களில் கணவர் உறுதுணையாக நிற்க வேண்டும். உங்கள் வீட்டு பெண்கள் வளர்ச்சி பெற்றால் உங்களுக்கும் மரியாதை கூடும்” என்றார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்

சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நடிகை அனுஹாசன், “கற்றுக்கொள்ளும் திறமை பெண்களிடம் பலமாக இருக்கும். வீட்டையும் பார்ப்போம்… குழந்தைகளையும் கவனித்துக் கொள்வோம்… பிசினஸையும் பார்ப்போம். அதோட முக்கியமாக ஒரு விஷயத்தையும் செய்யணும். உங்களையும் கொஞ்சம் பார்த்துக்கொள்ளுங்கள்.

உங்களோட தொழிலில் நிறைய பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும். உடல்நிலை சரியில்லை என்றால் சின்ன பிரச்னைகள்கூட மலைபோலத் தெரியும். பொறுமை இருக்காது. உடல் ஒத்துழைக்காது. உங்களுக்காகவும் கொஞ்சம் நேரம் ஒதுக்கி ஹெல்த், சாப்பாடு, உணவு, உடைகளில் கவனம் செலுத்துங்கள். இவைதான் உங்களை சுற்றியிருக்கிறவர்களை நன்றாக வைத்துக்கொள்ளும். 19 மணிநேரம் வேலை செய்வேன். நான்கு மணிநேரம்தான் தூங்குவேன் எனப் பெருமையாகச் சொல்வதில் அர்த்தம் இல்லை. நாம் திட்டமிட்டு ஒழுங்காக வேலை செய்தால் இவ்வளவு நேரம் தேவைப்படாது. வேலைக்காக உணவைத் தவிர்க்காதீர்கள்” என்று அறிவுறுத்தினார்.

ஐஐடி பேராசிரியர் தில்லை ராஜன்
ஐஐடி பேராசிரியர் தில்லை ராஜன்

ஐ.ஐ.டி சென்னை, மேலாண்மைத் துறை பேராசிரியர் தில்லை ராஜன், “உலகத்தில் உள்ள பெரிய பணக்காரர்கள் எல்லாம் ஒரு தொழில் முனைவோராகத்தான் இருக்கிறார்கள். 50 வருடங்களுக்கு முன்பு இதே கேள்வியைக் கேட்டிருந்தால் மன்னர்களின் பெயரைச் சொல்லுவார்கள்.

செல்ஃபி வித் அனு
செல்ஃபி வித் அனு

தொழிலில் வெற்றி பெற்ற அவர்களெல்லாம் தங்கள் தொழிலை உலகச் சூழலுக்கு ஏற்ப மாற்றி வெற்றி கண்டவர்கள். ஐஐடி நிறுவனத்தால் உங்களுக்குக் கொடுக்கப்பட்ட தொழிற்பயிற்சியை நன்கு பயன்படுத்துங்கள். பலம், பலவீனம் அறிந்து தொழிலைச் செய்ய வேண்டும். தொடங்கிவிட்டோம் என்பதற்காக வீம்புக்காக ஒரு தொழிலைத் தொடராதீர்கள். வெற்றி பெறமுடியும் என்னும் போது உங்கள் பலத்தை அதிகமாகப் பயன்படுத்துங்கள்” என்றார்.

"யாரா இருக்கோங்கறத விட்டுட்டு, என்னவா மாறணும்னு சிந்திக்கணும்!"- அனுஹாசன் 
#MorningMotivation