Published:Updated:

வாழைநார்தான் வாழவைக்குது! - அசத்தும் சுய உதவிக்குழுப் பெண்கள்

வாழைநார்
பிரீமியம் ஸ்டோரி
வாழைநார்

#Motivation

வாழைநார்தான் வாழவைக்குது! - அசத்தும் சுய உதவிக்குழுப் பெண்கள்

#Motivation

Published:Updated:
வாழைநார்
பிரீமியம் ஸ்டோரி
வாழைநார்

‘புதுக்கோட்டை மாவட்டம், ஆலங் குடி அருகே வடகாடு கிராமத்தில் வாழைநார்களைக் கொண்டு மகளிர் சுய உதவிக்குழுப் பெண்களால் தயாரிக்கப்படும் வாழைநார்க் கூடைகள் உள்ளூர் மட்டுமன்றி ஆஸ்திரேலியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப் படுகின்றன’ என்று நமக்குத் தகவல் சொன்னவர்கள், அந்தக் கூடைகள் உற்பத்தியாகும் இடத்துக்கும் வழி காட்டினார்கள்.

வடகாடு ஐ.ஓ.பி வங்கியின் மாடியில் சிறிய கட்டடத்துக்குள் பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் மும்முரமாகக் கூடை தயாரித்துக் கொண்டிருந்தனர். ஒருபக்கம் பின்னப்பட்ட வாழைநார்க் கூடைகள், மறுபக்கம் கொட்டிக் கிடக்கும் வாழைநார்கள் என எங்கும் வாழைநார் மயம். பெண்கள் சிரித்துப் பேசி, அரட்டை அடித்துக் கொண்டிருந்தாலும் அவர்களது கைகள் பரபரத்துக்கொண்டிருந்தன.

‘`வாழைநார்ல கூடையானுதான் நானும் ஆரம்பத்துல நெனச்சேன். ஆனா, அதுதான் இன்னிக்கு என் குடும்பத்தைக் கரையேத்தியிருக்கு’’ என்று பூரிப்புடன் பேசுகிறார் உமா.

“புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பக்கத்துல பெரியாளூர் கிராமத்துக்கு, கல்யாணம் பண்ணி வந்தேன். ஒரு பையன், ஒரு பொண்ணு. கணவர் இறந்து 12 வரு ஷங்கள் ஆச்சு. விவசாயம் கை கொடுக்கல. கஷ்ட ஜீவனத்துல இருந்தப்போதான் ‘ட்ரீஸ்’ங்கிற தொண்டு நிறுவனத்தோட அறிமுகம் கிடைச்சது. அதோட இயக்குநர் ரவிச்சந்திரன் சார், மகளிர் சுய உதவிக்குழுவை உருவாக்கி, வாழை நார் பொருள்கள், அதோட தேவை, மார்க்கெட்டிங், லாபம் பத்தி யெல்லாம் சொல்லி, நான் உட்பட நாலு பொண்ணுங்களை பெங் களூருக்குப் பயிற்சிக்குப் போக வெச்சாரு. மூணு நாள் பயிற்சியில வாழைநார்க் கூடை உட்பட வாழை நாரிலிருந்து மதிப்புக்கூட்டப்படும் பொருள்களை எல்லாம் செய்யக் கத்துக்கிட்டோம். 2015-ல வடகாடு, ஆதனக்கோட்டையில சென்டர் போட்டுக் கூடைகள் தயாரிக்க ஆரம்பிச்சோம். இன்னிக்கு அது 10 சென்டர்களா அதிகரிச்சிருக்கு’’ என்ற உமா, இதில் கிடைக்கும் வருமானம் பற்றியும் பகிர்ந்தார்.

வாழைநார்தான் வாழவைக்குது! - அசத்தும் சுய உதவிக்குழுப் பெண்கள்

‘`ஒரு நாளைக்கு ஒரு ஆள் சரா சரியா 4, 5 கூடைகள் பின்னுறோம். நான் ஒரு நாளைக்கு 10 கூடைகள் பின்னிடுவேன். ஒரு கூடைக்கு 50 ரூபாய் கிடைக்கும். தினமும் ஒரு ஆளு குறைந்தபட்சம் 250 ரூபாய்வரை சுலபமா சம்பாதிக்கலாம். மாசத்துக்கு 8,000 ரூபாயில இருந்து 12,000 ரூபாய் வரை கிடைக்குது. வாழைநார்க் கூடைகள்தான் என் குடும்பத்தைக் காப்பாத் துனுச்சு. ரெண்டு பிள்ளைகளையும் தனியாளா நின்னு நல்லபடியா படிக்க வெச்சுட்டேன். மகன் டிப்ளோமா படிச்சிட்டு வெளிநாட்டுல வேலை பார்க்கிறான். மகள் பி.எஸ்ஸி நர்சிங் படிச்சிக்கிட்டு இருக்கு’’ என்று மகிழ்ச்சியுடன் சொல்லும் உமா, இப்போது வாழநார்க் கூடைகள் பயிற்சியும் அளிக்கிறார். ``இதுவரை 500-க்கும் மேற்பட்ட பொண்ணுங்களுக்கு பயிற்சி கொடுத்திருக்கேன். பலரும் பல விதமான கஷ்டத்தோட வருமானத்துக்கு வழியை எதிர்பார்த்து தவிச்சிருந்தவங்க. இன்னிக்கு நல்லாயிருக்காங்க’’ என்றார் நிறைவுடன்.

வாழைநார்க் கூடைகளின் தயாரிப்பு முறை பற்றிப் பகிர்ந்தார் வெள்ளையம்மாள்... ``வாழை நார்ப் பட்டைகள திருநெல்வேலி, மதுரைனு வாங்கி வந்து கொடுத்துடுவாங்க. அதைத் தண்ணியில ஊறவெச்சு நாரா பிரிச் செடுத்துக்குவோம். எந்த மாதிரி கூடை பின்னணும்னு மாடல் கொடுத்துடுவாங்க. அதைப் பின்னுவோம். சாயம் எதுவும் கொடுக்குறதில்ல. பிளாஸ்டிக் வயர் கூடை எடை அதிகமா இருக்கும், வளைந்து கொடுக் காது. ஆனா வாழைநார் பைகள், கூடைகள் எடை குறைவா இருக்குறதோட வளைஞ்சும் கொடுக்கும். சுற்றுச்சூழலுக்குத் தீங்கு ஏற்படுத் தாது. நீண்ட நாள் உழைக்கும். அழுக்காகிட்டா சோப்புத் தண்ணியில ஊறவெச்சு அலசினா பளிச்சுனு ஆகிடும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வாழைநார்தான் வாழவைக்குது! - அசத்தும் சுய உதவிக்குழுப் பெண்கள்

கூடை மட்டுமல்லாம ஹேண்ட் பேக், மிதியடி, தொப்பி, பாய்னு பல பொருள்களையும் தயாரிக்கிறோம். உள்ளூர்லயே ஆர்டர் எடுத்து செஞ்சு கொடுக்குறோம். கஸ்டமர்ஸ் வாட்ஸ்அப்ல மாடல் அனுப்பி அது மாதிரி வேணும்னு கேட்பாங்க. அதனால தினமும் புதுசு புதுசா டிசைன் போட்டுக் கத்துக்கு றோம். நாங்க தயாரிக்குற இந்தக் கூடைகள் வெளிநாடு வரை போகுதுனு நினைக்கும்போதே அவ்ளோ பெருமையா இருக்கும். நல்லா பழகிட்டா 45 நிமிஷத்துல ஒரு கூடையை முடிச்சுடலாம். காலையில 9 மணிக்கு வந்தா, சாயங்காலம் 4 மணிக்கெல்லாம் கிளம்பிடலாம். உழைப்பைத் தவிர, வேற எந்த முதலீடும் இல்ல. அப்படியே ஜாலியா சிரிச்சிப் பேசிக்கிட்டே வேலையை முடிச்சிட்டுப் போயிடலாம். வருஷம் முழுசும் சம்பாதிக்கிறோம். சொந்தக் கால்ல நிக்கிறோம்’’ என்றார் தன்னம் பிக்கையுடன்.

‘ட்ரீஸ்’ தொண்டு நிறுவன இயக்குநர் ரவிச்சந்திரனிடம் பேசி னோம். “மகளிர் சுய உதவிக்குழுக்களை உருவாக்கி அவர்களுக்குக் கடனுதவி பெற்றுக்கொடுப்பது, இயற்கை விவசாயத்துக்கு விவசாயிகளை ஊக்குவிப்பது உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தோம். கடன் வாங்கிய பெண்கள் பலரும் அதை முதலீடாக்கி வருமானம் பார்க்காமல், ‘செலவாகிடுச்சு சார்...’ என்று புலம்புவார்கள். அதனால், கடன் பெற்றுக் கொடுப்பதைவிட அவர்களுக்குக் கைத்தொழில் மூலம் வருமானத்துக்கு ஏற்பாடு செய்வதே முக்கியம் என்பது புரிந்தது.

கீற்று முடைவது, கயிறு திரிப்பது என்று பல தொழில்களை முயன்றும் கைகொடுக்கவில்லை. பிறகு, ஆரம்பித்த வாழைநார்ப் பொருள்கள் முயற்சி, வெற்றியில் முடிந்தது.

2015-ல் புதுக்கோட்டையில் வடகாடு, ஆதனக்கோட்டை பகுதிகளில் ஆரம்பித்த வாழைநார்க் கூடைகள் தயாரிப்பு இன்று பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் நடக்கிறது. 150-க்கும் மேற்பட்ட பெண்கள் இதில் ஈடுபட்டுள்ளார்கள்’’ என்றவர்,

‘`‘ஹெயில்ஸ் 7 பேஸ்கட்’ என்ற கூடை ரகம் கனடா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் உள்ளிட்ட 12 நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது. இந்தக் கூடையை 18 செ.மீ நீளம், 27 செ.மீ அகலத்தில் செய்கிறோம். ஒரு கூடை 115 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. வெளிநாடுகளில் இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஆரம்பத்தில் மாதத்துக்கு 1,000 கூடைகள் அனுப்பி வந்தோம். தற்போது, வாரத்துக்கு ஆயிரம் கூடைகள் கேட்கிறார்கள். அடுத்த இரண்டு வருடங்கள்வரை ஆர்டர் உள்ளது. நிறைய பெண்கள் இதில் இணைகிறார்கள்’’ என்றார்.

 ரவிச்சந்திரன்,  உமா,  வெள்ளையம்மாள்,   அன்பரசி ,  சுகன்யா
ரவிச்சந்திரன், உமா, வெள்ளையம்மாள், அன்பரசி , சுகன்யா

‘`லேசான வாழைநார்ல பூக்கட்டத் தான் முடியும்னு நினைச்சுகிட்டு இருந்தோம். அதையே மூணு,

நாலா சேர்த்து திரிச்சா உறுதியான பொருள்களைத் தயாரிக்கலாம்னு அப்புறம்தான் தெரிஞ்சுகிட்டோம். அதே மாதிரிதான், நாமெல்லாம் வீட்டுவேலைதான் பார்க்க முடியும்னு எங்களை நாங்களே நெனச்சுட்டு இருந்தோம். இன்னிக்கு சுயசம்பாத்தியம் முதல் வெளிநாட்டு ஆர்டர் வரை இதையெல்லாம் எங்களால பண்ண முடியும்னு

இந்த வேலையில இறங்குனதுக்கு அப்புறம்தான் கத்துக்கிட்டோம். எல்லா பொண்ணுங்களும் அதையே தான் சொல்லிக்குறோம். வேலை, தொழில்னு உங்க ஊருல நிச்சயமா ஏதாச்சும் ஒரு வாய்ப்பு இருக்கும். அதைத் தேடிப் போங்க, சொந்தக் காலுல நில்லுங்க”

- வாழைநாரைப் பின்னியபடியே அன்பரசியும் சுகன்யாவும் சொல்ல, அதை ஆமோதிக்கிறார்கள் அங் கிருந்த பெண்கள் அனைவரும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism